திருப்பாலைத்துறை அருள்மிகு தவளவெண்ணகையம்மை சமேத பாலைவன நாதர் கோயில் பாபநாசத்தை அடுத்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
பாண்டவர்களின் வனவாச காலத்தில், தௌமிய முனிவரின் ஆலோசனைப்படி அர்ஜுனன் இத்தலத்திற்கு வந்து, வழிபட்டு, வில்வித்தையின் நுட்பங்களை உணர்ந்து, பாதாள உலகம் சென்று உலூபியை மணந்து வந்தான் என்று சொல்லப்படுகிறது.
தாருகாவனத்து முனிவர்கள், இறைவனைப் புறக்கணித்து அவரையே அழிக்க எண்ணி, தீயவேள்வி செய்து புலியை வரவழைத்தனர். அதை இறைவன் மீது அவர்கள் ஏவ, இறைவனும் அப்புலியின் தோலை உரித்து அதன் தோலை இடையில் ஆடையாக உடுத்திக் கொண்ட செயலைச் செய்த தலம் என்ற சிறப்பை திருப்பாலைத்துறை பெற்றுள்ளது.
இராமர், லட்சுமணன், சீதை, கெளமியர், அருச்சுனன் ஆகியோர் வழிபட்ட தலம் என்ற சிறப்பும் இத்தலத்திற்குண்டு.
ஐந்து நிலைகளைக் கொண்ட ராஜகோபுரம் கிழக்கு நோக்கிக் காட்சியளிக்கிறது. ராஜகோபுரத்தில் சிற்பங்களில்லை. கீழ்ப்பகுதி கருங்கல்லிலும், மேற்பகுதி செங்கற் கட்டமைப்பிலும் காணப்படுகிறது. உள்ளே நுழைந்தால் கொடிமரமில்லை. விநாயகர், பலிபீடம், நந்தி மண்டபம் உள்ளன.
வெளிப் பிரகாகாரத்தின் வலதுபுறம் ஒரு பெரிய செங்கல்லால் கட்டப்பட்ட நெற்களஞ்சியம் காட்சி தருகிறது. வட்ட வடிவில் கூம்பு முனையுடன் கட்டப்பட்டுள்ள இக்களஞ்சியம் சுமார் 3000 கலம் நெல் கொட்டி வைக்கும் அளவு பெரியதானது.இவ்வளவு அதிகமான நெல் வருவாயைக் கொண்டதாக இக்கோயில் விளங்கியதென்பது நமக்கு இதனால் தெரிய வருகின்றது.
வெளிப் பிரகாரத்தில் இடதுபுறம் அம்பாள் சந்நிதி தனிக்கோயிலாக, சுவாமி சந்நிதிக்கு வலதுபுறம் அமைந்துள்ளபடி உள்ளது. இதுவும் கிழக்கு நோக்கிய சந்நிதியே. அம்பாள் நின்ற கோலத்தில் காட்சி தருகிறாள்.
உள்கோபுரம் மூன்று நிலைகளையுடையது. உள்நுழைந்து கருவறை சுற்றுப் பிரகாரத்தில் வலம் வரும்போது விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், வசிஷ்டர் பூசித்த சிவலிங்கம், மகாலட்சுமி, பார்த்திபன், மலையத்துவசன் ஆகியோர் வழிபட்ட லிங்கங்கள் ஆகியவை உள்ளன. அறுபத்துமூவர் மூலவர்த் திருமேனிகள் உள்ளன. நடராஜசபை உள்ளது. காலபைரவர், சூரியன் சந்நிதிகளும் உள்ளன. மூலவர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், ஊர்த்துவ தாண்டவர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். சண்டிகேஸ்வரர் சந்நிதியும் தனியே உள்ளது.
சுவாமி சந்நிதிக்கு வலதுபுறம் அம்பாள் சந்நிதி அமைந்துள்ளதால் இத்தலம் திருமணத் தலமாக விளங்குகிறது.
திருநாவுக்கரசு சுவாமிகள் பாடியருளியுள்ள இத்தலத்திற்கான இப்பதிகம் 5-ம் திருமுறையில் இடம் பெற்றுள்ளது. இப்பதிகத்தின் நடுப்பாடலாக உள்ள விண்ணினார் பணிந்து ஏத்த வியப்புறும் என்று தொடங்கும் பாடலின் நடுவில் சூட்சும பஞ்சாட்சரம் (சிவாய) விளங்குகிறது. இச்சிறப்பினையுடைய பதிகத்திற்கு உரிய தலம் இதுவேயாகும்.
நீல மாமணி கண்டத்தர் நீள்சடைக்
கோல மாமதி கங்கையுங் கூட்டினார்
சூல மான்மழு ஏந்திச் சுடர்முடிப்
பால்நெய் ஆடுவர் பாலைத் துறையரே.
கவள மா களிற்றின் உரி போர்த்தவர்
தவள வெண்ணகை மங்கையோர் பங்கினர்
திவள வானவர் போற்றித் திசைதொழும்
பவள மேனியர் பாலைத் துறையரே.
மின்னின் நுண்ணிடைக் கன்னியர் மிக்கெங்கும்
பொன்னி நீர்மூழ்கிப் போற்றி அடிதொழ
மன்னி நான்மறை யோடு பல்கீதமும்
பன்னினார் அவர் பாலைத் துறையரே.
நீடு காடு இடமாய் நின்ற பேய்க்கணங்
கூடு பூதம் குழுமி நின்று ஆர்க்கவே
ஆடினார் அழகாகிய நான்மறை
பாடினார் அவர் பாலைத் துறையரே.
சித்தர் கன்னியர் தேவர்கள் தானவர்
பித்தர் நான்மறை வேதியர் பேணிய
அத்தனே நமை யாளுடை யாயெனும்
விண்ணினார் பணிந்து ஏத்த வியப்புறும்
மண்ணினார் மறவாது சிவாய என்று
எண்ணினார்க்கு இடமா எழில் வானகம்
பண்ணினார் அவர் பாலைத் துறையரே.
குரவனார் கொடு கொட்டியுங் கொக்கரை
விரவினார் பண் கெழுமிய வீணையும்
மருவு நாண்மலர் மல்லிகை செண்பகம்
பரவு நீர்ப்பொன்னிப் பாலைத் துறையரே.
தொடரும் தொண்டரைத் துக்கம் தொடர்ந்து வந்து
அடரும் போது அரனாய் அருள் செய்பவர்
கடலின் நஞ்சணி கண்டர் கடிபுனற்
படரும் செஞ்சடைப் பாலைத் துறையரே.
மேகந் தோய்பிறை சூடுவர் மேகலை
நாகந் தோய்ந்த அரையினர் நல்லியற்
போகந் தோய்ந்த புணர்முலை மங்கையோர்
பாகந் தோய்ந்தவர் பாலைத் துறையரே.
வெங்கண் வாள் அரவு ஆட்டி வெருட்டுவர்
அங்கணார் அடியார்க்கு அருள் நல்குவர்
செங்கண் மால் அயன் தேடற்கு அரியவர்
பைங்கண் ஏற்றினர் பாலைத் துறையரே.
உரத்தினால் அரக்கன்ன் உயர் மாமலை
நெருக்கினானை நெரித்து அவன் பாடலும்
இரக்கமா அருள் செய்த பாலைத்துறைக்
கரத்தினால் தொழவார் வினை ஓயுமே.
திருப்பாலைத்துறை இறைவனை கரங்களால் தொழுவார் வினை யாவும் நீங்கும் என்று வாகீசப் பெருமான் தனது 10-வது பாடலில் குறிப்பிடுகிறார்.
Courtesy: Amirtha Vahini