Thanjavur Paramapara

Dec 23, 2020

புன்னைநல்லூர் முத்து மாரியம்மன்

தெய்வத்தின் தொண்டு 73.1

சரித்திரம் : புன்னைநல்லூர் மற்றும் கிழக்கிந்திய கம்பெனியர் - 6

அத்யாயம் : புன்னைநல்லூர் முத்து மாரியம்மன்

• மராத்திய போன்சலே வம்சத்தில் அவதரித்த மாமன்னர் சத்ரபதி சிவாஜியின் இளைய தம்பி வெங்கோஜி என்ற ஏகோஜி (ஆட்சி காலம் 1674- 1684) , தஞ்சாவூரை, அப்பகுதியில் அதுநாள் வரை ஆட்சி செய்து வந்த தஞ்சை நாயக்கர் மன்னர்களிடம் இருந்து பொது வருடம் 1674இல் வென்று, தஞ்சாவூர் மாராத்திய அரசை நிறுவினார்.

• மன்னர் வெங்கோஜி தீர்த்த யாத்திரையாக அடிக்கடி கண்ணனூர் (சமயபுரம்) மாரியம்மனை தரிசனம் செய்வது வழக்கம்.  அப்படி ஒரு முறை சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்த பிறகு, அங்கேயே சிறிது ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சமயத்தில் கருணையின் வடிவான அன்னை மாரியம்மன் அவரின் கனவில் தரிசனம் கொடுத்து தான் தஞ்சாவூருக்கு கிழக்கே புன்னைவனக் காட்டு பகுதியில் வேப்பமரத்தடியில் புற்றுருவில் வாசம் செய்வதாகவும், அங்கேயே தன்னை தரிசன செய்யலாம் என்று அருளியபடி மறைந்தாள்.

• வெங்கோஜியும் உடனே தஞ்சாவூருக்கு கிழக்கே இருக்கும் புன்னைக்காட்டினை அடைந்து, அன்னை கனவில் சொன்ன அடையாளங்களை வைத்து தேடிய பொழுது ஒரு திறந்த வெளியில் வேப்பமரத்தடியில் புற்றுருவாய் எழுந்தருளியிருக்கும் மாரியம்மனை தரிசனம் செய்தார். அன்னை மாரியம்மன் இப்படி மேற்கூரை கூட இல்லாமல்  வெட்டவெளியில் இருப்பதை கண்ட மன்னர் வெங்கோஜி மிகவும் மனவருத்தம் அடைந்து, உடனடியாக அவ்விடத்தில் சிறு ஆலயம் போல ஒரு மேற்கூரை அமைத்து பக்தர்கள் வந்து வழிபாடு செய்ய ஏற்பாடுகள் செய்தார்.

• சிறிது காலத்திற்கு பிறகு முதலாம் சரபோஜி மகன் முதலாம் துளஜா (இவருக்கு துக்கோஜி என்ற பெயரும் உண்டு - ஆட்சி காலம் பொது வருடம் 1728 -1736) தஞ்சை மராட்டிய மன்னராக இருந்த சமயத்தில் அவரின் மகளுக்கு அம்மை நோயினால் பார்வை பறிபோனது. தனது மகளுக்கு இப்படி நடந்து துளஜா மகாராஜாவை மிகவும் பாதித்தது. அதே நினைப்புடன் வருத்தத்தில் இருந்த அவரின் கனவில் ஒருநாள் தெய்வீகமான தோற்றத்தில் இருக்கும் சிறுமி ஒருவள் தோன்றி, ‘உன்னுடைய பெரிய தாத்தா வெங்கோஜி என்மீது பக்தி வைத்து வெயில், மழை என் மீது விழாமல் இருப்பதற்காக  எனக்காக மேற்கூரை அமைத்தவர், அந்த வம்சத்தில் வந்த உன்னையும், உன் மகளையும் நான் காப்பாற்றுவேன், என்னிடம் வா என்று சிரித்தபடி கூறி மறைந்தாள். கனவு களைந்தது துள்ளி எழுந்த துளஜா, தனது கனவில் வந்தது அந்த தெய்வீக சிறுமி புன்னைநல்லூர் மாரியம்மன்தான் என்பதைப் புரிந்து கொண்டார். காலையில் முதல் வேலையாக தன் மகளுடன் அன்னை முத்து மாரியம்மன் எழுந்தருளியிருக்கும் புன்னைநல்லூருக்கு வந்து அன்னைக்கு அபிஷேக ஆராதனைகள் பக்தியுடன் சமர்பித்தார். தனது மகளின் கண்களில் ஒளி வரவேண்டும் என்று பிராத்தனை செய்தபடி அன்னையின் சந்நதியில் நெய் விளக்கு ஏற்றினார். அந்த தீபங்களின் வெளிச்சத்தில் அன்னை முத்து மாரியம்மனை தரிசனம் செய்த பொழுது அன்னையிடம் இருந்து ஒரு ஒளி வெள்ளம் தனது மகளை நோக்கிச் சென்றதை கண்டார். அது பிரமையோ என்று தனது கண்களை கசக்கி விட்டுக் மீண்டும் பார்த்தால், அந்த ஒளி வெள்ளத்தில் இப்பொழுது அந்த இடமே ஜொலித்தது, அப்பொழுது ஒரு குரல் எனக்கு மீண்டும் கண்கள் நன்றாக தெரிகிறது என்ற ஆனந்த கூச்சல் கேட்டது. யார் என்று  பார்த்தால் அவரது மகள் தான் அழுதபடியே மீண்டும் மீண்டும் தனக்கு கண் பார்வை கிடைத்து விட்டது என்று கூறிக் கொண்டு இருந்தாள். ஆம் அன்னை முத்து மாரியம்மன் அருளால் அவளுக்கு மீண்டும் கண்பார்வை கிடைத்தது. அன்னை தனது பிராத்தனைக்கு இரங்கி தனது மகளுக்கு கண் பார்வை தந்ததை எண்ணி எண்ணி உருகிய மன்னர் துளஜா, அன்னை முத்து மாரியம்மனுக்கு ஒரு அழகிய கோயிலையும், திருமதிலையும் கட்டி அதை அன்னையின் திருவடியில் சமர்பித்தார் . மேலும் அன்னை சந்நிதியில் தான் என்றும் வணங்கும் வகையில் சதாசேவை வடிவில் தனது திருவுருவத்தையும் சிலையாக வடித்து அன்னையின் கோயிலில் வைத்துள்ளார் .

• தஞ்சை மராட்டிய மன்னர் இரண்டாம் சரபோஜி (பொது வருடம் 1798 -1832) அன்னை முத்து மாரியம்மன் கோயிலின் முன் கோபுரம், மகா மண்டபம், நர்த்தன மண்டபம், இரண்டாவது பெரிய சுற்றுச்சுவர் போன்றவற்றை கட்டி திருப்பணி செய்தார்.

• தஞ்சை மராட்டிய மன்னர் சிவாஜி (பொது வருடம் 1832-1855) அன்னை முத்து மாரியம்மன் கோயிலின் முன்றாவது திருச்சுற்று மதிலை அமைத்தார்.

• தஞ்சை மராட்டிய மன்னர் சிவாஜி அவர்களின் இரண்டாவது மனைவி ராணி காமாட்சியம்பா பாயி சாகேப் (இவர் தான் பொது வருடம் 1878ல் தஞ்சாவூர் ராஜா மிராசுதார் மருத்துவமனை அமைய 40 ஏக்கர் நிலமும் ரூபாய் 30000/- ரொக்கமும் நன்கொடையாக தந்து அமைத்தவர்). இவர் அன்னை முத்து மாரியம்மன் கோயிலின் மடப்பள்ளி (சமையல் அறை) மற்றும் வெளிமண்டபம் ஆகியவற்றைக் அமைத்தார்.

கிழக்கிந்திய கம்பெனியின் பல கிழக்கிந்திய கம்பெனியின் அதிகாரிகள் பலர் புன்னைநல்லூர் மாரியம்மனின் அருளை பெற்றுயிருக்கின்றார்கள். அவர்களில் சிலர் அன்னைக்கு பல திருவாபரணங்களை சமர்ப்பித்துள்ளனர். இதுபற்றி ஒரு சம்பவத்தை பற்றி அறிய சிறிது காத்திருக்கலாமா!

620
0