top of page

திரும்பக் கிடைத்த திரியம்பகபுரம்


செழுமை மிக்க நமது பாரத பாரம்பரியத்தின் சின்னங்களான ஆலயங்கள் பல, நமது கவனக் குறைவாலும், அந்நியர் ஆக்கிரமிப்பாலும் மறைந்து விட்டன. தமிழகத்தில் 'திரியம்பகபுரம்' என்ற பெயர் கொண்ட ஒரே திருத்தலம் இவ்வகையில் காலத்தின் கோலத்தால் தேட வேண்டிய நிலையில் இருந்தது.

'திருப்புகழ் அமுதன்' வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன் அவர்கள் சிறந்த முருக பக்தர்.அவர் தமிழ், ஆங்கிலம் இரண்டு மொழிகளிலும் சிறந்த ஆன்மீக ஆய்வுக் கட்டுரைகள் இணைய தள பத்திரிகைகளிலும், பல மாத வார இதழ்களிலும் எழுதி வருகிறார். மேலும் 'சிந்தை நிறைக்கும் சிவ வடிவங்கள்', 'முதல் வணக்கம் முதல்வனுக்கே', 'முத்தமிழ் முருகனின் உத்தமத் தொண்டர்கள்' என்ற பல ஆன்மீகப் புத்தகங்களும் எழுதியுள்ளார். இவர் தம் சகோதரர் சேக்கிழார்தாசன்' பேராசிரியர் டாக்டர் ஆர். ராமசேஷனுடன் இணைந்து 1981ஆம் ஆண்டு 'அருணகிரிநாதரின் அடிச்சுவட்டில்....திருப்புகழ்த் தலப்பயணம்' என்ற நூலை வெளியிட்டார். அதில் "திரியம்பகபுரத்தில் கந்தனைக் கண்டு அருணகிரிநாதர் புனிதத் திருவடி தோய்ந்து பரவிய நிலையில் நாமும் பணிய முடியவில்லையே" என்ற ஏக்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

அருணகிரிநாதர் தரிசித்து சந்தத் திருப்புகழ் பாடியுள்ள திரியம்பகபுரம் என்ற தலம் எங்குள்ளது என்ற கள ஆய்வை 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திரு வி.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் திருவாளர்கள் எஸ்.ஏ.நாராயணன், பி.கிருஷ்ணமூர்த்தி, இ.கோபண்ணா ஆகியோருடன் மேற்கொண்டார். சேங்காலிபுரத்திலிருந்து வயல் வெளியில் காரில் சென்ற போது வண்டி ஓரிடத்தில் நின்றது. திரும்பிப் பார்த்தபோது எதிரில் சுடுகாட்டுக் கொட்டகையில் 'திரியம்பகபுரம்' என்ற பெயரைப் பார்த்தவுடன் அவர்கள் ஆச்சரியம் அடைந்தார்கள். அவ்விடத்தைத் தொடர்ந்து சென்ற போது ஒரு மேட்டில் காளியம்மன், பிடாரியம்மன் கோயில்கள் காணப்பட்டன. அதில் காஞ்சி மாமுனிவர் ஆக்ஞைப்படி இந்தத் திரியம்பகபுரத்தில் மேற்படி கோயில்கள் கட்டப்பெற்று கும்பாபிஷேகம் நடைபெற்ற விவரம் கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்ததைக் கண்டனர். இத்தகவல்கள் திரியம்பகபுரம் தலத்தை உறுதி செய்ய உதவின. ஆனால் இத்தலத்தின் பெரும் பகுதி வயல் காடாகவே காட்சி அளிக்கிறது. காலத்தின் கோலத்தால் ஊரின் ஒரு பகுதி மதுர மாணிக்கம் எனவும் மற்றொரு பகுதி எருமைத்தலை என்றும் அழைக்கப்படுகிறது.

சேங்காலிபுரம் ப்ரம்மஸ்ரீ அனந்தராம தீக்ஷிதர் மற்றும் அவரது உறவினர்களுக்கும் குல தெய்வமான பால சாஸ்தா கோயில் இந்த திரியம்பகபுரத்தில் வயல்களுக்கு நடுவே அமைந்துள்ளது. "த்ரியம்பக புராதீசம் பஜே பூதயே" என்று முடியும் சாஸ்தா ஸ்லோகம் இதனை உறுதி செய்கிறது.

மக்களின் பொறுப்பின்மையாலும் மற்றவர்கள் ஆக்கிரமிப்பாலும் இங்கிருந்த திரியம்பகேஸ்வரர் திருக்கோயில் இருந்த இடம் தெரியாமல் முற்றிலும் மறைந்துவிட்டது. அருணகிரியார் திருப்புகழில் போற்றிய திரியம்பகபுரம் கோயில் இருந்த இடத்தை 11-1-2011 அன்று திரு வி.எஸ்.கிருஷ்ணனும் அவரது நண்பர்களும் தேடிச் சென்றபோது, இறைவனின் திருவருளால் வயலின் நடுவே ஒரு சிறு மேட்டில் முட்புதரில் சதுர ஆவுடையாருடன் கூடிய திரியம்பகேஸ்வரரின் சிவலிங்கத் திருமேனி கிடைத்தது.

"கனமுறுந் த்ரியம்பகபுர மருவிய கவுரி தந்த (அ)றுமுக என இரு கழல் பணிந்து நின்றமரர்கள் தொழவல பெருமாளே"(உரையொழிந்து) என அருணகிரியார் பெருமையுடன் உயர்வுடன் பாடியது இத்திருக்கோயில். 'கனம்' என்ற சொல்லுக்கு சீர்மை, செறிவு, நிறைவு, பெருமை, மிகுதி, வன்மை, திரட்சி, நன்மதிப்பு போன்ற பல பொருள்கள் உண்டு. ஒரு காலத்தில் வேத வேள்வியிலும், சாஸ்த்ர சம்ப்ரதாயங்களிலும் தலை சிறந்த மகா பண்டிதர்கள் நன்கு வாழ்ந்த தலமாகும். பின்னாட்களில் அவர்கள் சேங்காலிபுரம், வடகுடி, கண்றமாணிக்கம் போன்ற ஊர்களுக்கு இடம் பெயர்ந்தார்கள். அருணகிரியார் திருப்புகழில் பாடிய குடவாயில், எண்கண், திருவாரூர், ஸ்ரீவாஞ்சியம், கூந்தலூர், திருவீழிமிழலை, திலதைப்பதி (செதலப்பதி) முதலான திருத்தலங்கள் சுற்றிலும் அமையப் பெற்றது இத்திருத்தலம். .

ஒரு காலத்தில் இவ்வாறு பெருமை தங்கிய த்ரியம்பகபுரம் திருக்கோயிலை மீண்டும் மக்கள் வழிபாட்டிற்காகக் கட்டுவதைத் தங்கள் பெரும் பேறாகக் கருதினார்கள் திரு வி.எஸ்.கிருஷ்ணன் குழுவினர். இதன் முதல் கட்டமாக 29-1-2012 அன்று விநாயக பூஜை, பூமி பூஜை செய்யப் பட்டு 2013 மார்ச் மாதத்தில் திருப்பணி வேலை துவங்கப் பெற்றது. ஆலயம் புதுப்பொலிவுடனும், அழகுடனும் உருவாகியது. ஸ்ரீசௌபாக்கிய கௌரி சமேத ஸ்ரீ திரியம்பகேஸ்வரர் திருக்கோயிலில், விநாயகர், முருகன்,சுவாமி, அம்பிகை, சண்டேசர் மற்றும் அருணகிரிநாதருக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன. 22-3-2015 அன்று கும்பாபிஷேக யாகசாலை பூஜை துவங்கி 25-3-2015 அன்று காலை 11 மணியளவில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதற்கு பெருமளவு பொருளுதவி செய்தவர் 'கயிலைமாமணி' சென்னை திரு பி.கே. சம்பந்தம் மற்றும் சிறுவாபுரி முருகன் அபிஷேகக் குழுவினராகும். ஊரைக் கண்டு பிடித்து மறைந்த கோயிலையும் புதிதாக எழுப்பிய திரு வி.எஸ். கிருஷ்ணன் மற்றும் இந்த முயற்சியில் அவருக்கு உறுதுணையாக இருந்த அனைத்து அன்பர்களும் புரிந்த இந்த மகத்தான சாதனை வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். இது திரியம்பகேஸ்வரர் திருவருளால் நிகழ்ந்துள்ளது.

திரியம்பகபுரம் திருக்கோயில் கும்பகோணம் திருவாரூர் சாலையில் 20 கி.மீட்டரில் பெரும்பண்ணையூரிலிருந்து ஒரு கி.மீட்டரிலும், சேங்காலிபுரத்திலிருந்து ஒரு கி.மீட்டரிலும் அமைந்துள்ளது. நாச்சியார் கோயில் நன்னிலம் வழியில் திருவிடைச்சேரியிலிருந்து மூன்று கி.மீட்டர் தொலைவு. அருணகிரிநாதர் திருப்புகழ் பாடியுள்ள திரியம்பகபுரம் சென்று திரயம்பகேஸ்வரர் திருவருள் பெறுவோமாக!

த்ர்யம்பகம் யஜா மஹே ஸுகந்திம் புஷ்டி வத்தனம்

உர் வாருக மிவ பந்த னான் ம்ருத்யோர் முக்ஷீயமா(அம்) ருதாத்

இயற்கை நறுமணம் உடைய தேவரே

ஈடில்லா கருணையால் அடியவரை வாழ்விக்கும்

வியத்தகு முக்கண் உடைய எம்பெரும

வினயமாய் போற்றி அஞ்சலி செய்தோம்

வெள்ளரிப்பழம் காம்பினின்று விடுபடுவ தொப்ப

மேவிய உமதருளால் மரணத்திருந்து விடுபடவும்

தெள்ளிய சன்மார்க்க நெறியில் இருந்து யாம்

திசை மாறாது வாழ்ந்திடுவோமாக

ஸ்ரீருத்ரம்- அனுவாகம் 11-12

தகவல் ஆதாரம்- திருப்புகழ் அமுதன் திரு வி.எஸ்.கிருஷ்ணன்

இப்போது திருப்புகழ் அமுதன் திரு V.S.கிருஷ்ணன் இசையமைத்துப் பாடியுள்ள திரியம்பகபுரத் திருப்புகழைக் கேட்டு அருள் பெறுவோம்.

149 views0 comments
bottom of page