'வைத்தியருக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு' என்ற பழமொழி முன்னாளில், வழக்கில் இருந்து வந்தது. அந்நாட்களில் எண்ணெய் என்பது உடலுக்கு ஒரு மருந்தாக இருந்தது. கடலை, எள், தேங்காய், ஆமணக்கு போன்ற எண்ணெய் வித்துக்களைப் பயிரிட்டு, வீட்டு உபயோகத்திற்குப் போக எஞ்சியதை செக்கில் கொடுத்து எண்ணெயாக ஆட்டி வைத்துக் கொள்வார்கள்.
எண்ணெய் எடுக்கும் நவீன இயந்திரங்கள் வந்த பிறகு செக்குகள் குறைந்து இன்று செக்குகளைக் காண்பதே அரிதாகி விட்டது என்ற நிலையில், குடவாசலுக்கு அருகே இருக்கும் நெய்க்குப்பை என்ற சிற்றூரில் திரு இராஜேந்திரன் மூன்றாவது தலைமுறையாக இத்தொழிலைத் தொடர்ந்து செய்து வருவது பாராட்டுக்குரியது. அவரது பாட்டனார் இரத்தினம் செட்டியார், தந்தையார் வீரையன் செட்டியார் இவர்களைத் தொடர்ந்து இவர் செக்கு எண்ணெய் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
செக்கில் உள்ள செக்குக்கட்டை என்பது வாகை மரத்தால் செய்யப்படுகிறது. இது பூமிக்கு அடியில் 11அடி ஆழம் புதைக்கபட்டு பூமிக்கு வெளியே நான்கு அடி உயரம் உள்ளது.அதன் மேல் வைக்கப்படும் ஏழு அடி நீளம் உள்ள உழக்கை என்ற பகுதி வம்மர மரத்தால் தயாரிக்கப்படுகிறது. கொக்கிக்கட்டை என்ற பகுதி ஐந்து அடி நீளத்தில் கருவேல மரத்தில் செய்யப்படுகிறது. சுற்றி வரும் 22 அடி நீளமுள்ள வழம்பை என்ற பகுதி செய்வதற்கு வாகை மரம் உபயோகப்படுத்தப்படுகிறது. இச்செக்கைத் தயாரிப்பதற்கும், பழுது பார்க்கவும் தனக்குத் தெரிந்து ஒரே ஒரு தச்சர் சிதம்பரத்தில் இருப்பதாக திரு இராஜேந்திரன் கூறுகிறார். அவர் இல்லத்தில், பெரிய பரப்பளவு உள்ள திறந்தவெளியின் மையத்தில் செக்கு கம்பீர அழகுடன் வீற்றிருக்கிறது.
இந்த செக்கு எண்ணெய் வாணிபத்தை இந்தக்காலத்தில் தொடருவதில் உள்ள நடைமுறை சிரமங்களை திரு இராஜேந்திரன் அவர்கள் கூறிய சமயத்தில், 3-10-2015இல் வெளியான ஹிந்து நாளிதழின் ''நிலமும் வளமும்' இணைப்பின் 'இயற்கை விஞ்ஞானி' பகுதியில் வெளிவந்துள்ள மோகனூர் விவசாயியின் டிராக்டர் செக்கு' என்ற கட்டுரை நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.
திரு இராஜேந்திரன் அவர்களிடமும், அவரது மகள் செல்வி இராஜலக்ஷ்மியிடமும் ஒரு நேர் காணல் (Video Interview)
Article Courtesy:
Smt. Malathi Jayaraman
Kumbakonam