Thanjavur Paramapara

Jun 16, 2022

பிராமணன்

2

ஸ்ரீ ராமஜயம்

இந்தக்கட்டுரையை எழுதும் நானும் பிராமணனாய் பிறந்தவன் தான் . ஆனால் நான் பிராமணனாக வாழ்ந்து வருகிறேனா என்னும் கேள்வி பிறந்தால் , அதற்கு உறுதியாக , " ஆம் " என்று பதில் கூறமுடியாமல் இருக்கிறேன் . ஏனென்றால் , நான் எனது வாழ்நாளில் பிராமணன் தன் குல தர்மப்படி செய்ய வேண்டிய கடமைகளை செய்யாது இருந்துவிட்டேன் . பிராமணனாகப் பிறந்த எல்லோரும் வேத அத்யயனம் செய்து தான் ஆகவேண்டும் . அதற்கு என் தகப்பனார் என்னுடைய ஏழாவது வயதில் (ஒன்றிரண்டு வயது கூடவானாலும் பரவாயில்லை ) உபநயனம் ஆனவுடன் எனக்கு வேதம் கற்பிக்கவேண்டிய ஏற்பாட்டைச்செய்ய வேண்டும் . அப்படி செய்யாததால் என்னால் வேதம் காலத்தில் கற்க முடியவில்லை . பணிக்கு செல்லும் நாட்களில் --அதாவது 60 வயது வரை -- நாம் செய்யவேண்டிய வற்றையெல்லாம் செய்ய முடியாது தான்-- . ரிட்டையர் ஆனபிறகு ,அதாவது பணியிலிருந்து முற்றிலும் விலகிய பிறகு (என் பற்கள் விழாதிருக்கும்போதே ), நான் எனது குல தர்மப்படி செய்ய வேண்டியதான வேத அத்யயனத்தை செய்து வரலாமே ?அதுவும் செய்ய வில்லை . ஏன் ?காரணம் -இது நாள்வரை செய்து வந்த பழக்கம் ,சோம்பேறித்தனம் , பக்கத்து வீட்டுக்காரன் போல் தான் நானும் எனது வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவேண்டும் என்பது போன்ற தவறான 'ஆட்டு மந்தை ' மனோபாவம் .

வாஸ்தவத்தில் ,பிராமணனாகிய நான் யார் ? நான் மகா முனிவர் காஸ்யப கோத்ரத்தை சேர்ந்தவனாதலால் அவர் தான் என் வம்சத்திற்கு மூலமாக ஆவார் .அவருடைய டி.என்.ஏ .(உத்பன்ன பீஜம்) தான் என் ரத்தத்தில் ஒரு கடுகளவாவது இன்னமும் இருக்கிறது . இந்த விதத்தில் நானும் அவரைப்போன்றவனே . அவ்விதத்தில் நானும் அவரைப்போல் உயர்ந்தவனேதான் . (இவ்வாறு நான் சொல்வது வெறும் கட்டுக்கதையல்ல . சற்று யோசித்தால் ஏற்கக்கூடியதே .) என் முன்னோர்கள் செய்தபடி எனது வாழ்க்கைமுறையை போதாயனர் என்று அறியப்பட்ட இன்னொரு மகான் சொல்லியபடியே அமைத்துக்கொண்டிருக்க வேண்டும், அப்படியும் நான் செய்யவில்லை . என் வாழ்க்கையும் எல்லோருடையதன் போல் மிருக அல்லது பக்ஷியின் வாழ்க்கைபோலாகிவிட்டது . இதன் விளைவை நான் எண்ணிப்பார்க்கையில் , பல கோடி ஜன்மங்கள் நான் செய்த நற்செய்கைகளின் விளைவாக எனக்குக் கிட்டிய அரிய மனுஷ்ய ஜன்மாவை நான் வீணடித்து விட்டதாகவே எனக்குத்தோன்றுகிறது . பரவா

யில்லை . நான் வாழ்ந்து வரும் வரை பலவிதமான தர்மங்களை செய்து பொது ஜனங்களுக்கு நிறைய தொண்டு செய்யலாம் .செய்ய வேண்டும் . இவ்வாறான தொண்டு எதுவும் செய்யாதிருந்தால் நாம் விவாழும் வாழ்க்கைக்கு என்ன அர்த்தம் ?

மாதிரிக்கு , இது சம்பந்தமாக நான் இங்கு ஒருவரைப்பற்றிக்கூற விரும்புகிறேன் .அவரும் பொருளாதாரத்தில் நம்மைப்போல் மத்தியதர பிராமண வகுப்பைச் சேர்ந்தவர் தாம் . அவரது பெயர் ஸ்ரீமதி மஹாலக்ஷ்மி சுப்பிரமணியம் (சுப்ரமணியம் அவரது கணவர் ) பிராமண ஸ்திரீ -- பழுத்த சுமங்கலி . மஞ்சள் பூசிய வெளுத்த முகம் .நெற்றியில் பளிச்சிடும் குங்குமப்பொட்டு .வயது சுமார் 55 . இவர் உடுப்பது சாதாரண பருத்தி புடவை . நகை என்பது , அணியும் திருமங்கல்யம் ஒன்றே , வேறு கிடையாது .அங்கிங்குமாக நரை படிந்த , அள்ளி முடிந்த தலைமயிர் . கணவர் சுப்பிரமணியமும் எளியவர் . அம்மையாரும் தமது கணவருடன் நமது தமிழ் நாட்டில் உள்ள பாழடைந்த கோயில்களனைத்திற்கும் சென்று அக்கோயில்களை ஒவ்வொன்றாக புதுப்பித்து ,அவற்றில் பூஜைகளை துவக்க ஏற்பாடுகளைச் செய்து , காலத்தில் அவற்றின் கும்பாபிஷேகத்திற்கும் ஏற்பாடு செய்வதே தன்னுடைய தினசரி தர்மமாக கொண்டுள்ளார் . இக்காரியத்திற்கு வேண்டிய பணத்திற்கு பல செல்வந்தர்களை நேரில் சென்று பார்த்து ,அவர்களிடம் கோயில்களின் புணருத்தாரணத்தைப்பற்றி பேசி ,அவர்களது மனதில் இடம் பிடித்து, இந்தப்பணிக்கு வேண்டிய பணத்தை வசூல் செய்து கொள்கிறார் . இவர் இந்தப் பணிக்காக போகாத ஊரில்லை ,பார்க்காத நபரில்லை .இந்த அம்மையாராலும்,அவரது கணவராலும் புனருத்தாரணம் செய்யப்பட கோயில்கள் அநேகம் . அவை சிவன் கோயிலோ அல்லது பிள்ளையார் கோயிலோ அல்லது விஷ்ணு அல்லது சுப்ரமணியஸ்வாமி கோயிலோ , அல்லது மாரியம்மன் கோயிலாகட்டும் --எல்லாம் கோயில்கள் தாம் . இன்று நம் தமிழ் நாட்டில் பல பாழடைந்த கோயில்கள் இவ்வாறு புணருத்தாரனனம் செய்யப்பட்டு நடைமுறை கோயில்களாக மாறியுள்ளதை பார்க்கலாம் . இது எவ்வளவு பெரிய தர்ம காரியம் ! இத்தம்பதியினரிடமிலிருந்து நாம் அறிந்துகொள்ள வேண்டிய படிப்பினை , " எந்த தர்மகாரியமும் செய்ய ,அதில் முழு மனதுடன் இறங்கவேண்டும் .வெற்றி கிடைக்கும் வரை அயராது உழைக்கவேண்டும் . வெற்றிகிடைத்தபின் அதன் பலனை ஈஸ்வரார்ப்பணம் செய்துவிட வேண்டும் . மேலும் எந்த ஒன்று பலனையும் நோக்கி விழையாமல் (அஹைதுகமாக ) நற்காரியத்தில் இறங்க வேண்டும் .

இதற்குத்தான் இந்த பிராமண ஜன்மா நமக்கு இப்பொழுது கிடைத்திருக்கிறது . நாம் எல்லோரும் இந்த ஜன்மாவை பயனுடையதாக செய்வோம் .


 

ச.சிதம்பரேச ஐயர்

9 ஏப்ரல் 2022


 

190
0