top of page

கண்ணாரக்குடி


தஞ்சை மாவட்டத்தில் பொன்னி நதி தீரத்தில் குங்கிலிய நாயனாரின் அளவு கடந்த பக்திக்குத் தலை வணங்கி தன் தலையை நிமிர்த்திய செஞ்சடையப்பர் குடி கொண்டு அருள் புரியும் திருப்பனந்தாளுக்குக் கிழக்கிலும், சிவன் சுயம்பு லிங்கமாக அவதரித்து கோயில் கொண்டிருக்கும் பந்தணைநல்லூருக்குத் தென்மேற்கிலும் கலியுகத்தில் கண்கண்ட தெய்வமான வனதுர்க்கை அம்மன் கருணை புரியும் கதிராமங்கலத்துக்கு வடமேற்கிலும். ராஜேந்திர சோழனால் வங்கத்திலிருந்து கொண்டு வரப்பட்ட பார் புகழும் ரதி மன்மதன், ரிஷபாரூடர், மற்றும் வணங்கிடும் குருபகவான் ஆகியோர் குடி கொண்டுள்ள புண்ணிய தலமான திரைலோக்கிய மாதேவிச் சதுர்வேதி மங்கலம் எனப்படும் திருலோக்கிக்கு நேர் வடக்கிலும், 108 திவ்ய தேசங்களில் முக்கியமானதுமான திருவெள்ளியங்குடிக்குக் கிழக்கிலும் அமைந்துள்ள ஒரு அழகிய சிற்றூர் கண்ணாரக்குடி.

ஊருக்குள் நுழையும்போதே காற்றில் தலையசைக்கும் தென்னை மரங்களும், குளத்தைச் சுற்றிக் கூச்சலிடும் பறவைகளும் மனதை வருடும் இதமான அமைதியும் நம்மை வரவேற்கின்றன. இச்சிற்றூர் திருப்பனந்தாளுக்குக் கிழக்கே ஐந்து கி.மீ தொலைவில் உள்ளது. முற்காலத்தில் மன்னர்களால் ஆதரிக்கப்பட்ட சிறந்த கண் வைத்தியர்கள் வாழ்ந்ததால் இவ்வூருக்குக் கண்ணாரக்குடி என்ற பெயர் ஏற்பட்டது. இன்றும் அவர்கள் சந்ததியினர் சித்த வைத்தியம் செய்து வருகின்றனர்.

இரண்டு, மூன்று தலைமுறைகளுக்கு முன் இவ்வூரில் பெரிய நூலகம் ஒன்று அக்ரகாரத்தில் இருந்து வந்தது. அதில் அபூர்வமான சுவடிகளும், சம்ஸ்க்ருத, க்ரந்த நூல்களும் போற்றிப் பாதுகாக்கப்பட்டு வந்தன. பிற்காலத்தில் அவை கோவிந்தபுரம் ஸ்ரீ மடத்தில் ஒப்படைக்கப்பட்டு விட்டன. இவ்விஷயத்தை பூஜ்யஸ்ரீ மகா பெரியவர்கள் இவ்வூருக்கு வருகை தந்தபோது விசாரித்துத் தெரிந்து கொண்டார்கள். மேலும் குளக்கரையில் பல மகான்கள், சித்தர்களின் சமாதிகள் இருந்ததாகவும் முதியோர்களால் கூறப்படுகிறது.

ஸ்ரீ விஷம் தீர்த்த விநாயகர் ஆலயம்

இவ்வூரின் நடுப்பகுதியில் உள்ள குளத்தின் தென்மேற்குக் கரையில் உள்ள இவ்விநாயகர் நேத்ர, க்ஷய ரோக நிவாரண விநாயகர் என்றும், விஷம் தீர்த்த விநாயகர் என்றும் மக்களால் போற்றப்படுகிறார். இவ்விநாயகரை வழிபட்டால் அனைத்து வகை விஷக்கடிகளுக்கும் நிவாரணம் கிடைக்கிறது. இவ்வூரில் பிறந்து வளர்ந்து வெளியூரில் வசித்து வந்தாலும் அவர்களையும் தன்னை மறவாமல் இருக்க, அவர்கள் மனதில் புகுந்து நேரில் வரவழைத்து அருள் பாலிக்கும் சக்தியுள்ள பிரார்த்தனை தெய்வம், இவ்விநாயகப் பெருமான்.

ஸ்ரீ லக்ஷ்மி நாராயணப் பெருமாள் ஆலயம்

குளத்தின் தென்கிழக்கே சிறப்பு மிக்க இக்கோயில் அமைந்துள்ளது. ஸ்ரீ மகாலக்ஷ்மியை தனது இடது பாகத்தில் வைத்துக் கொண்டு சேவை சாதிக்கின்றார் இப்பெருமாள். ஒரே கல்லில் ஆன அழகிய திருவுருவம்.

ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி ஸமேத ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் ஆலயம்

இக்கிராமத்தின் ஈசான்யத்தில் இக்கோயில் இருப்பது, மிகவும் விசேஷமாகும். மூலவர், சுற்று வட்டாரங்களிலேயே பார்க்க முடியாத அளவு பெரிய லிங்கமாக, அருள் பாலிக்கிறார். அபிஷேக காலங்களில் ஸ்வாமியை பார்க்குங்கால் நம் உருவமே அதில் பிரதிபலிக்கும் அளவில் ஜொலிக்கும் அழகுடன் விளங்குகிறார். அன்னை அகிலாண்டேஸ்வரி தெற்கு முகமாக நின்ற கோலத்தில் நம்மை வரவேற்று அருட்பிர்சாதம் அளிக்கிறாள்.

இந்தக் கோயிலில் நந்தி பகவான் மிகவும் சக்தி படைத்தவர். அவரை வேண்டிக் கொண்ட், மழையில்லாத வறட்சி நேரங்களில் அவரை சுற்றி சுவர் எழுப்பி, நீர் நிரப்பினால், உடனே வானத்தில் இடி மின்னலுடன் கனமழை பெய்யும். சமீப காலம் வரை இந்நிகழ்ச்சி நடை பெற்றுள்ளது. மேலும் இக்கோயிலில் இரட்டைபைரவர்கள் அருள் பாலிக்கின்றனர். இக்கோயிலில் இருந்த தஷிணாமூர்த்தியின் சிலை மிகவும் பெரியதாக ஒரு சராசரி மனிதனின் உயரத்துக்கு இருந்திருக்கும் என்பதற்கு தற்போது பழுதடைந்துள்ள மார்பளவு சிலையே ஆதாரம்.

இக்கோயிலில் பல அற்புதங்கள் அன்றும் இன்றும் நிகழ்ந்துள்ளன. இக்கோயிலின் வெண்கலத் தேர் மேள தாளத்துடன் கோயிலுக்கு அருகே இருந்த குளத்தில் இறங்கியதாக பரம்பரை பரம்பரையாக வந்த செவி வழிச் செய்திகளிலிருந்து அறிகிறோம். சில வருடங்களுக்கு முன் வெளியூரிலிருந்து வந்த பக்தர் ஒருவர் இறைவனுக்கு தும்பை மலர்கள் சமர்ப்பிக்க விரும்பினார். இதனால் ஊர் முழுவதும் தும்பையைத் தேடி அலைந்து களைத்தபோது, எங்கிருந்தோ கோயில் வாசலில் இரண்டு தும்பைச் செடிகள் தோன்றின. பின் அதிலிருந்து மலர்கள் எடுத்து இறைவனுக்கு அர்ப்பணிக்கப் பட்டன.

ஸ்ரீ பெரியநாயகி அம்மன் கோவில்& ஸ்ரீ காளியம்மன் கோவில்

இவ்வூரின் மேற்கே ஸ்ரீ காளியம்மன் கோவிலும் நடுவே பிரசித்தி பெற்ற, வரப்ரசாதியாக விளங்கும் ஸ்ரீ பெரியநாயகி அம்மன் கோவிலும் உள்ளன. இவ்வளவு சிறப்பு வாய்ந்த கோயில்கள் நிறைந்த கண்ணாரக்குடிக்குச் சென்று இறையருள் பெறுவோம் வாரீர்!

மாலதி ஜெயராமன்

கும்பகோணம்.

30 views0 comments
bottom of page