top of page

தஞ்சாவூர் பெரிய கோவில் அதிசயங்கள்


tbt.jpg

உங்கள் எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்; தஞ்சைப் பெரிய கோவில் ஒரு உலக அதிசயம் என்று; பலமுறை படித்திருப்பிர்கள்.. ஆயினும் இதில், பல நூல்களில் உள்ள சுவையான புள்ளி விவரங்களைத் தொகுத்துக் கொடுக்கிறேன்.

தஞ்சாவூர் பெரியகோவிலில் ஐந்து அதிசயங்கள் உள்ளன:

1. வானளாவிய கோபுரம்; 216 அடி உயரம்; எல்லா ஊர்களிலும் கர்ப்பக்கிரகத்துக்கு மேல் சின்ன கோபுரம்/விமானம் இருக்கும். வெளியே பெரிய கோபுரங்கள் இருக்கும். தஞ்சையிலோ கர்ப்பக்கிரகத்துக்கு மேல் 216 அடி கோபுரம்!

2. பெரிய சிவலிங்கம்; சிவலிங்கம் என்பதன் பொருள் கடவுள் உருவமற்றவர் என்பதாகும். 13 அடி உயரம்!

3. கர்ப்பகிரகத்துக்கு நேராக மிகப் பெரிய நந்தி; சிவபெருமானின் வாஹனம்; 12 அடி உயரம். எடை 12 டன்!

4. கோபுரத்தின் உச்சியில் வட்டவடிவ சிகரம். அங்குள்ள கல்லின் எடை 81 டன்!

5. இறுதியாக ஆயிரம் ஆண்டு பழமையான அற்புத ஓவியங்கள்

tbtsiva.jpg

பெரிய கோபுரம், பெரிய லிங்கம், பெரிய நந்தி – இவை அனைத்தும் இக்கோவிலைக் கட்டிய சோழ மாமன்னன் ராஜ ராஜ சோழனின் (கி.பி. 985-1014) பெரிய/ உயர்ந்த சிந்தனையைக் காட்டுகின்றன. நாமும்தான் எதைப் பற்றி எல்லாமோ பெரிய கற்பனை செய்கிறோம்; நடக்கிறதா? இல்லையே! எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் பெரியோர். அதனால்தான் ராஜ ராஜனை இன்றும் உலகம் போற்றுகிறது.

இந்தக் கோவிலை ராஜ ராஜன் தட்சிண மேரு என்றும் அழைத்தான. அதாவது வடதிசையில் மேரு மலை என்பது உயரத்துக்கும்,, புனிதத்துக்கும் பெயர் பெற்ற மலை. அது போல தென் திசையில் அளவிலும், புகழிலும், புனிதத்திலும் பெயர் பெற்றது இக்கோவில்.

இதற்கெல்லாம் அவனுக்கு உறுதுணையாக நின்றவர்கள் யார் தெரியுமா?

6. அவனது சகோதரி குந்தவை

7. ராஜ ராஜனது குரு – கருவூர் சித்தர்

8. ராஜ ராஜனின் படைத் தளபதி கிருஷ்ணன் ராமன்

அது சரி, நாம் எண்ணதான் நினைத்தாலும் கட்டிடத்துக்கு அழகாக திட்டம் போட்டுக் கட்ட வேண்டுமே; அப்பேற்பட்ட கட்டிடக் கலை நிபுணர்கள் யார்? அவர்கள் பெயரையும் பொறித்து வைத்துள்ளான் ராஜ ராஜன். யார் அவர்கள்?

tbttmpl.jpg

9. குஞ்சர மல்லன், ராஜராஜப் பெருந்தச்சன் என்ற இருவர்.

இந்தக் கோவிலில் வேறு என அதிசயங்கள்?

10. முழுக்க முழுக்க கருங்கற்களால் ஆனது. ஒரு இடத்திலும் காரை பயன்படுத்தவில்லை! (பிற்காலத்தில் நாயக்கர், மராத்தா ஆட்சியில் புதிய சிலைகள், கட்டிடங்கள் சேர்க்கப்பட்டன. அவைகளில் காரை முதலிய பொருட்கள் உண்டு)

11. குறைந்தது எண்பைத்தைந்து கல்வெட்டுகள் இருக்கின்றன. இவை நமக்கு பல அரிய விஷயங்களைத் தருகின்றன. 400 ஆடல் அழகிகளின் பெயர்களும் அவர்கள் வசித்த வீட்டு இலக்கமும் இருக்கின்றன!

12.ஐம்பதுக்கும் மேலான இசைக்கலைஞர்கள் கோவிலில் இருந்தனர். அவர்கள் பெயர்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

tbtnanthi.jpg

KONICA MINOLTA DIGITAL CAMERA

13. மொத்தம் கோவில் பணியில் ஈடுபட்ட சுமார் 600 ஊழியர்களின் பெயர்கள், அவர்களுடைய வேலை, அவர்களுடைய ஊதியம் எல்லாம் கல்வெட்டுகளில் உள்ளன. இதையெல்லாம் நுணுக்கமாக கல்லில் பொறித்துவைத்த அவனது நிர்வாகம் எவ்வளவு சீரும் சிறப்புடனும் நடந்திருக்க வேண்டும்!

14. டாக்டர் நாகசாமி, தமிழ்நாடு தொல்பொருட்த் துறை இயக்குநராக இருந்த காலத்தில் இக் கல்வெட்டுகள் பிரசுரமாகியுள்ளன. அவைகளில் இருந்து சில ஆடல் அழகிகளின் பெயர்கள்: சேர மங்கை, எடுத்தபாதம், சோழகுலசுந்தரி, தில்லை அழகி, மதுரவாசகி, மாதேவடிகள், இரவிகுல மாணிக்கம், மா தேவி, சீருடையாள், ஆரா அமுது, மழலைச் சிலம்பு, திகைச் சுடர், காமக்கோடி, பொற்கேசி, ஆறாயிரம், தில்லைக் கூத்தி, செம்பொன், இன்னிளவஞ்சி, கயிலாயம், ஆடவல்லாள், இளங்கோயில், அறிவாட்டி, கல்லறை, சோமநாதி, சுந்தர சோழி, இராமி, சற்பதேவி, ஊதாரி, அரநெறி, குந்தவை, பொற்கேசி, கன்னரதேவி, அருள்மொழி.

15. கர்ப்பக்கிரகத்துக்குள் போவதற்கு முன் 12 அடி உயர துவரபாலகர் சிலைகளைக் காணலாம். இதில் சிற்பி ஒரு அழகிய கற்பனையைப் புகுத்தியுள்ளார். ஒரு யானையை ஒரு பாம்பு விழுங்குகிறது. அந்தப் பாம்பு, துவாரபாலகன் கையிலுள்ள கதையைச் சுற்றி ஒரு புழுப் போல காண்பிக்கப்பட்டுள்ளது. இப்பொழுது நாம் காற்பனை செய்ய வேண்டும். யானயின் அளவு நமக்குத் தெரியும். யானையும் பாம்பும் சிறிய அளவுக்கு இருக்குமானால் அந்த துவாரபாலகனின் கதை உருவம் எல்லாம் எவ்வளவு பெரியவை என்று நாம் கற்பனை செய்ய வேண்டும்! அந்தக் கதையைக் கையில் வைத்திருக்கும் துவார பாலகரின் உயரம் என்ன என்பதைக் கற்பனை செய்யவேண்டும். வாயிலைக் காக்கும் துவார பாலகரே இவ்வளவு பெரியவர் என்றால் அவரால் காக்கப்படும் பிருஹதீஸ்வரர் என்னும் பெருவுடையார் எவ்வளவு பெரியவர் என்று கற்பனை செய்யவேண்டும். துவார பாலகரோ பணிவின் சின்னமான விஸ்மய முத்திரையைக் காட்டிய வண்ணம் நிற்கின்றனர்.

tbtpaininting.jpg

16. மற்றொரு அதிசயம். 81 டன் எடையுள்ள கல்லை 216 அடி உயரத்துக்கு எப்படி ஏற்றினர் என்பதாகும். தஞ்சைக்கு 9 மைல் தொலைவிலுள்ள சாரப்பள்ளம் என்ற கிராமத்திலிருந்து சரிவாக சாரம் கட்டி கற்களை ஏற்றினர் என்பது ஒரு கருத்து. கோபுரத்தைச் சுற்றி மலைப்பாதை போல சுழல் வட்டப் பாதை அமைத்து அதில் கற்களை இழுத்துச் சென்றிருக்கலாம் என்பது இன்னும் ஒரு கருத்து.

17. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சைப் பசேல் என்று காட்சிதரும் வயல் பிரதேசங்களை எல்லாம் கடந்து எங்கோ ஒரு மலையிலிருந்து கற்களைக் கொணர்ந்து சோழ நாடு முழுதும் கோவில்களைக் கட்டியது அதிசயத்திலும் அதிசயம். இது சோழ மாமன்னர்களின் பக்திக்கு எடுத்துக்காட்டு. அதே நேரத்தில் நிர்வாகம், படையெடுப்புகள் ஆகியவற்றிலும் அவர்கள் பின் தங்கவில்லை.

18. இறுதியாக இங்கு ராஜராஜனுடன் அழகிய உருவத்துடன் கருவூர்த்தேவர் என்னும் சித்தரும் காட்சியளிக்கும் ஓவியம் உள்பட பல ஓவியங்களும் உள்ளன. இவை அஜந்தா குகை ஓவியங்களுக்கு இணையான சிறப்பு வாய்ந்தவை.

ஆயிரம் ஆண்டுக்கு முன்னிருந்த சோழ சாம்ராஜ்யத்தில் நாமும் வாழ்ந்திருந்தால் இன்னும் இதன் பெருமைகள் தெரிந்திருக்கும். ஏனெனில் ராஜராஜன் அளித்த பெரும்பாலான நகைகள் இன்று அங்கே இல்லை!

tbtkingguru.jpg

வெளிநாட்டுப் படை எடுப்பாளர்களாலும் தகர்க்கமுடியாத கருங்கல் கோவிலைக் கட்டிய அவன் புகழ் என்றும் நிடித்து, நிலைத்து நிற்கும்.

Courtesy:

லண்டன் சுவாமிநாதன்

Tamil and vedas

Reposting it from Amirtha varshini google group

262 views0 comments
bottom of page