சைவம், வைஷ்ணவம் என்னும் பிரிவுகளில் அவ்வப்போது எதிர்பாராத விதமாக சில சர்ச்சைகள் எழுவதுண்டு.
நடமாடும் தெய்வம் என்பதால், மற்ற எவருக்குமே எளிதில் மனதில் தோன்றாத வகையில் குழப்பங்களுக்கும் பிரச்னைகளுக்கும் மஹா பெரியவாளிடமிருந்து சில நொடிகளில் ஒரு நல்ல தீர்ப்பு கிடைத்து விடுவதுண்டு.
இப்படி சிக்கலான ஒன்றைச் செய்வதா, வேண்டாமா என்று மன அடிப்படையிலோ, சம்பிரதாய அடிப்படையிலோ யாரிடம் கேட்டால் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்னும் சந்தேகங்களுக்கெல்லாம் மஹானின் தீர்ப்பு ஒன்றுதான் சரியாக இருக்கும் என்று நம்பி அவரைத் தரிசிக்க வருபவர்கள் அநேகர் உண்டு. அப்படிப்பட்ட சம்பவங்களில் ஒன்று.
வைணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்த அந்த அம்மையாருக்கு இப்படி ஒரு பிரச்னை வந்து விட்டது. மஹானிடம் சென்றால் தான் இதற்குத் தீர்வு ஏற்படும் என்று நம்பி அந்தப் பெண்மணி, வைணவ மரபுப்படி மஹானை சேவித்து எழுந்தாள்.
அந்த நேரத்தில் மஹானின் முன் அதிக பக்தர்கள் சேர்ந்திராத நேரம். அம்மாளின் கண்களில் ஏக்கம். ஆவல், எதிர்பார்ப்பு, நம்பிக்கை என்னும் கலவை நன்றாகத் தெரிந்தது. அந்தப் பெண்மணியின் குடும்பத்தில் பலவிதமான கஷ்டங்கள். வியாதி வெக்கையோடு ஒரு பெண்ணுக்குக் கல்யாணமாகி ஏழெட்டு வருடங்கள் ஆயின. அப்பெண்ணுக்கு புத்திர பாக்கியம் கிட்டவில்லை.
மற்றொரு பெண்ணிற்கு வயது ஏறிக்கொண்டே போகிறதே தவிர, சரியான வரன் கிடைக்கவில்லை. பையனுக்கோ படிப்பு ஏறவில்லை. இத்தனைக்கும் மேலாக பணக்கஷ்டம். இன்னும் என்னென்னவோ சிரமங்கள். திடீர் திடீர் என்று ஏற்படக்கூடியவை.
இவற்றிற்கு என்ன பரிகாரம் என்று பல இடங்களுக்கு சென்று கேட்ட வண்ணம் இருந்த அக்குடும்பம், நீங்காத துன்பங்களோடு தவித்தது. யாரோ சொன்னார்கள் என்று கேரளாவுக்குச் சென்று ஒரு நம்பூதிரியிடம் பிரச்னம் பார்த்ததில் பித்ரு தோஷம் இருப்பதாகத் தெரிந்து, முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கர்மங்களை இவர்கள் ஒழுங்காக செய்யவில்லை என்றும் தெரிந்தது.
இந்த தோஷம் முழுமையாக நிவர்த்தியாக வேண்டுமென்றால் ராமேஸ்வரம் போய் அவசியம் பரிகாரம் செய்ய வேண்டும் என்று நம்பூதிரி முடிவாக சொல்லி விட்டார்.
ஆனால் இதில் ஒரு பெரிய சிக்கல் இருந்தது. வைணவ சம்பிரதாயப்படி ராமேஸ்வர யாத்திரை பரிகாரச் சடங்கு போன்றவை மரபில் இல்லை. அம்மையாருக்கு, இந்தக் குழப்பத்திற்கு தீர்வை யாரிடம் கேட்பது என்று தீவிரமாக யோசிக்கையில் கண் கண்ட தெய்வமான மஹா பெரியவாளெனும் பெருந்தெய்வத்திடம் முறையிடுவதே உத்தமம் என்று உறுதியாகத் தெரிந்தது.
அதன் முடிவுதான் இப்போது அந்த அம்மையார் தெய்வத்தின் சன்னதியில்.
கண்களில் நீர் பெருக அந்த அம்மாள் தன் குறைகளையும் அதற்குச் செய்யவேண்டிய பரிகாரத்தையும் சொல்லிவிட்டு, “எங்களுக்கு என்ன செய்யறதுன்னே தெரியல்லே. சம்பிரதாயத்தை மீற முடியாது. கஷ்டம் நிவர்த்தியாகணும். ஆனா அதுக்கு ராமேஸ்வரம் போகணுமாம். மஹா பெரியவா தான் இதுக்கு ஒரு வழி காட்டணும்”. என்றார்.
”நீங்கள் தென்கலையா?” மஹான் கேட்கிறார்.
“ஆமாம்”
“உப்புச்சாறு, சானிச்சாறு, சடைச்சாறு என்கிற மூணும் தென்கலையார்களுக்குக் கிடையாது” என்றார் மஹான்.
அம்மையாரின் முகத்தில் லேசான பிரகாசம். ஏதோ ஒரு வழி கிடைத்து விடும் என்ற நம்பிக்கை.
“ஆமா, எங்கம்மா இந்த மூணைப்பத்தி எப்பவோ சொல்லியிருக்கிறதா எனக்கு ஞாபகம்”.
மஹான் விளக்குகிறார்: “அதேதான். ராமேஸ்வர சமுத்திர ஸ்நானம் (உப்புச்சாறு), பஞ்சகவ்ய பிராசனம் (சானிச்சாறு), கங்காஸ்நானம் (சடைச்சாறு) பரமசிவன் சடையிலிருந்து வெளிப்படும் (கங்கை) ஆகிய இவை தென்கலை சம்பிரதாயமில்லை. அதனாலே அதுக்கு விரோதமா நீங்க ராமேஸ்வரம் போக வேண்டாம்” என்று தீர்மானமாக மஹான் சொல்லியதைக் கேட்ட அந்தப் பெண்மணி கண்ணீர் மல்க, அவரை சேவித்து நின்றார்.
எத்தனை ஆணித்தரமாக, எளிமையாக, தன் சஞ்சலத்தை மஹான் போக்கி விட்டார் என்று நினைத்த அப்பெண்மணியின் மனம் மிகவும் தெளிவாகியது.
சரி, இந்த கஷ்ட நிவர்த்திக்குப் பிறகு என்ன தான் விமோசனம்? அதை மஹான் சொல்லாமலா இருப்பார்.
சொன்னார்:
“நித்தியம் சாளக்கிராம திருவாராதனை செய்து திருமஞ்சனம் சாப்பிடணும். ஏகாதசி அன்னைக்கு உபவாசம் இருக்கணும். பால், பழம், கிழங்கு மட்டும் சாப்பிடலாம். அன்னிக்கு உன் வீட்டுக்காரர் பன்னிரெண்டு திருமண் இட்டுண்டு திருவாராதனை செய்யணும். மறுநாள் துவாதசி அன்னிக்கு சீக்கிரமே திருவாராதனை செய்து, துளசி தீர்த்தம் சாப்பிட்டுப் பின் ஆகாரம் பண்ணணும். தினமும் ஒரு பசு மாட்டுக்கு ஒரு கைப்பிடி அளவு புல் தரணும். இதை எல்லாம் செஞ்சா சர்வ பிராயசித்தம் செய்ததாகும்!”
இப்படி மெள்ள மெள்ள திருவார்த்தைகளாக சாட்சாத் ஈஸ்வரரிடமிருந்து உபதேசங்களை பெறும் பாக்யம் பெற்ற அந்த அம்மையாருக்கு உதடுகளை மடக்கி அழுவதையும் ஆனந்தக் கண்ணீரையும் அடக்க வேண்டிய நிலை உண்டானது. தெய்வமே நேரில் தோன்றி தன் மனக்குறையை நிவர்த்தி செய்ததாக அப்பெண்மணி உணர்ந்தாள்.
அந்தப் பெண்மணி சொன்னார்:
“இதைப் பெருமாளே எனக்கு நேரில் வந்து சொன்ன மாதிரி இருக்கு. மனசிலே நிறைய குழப்பங்கள். ஒரு வேளை பெரியவாளும் நீ ராமேஸ்வரந்தான் போகணும்னு சொல்லிட்டா என்ன செய்யறதுங்கற பயம். ஆனால் மஹானின் மனசு ஸ்படிகம் மாதிரி பரமசுத்தம். சம்பிரதாயத்துக்கு விரோதமில்லாதபடி எனக்கு நல்ல வழிகாட்டியிருக்கா”.
பித்ரு தோஷத்திற்கான இந்தப் பிராயச்சித்தத்தை எல்ல வைணவர்களும் கடைப்பிடிக்கலாம் என்பது போல ஒரு உன்னதமான உபதேசத்தை மஹான் அருளி விட்டார். அத்தெய்வத்தின் வழிகாட்டல் எப்போதுமே மக்களின் மேன்மைக்காகவே இருந்தது என்பது தான் உண்மை.
ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!
Comments