திருப்பந்துறை என்று அழைக்கப்படும் திருப்பேணு பெருந்துறை தேவாரத் தலங்களில் 127ஆவது திருத்தலமாக விளங்குகிறது. இது பெருமை வாய்ந்த கோவில் நகரமான கும்பகோணத்திலிருந்து ஒன்பது கி.மீ தொலைவிலும் நாச்சியார்கோவில் என்று அழைக்கப்படும் திருநறையூரிலிருந்து மூன்று கி.மீ தொலைவிலும் அரசலாற்றின் கரையில் அமைந்து உள்ளது .செங்கற்களினாலான பழைமையான கோவில் கரிகால் சோழனால் கருங்கல் திருப்பணி செய்யப்பட்டது. சிவனின் திருநாமம் சிவானந்தேஸ்வரர், பிரணவேஸ்வரர், மகாதேவர். தேவி மங்களாம்பிகை, மலையரசி என்ற திருப்பெயர்களால் அழைக்கப் படுகிறாள்.
மௌனியான முருகன்
பிரணவ மந்திரத்தைத் தந்தைக்கு உபதேசித்த முருகப்பெருமான் பின் பிரணவ மந்திரத்துக்குப் பொருள் தெரியாத பிரமனையும் சிறையில் அடைத்துவிட்டார். பின்னர் முருகனை மனக்கவலை பற்றிக் கொண்டது. வயதில் சிறியவனான நாம் பெரியவர்களை நிந்தித்துவிட்டோமே என்ற கவலை மேன்மேலும் அதிகரிக்க முருகப் பெருமான் தன் அம்மானாகிய மகாவிஷ்ணுவிடம் முறையிட அதற்கு அவர் "உன் பிதா சிவபெருமான், பூஜிப்பவர்களின் அனைத்து அபசாரங்களையும் மன்னித்தருளும் கருணையுள்ளவர் . எனவே நீ அவரை சிவலிங்கத் திருமேனியால் வழிபடுக" என்று கூறினார்.
சிவபெருமானின் அருட்பார்வை
முருகப்பெருமானும் திருப்பனந்தாள் அருகே உள்ள சேங்கனூரில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட கவலை தீரவில்லை. மேலும் கவலைகள் கூடி மௌனியாகவே ஆகி, ஊமையாய் சஞ்சரிக்கத் தொடங்கினார். ஒருநாள் அரிசொல் ஆறு எனப்படும் அரிசலாற்றுக் கரையோரம் சஞ்சாரம் செய்கையில், திருஞானசம்பந்தப் பெருமானால் பாடல் பெற்ற பேணுப்பெருந்துறை எனப்படும் திருப்பந்துறை திருத்தலம் சென்றார். அங்கே வன்னி விருக்ஷத்தின் அடியில் குடிகொண்டிருக்கும் சிவானந்தேஸ்வரரைக் கண்டதும் முருகப்பெருமானது உள்ளம் மகிழ்ச்சி அடைந்தது. உள்ளம் நெகிழ்ந்தது. அதுவரை மௌனியாக இருந்த முருகன் சிவானந்தேஸ்வரரை வணங்க சிரசில் குடுமியோடும் கையில் சின்முத்திரையோடும் தண்டாயுதபணியாக மாறி சிவானந்தேஸ்வரரை விதிப்படி பூஜித்தார். முருகப்பெருமான் பூஜையில் மகிழ்ந்த பரமன் முருகனை வாஞ்சையோடு நோக்க அக்கருணைப் பார்வையில் மௌனமாய் இருந்த முருகன் மகிழ்வடைந்து பழைய நிலையை அடைந்து விட்டார். சர்வ கலைகளிலும் வல்லவரானார்.
உச்சிக் குடுமியுடன் தண்டாயுதபாணி
இக்கோயிலில் இரண்டு முருகன் சிலைகள் உள்ளன. பாலமுருகன் வெளிச்சுற்றில் மிகுந்த அழகுடன் வீற்றிருக்கிறார். தவம் செய்ய வந்த முருகன் உள்ளே மகாமண்டபத்தில் தண்டாயுதபாணியாக, உச்சிக் குடுமியுடன், வலக்கை சின்முத்திரையுடன், வஜ்ரவேல் தரித்துக் காட்சியளிக்கிறார். இந்த முருகனுக்குத் தேனால் அபிஷேகம் செய்தால் திக்கு வாய், ஊமைத் தன்மை ஆகிய குறைபாடுகள் நீங்குகின்றன. எனவே இத்திருத்தலம் முருகனின் மனக்கவலையைத் தீர்த்து, பேசவைத்த திருத்தலமாக விளங்குவதால், இது மக்கள் மனக்கவலையைப் போக்கும் திருத்தலமாகவும், பேசும் சக்தியை அளிக்கும் தலமாகவும், திக்கு வாய்க் குறையை நீக்கும் தலமாகவும், வாக்கு வன்மையைப் பெருகச் செய்யும் தலமாகவும் விளங்குகிறது.
சிவனார் மைந்தனின் புகழ் கேட்போம் வாரீர்! http://youtu.be/Al9UDwZuGYg மாலதி ஜெயராமன்