பசுமை வயல்களின் மணம், பறவைகளின் இன்னிசை, தூய்மையான காற்று, கட்டிடங்களால் இன்னும் கலைக்கப்படாத இயற்கை எழில், இவை அனைத்தும் ஊருக்குள் நுழையும்போதே நம் மனதுக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றன. காவிரியின் வடகரையிலுள்ள சிற்றுரான உமையாள்புரம், தஞ்சை ஜில்லா, பாபநாசம் தாலுக்காவில், திருவையாறு கும்பகோணம் பேருந்து தடத்தில் திருவையாற்றிலிருந்து 20கி.மீ கிழக்கிலும், கும்பகோணத்திலிருந்து 10கி.மீ மேற்கிலும், சுவாமிமலையிலிருந்து நான்கு கி.மீ மேற்கிலும் உள்ளது. உமா என்கிற பார்வதி தேவி இவ்வூரின் முதன்மையான தெய்வமாக விளங்குவதால் இவ்வூர் உமையாள்புரம் எனப் பெயர் வரப் பெற்றது.
ஆபத்சகாயர் என்ற பெயரில் இவ்வூரில் குடிகொண்டுள்ள ஐயனார் கோயிலை மேற்கு எல்லையாகவும், காவற்கார பிள்ளையார் என வழங்கப்படும் விநாயகர் கோயிலை கிழக்கு எல்லையாகவும், புராணங்கள் புகழும் சிவாலயத்தை மையமாகவும் கொண்டுள்ளது இச்சிற்றூர்.அக்ரஹாரம் என்ற சொல்லுக்குத் தகுந்தாற்போல், அரியையும் அரனையும் முன்பாகக் கொண்டு தெற்கு, வடக்கு என்ற இரண்டு பெரிய அக்ரஹாரங்களைக் கொண்டுள்ளது இவ்வூர். தெற்கு அக்ரஹாரத்தின் மேற்குக் கோடியில் உள்ள பெருமாள் கோயிலில் மூலவரான ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாளின் மடியை ஸ்ரீதேவி அலங்கரிக்கிறாள். ருக்மணி, சத்யபாமா உடனுறை ஸ்ரீ ராஜகோபால சுவாமி உற்சவமூர்த்தியாக விளங்குகிறார்.ஸ்ரீ ராமர் சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது.
ப்ரும்மாண்ட புராணத்தில் உமாபுர மாஹாத்மியம் என்ற தலைப்பில் ஐந்து அத்தியாயங்களில் இந்தக் கிராமத்தின் மகிமையும், இங்குள்ள சிவன் கோயிலில் ஸ்ரீ குங்கும சுந்தரி, ஸ்ரீ காசி விஸ்வநாதர் என்ற நாமத்துடன் அருள் பாலிக்கும் பார்வதி பரமேஸ்வரனின் பெருமையும், இங்குள்ள மயானத்தின் மேன்மையும் சிறப்பாக விவரிக்கப்பட்டுள்ளது. இச்சிவன் கோயில் ஒரு கந்தர்வப் பெண்மணியால் கட்டப்பட்டது என்று புராணங்கள் வாயிலாக அறிகிறோம்.
விஜயா என்கிற கந்தர்வப் பெண் பார்வதி தேவிக்குக் கோயில் எழுப்புவதற்குத் தகுந்த இடம் வேண்டி கடுமையான தவம் மேற்கொண்டாள். தேவியும் அவளுக்கு இப்புண்ணியத் தலத்தைக் காட்டினாள்.
பூலோகே ஸஹ்யஜா தீரே ஹ்யஸ்த்தி க்ஷேத்ரமதுத்தமம்
க்ஷீரநிதீசாதுதக்பாகே சக்தீஸ்வராத்து பஸ்சிமே
தயாநிதீசாத் ப்ராச்யாந்து ஸ்தானம் புண்யதமம் குரு.
என ப்ரும்மாண்ட புராணத்தில் கூறியபடி இவ்வூர் காவிரி ஆற்றின் வடகரையில் வட குரங்காடுதுறை தயாநிதீஸ்வரர் கோயிலுக்குக் கிழக்கே ஏழு கி.மீ தொலைவிலும் அண்டக்குடி என்றழைக்கப்படும் சக்தீஸ்வர க்ஷேத்திரத்துக்கு மேற்கே ஒன்றரை கி.மீ தொலைவிலும், திருப்பாலத்துறை க்ஷீரநிதீஸ்வரர் ஆலயத்திறகு வடக்கேஒன்றரை கி.மீ தொலைவிலும் உள்ளது.
இக்கோயில் கந்தர்வப் பெண் விஜயாவின் ஆணையின் பேரில் விஸ்வகர்மாவினால் கட்டப்பட்டது. கமலா என்ற பெண் ஒருத்தி தன் கணவனின் தீர்க்கமுடியாத வியாதியைத் தீர்ப்பதற்காக குங்குமத்தால் தேவிக்கு அர்ச்சனை செய்து தன் சௌமங்கல்யத்தைக் காப்பாற்றிக் கொண்டதினால் இங்கு அருள் புரியும் தேவிக்கு குங்குமசுந்தரி என்ற பெயர் வந்ததாகப் புராணம் தேவியின் வார்த்தைளாலாயே கூறுகின்றது.
தஹம் குங்குமேத்யாஸம் சௌமங்கல்ய ப்ரவர்தயே
ததா ப்ரப்ருதி தேவீ ச நாம்னா குங்குமசுந்தரீ
கோயிலுக்குக் கிழக்கே அரை கி.மீ தொலைவில் அமைந்திருந்த அக்னி புஷ்கரணீ என்ற தீர்த்தம் சிவபெருமானின் கட்டளையினால் விஸ்வகர்மாவினால் ஏற்படுத்தப்பட்டது என்றும், அதில் எம்பெருமான் தன் ஜடாமுடியை அலங்கரிக்கும் கங்கையின் நீரையும், காவிரியின் நீரையும் கலந்ததாகவும் புராணம் கூறுகிறது. மேலும் இத்தீர்த்தம் ப்ரும்மஹத்தி போன்ற மிகக்கொடிய பாவங்களைப் போக்கவல்லது என்று புராணம் வாயிலாகத் தெரிகிறது.
புராணம் இக்குளத்தின் மகிமையை வர்ணிக்கும்பொழுது பின்வருமாறு கூறுகின்றது:
மிகவும் இழிவான செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அந்தணன் ஒருவன் தன் பெற்றோர்களைக் கொன்றுவிட்டு பிரும்மஹத்தி என்ற மிகப்பெரிய பாவத்திற்கு ஆளாகி இங்குமங்கும் அலைந்துகொண்டிருந்தான். பாவத்தின் கொடுமைகளைப் பொறுக்கமுடியாமல் புலம்பிக் கொண்டிருந்தபொழுது அவனுடைய முற்பிறவியின் பயனால் ஒரு அசரீரி அவனை இக்கிராமத்தில் உள்ள அக்னி புஷ்கரணீயில் நீராடுமாறு பணித்தது. இக்கிராமத்தைத் தேடிக்கொண்டு மிகவும் அலைந்து, கடைசியில் இக்கிராமத்தில் நுழைந்த மாத்திரத்திலேயே பிரும்மஹத்தி மற்றும் அவனது அனைத்து பாவங்களிலிருந்து விடுபட்டான் என்று புராணம் கூறுகிறது. இத்தீர்த்தம் இப்பொழுது இல்லாவிடினும் இத்தீர்த்தம் இருந்த இடத்தில் சுவடுகள் காணப்படுகின்றன.
சிவன் கோயிலுக்குத் தென்புறத்தில் காணப்படுகின்ற குளக்கரையில் விஜயா என்கிற பெண் கடுந்தவம் புரிந்ததால் இக்குளம், விஜயா தீர்த்தம், நாரியா தீர்த்தம், நாரியா குளம் என்று அழைக்கப்படுகிறது. மேலும் புராணத்தில் கூறப்படும் வடதீர்த்தம், மிருதங்க ஸரஸ் என்பவை இவ்வூரின் வடகிழக்கே ஆலடி குளம், மத்தள மேடு என்ற பெயரில் இப்பொழுதும் வழங்கப்பட்டு வருகிறது.
மயானத்தின் மேன்மை:
பிரும்மாண்டபுராணம் இக்கிராமத்தின் கிழக்கு எல்லையில் அமைந்திருக்கும் மயானத்தின் சிறப்பை ஒரு அத்தியாயம் வருணிக்கின்றது. காசி க்ஷேத்திரத்தைவிட இக்கிராமத்தின் மயானம் சிறப்பு மிக்கதாகக் கூறப்பட்டுள்ளது. இக்கிராம மயானத்தில் தகனம் செய்யப்படுகிற இறந்த உடல்களை வெட்டியார்கள் என்ற மயானக் காவலாளிகள் பரமேஸ்வரனின் ஆணையின்படி இன்றும் தொடுவதில்லை. காசி க்ஷேத்ரத்தில் மயானக் காவலாளிகளாலேயே சில சமயங்களில் உடல்கள் எரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இக்கிராமத்தில் வெட்டியார்களே கிடையாது. எரிக்கப்பட்ட உடல்கள் எலும்பு கரைக்கும் சடங்கான சஞ்சயனம் வரை காவலர்கள் இல்லாமலே கலைக்கப்படாமலும், மற்ற பிராணிகள் மூலமாக சேதப்படுத்தப்படாமலும் இருப்பது இன்றும் வியக்கத்தக்க ஒரு உண்மை. மயானத்திற்கு அருகில் அமைந்துள்ள கோவிலில் வீற்றிருக்கும் காவற்காரன் என்ற பெயருடைய விநாயகர் காவல் காத்துவருகிறார் என்ற நம்பிக்கை இவ்வூர் மக்களிடம் இன்றும் காணப்படுகிறது. இதனால்தான் தகனச் சட்ங்குகள் முடிந்தவுடன் மந்திரங்கள் கூறி விநாயகருக்குக் காணிக்கை செலுத்தும் பழக்கம் இன்றும் உள்ளது.
இராமாயணத்தில் பிரசித்தி பெற்ற ஜடாயுவிற்கு முக்தி இந்த மயானத்தில்தான் அளிக்கப்பட்டது என்றும் தெரிகிறது. இக்கிராமத்திற்கு வெகு அருகில் உள்ளதும் மங்களாசாஸனம் பெற்றுள்ளதுமான வைணவத்தலம் புள்ளபூதங்குடி. இங்குள்ள பெருமாள் தர்ப்பைபுல்லை கையில் வைத்துக்கொண்டு களைப்பாறுவது போன்ற தோற்றத்தில் காட்சி அளிக்கிறார். ஜடாயுவுக்கு ஈமச்சடங்குகளைச் செய்து மோக்ஷம் அளித்தபின் களைப்பாறும் நிலையாகச் சொல்லப்படுகிறது. ப்ரும்மாண்டபுராணத்தில் காணப்படும் 'ஸ்வாமிநாத மாஹாத்மியம்' என்ற நூல் ஸ்ரீ இராமர், இந்த மயானத்தில்தான் ஜடாயுவிற்கு அந்திமக் கிரியைகளைச் செய்தார் என்றும், எல்லோருக்கும் மோக்ஷம் அளிப்பதற்காகவே இங்குள்ள பெருமாள் கோயிலிலுள்ள பெருமாள் தென்திசையைப் பார்த்து அருள் புரிகிறார் என்றும் கூறுகிறது. பத்தினி இல்லாமல் அக்கினி கிரியைகளை செய்ய அதிகாரம் இல்லை என்பதால் க்ரியைகள் முடியும் வரை வைகுண்டத்தில் உள்ள பெருமாள் ஸ்ரீ லக்ஷ்மிநாராயணனாக இக்கிராமத்தில் தோன்றி, எல்லா அந்திம கிரியைகளையும் செய்தார் என்று கூறுகிறது.
இக்கிராமத்தின் தெற்கு அக்ரஹாரத்தின் மேற்குக்கோடியில் அமைந்துள்ள பெருமாள் கோயில் மூலவிக்ரகம் ஸ்ரீ லக்ஷ்மிநாராயணப் பெருமாள் ஆகும். சுப ஸ்வீகாரச்சடங்கின்போது அம்பாள் குங்குமஸுந்தரி தமயனுக்குச் செய்யவேண்டிய சுபகாரியங்கள் அனைத்தையும் செய்துமுடித்தார் என்று சொல்லப்படுகிறது. இக்கிராமத்திற்கு மேற்கே மூன்று கி.மீ தொலைவில் உள்ள கபிஸ்தலம்(குரங்குகளின் இருப்பிடம்) மற்றும் கபிஸ்தலத்திற்கு மேற்கே மூன்று கி.மீ தொலைவில் உள்ளது வடகுரங்காடுதுறை (காவிரியின் வடகரையில் அமைந்துள்ள குரங்குகள் விளையாடும் இடம்). இக்கிராமத்தில் வாலி சிவபெருமானை வணங்குவதைப்போன்று சுதை வடிவத்தில் காணப்படும் உருவம் உள்ளது. இவைகளினால் இந்த இடம் இராமாயண காலத்துக் கிஷ்கிந்தை என்று சொல்லப்படுவதால், இவ்விரு கிராமங்களுக்குச் சற்று கிழக்கே உள்ள உமையாள்புரம், ஜடாயுவிற்கு மோக்ஷம் அளித்த இடம் என்பது மிகவும் பொருத்தமாக உள்ளது. மேலும் ஸ்ரீ இராமர், ஸ்ரீ லக்ஷ்மணர், ஸ்ரீ ஹனுமான் இவர்களின் நினைவாக இக்கிராமத்தின் வெகு அருகில் காணப்படும் ராமச்சந்திரபுரம், ராமானுஜபுரம் (லக்ஷ்மணபுரம்) அனுமானூர் ஆகிய கிராமங்கள், உமையாள்புரம்தான் ஜடாயுவிற்கு மோக்ஷம் அளித்த இடம் என்பதற்கு ஆதார பூர்வமாக உள்ளன.
ப்ரும்மாண்டபுராணத்தில் காணப்படும் ஸ்வாமிநாத மாஹாத்மியத்திலும், சிவரஹஸ்யத்திலும் இக்கிராமம் அம்பாளின் இருப்பிடமாகவே கூறப்படுகிறது. சிவபெருமான் ப்ரணவ மந்திரத்தின் தத்வார்த்தத்தை அறிந்து கொள்வதற்கு திருவேரகம் என்கிற முருகனின் ஆறுபடை வீடுகளுள் ஒன்றான ஸ்வாமிமலையை அடைவதற்கு முன் காவிரி ஆற்றின் வடகரையில் அமைந்துள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு சிறப்பைத் தன் திருவிளையாடல் மூலமாக வெளிப்படுத்தியுள்ளார் என்று கூறுகிறது.
ஸ்ரீமத் பகவத் கீதையில் கண்ணன் கூறியது போல், திருமால் நல்லோர்களைக் காப்பற்றுவதற்காகவும், தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவும் பல அவதாரங்கள் எடுத்ததுபோல் சிவபெருமானும் மக்களின் நன்மைக்காக பல திருவிளையாடல்களைப் புரிந்துள்ளார் என்று இதிகாச புராணங்கள் கூறுகின்றன.
வேதாந்த தத்வோபதேசங்களை அறிந்துகொள்ள குரு சிஷ்யபாவம் என்பது மிகவும் முக்கியம் என்பதை சிவபெருமான் தன் திருவிளையாடல் மூலமாகவும் உலகத்திற்கு உணர்த்தியுள்ளனர். கிருஷ்ணாவதாரத்தில் அர்ஜுனனுக்கு தத்வோபதேசம் (கீதோபதேசம்) போர்க்களத்தில் நிகழ்த்தியதற்கு முக்கிய காரணம் அங்குதான் அர்ஜுனன் ஸ்ரீ கிருஷ்ணனிடம், "சிஷ்யனாக உன்னை சரணம் அடைந்துள்ள எனக்கு உபதேசம் செய்யவேண்டும்" ("சிஷ்யஸ்தேஹம் சாதி மாம் த்வாம் ப்ரபன்னம்") என்று சிஷ்ய பாவத்தை வெளிப்படுத்தினான். இது போன்று சிவபெருமானும் தன் புதல்வனாகிய முருகப்பெருமானிடம் ப்ரணவமந்திரதத்வோபதேசத்தை பெற்றுக்கொள்ள அடக்கமுள்ள சிஷ்யனாகச் செல்லும் காலத்தில், உமையவளை உமையாள்புரத்தில் விட்டுச் சென்றதாக ஸ்வாமிநாத மாஹாத்மியம் கூறுகிறது.
ப்ரணவ மந்த்ரத்தின் உட்பொருளை முறைப்படி கேட்டால்தான் அதன் முழுப்பலனையும் அடையமுடியும் என்பதினால் தான் குருவாகவும், சிவபெருமான் சிஷ்யனாகவும் இருந்தால்தான் உபதேசம் செய்யமுடியும் என்று ஸ்ரீ முருகன் கூறினார்.
தத்வோபதேசம் பெறும் பொருட்டு சிவபெருமான் தன் சக்தி அம்சங்களுடனும், அம்பாள், கணபதி மற்றும் பரிவாரங்களுடனும் காசி க்ஷேத்திரத்திலிருந்து ஆவணித்திங்கள் ஹஸ்த நக்ஷத்திரத்தில் புறப்பட்டு பஞ்சநதீஸ்வர க்ஷேத்திரம் என்ற திருவையாற்றை அடைந்தார். நந்திதேவனை முருகனிடம் அனுப்பி உபதேசம் பெற எப்பொழுது வரலாம் என்று கேட்டுவரச் சொன்னார்.
ப்ரணவதத்வோபதேசத்திற்கு வரும் சிஷ்யன், தான் மட்டும் தனிமையில் வருவதுடன், சிஷ்யனுக்குரிய அடக்கமான தன்மையுடன் வரவேண்டும் என்கிற நிபந்தனையுடன் எப்பொழுது வேண்டுமானாலும் வரலாம் என்று முருகன் கூறவே, மிகப் புனிதமான காவிரி ஆற்றின் வடகரை ஓரமாக இருக்கும் திருவேரகத்தை நோக்கி சிவபெருமான் புறப்பட்டார். தான் மட்டும் தனிமையில் உபதேசம் பெற்றுக்கொள்ள போகவேண்டும் என்பதால், ஸ்ரீ முருகனின் (குருவின்) நிபந்தனைப்படி தன் சக்திகள், பரிவாரங்கள், அம்சங்கள், கணங்கள், அம்பாள், விநாயகர் அனைவரையும் ஒவ்வொரு இடத்தில் விட எண்ணி, முதலில் திருவையாற்றுக்கருகில் காவிரியின் வடகரையில் அமைந்துள்ள வைரவன் கோயில் என்ற கிராமத்தில் தன்னுடைய ஏகாதச ருத்ராம்சங்களை ஒரே பைரவரிடம் உள்ளடக்கி,விட்டுவிட்டார். பைரவன் கோயில் என்ற கிராமத்தில் சிவபெருமான் பைரவ கோலத்தில், உத்திரவாஹினியாக (வடக்கு நோக்கிச் செல்லுகின்ற) காவிரி ஆற்றிலிருந்து பிரிந்து செல்லும் வாய்க்காலின் மேற்குக் கரையில் காசி க்ஷேத்திரத்தைப்போன்று கீழ்கரையில் அமைந்துள்ள மயானத்தை நோக்கிக் காட்சி அளிக்கின்றார். பிறகு தன்னுடைய ஈஸ்வரன் என்கிற அம்சத்தை ஈச்சங்குடி என்கிற கிராமத்திலும், சோமனை (சந்திரன்) திங்களூரிலும், (திருவையாறு-கும்பகோணம் பேருந்துத் தடத்தில் உள்ள திங்களுர் பிரசித்தி பெற்ற சந்திர ஸ்தலமாகும்.) தன்னுடைய உத்சவ அர்ச்சனா மூர்த்தியான சோமாஸ்கந்தரை சோமேஸ்வரபுரத்திலும் விட்டுவிட்டார். நந்தியை மணலூர் என்ற கிராமத்தில் இருக்கச் செய்தார்.மணலூர் கிராமம் கணபதி அக்ரஹாரத்திற்கு முன் மேற்கே அமைந்துள்ளது. இக்கிராமத்தில் ஓடுகின்ற வாய்க்கால் பாலத்தின் மதகின் மேல் இன்றும் காணப்படுகின்ற நந்தி உருவம், சிவபெருமான் நந்தியை இங்கு விட்டுச்சென்றார் என்பதை நினைவு படுத்துவதுபோல் உள்ளது. பேருந்தில் பயணம் செய்யும்போதே மணலூரில் இந்த நந்தியைப் பார்க்கலாம். இந்த மதகு 'நந்தி மதகு' என்று அழைக்கப்படுகிறது. பிறகு கணபதி அக்ரஹாரம் என்ற ஊரில் தன் மூத்த குமாரனையும் மற்ற கணங்களையும் இருக்கச் செய்துவிட்டு (காவிரி ஆற்றின்வடகரையில் அமைந்துள்ள கணபதி அக்ரஹாரத்தில் இன்றும் கணபதியே பிரதான தெய்வமாக வழிபடப்படுகிறார்.) தன்னுடைய கருணை என்கிற தயாம்சத்தை வடகுரங்காடுதுறை என்கிற ஆடுதுறைபெருமாள் கோயில் கிராமத்திலும் (இதன் காரணமாகத்தான் இக்கிராமத்தில் சிவபெருமான் தயாநிதீஸ்வரர் என்ற பெயர் கொண்டுள்ளார்.) பிறகு மேட்டுத்தெரு என்ற கிராமத்தில் தேவியின் அம்சமாகிய காளிகாம்பாளையும், அதற்குக் கிழக்கே கருப்பூர் என்ற கிராமத்தில் கிராம தேவதையின் தலைவனாகிய கருப்புஸ்வாமி அம்சத்தையும் விட்டுவிட்டார். அம்பாளாகிய உமையவளை உமையாள்புரத்தில் இருக்கச்செய்தார். அம்பாள் குங்குமசுந்தரி என்ற பெயரில் பிரதான தெய்வமாகவும், காசி விஸ்வநாதன் என்ற பெயரில் சிவபெருமானும் இங்கு அருள் பாலிக்கின்றனர்.
பிறகு சிவபெருமான் தன் சக்திசேனை அனைத்தையும் உமையாள்புரத்திற்குக் கிழக்கே ஒன்றரை கி.மீ தொலைவில் உள்ள அண்டக்குடி என்ற கிராமத்தில் விட்டார். ஆகவேதான் இங்கு சிவபெருமான் சக்தீஸ்வரன் என்றும், இக்கிராமம் சக்தீஸ்வர க்ஷேத்திரம் என்றும் சொல்லப்படுகிறது. பிறகு தன் ஜடாமகுடத்தை அலங்கரிக்கும் கங்கையை ஸ்வாமிமலைக்கு மேற்கே அரை கி.மீ தொலைவில் உள்ள கங்காதரபுரம் என்கிற கிராமத்திலும் விட்டுவிட்டு அடுத்து உள்ள திருவேரகம் என்கிற ஸ்வாமிமலையில் தனி மாணாக்கனாக அடக்க ஒடுக்கமாக முருகப்பெருமான் கூறிய அனைத்து நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டு, உபதேசம் பெற்றார் என்று ஸ்வாமிநாத மாஹாத்மியத்திலும் சிவரஹஸ்யத்திலும் சொல்லப்படுகிறது.
தனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறி குருவிடம் சரணாகதி அடைந்து எப்படி அடக்கமாக உபதேசம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை உலகுக்கு உணர்த்த சிவபெருமானும், முருகப்பெருமானும் சேர்ந்து நடத்திய விளையாட்டே இது.
உத்சவங்கள்:
வைகாசி விசாகத்தன்று திருக்கல்யாண மஹோத்ஸவம் சிறப்பாக நடைபெறுகிறது. அன்று பெருமாள் எழுந்தருளி சிவன் கோயிலுக்கு வந்து, தன் சகோதரியை தாரை வார்த்துக் கொடுக்கும் நிகழ்ச்சி சிறப்பாக இருக்கும். இரவு சோமஸ்கந்த மூர்த்தி அம்பாளுடன் ஊர்வலமாக வந்து அருள் பாலிக்கின்றனர். ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஸ்கந்த சஷ்டி, கார்த்திகை, திருவாதிரை போன்ற நாட்களில் சிறப்பு ஆராதனைகள் நடக்கின்றன. மகர ஸங்கராந்தி அன்று உத்ஸவ மூர்த்தி விருஷபாரூடராக புறப்பட்டுச் சென்று காவிரியில் தீர்த்தம் கொடுத்து ஊர்வலம் வரும் காட்சி காணவேண்டிய ஒன்று. கிராம மக்களின் ஒத்துழைப்புடன் புராணப் புகழ் வாய்ந்த இச்சிவன் கோயில் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் 3-6-2009இல் நடை பெற்றது.
உமையாள்புர மகிமை தொடரும்
ஆதாரம்- 2009இல் நடைபெற்ற கும்பாபிஷேகத்தின் போது வெளியிட்ட 'உமையாள்புரம்' என்ற புத்தகம்.
Courtesy: Smt. Malathi Jayaraman, Kumbakonam