நெல் விவசாயம் மக்களை சோம்பேறியாக்கியது!
வியாழன் ,செப்டம்பர்,25, 2014 தினமலர்
விவசாயம் செய்து வரும், 101 வயது, 'இளைஞர்' ரங்கராஜன்: தஞ்சாவூரை அடுத்த புதுப்பட்டினத்தை சேர்ந்தவன் நான். 10 வயதிலிருந்தே, விவசாய வேலை, மாடு மேய்ப்பது என, பல வேலைகள் செய்து வந்தேன். பொங்கல், தீபாவளி, கல்யாணத்திற்கு தான், அரிசி சாதத்தைப் பாக்க முடியும். மற்ற நாட்களில் கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, சோளம், கீரைகளைத் தான் சாப்பிடுவோம். அதுபோல், ஆட்டுப் பால், நாட்டு மாட்டுப் பால்தான் குடிப்போம்.
எனக்கு, 15 - 20 வயது இருக்கும் போதுதான், கல்லணைக் கால்வாய் வெட்டப்பட்டது. அதன் பின், மெல்ல மெல்ல எல்லாரும் நெல் விவசாயத்துக்கு மாற ஆரம்பித்தனர். நெல் விவசாயத்துக்கு மாறிய பின், மக்கள் சோம்பேறிகளாகவும், நோயாளிகளாகவும் மாறிவிட்டனர். எனக்கு 50 வயது ஆகும் போது தான், ஒரு ஏக்கர் நிலம், 8 ரூபாய் என வாங்கி, நெல், கம்பு போன்ற பயிர்களை சாகுபடி செய்து வந்த நான், தண்ணீர் சிக்கனத்திற்காக, 3 ஏக்கர் நிலத்தில் மட்டும், கொய்யா சாகுபடி செய்ய ஆரம்பித்தேன்.
கொய்யா சாகுபடிக்கு, 50 சதவீதம் மானியம் வழங்குவதோடு, கன்றுகளையும் தோட்டக்கலைத் துறை வழங்குகிறது.
கோடை காலத்தில் வயலை சமப்படுத்தி, புழுதி உழவு செய்து, அதன்பின், குப்பை எரு, சாண எருவை அடித்து, கொய்யாச் செடியை நடவு செய்ய வேண்டும். ஓராண்டு முடிந்த உடனேயே, காய் காய்க்க ஆரம்பிக்கிறது. மூன்று ஆண்டுகள் முடிந்த பின் தான், அதிக அளவு காய்க்கிறது.
இதற்கு, ஐந்து நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. அதேபோல், சிறந்த முறையில் பயிர்ப் பாதுகாப்பு செய்தால், பூச்சித் தாக்குதலும் குறைவு. கொய்யாவுக்கு எப்போதுமே நல்ல சந்தை இருப்பதால், விலை குறைய வாய்ப்பில்லை.
அதனால், ஒரு ஏக்கருக்கு ஒரு லட்சத்திற்கும் மேல் வருமானம் கிடைக்கிறது.
மேலும், கொய்யாவில் ஊடுபயிராக வெங்காயம், கோழி கொண்டைப்பூ, சம்பங்கி, சப்போட்டா போன்றவற்றை பயிரிட்டு வருகிறேன். அதன் மூலமும் வருமானம் கிடைக்கிறது. நான் இதுவரை, மருத்துவமனைக்கே சென்றது கிடையாது. இதற்கு காரணம், அந்தக் காலத்தில் சாப்பிட்ட சாப்பாடு தான். அப்போதெல்லாம் பூச்சிமருந்து, ரசாயன உரங்கள் என்றால், என்னவென்றே தெரியாது. கோடையில் குப்பை உரங்களை அடித்து வைத்து விடுவோம். அதன்பின் பூவரசு, ஆவாரம், வேம்பு, எருக்கு போன்ற மரங்களில் உள்ள இலை, தழைகளை வெட்டிப் போட்டு, வயல்களை பக்குவப்படுத்துவோம்.
இதனால், வயல்களில் விளைச்சலும் அமோகமாக இருக்கும்; பூச்சித் தாக்குதலும் இருக்காது. அதேபோல், அந்தக் காலத்து சாப்பாட்டை சாப்பிட்டு, உடலும் திடகாத்திரமாக இருந்தது.
இன்று, எதற்கெடுத்தாலும் உரத்தைப் போட்டு, வயலில் பூச்சித் தாக்குதலும் அதிகமாகி விட்டது; மனிதர்களிடம் நோயும் அதிகமாகி விட்டது.