கல்வித் திட்டத்தில் ஒவ்வொரு வருஷத்தையும் இரண்டு டெர்ம்களாகப் பிரித்திருந்தார்கள். முதல் டெர்ம் சுமார் ஐந்து மாஸம் கொண்டது. இரண்டாவது டெர்ம் சுமார் ஏழு மாஸ காலம். முதல் டெர்முக்கு ‘உபாகர்மம்’ என்றும் இரண்டாவது டெர்முக்கு ‘உத்ஸர்ஜனம்’ அல்லது ‘உத்ஸாகம்’ என்றும் பெயர்.
உபாகர்மம் என்றவுடன் சில பேருக்காவது ‘ஆவணியாவட்டம்’ – அதவாது வருஷா வருஷம் புதுப்பூணூல் போட்டுக் கொள்ளும் நாள் – என்று நினைவுக்கு வரலாம்.
இது ரிக் வேதிகளுக்கு ச்ராவண மாஸத்தில் ச்ரவண நக்ஷத்ரம் வரும் நாள். ச்ராவண மாஸம் என்பது ஆடி அமாவாஸ்யையிலிருந்து ஆவணி அமாவாஸ்யை வரையுள்ள காலம். ச்ராவணி என்பதன் திரிபுதான் ஆவணி.
யஜுர் வேதிகளுக்கு உபாகர்மம் என்பது ச்ராவண மாஸப் பௌர்ணமியன்றாகும்
ரிக் வேதிகள் ச்ரவண நக்ஷத்ரத்தை வைத்து நாளை நிர்ணயிக்கிறார்கள். யஜுர் வேதிகள் பௌர்ணமித் திதியை வைத்து நிர்ணயம் செய்கிறார்கள்.
மிகவும் பூர்வ காலத்தில் ச்ராவண மாஸப் பூர்ணிமை தப்பாமல் ச்ரவண நக்ஷத்ரத்தன்றேதான் வந்து கொண்டிருந்தது, அதனால்தான் அந்த மாஸத்துக்கே அப்படிப் பேர். தப்பாமல் ச்ரவண நக்ஷத்ரமும் பௌர்ணமியும் ஒன்றாகவே இருந்த காலத்தில் அந்த நாளில்தான் ரிக் வேதிகள் யஜுர்வேதிகள் ஆகிய இருவரும் உபாகர்ம டெர்மை ஆரம்பித்தார்கள். அப்புறம் க்ரஹக் கோளாறில் அம்மாஸப் பௌர்ணமியன்று ச்ரவண நக்ஷத்ரத்துக்கு அடுத்ததான அவிட்டம் வந்தபோதும் யஜுர் வேதிகள் பெனர்ணமித் திதியிலேயே உபாகர்மாவை வைத்துக் கொண்டார்கள். தர்ம சாஸ்த்ரங்களில் குறிப்பாக ‘ச்ராவண பூர்ணிமையில் உபாகர்மம் செய்யவேண்டும்’ என்றே சொல்லியிருப்பதால் (பூர்ணிமைத்) திதியை யஜுர் வேதிகள் முக்யமாக எடுத்துக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அதனால் அவிட்டத்தில் அந்தப் பூர்ணிமை வந்தாலும் அன்றைக்கே உபாகர்மா செய்தார்கள்.
இதுதான் “ஆவணி அவிட்டம்” – அதாவது “ஆவணியாவட்டம்” என்று நாம் சொல்வது.
ரிக்வேதிகள் இப்போதும் திதியைப் பார்க்காமல் சரவண நக்ஷத்திரத்திலேயே உபாகர்மாவை “ச்ராவணம்” என்றே சொல்வது இதனால்தான். இப்படியாக, ரிக்வேதிகளுடைய உபாகர்மாவுக்கு அவிட்ட ஸம்பந்தமேயில்லை. ஆனாலும் தக்ஷிணத்தில் யஜுர்வேதிகளே பெரும்பாலாராயிருப்பதால் அவர்கள் கொடுத்த “ஆவணியாவட்ட”ப் பெயரையே ரிக் வேதிகளும் தங்களுடைய உபாகர்மாவுக்கும் சொல்கிறார்கள்.
இப்போதும் சில வருஷங்களில் ச்ராவண மாஸப் பௌர்ணமி ச்ரவண நக்ஷத்ரத்திலேயே வருகிறது. அப்போது ரிக் வேதிகள் யஜுர்வேதிகள் ஆகிய இரண்டு பேருக்கும் ஒரே நாளில் உபாகர்மா வருகிறது.
ஸாமவேதிகள் இதற்கு ஒரு மாஸம் தள்ளி (ஆவணி அமாவாஸ்யையிலிருந்து புரட்டாசி அமாவாஸ்யை வரையுள்ள ஒரு மாத காலமாகிய) பாத்ரபத மாஸத்தில் ஹஸ்த நக்ஷத்ரத்தில் உபாகர்மா செய்கிறார்கள். அநேகமாக அது பிள்ளையார் சதுர்ததியாகவோ அல்லது அதற்கு ஒரு நாள் முன்னே பின்னேயோ இருக்கும். ஹஸ்தமும் பஞ்சமியும் ஒன்று சேர்ந்திருந்தால் விசேஷமென்று சாஸ்த்ரங்களிலிருந்து தெரிகிறது. ச்ராவண மாஸ்ப்பூர்ணிமையும் ச்ரவணமும் தப்பாமல் சேர்ந்தே வந்த அக்காலத்து பாத்ரபதமாஸத்தில் ஹஸ்தம் பஞ்மியிலேயே வந்திருப்பதாகத் தோன்றுகிறது. தற்போது அது அநேகமாகப் பிள்ளையார் சதுர்த்தியன்றோ, அல்லது அதற்கு முதல் தினமான த்ரிதீயையாகவோ வருகிறது.
உபாகர்மம் என்பதே இப்போது பல பேருக்குத் தெரியாத வார்த்தை. (தாங்கள் என்ன வேதம் என்பதுகூட அநேகம் பேருக்குத் தெரியாமலிருக்கலாம்) தெரிந்தவர்களில் பெரும்பாலாரும் அது பழைய பூணூல் சிக்குப்பிடித்து அழுக்காவி விட்டதே என்று புதும் பூணூல் மாற்றிக் கொள்கிற ஒரு நாள் என்றுதான் நினைக்கிறார்கள். உண்மையில் பூணூல் மாற்றிக்கொள்வதென்பது உபாகர்மாவிலே ஒரு சின்ன அங்கம்தான்.
உபாகர்மா என்பது அந்த ஒரு நாளோடு போகாமல் அடுத்த ஐந்தாறு மாஸங்களான ஒரு டெர்முக்கு ஆரம்ப நாளாக இருப்பதாகும்.
இந்த முதல் டெர்மில் மூலமான வேதத்தை மட்டும ஆசார்யர் கற்றுக் கொடுத்துச் சிஷ்யர்கள் சொல்லிக் கொள்வார்கள். அதாவது ‘ச்ருதி’ என்றே சொல்லப்படுவனவான தேவதஸம்ஹிதை, ப்ராஹ்மணம், ஆரண்யகம், உபநிஷத்துக்கள் ஆகியவற்றில் பாடம் நடக்குமூ. புஷ்யமாஸம் என்கிற நம் தை பிறக்கும்வரையில் இந்தப் பாடம் தொடரும். (புஷ்யத்துக்குத் ‘தைஷம்’ என்றும் பெயர் உண்டு. ‘தைஷம்’தான் ‘தை’ ஆயிற்று.)
அப்போது ‘உத்ஸர்ஜனம்’ என்கிற கர்மாவைச் செய்து ச்ருதி பாடத்தை முடிப்பார்கள். புஷ்யமாஸம் பூர்ணிமையிலாவது அதற்கு முன்வரும் ரோஹிணியிலாவது உத்ஸர்ஜனகர்மா செய்யவேண்டும். ஸாமகர்கள் (அதாவது ஸாமவேதிகள்) புரட்டாசியில்தான் உபாகர்மம் செய்வதால், அத்யயன டெர்ம் ஐந்து மாஸமோ அல்லது குறைந்த பக்ஷம் நாலரை மாஸமோ இருக்கவேண்டும் என்ற விதிப்படி, அவர்கள் மாக பூர்ணிமையில் உத்ஸர்ஜனம் செய்யவேண்டும். தை அமாவாஸ்யைக்குப் பதினைந்து நாட்கள் கழித்துவரும் பௌர்ணமியே மாக பூர்ணிமை.
உத்ஸர்ஜனம் என்றாலும் விஸர்ஜனம் என்றுதான் அர்த்தம் – அதாவது “விட்டு விடுவது”. வேத அத்யயன – அத்யாபனங்களை ஒரு கட்டத்தில் விட்டுவிடுவதற்காகச் செய்யும் வைதிக கர்மா உத்ஸர்ஜனம். மறுபடி ஏழு மாஸம் கழித்து அடுத்த “ஆவணியாட்ட”த்தில், விட்ட கட்டத்திலிருந்து வேத பாடத்தைத் தொடங்கவேண்டும். ‘உபக்ரமணம், என்றால் தொடங்குவது என்று அர்த்தம், அதனால்தான் அன்று செய்கிற கர்மாவுக்கு ‘உபாகர்மா’ என்று பெயர்.
வேதத்தில் புதுப்பாடங்கள் இல்லாத இந்த ஏழு மாஸந்தான் இரண்டாவது “டெர்ம்”. இதில் வேதாங்கம் எனப்படும் வேதத்தின் ஆறு அங்கங்களான் சி¬க்ஷ, வ்யாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் ஆகியவற்றில் பாடம் நடத்துவார்கள். ஏனைய எல்லா வித்யைகளைக் கற்றுக் கொடுப்பதும் இந்த டெர்மில்தான். உபாகர்மாவுக்கான நாள் வந்தவுடன் இதை நிறுத்திவிட்டு, வேத பாடங்களுக்குப் போவார்கள். அதை உத்ஸர்ஜனம் பண்ணினவுடன் மறுபடி இந்த வேதாங்கங்களிலும் காவ்யம் முதலான இதர வித்யைகளிலும் விட்ட இடத்திலிருந்து ஆரம்பிப்பார்கள், இந்த உத்ஸர்ஜனம்தான் வடக்கே “ஸரஸ்வதி பூஜா” என்று சொல்லும் வஸந்த பஞ்சமி.
தற்போது “ஆவணியாவட்டம்” என்று பண்ணுவதில் போளியும் வடையும்தான் முக்யமாயிருக்கின்றன. ஒரு டெர்ம் முழுதும் கற்க வேண்டிய வேத பாடங்களில் ஆரம்ப ஸ¨க்தத்தை மட்டும் உபாகர்மாவன்று வாத்யார் சொல்ல, மற்றவர்கள் தப்பும் தவறுமாகத் திருப்பிச் சொல்லி விடுகிறார்கள். அதுமட்டுமில்லை. ‘விட்டு விடும்’ உத்ஸர்ஜன கர்மாவையும் அன்றே பண்ணி (இப்படி ஒன்று வாத்யார் பண்ணி வைப்பதாகக்கூடப் பல பேருக்குத் தெரிவதில்லை) , வேதாங்கங்களிலும் ஒவ்வொன்றில் ஒவ்வொரு ஸ¨த்ரத்தை மாத்ரம், வாத்யார் சொல்வதைத் திரும்பவும் உளறிக் கொட்டிவிட்டு முடிப்பதாக ஏற்பட்டிருக்கிறது. ஒரேயடியாக இந்த ஆவணியாவட்டத்துக்கே ‘உத்ஸர்ஜனம்’ செய்யாமல் எதனாலோ விட்டு வைத்திருக்கிறார்கள். வடை, போளிக்காக இருக்கலாம் இப்படி நாமே நம்மைப் பரிஹஸித்துக் கொள்ளும்படியான துர்த்திசையில் இருக்கிறோம்.
நன்றி
உமா பாலசுப்ரமணியன்
(Amritha Vahini - Google group)