top of page

கும்பகோணம்- மகாமகம்


mahamaham1.jpg

அன்ய க்ஷேத்ரே க்ருதம் பாபம் புண்ய க்ஷேத்ரே வினஸ்யதி

புண்ய க்ஷேத்ரே க்ருதம் பாபம் வாரணாஸ்யாம் வினஸ்யதி

வாரணாஸ்யாம் க்ருதம் பாபம் கும்பகோணே வினஸ்யதி

கும்பகோணே க்ருதம் பாபம் கும்பகோணே வினஸ்யதி

மற்ற க்ஷேத்திரங்களில் செய்த பாவங்கள் புண்ணிய நதிகளில் நீராடினால் அகலும். அந்த புண்ணிய தலங்களில் வாழ்வோர் செய்த பாவங்கள் காசியில் உள்ள கங்கையில் நீராடினால் மறையும். அந்த காசியில் உள்ளோர் செய்த பாவங்கள் கும்பகோணத்தில் நீராடினால் மறையும்! கும்பகோணத்தில் உள்ளோர் செய்த பாவங்கள் கும்பகோணத்தில் உள்ள தீர்த்தங்களில் நீராடினாலே அகலும். திருக்குடந்தை அவ்வளவு சிறப்பு வாய்ந்த திருத்தலமாகும்.

mahamaham6.jpg

வரும் மன்மத ஆண்டு மகாமக ஆண்டாகும். 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் மகாமகம் 22-2-2016 திங்கட்கிழமை நடைபெற உள்ளது.

சந்திரன் சிம்ம ராசியில் இருக்கும் குரு பகவானுடன் சேர்ந்து மாசி மாதம் மகம் நட்சத்திரம் பௌர்ணமி அன்று கும்ப ராசியில் இருக்கும் சூரியனை நேர் பார்வையில் பார்ப்பதையே மகாமகம் என்று கொண்டாடுகிறோம்.

சிருஷ்டி க்ஷேத்திரம் கும்பகோணம்

மஹா பிரளய காலத்திற்கு முன் படைப்புக் கடவுளான பிரம்மா படைப்புக்குரிய சிருஷ்டி பீஜங்கள் நஷ்டம் அடைந்துவிடுமோ என்ற பயத்தினால் பரமசிவனை வேண்ட, அவர் பிரம்மனை நோக்கி," மண்ணும் அமிர்தமும் கலந்து பிசைந்து குடம் செய்து அதில் எல்லா பீஜங்களையும் அடைத்து, ஆகமங்களை சுற்றி வைத்து, அமுதத்தை நிரம்ப ஊற்றி, மாவிலை கொத்து வைத்து அதில் தேங்காய் வைத்து, பூவை சுற்றி, வில்வங்களால் அர்ச்சித்து மேரு சிகரத்தில் தென்சருவில் விடு. அது பின்பு பிரளயத்தில் தென்னாட்டில் ஓர் புனித இடத்தில் போய் நிற்கும். அதிலிருந்து சிருஷ்டி பீஜங்களை பெற்று மறு சிருஷ்டி துவங்கு." என்று கூறினார்.

பிரம்மாவும் அதே போல் செய்ய, அது ஓர் இடத்தில் தங்க, பிரம்மா கும்பத்தின் அருகில் செல்ல முயற்சி செய்தார். ஆனால் அதில் இருந்து புறப்பட்ட தீ ஜ்வாலையால் அதனருகில் போக முடியாமல் பரமசிவனை துதித்தார். பரமசிவனும் வேடன் உருவில் பூமியை அடைந்து கும்பத்தை நோக்கி அம்பை எய்தார். கும்பம் உடைபட்டு சிதறி கும்பத்தின் மூக்கும் அடிபாகமும் அவ்விடமே தங்கின. உடைபட்ட கும்பத்திலிருந்து கசிந்த அமிர்த திவாலைகளை மண்ணுடன் கலந்து பிசைந்து சிவலிங்கமாக்கி அதில் ஒளிக்கதிராக பிரவேசித்தார்; அவரே ஆதி கும்பேஸ்வேரர். கும்பத்தில் இருந்து வழிந்து ஓடிய தீர்த்தம்தான் மகாமகக் குளமாகவும், பொற்றாமரைக் குளமாகவும் உருவாயின. தேங்காய் விழுந்த இடம் கீழ்திசையில் உள்ள அபிமுகேஸ்வரர் திருக்கோயில். பூணூல் விழுந்த இடம் தென்மேற்கில் உள்ள கௌதமேஸ்வரர். மாவிலை கூர்ச்சங்கள் விழுந்த இடம் வடமேற்கில் ஐந்து மைல் தொலைவில் உள்ள திருப்புறம்பியம். குடத்தின் வாய் விழுந்த இடம் தென்கிழக்கே பத்து மைல் தொலைவில் உள்ள குடவாயில். சிவன் நின்று அம்பு எய்த இடம் குளத்தின் கிழக்கில் உள்ள பாணபுரீஸ்வரர் ஆலயமாகும்.

mahamaham4.jpg

mahamaham5.jpg

நவநதிகளின் பாவம் தீர்த்த மகாமக குளம்

நவநதிகளும் கன்னிகைகள் உருவம் கொண்டு சிவபெருமானிடம் சென்று, "மக்கள் எங்கள் நீரில் மூழ்கி தங்களது பாவங்களைப் போக்கிக்கொள்கிறார்கள். அதனால் எங்களிடம் பாவங்கள் சேர்ந்து துன்புறுகிறோம்" என்று முறையிட, அதற்கு சிவபெருமான், "கும்பகோணம் மகாமகக் குளத்தில் மகாமக தினத்தன்று நீராடி உங்கள் பாவங்களைப் போக்கிக் கொள்ளுங்கள்." என்று கூறியதோடு இந்திராதி தேவதைகளுடன் தாமும் பார்வதியுடன் தரிசனம் தருவதாகக் கூறினார். அதன்படி நவகன்னிகைகளும் மகாமகக் குளத்தில் நீராடி தங்களது பாவங்களைப் போக்கிக்கொண்டனர். அதன் பின்னர் அவர்கள் தெற்கு நோக்கி இன்றும் காசி விஸ்வநாதர் கோவிலில் எழுந்தருளியுள்ளனர். சிவபெருமான் பார்வதியுடன் மகாமகக் குளக்கரையில் வந்து காட்சி கொடுத்த தலமே காசிவிஸ்வநாதர் ஆலயம்.

திருக்குளத்தைச் சுற்றி வடக்கில் காசிவிஸ்வநாதர் விசாலாட்சி அம்பாள், கிழக்கில் அபிமுகேஸ்வரர் அமிர்தவள்ளி தேவியும். தென்மேற்கே கௌதமேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மனும் கோயில் கொண்டுள்ளனர். குளத்தில் 20 தீர்த்தங்களும் குளத்தைச் சுற்றி 16 ஷோடஷ மண்டபங்களும் அமைந்துள்ளன. 20 தீர்த்தங்களும் முறையே வாயு, கங்கை, பிரம்ம, யமுனை., குபேரர், கோதாவரி, ஈசான்ய, நர்மதா, இந்திர, சரஸ்வதி, அக்னி, காவேரி, யம, குமரி, நிருதி, பாலாறு, தேவ, வருண, சரயு, அறுபத்து முக்கோடி தீர்த்தங்கள் முதலியனவாகும்.

வழிபடும் முறை:

முதலில் ஆதிகும்பேஸ்வரர் மந்திரபீடேஸ்வரியை தியானித்து காவேரி ஆற்றிலும், பிறகு மகாமக குளத்திலும் அதன்பின்னர் பொற்றாமரைக் குளத்திலும் நீராடுவது ஒட்டுமொத்த பாவங்களையும் போக்கும் வழி.

நவகன்னிகைகள் தங்களது பாவங்களை போக்கிட மகாமக நாளன்று குளத்தில் வந்து நீராடுவதாக ஐதீகம்.

மகாமகத்தன்று கும்பேஸ்வரர், நாகேஸ்வரர், சோமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், கௌதமேஸ்வரர், காசி விஸ்வநாதர், பாணபுரீஸ்வரர், கோடீஸ்வரர், ஆதிகம்பட்ட விஸ்வநாதர், காளஹஸ்தீஸ்வரர், அமிர்தகலசநாதர், சுந்தரேஸ்வரர் ஆகிய கோயில்களின் உற்சவர்கள் எழுந்தருளி மகாமக திருவிழாவின்போது குளத்தில் தீர்த்தவாரி நடைபெறும். இதேபோல் காவேரி கரையில் எழுந்தருளி தீர்த்தவாரி தந்தருளும் ஆலயங்களின் சுவாமிகள் அருள்மிகு சக்கரபாணி சுவாமி, சாரங்கபாணி சுவாமி, இராமசுவாமி, இராஜகோபால சுவாமி, ஆதிவராஹ பெருமாளாகும். ஸ்ரீ சாரங்கபாணியும், ஸ்ரீ சக்கரபாணியும் மங்களாசாசனம் பெற்றவர்கள்.

சோழ மன்னரின், மஹா மந்திரியாக இருந்த கோவிந்த தீக்ஷிதர் அவர்கள் 14ஆம் நூற்றாண்டில் மகாமகக் குளக்கரையை சுற்றியுள்ள 16 லிங்கங்களையும் அனைத்து படித்துறைகளையும் அமைத்துக் கொடுத்தார்.

mahamaham2.jpg

mahamaham3.jpg

வழிபடுவதனால் ஏற்படும் பலன்கள்:

மகாமக வருடத்திற்கு ஒரு வருடம் முன்னமே கங்காதி, 66கோடி தீர்த்தங்களும், சமஸ்த தேவதைகளும், கும்பகோணத்திற்கு வந்துவிடுவதாக புராணங்களில் கூறப்படுகிறது. அதனால் வேறு தீர்த்தங்களில் நீராடவேண்டி க்ஷேத்ராடனம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.

மகாமகத்தன்று நீராடுவது கங்காதீரத்தில் 100 வருடம் வசித்து மூன்று காலமும் நீராடிய பலனைத் தர வல்லது. மேலும் ஏழு தலைமுறைகள் பல நலன்கள் பெற்று வாழ்வார்கள் என பவிஷ்யேத்ர புராணம் கூறுகிறது.

மகாமக குளத்தை ஒரு முறை வலம் செய்வது பூமியை 100 முறை வலம் வந்ததனால் கிடைக்கும் புண்ணியத்திற்கு ஈடானது. தீர்த்தத்தை ஒரு முறை நமஸ்கரிப்பது தேவர்கள் அனைவரையும் நமஸ்கரிப்பதற்கு ஒப்பானது.

மகாமக தினத்தன்று செய்யப்படும் சிறிதளவு தானம் கூட மேருமலைக்கு நிகரானது.

மகாமக குளத்தில் ஸ்னானம் செய்து தர்ப்பணம் செய்தால் 16000 முறை கயா சிரார்த்தம் செய்த பலன் கிட்டும்.

குடமூக்கு என்பது கும்பகோணத்தின் பழைய பெயர். கும்பம் என்றால் குடம். கோணம் என்பது மூக்கு. உலகம் அழியும் பிரளய காலத்தில் இறைவன் ஆணைப்படி விடப்பட்ட அமுத கும்பம் இவ்விடத்தில் தங்கி அதன் மூக்கு வழியே அமுதம் பரவியதால் 'குடமூக்கு' என்ற பெயர் ஏற்பட்டது.

கி.பி. 1385ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25ஆம் தேதி புதன் கிழமை இந்த நகருக்கு 'கும்பகோணம்' என்ற பெயர் சூட்டப்பட்டது. இந்தப்பெயரை முதலில் பயன்படுத்தியவர் அருணகிரிநாதர்.

கி.பி.1547ஆம் ஆண்டு மகாமக தினத்தன்று கிருஷ்ணதேவராயர் அவர்கள் புனித நீராடினார்.

மகாமக குளத்தின் அருகில் உள்ள மணிக்கூண்டு சிறப்பு வாய்ந்தது. இரண்டாம் உலகப்போரில் இங்கிலாந்து வெற்றியை நினைவுகூர திருப்பனந்தாள் காசி மட அதிபரால் 1948ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

நன்றி- தமிழ்நாடு பிராமணர் சங்கம்.

- மாலதி ஜெயராமன்.

63 views0 comments
bottom of page