திருச்சியிலிருந்து தஞ்சை நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் அன்பர்கள் அரைமணி நேரத்தை ஒதுக்கி சோழமாதேவிக்குச் சென்று திருக்கயிலாய நாதரை தரிசனம் செய்யுங்கள். அங்குள்ள சிற்பங்களின் எழிலைக் கண்டு மகிழுங்கள். கல்வெட்டுச் சாசனங்களைத் திருகரங்களால் தொட்டுப் பாருங்கள். அவை அனைத்தும் நம் பாரம்பரிய பண்பாட்டுப் பொக்கிஷங்கள் என்பதை நிச்சயம் உணர்வீர்கள்.
கல்வெட்டு சொல்லும் கோயில் கதைகள்- சோழமாதேவி
மாமன்னன் முதலாம் ராஜராஜசோழன் சூடிய பல விருதுப் பெயர்களுள் ஒன்று உய்யகொண்டான் என்பதாகும். நீர்ப்பாசனத் திட்டங்களுக்கு மிகவும் முக்கியத்துவம் தந்த அந்த பேரரசன் காவிரியின் தென்கரையில் அமைந்த மேடான நிலப்பகுதிகளுக்குப் பாசனம் அளிப்பதற்காக ஒரு சிற்றாற்றினை வெட்டி பல நூற்றுக்கணக்கான ஏரிகளுடன் அந்த ஆற்றினை இணைத்து பாலையாக இருந்த வறண்ட நிலப்பகுதியைச் சோலை நிலமாக மாற்றி அமைத்தான்.
அந்த ஆற்றுக்கு உய்யகொண்டான் என்று பெயரும் இட்டான். ஆயிரம் ஆண்டுகளாக அந்த ஆறு காவிரி நீரை திருச்சி நகரின் வழியாகக் கொணர்ந்து பல ஏரிகளை நிரப்பி நிற்கின்றது. உய்யகொண்டான் ஆற்று நீரை முறைப்படுத்தி பாசனத்திற்கும் மற்ற நீராதாரங்களுக்கும் பயன்படுத்த உய்யகொண்டான் ஏரிவாரியத்தையும் அப்பேரரசன் அமைத்தான். அந்த ஏரிவாரியம் சோழமாதேவி சதுர்வேதி மங்கலம் என்ற ஓர் ஊரின் சபையோரால் நிர்வகிக்கப் பெற்றது. அந்த அரிய தகவலை கூறும் வரலாற்றுச் சிறப்புமிக்க கல்வெட்டைச் சுமந்தவாறு பேரழகோடு திகழும் சிவாலயம் தான் சோழமாதேவி திருக்கயிலாயமுடையார் திருக்கோயிலாகும்.
திருச்சி-தஞ்சை நெடுஞ்சாலையில் அமைந்த திருஎறும்பியூர் (திருவரம்பூர்) என்ற தேவாரப்பாடல் பெற்ற திருவூரிலிருந்து தெற்கு நோக்கிப் பிரியும் சாலையில் சுமார் 4 கி.மீ. தொலைவில் சோழமாதேவி என்றதோர் ஊர் திகழ்கின்றது. சோழப்பேரரசர்களின் கல்வெட்டுகளில் இவ்வூர் ‘காவிரியின் தென்கரை பாண்டி குலாசனி வளநாட்டுப் பிரமதேயம் சோழமாதேவி சதுர்வேதி மங்கலம்’ எனக் குறிக்கப்பெற்றுள்ளது. சோழமாதேவி என்பாள் ராஜராஜசோழனின் தேவியருள் ஒருத்தி. இவ்வம்மையார் பெயரிலேயே இவ்வூர் இன்றும் விளங்குகின்றது.உய்யகொண்டான் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள இவ்வூரின் வடகிழக்குப் பகுதியில் அழகிய கற்றளியாக திருக்கயிலாயமுடையார் சிவாலயம் விளங்குகின்றது. சிதிலமடைந்த நிலையில் இருந்த இவ்வாலயத்தைப் புதுப்பித்த தமிழக அரசின் தொல்பொருள் துறையினர் பாதுகாக்கப்பெற்ற திருக்கோயிலாக அறிவித்துப் பேணிக்காத்து வருகின்றனர். மக்களின் வழிபாட்டில் திகழும் இவ்வாலயத்து மதில்கள், சுற்றாலயங்கள் ஆகியவை காலப்போக்கில் மறைந்தபடினும் அங்கிருந்த தெய்வத் திருமேனிகளை எல்லாம் மூலவர் கோயில் முகமண்டபத்தில் வைத்து இவ்வூரார் வழிபட்டு வருகின்றனர். கருவறையில் ஸ்ரீகயிலாசமுடைய மகாதேவர் இலிங்க வடிவில் அருள்பாலித்து நிற்கின்றார். உபபீடம், அதிஷ்டானம், பித்தி போன்ற கட்டுமானங்களோடு ஸ்ரீவிமானம் காட்சி அளிக்கின்றது. கோஷ்டங்களில் கணபதி, தாருகாவனத்து பெண் ஒருத்தி பலி செய்ய அதனைக் கபாலத்தில் ஏந்தும் பிட்சாடனர், சனகாதி முனிவர்களுக்கு ஞானத்தை உரைக்கும் தட்சிணாமூர்த்தி, சங்கு சக்கரம் தாங்கிய திருமால், நான்முகன், கொற்றவை ஆகிய திருமேனிகள் காணப் பெறுகின்றன. திருமாலின் இருபுறமும் இரு சாமரங்களும், இரு குத்துவிளக்குகளும் காணப் பெறுகின்றன. பிட்சாடனரின் திருமேனி உயரிய கலைநயம் வாய்ந்த ஒன்று. அதிட்டானத்து கண்டபாதங்களில் சிற்றுருவ சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றுள் காலனைக் காலால் உதைக்கும் யமசம்ஹாரமூர்த்தி, வாலி-சுக்ரீவன் சண்டை ஆகியவை குறிப்பிடத் தகுந்தவை. பித்தியில் (சுவரில்) உள்ள தூண்களின் பலகைகளின் மேல் காணப்பெறும் கண்ணபிரானின் வடிவங்களும், கபோதகத்திற்குக் கீழ் காணப்பெறும் பூதகண சிற்பங்களும் சோழர் சிற்பக்கலையின் உன்னத வெளிப்பாடுகளாகும். ஊரின் நடுவே ஸ்ரீவீரசோழவிண்ணகர் என்ற பெயரில் திருமால் ஆலயம் இருந்து அழிந்து விட்டது. அவ்விடத்தில் சற்று சிதைந்த நிலையில் கலைநயம் வாய்ந்த திருமாலின் திருவடிவம் இன்றும் காட்சியளிக்கின்றது. ஊர் மக்கள் அழகிய அத்திருமேனியை கட்டிடம் ஒன்றில் வைத்து காப்பாற்றியுள்ளனர். சோழமாதேவி சதுர்வேதி மங்கலம் என்னும் இவ்வூரின் பிரம்மஸ்தானத்தில் (மையத்தில்) ராஜராஜசோழன் பெயரால் அம்பலம் ஒன்று இருந்ததாகவும் அங்கு ஊர்மக்களும், சபையோரும் கூடி ஊர் குறித்த முடிவுகளும், சைவ, வைணவ திருக்கோயில் நிர்வாகம் குறித்த முடிவுகளும் எடுத்து செயல்படுத்தினர் என்பதையும் திருக்கயிலாயமுடையார் திருக்கோயிலில் காணப்பெறும் கல்வெட்டுக்கள் எடுத்துரைக்கின்றன. சித்திரை மாதத்து திருவாதிரை நாளில் தீர்த்த விழா கொண்டாட எழுநாள் திருவிழா நிகழ்த்தப் பெற்றதாகவும் அதற்கென வழங்கப்பெற்ற கொடைகள் பற்றியும் ஒரு கல்வெட்டு கூறி நிற்கின்றது. இவ்வூரின் மத்தியஸ்தனான எறன்கூத்தன் என்பான் ஒரு திருநந்தவனம் அமைத்து அதில் மல்லிகை இருவாட்சி, சிறு செண்பகம் முதலிய பூச்செடிகளைப் பராமரிக்க நிலம் அளித் தான் என்பதை முதலாம் ராஜராஜசோழனின் எட்டாம் ஆண்டு கல்வெட்டு விவரிக்கின்றது. ராஜராஜசோழனின் இருபத்தாறாம் ஆண்டு கல்வெட்டு ஒன்றில் இவ்வூரில் திகழ்ந்த ‘‘ராஜராஜன் தண்ணீர் பந்தல்’’ என்ற இடத்தில் கூடி ஊரின் நடுவே திகழும் ஸ்ரீவீரசோழ விண்ணகர் என்ற திருமால் ஆலயத்திலும், ஸ்ரீகயிலாசமுடையார் என்ற சிவாலயத்திலும் பஞ்சமகாசப்தம் எழுப்ப உவச்சப்புறமாக (இசைக்கலைஞர்களுக்கு நிலமாக) உவச்சன் இரண்டாயிரவன் மல்லன் என்பானுக்கும், திருவரங்க நாராயணன் என்பானுக்கும் உய்யகொண்டான் ஆற்றின் அருகே நிலம் அளித்தனர். அதன் வருவாயைக் கொண்டு மேற்குறித்த திருக்கோயில்களில் கரடிகை ஒன்று, மத்தளம் இரண்டு, சங்கு இரண்டு, காளம் நாலு என ஒன்பது இசைக்கருவிகள் கொண்டு பஞ்சமகாசப்தங்கள் எழுப்ப வேண்டும் என முடிவு எடுத்த செய்தி வரையப் பெற்றுள்ளது. ராஜராஜசோழனின் மற்றொரு கல்வெட்டுச் சாசனத்தில் இவ்வூர் பெருங்குறி சபையோர் கூடி ஆதிச்சன் பாழி, சோழமாதேவி பேருவச்சன், பல்லவராயன், திருவரங்கதேவன், கடம்பனான கந்தர்வ பேருவச்சன் என்ற உவச்சர்களுக்கு தாள இசைக்கருவிகளை திருக்கோயிலில் கொட்டுவதற்காக அளித்த நிலக்கொடை பற்றி குறித்துள்ளனர். முதலாம் ராஜராஜசோழனின் எட்டாம் ஆட்சியாண்டில் (கி.பி. 993ல்) வீரசோழ இளங்கோ வரையர் தேவி பராந்தகன் ஆதித்தபிடாரி என்பார் சோழமாதேவி சிவாலயத்திற்கு பொற்கொடை அளித் தார். அதன் வட்டியிலிருந்து ஆண்டு தோறும் ஒரு குறிப்பிட்ட மாதத்து அவிட்ட நாளன்று ஸ்ரீகயிலாசமுடையார் திருக்கோயிலில் சந்நதி முன்பு ஒரு நாட்டிய கலைஞன் நின்று கொண்டு இறைவனைப் புகழும் பிரசஸ்தி பாடியவாறு 15 வகையான மெய்காட்டுகளை மெய்க்காட்டி அபிநயத்துக் காட்ட வேண்டும் என்றும், அப்பணி சந்திரன் சூரியன் இருக்குமளவு அக்கோயிலில் நிகழ்வதற்காகவே அம்முதலீடு செய்யப்பெற்றதாகவும், இக்கலைப்பணியை தடையுறாமல் யார் காப்பாற்றினாலும் அவர்தம் திருவடிகளில் உள்ள துகள்களை தன் தலைமேல் தாங்குவதாகவும் அவ்வம்மையார் குறிப்பிட்டுள்ளார். மெய்க்காட்டு என்பது ஒருவகை கூத்து வடிவமாகும். தேசி, வடுகு, சிங்களம் என்னும் முப்பாற்பகுதிகளை அபிநயித்தவாறு ஆடுவதாகும். இறைவனின் புகழைப் பாடியவாறு 15 வகையான அபிநயங்களைக் காட்டி ஆடுவதற்காகவே இக்கொடை அளிக்கப் பெற்றுள்ளது. சோழமாதேவி சிவாலயத்துக் கல்வெட்டுகளின் வரிசையில் தலையாய புகழ்பெற்ற கல்வெட்டாக விளங்குகிறது வீரராஜேந்திரசோழனின் (ராஜராஜனின் பெயரன், கங்கைகொண்ட ராஜேந்திரனின் மகன்) சாசனம். ஆதிசங்கரர் எழுதிய நூல்களுள் ஒன்று பகவத் பாதீயம் என்பதாகும். அந்நூலுக்கு ஸாரிரகபாஷ்யம் என்ற உரைநூல் இருந்துள்ளது. அவ்வுரை நூலுக்கு சிதானந்தபடாரர் என்பார் ப்ரதீபகம் என்ற பெயரில் ஒரு விளக்கநூல் படைத்துள்ளார். அந்நூலினை சோழமாதேவி சிவாலயத்தில் நாளும் எடுத்துரைத்து சொற்பொழிவு நிகழ்த்தும் ஒருவருக்கு விருத்தியாக நிலக்கொடை அளிக்கப்பெற்றதை இச்சாசனம் விரிவாக எடுத்துரைக்கின்றது. ஆதிசங்கரரின் ஆன்மிகக் கருத்துகள் மக்களைச் சென்றடைய வழிவகை செய்த இச்சாசனம் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். ராஜராஜசோழனின் தேவி ஒருத்தியின் பெயரால் அமைந்த இவ்வூரும், ஸ்ரீகயிலாசம் என்னும் கோயிலும் தமிழக வரலாற்றில் குறிப்பிடத்தக்கவை. நீர் மேலாண்மை, ஊர் நிர்வாகம், மக்களின் நலனில் பங்கேற்ற திருக்கோயில்கள், இசை, நாட்டியம் போன்ற கவின் கலைகளை வளர்த்த திறம் எனப் பல்வேறு செய்திகளைச் சுமந்தவாறு ஸ்ரீகயிலாயம் என்னும் இத்திருக்கோயில் விளங்குகின்றது. திருச்சியிலிருந்து தஞ்சை நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் அன்பர்கள் அரைமணி நேரத்தை ஒதுக்கி சோழமாதேவிக்குச் சென்று திருக்கயிலாய நாதரைத் தரிசனம் செய்யுங்கள். அங்குள்ள சிற்பங்களின் எழிலைக் கண்டு மகிழுங்கள். கல்வெட்டுச் சாசனங்களைத் திருக்கரங்களால் தொட்டுப் பாருங்கள். அவை அனைத்தும் நம் பாரம்பரிய பண்பாட்டுப் பொக்கிஷங்கள் என்பதை நிச்சயம் உணர்வீர்கள்.
முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன்
Source : ஆன்மிக பலன் - குங்குமம் இதழ்
http://www.kungumam.co.in/APArticalinnerdetail.aspx?id=2450&id1=50&id2=17&issue=20150131
இத்தகைய பெருமை வாய்ந்த தகவலை நமது இணையதளத்திலும் பதிவு செய்ய அனுமதி அளித்த முனைவர் குடவாயில் பாலசுப்ரமணியன் அவர்களுக்கு நன்றி.