courtesy:P.R.Kannan

Jan 21, 2019

An article on 'Agraharam'

அக்கிரஹாரம்

பண்டைக்காலத்தில் அரசர்கள், பிரபுக்கள் முதலியோர் பிராம்மணர்களுக்கு நிலம், வீடு முதலானவற்றை மானியமாகக் கொடுப்பது அதிகமாகவே வழக்கத்திலிருந்தது. அவ்வாறு அளிக்கப்பட்ட நிலத்தில் வரிசையாக எளிய வீடுகளைக் கட்டிக்கொண்டு பிராம்மணர்கள் வாழ்ந்தனர். அப்பேர்ப்பட்ட பிராமணர் வாழும் தெரு தான் அக்கிரஹாரம் என்று பெயர் பெற்றது. அக்கிரஹாரத்தின் ஒரு முனையில் ஒரு கோவில் இருப்பது வழக்கம். பொதுவாக சிவன் கோவிலோ, பிள்ளையார் கோவிலோ இடம் பெற்றிருக்கும். நிறைய கிராமங்களில், ஒரு முனையில் சிவன் கோவிலும், மறு முனையில் விஷ்ணு கோவிலும் அமைக்கப்பட்டன. ’அக்கிர’மாக, அதாவது முதன்மையாக, உள்ள கோவிலைச்சுற்றி, ’ஹாரமா’க, அதாவது மாலை போன்று அமைந்த பிராமணர் உறையும் பகுதியே அக்கிரஹாரம் எனப்பட்டது. ’அக்கிர’மாக, அதாவது முதன்மையாக, ஹரி, அல்லது ஹரன் ஆலயத்தினைக் கொண்டுள்ளதால் ’அக்கிரஹாரம்’ என்றும் கொள்ளலாம். சங்ககால இலக்கியமான பெரும்பாணாற்றுப்படை என்கிற நூலில் அக்கிரஹாரத்தினைப்பற்றிய குறிப்புக்களைக் காண முடிகிறது. அந்தணர்கள் அக்கினி உபாஸனையை எவ்வாறு விரிவாக இயற்றினர் என்பதைக் கூறும் சங்ககால இலக்கியக்குறிப்புகளின் விவரங்களை இணைப்பில் காண்க.

அந்தணர்கள் வேத சாஸ்திரவிதிகளின்படி, ஆறு தொழில்களையே செய்துவந்த காரணத்தினால் ’அறுதொழில் அந்தணர்’ என்று அழைக்கப்பட்டனர். அத்தொழில்களாவன: வேதம் ஓதுதல், வேதம் பயிற்றுவித்தல், யாகங்கள் இயற்றல், யாகங்களை இயற்றுவித்தல், தானம் பெறல், தானம் வழங்குதல் என்பன. இவ்வெல்லா காரியங்களும் வேதத்தினையே அடிப்படையாகக் கொண்டுள்ளமையால், அவர்களுக்கு தனிப்பட்ட தூய்மை அவசியமாகிறது. அதேபோன்று, கோவிலில் பூஜை செய்யும் அந்தணரும், ஆகம விதிகளைச்சார்ந்து பல வரைமுறைகளைப் பின்பற்றவேண்டியுள்ளது. அக்கிரஹாரம் என்கிற தனித்தன்மை வாய்ந்த தெரு அமைப்பு இத்தகைய நெறிமுறைகளைப் பின்பற்ற ஏதுவாக அமைந்தது. பிராம்மணர்கள் எளிய வாழ்க்கை வாழ்ந்து இறைச் சிந்தனையில் திளைத்து, மற்றெல்லோருக்கும் தர்மத்தின் வழிகாட்டியாக இருக்கவேண்டியவர்கள். ஆகையால் அவர்கள் குடும்ப வாழ்க்கைக்குத் தேவையான மிக எளிய பொருட்கள் அரசர்கள், பிரபுக்கள் ஆகியோரால் வழங்கப்பட்டு வந்தன. மக்கள் எல்லோரும் வந்து வணங்கும் ஆலயங்கள் மிக்க பொருட்செலவில் அழகாகவும், வசதியாகவும் எழுப்பப்பட்டன.

அக்கிரஹாரத்தில் நுழையும்போதே தெய்வீகம் கமழும். அருகாமையிலுள்ள நதியில் காலையில் ஸ்னானம் முடித்து, வேதபாராயணம், பூஜைகள் என்று சிரத்தையுடன் ஈடுபட்டிருக்கும் அந்தணக் குடும்பங்கள் பார்க்க மிக ரம்மியமாக இருக்கும். வேத பாடசாலைகளிலிருந்து எழும் வேத கோஷம், ஆலயங்களிலிருந்து கேட்கும் பூஜாமணி, நாதஸ்வரம் போன்ற சப்தங்கள், அந்தணர்களின் வீடுகளிலிருந்து அங்கு செய்யப்பெறும் யாகங்கள், ஹோமங்கள், பூஜைகள், சடங்குகள் இவற்றின் பல்வேறு மங்கள ஒலிகள், பசுமாடுகள், கன்றுகளின் ஸஞ்சாரம் என்று அந்தச்சூழலே ஸ்வர்க்கத்திற்கே நம்மை அழைத்துச் செல்லும். மதியவேளைக்குப்பின்னர் புராணங்கள் பயிலப்படும். சாயங்காலத்தில் அக்கிரஹாரத்திலிருக்கும் பஜனை மடம் புத்துயிர் பெற்று நாம ஸங்கீர்த்தனம் ஒலிக்கும். தினமுமே புராணப்பிரவசனங்கள் நடத்தும் வழக்கம் பெரும்பான்மை கிராமங்களில் இருந்து வந்தது. ராமாயண சாஸ்திரி என்று ஒரு கற்றறிந்த பிராம்மணர் தினமும் ராமாயண உபந்நியாஸம் செய்வதும் உண்டு. அந்தணர்களின் அன்றாட வாழ்க்கையின் கால அட்டவணையை மிக துல்லியமாக மஹாஸ்வாமிகள் விளக்கியுள்ளதை இணைப்பில் காண்க.

வேதம், சாஸ்திரம், தரிசனம், இதிஹாஸம், புராணம் இவற்றின் நிலைக்களனாக அக்கிரஹாரம் இருந்துவந்தது; அது மட்டுமல்லாமல், ஸங்கீதம் (வாய்ப்பாட்டு, வாத்தியங்கள்), நாட்டியம் போன்ற நுண்கலைகளுக்கும் ஆதாரஸ்தானமாக அக்கிரஹாரம் திகழ்ந்தது. ஸனாதன தர்மத்தின் ஆணிவேரே அக்கிரஹாரம்தான் என்கிறாற்போல் பிரகாசித்தது. வேத விற்பன்னர்கள் (ரிக், யஜுர், ஸாம, அதர்வ), ஸம்ஸ்கிருதம், தமிழ் மொழிகளில் பல உயர்ந்த ஆழ்ந்த நூல்களை எழுதுபவர்கள், யாக நுணுக்கங்களில் வல்லவர்கள், தர்ம சாஸ்திர நிபுணர்கள், தரிசனங்களைக் கரைகண்டவர்கள், பல வித்தியைகளைக் கற்றவர்கள், ஸங்கீதம், நாட்டியம், சிற்பம் போன்ற கலைவல்லுனர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது அக்கிரஹாரம். அடுத்தடுத்த கிராம அக்கிரஹாரங்களைச் சேர்ந்த நிபுணர்கள் ஒற்றுமையாக பல பெரிய யாகங்கள், கும்பாபிஷேகம் போன்ற நிகழ்வுகள் இவற்றில் பங்குகொண்டு சேவைசெய்துவந்தனர்.

அக்கிரஹாரத்தில் வரிசையாக, அடுத்தடுத்த இணைந்த வீடுகள் (பொதுவான நடுச்சுவருடன்) (Row Houses) எளிய முறையில் மண் சுவர்களாலோ, செங்கல் போன்றவற்றாலோ எழுப்பப்பட்டு, சுண்ணாம்புப்பூச்சுடன், ஓட்டுக்கூரையுடன் இருந்தன. பொதுவாக, மூன்று பாகங்கள் (கட்டுகள் என்று அழைக்கப்பட்டன) கொண்டவை இந்த வீடுகள். முன் கட்டில், திண்ணை (விருந்தினர் உட்கார, ஓய்வெடுக்க வசதியாக), ஆளோடி, ரேழி என்ற அமைப்பு. இரண்டாம் கட்டில், சில படுக்கை அறைகள், முற்றம் (திறந்த வெளி அல்லது மேல் ஜன்னல்களுடன் கூடிய கூரை), தாழ்வாரம் ஆகியவை உண்டு. மூன்றாம் கட்டில், பூஜையறை, சமையற்கட்டு, பின்பாகம் (வெந்நீர்த்தவலை) இவை உண்டு. மண் தரையோ, கல் தரையோ, பசுஞ்சாணத்தினால் எப்போதும் சுத்தம் செய்யப்பட்டிருக்கும். கொல்லைப்பக்கத்தில் தென்னை, மா, பலா போன்ற மரங்கள், கறிகாய் செடிகொடிகள், பூந்தோட்டம், கிணறு, மாட்டுக்கொட்டில், குளியலறை, கழிவறை இவை இருக்கும். உறவினர்கள் எல்லோரும் நெருக்கமாக பரஸ்பரம் பேருபகாரமாக இருத்தல் அக்கிரஹாரத்தின் பெரும் சிறப்பாகும். எந்த ஒருவர் வீட்டு மங்கல நிகழ்ச்சியோ, அசுப நிகழ்வோ, எல்லோரும் பங்கேற்று வெற்றிகரமாக முடித்துத்தருவர். வீடுகள் மத்தியிலேயே வேத பாடசாலை, பஜனை மடம் போன்றவை அக்கிரஹாரத்தில் இருந்து மெருகூட்டும். பஜனை மடமும் ஆலயமும் முக்கியமான விழாக்காலங்களில் - மார்கழி மாத பஜனைகள், ராதா கல்யாணம், உபந்நியாஸங்கள், ஸங்கீத கச்சேரிகள் போன்றவை - பக்தர்கள் கூடி பக்திரசத்தை அனுபவிக்க ஏதுவாக அமைந்தன.

பொதுவாக ஆலயங்கள் மிக உயர்ந்த கட்டிடப்பாங்குடன் எழுப்பபட்டும், வீடுகள் அந்தணர்களின் எளிய வாழ்க்கைமுறையை அனுசரித்து மண் வீடுகளாகவோ, ஸாதாரண கல் வீடுகளாகவோ இருப்பது வழக்கமாக இருந்தது. மனிதர்களின் வாழ்க்கை ஸாதாரணமாகவும், ஆலயங்களில் பூஜை, உத்ஸவங்கள் முதலானவையெல்லாம் வெகுவிமரிசையாகவும் அமைந்திருந்தன. மனிதர்கள் சாஸ்வதமில்லை, பகவான் ஒருவரே சாஸ்வதம் என்கிற ஆழ்ந்த தத்துவத்தினை அந்தணர்கள் ஒருபோதும் கைவிடமாட்டார்கள் என்பதை அறிவுறுத்துமுகமாக இவையெல்லாம் அக்கிரஹாரத்தின் கலாசாரமாகத் திகழ்ந்தன.

புற வசதிகள் (தற்கால மின்விளக்கு, மின் விசிறி, குளிர்சாதனம் போன்றவை) அறவே தலைக்காட்டாத காலத்தில் தான், மாபெரும் வித்துவான்கள் அக்கிரஹாரங்களில் உருவானார்கள் என்பது நம் போன்ற இக்காலத்தவர்களை பெருவியப்பில் ஆழ்த்துகிறது. ஆதிசங்கரர் காலத்திலேயே (2500 வருஷங்களுக்கு முன்) மண்டனமிஸ்ரர் என்ற பூர்வமீமாம்ஸா வித்துவான் மாஹிஷ்மதி என்கிற ஊரில் வாழ்ந்துவந்தபோது, அவருடைய வீட்டினை அடையாளம் காட்ட, மக்கள் சொன்னது: "அக்கிரஹாரத்தில் எந்த கிருகத்தின் வாசலில் கிளிகள் வேதாந்த சர்ச்சையில் ஈடுபட்டு, "स्वतः प्रमाणम् परतः श्रुतिः", "जगद्ध्रुवम् जगदध्रुवम् वा" என்று விவாதிக்கின்றனவோ, அந்த வீடே மண்டனமிஸ்ரரின் வீடாகும்." அப்பேர்ப்பட்ட பெருமைவாய்ந்த மண்டனமிஸ்ரரின் பேரில் இன்றும் மண்டனமிஸ்ரர் அக்கிரஹாரம் என்ற பிரசித்தியுடன் காஞ்சிபுரத்தில் ஒரு அக்கிரஹாரம் விளங்குவது குறிப்பிடத்தக்கது. சமீபகால சில நூற்றாண்டுகளில் தான் ஶ்ரீ அப்பைய தீக்ஷிதர், நீலகண்ட தீக்ஷிதர், கோவிந்த தீக்ஷிதர், தியாகராஜர், ஸ்யாமா சாஸ்திரி, முத்துஸ்வாமி தீக்ஷிதர், ஶ்ரீதர ஐயாவாள், மருதாநல்லூர் ஸ்வாமிகள், மன்னார்குடி ராஜு சாஸ்திரிகள் (இவ்வரிசை வெகு நீண்டது) போன்ற தலைசிறந்த நிபுணர்கள் அக்கிரஹாரங்களில் வாழ்ந்து காட்டினார்கள் என்பதை நினைவில் கொண்டாலே நமக்குள் புத்துணர்ச்சி பெருகும் என்பதில் சந்தேகமில்லை.

கௌடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில் (2.1.7) ராஜாக்களால் தானம் கொடுக்கப்பட்ட அக்கிரஹாரம் போன்ற பூமியோ, பொருட்களோ, அவற்றை விற்கவோ, வாங்கவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. கீழே காண்க.

कौटिलीयेऽर्थशास्त्रे

अध्यक्षप्रचारः -द्वितीयमधिकरणम् ।

(एकोनविंशं प्रकरणम् - जनपदनिवेशः)

"ऋत्विगाचार्यपुरोहितश्रोत्रियेभ्यो ब्रह्मदेयान्यदण्डकारण्यभिरूपदायादकानि प्रयच्छेत्, अध्यक्षसंख्यायकादिभ्यो गोपस्थानिकानीकस्थचिकित्सकाश्वदमकजङ्घाकारिकेभ्यश्च विक्रयाधानवर्जानि । ७ ।"

அதேபோல், அடியிற்கண்ட ராஜ சிலாசாஸனத்திலிருந்து, பிராம்மணர்களுக்கு வழங்கப்பட்ட அக்கிரஹாரத்தினை நன்கு காக்குமாறு ஆக்ஞை பிறப்பித்து, ஏதாவது இடைஞ்சல் வருமானால், பிராம்மணர்களுடைய புகார்பேரில் உரிய தண்டனை வழங்குமாறு ராஜாக்கள் ஏற்பாடு செய்தது தெரியவருகிறது.

"समाज्ञापयति । विदितमस्तु वो यथैष ग्रामोऽस्माभिः स्वपुण्याप्यायनारर्थं कार्त्तिक-शुक्ल-द्वादश्यां भगवत्पादमूले निवेद्य भवद्भक्ताचार्य-चनालस्वामिनेऽपूर्व्वदत्त्या उदक-पूर्वमतिसृष्टो यतो भवद्भिरुचितमर्यादया सर्वाज्ञाः कर्तव्याः । चातुर्विद्याग्रहारपरीहारान्वितरामस्तद्यथाभटच्छत्रप्रावेश्यः अचारासन-चर्माङ्गार-किण्व-क्रेणि-खानकः अपारम्परः अपशुमेध्य अपुष्पक्षीरसन्दोहः सनिधिस्सोपनिधिस्सक्लृप्तोपक्लृप्तः । तदेष भविष्यद्राजभिस्संरक्षितव्यः । यश्चात्मच्छासनमगणयमानस्स्वल्पामप्यत्राबाधां कुर्य्यात्कारयीत वा तस्य ब्राह्मणैरावेदितस्य स-दण्ड-निग्रहं कुर्य्याम । व्यासगीतश्चात्र श्लोको भवति ।

स्वदत्तां परदत्तां वा यो हरेत वसुन्धराम् ।

गवां शतसहस्रास्य हन्तुर्हरति दुष्कृतम् ॥

संवत्सरे च त्रयोदशमे लिखितमिदं शासनम् । चक्रदासेनोत्कट्टितम् ।"

அக்கிரஹாரம் என்பது தமிழ்நாடுபோன்றே, கர்நாடகம், ஆந்திரம், கேரளம் போன்ற இதர தென்னிந்திய மாநிலங்களிலும் சிறப்பாக விளங்கிவந்ததென்பதை நாம் பார்க்கலாம். பழைய அக்கிரஹாரங்களின் இன்றைய பின்தங்கிய நிலை நமக்கு இந்த எல்லா மாநிலங்களிலும் காணக்கிடைக்கிறது. அக்கிரஹாரம், சதுர்வேதிமங்கலம் என்ற பெயர் பூண்ட பல பழைய ஊர்களையும் நாம் எல்லாவிடங்களிலும் காண்கிறோம். (உதாரணமாக, கணபதி அக்கிரஹாரம், அம்மன் அக்கிரஹாரம் போன்றன.) பிராமணர்கள் வெகுவாகக் குடிபெயர்ந்து அக்கிரஹாரத்தினையும், கிராமத்தையும் விட்டு, நகரங்களில் போய்ச்சேர்ந்து, முற்றிலும் வேறுவிதமான வாழ்க்கைமுறையைக் கைக்கொண்டதால், பிராமணர்களின் தர்மம், கடமைகள், சமூகத் தலைமை, வழிநடத்தும் பான்மை எல்லாம் சீரழிந்துபோகும் நிலை காலப்போக்கில் உருவாகியுள்ளது.

"अघं हरामि सर्वेषां अग्रंचैव नयाम्यहम्।

अग्रहारेषु वासेन चोन्नतिर्हि न संशयः॥" என்ற கவி விஜய் மேத்தாவின் வாசகம், அக்கிரஹாரமே கூறுவதுபோன்று அமைந்து, எல்லோரையும் அழைக்கிறது: "வாருங்கள், நான் எல்லார் பாவங்களையும் ’ஹரணம்’ செய்து, அதாவது நீக்கி, ’அக்கிரம்’, முன்னே அழைத்துச்செல்கிறேன். அக்கிரஹாரத்தில் வசித்தால் உன்னதமே கிட்டும், இதில் சந்தேகமில்லை" என்று.அக்கிரஹாரத்தின் பழைய பெருமையான நிலைக்கு அதை உயர்த்தி, பிராம்மணர்கள் தங்கி, தர்மத்தைக்காத்து, மற்றோரையும் வழிநடத்த ஏதுவான சூழ்நிலை உருவாக நாம் எல்லா முயற்சியையும் மேற்கொண்டு, ஆசாரியாளின் பாதம் பணிந்து, பகவானின் கிருபாகடாக்ஷத்தை நாடுவோமாக.

இணைப்பு: சங்ககால இலக்கியக் குறிப்பு; மஹாஸ்வாமிகள் அருள்வாக்கு

ஸ்ரீ ஆத்மபோத தீர்த்த ஸ்வாமிகள் (ஸ்ரீ கும்பகோணம் ஸ்வாமிகள்)

பி.ஆர்.கண்ணன்

காஞ்சி காமகோடி பீடம்


 

 

 

950
0