தென்னகத்தில், தஞ்சை மாவட்டத்தில் 17,18ஆம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஸ்ரீபோதேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள், திருவிசநல்லூர் மகான் ஸ்ரீதர அய்யாவாள், மருதாநல்லூர் சத்குரு ஸ்வாமிகள் ஆகிய மூவரும் நாம சங்கீர்த்தனத்தின் மகிமையை மக்களிடையே பரப்பியதோடு, தக்ஷிண பஜனை சம்ப்ரதாயத்தின் மும்மூர்த்திகளாக விளங்கியவர்கள். இந்த பஜனை சம்ப்ரதாயத்தில் ஈடுபாடு கொண்டு பல அந்தணக் குடும்பங்கள், பரம்பரை பரம்பரையாக பஜனையை நடத்தி நாம சங்கீர்த்தனத்தைப் பரப்பி வந்தன. சில குடும்பங்களின் பொருளாதார நிலை நலிவடைந்தபோதிலும், எளிமையான வாழ்க்கை வாழ்ந்து சம்ப்ரதாய பஜனையை விடாமல் நடத்தி வந்தார்கள். இவர்களால்தான் நம் தென்னக பாரம்பரியத்தின் ஒரு சிறப்பு அம்சமான இந்த பஜனை சம்ப்ரதாயம் இன்றளவும் அழியாமல் இருக்கிறது.
திருச்சி மாவட்டம், லால்குடி வட்டம், பூவாளூர் கிழக்கு பின்னவாசல் கிராமத்தில் வசிக்கும் ஸ்ரீராஜகோபாலன் அவர்கள் கடந்த 35வருடங்களாக மிகுந்த பக்தி, சிரத்தையுடன் ஸ்ரீ பத்மாவதி வெங்கடேஸ்வர திருக்கல்யாணம் நடத்தி வருகிறார். இவருடைய மூதாதையர்கள் ஏழு தலைமுறைகளாக கருட சயன யக்யம், வாஜ்பேய யக்யம் செய்தவர்கள். இவருடைய மூதாதையர்களான ஸ்ரீராமசந்த்ர யக்ய தீக்ஷிதர், ஸ்ரீமூலநாத யக்ய தீக்ஷிதர் இருவரும் மிகச்சிறந்த சாம வேத விற்பன்னர்கள். பரமாச்சார்யாள் காலத்தில் நடந்த பல வேத ஸதஸ்களில் பங்கேற்ற பெருமை பெற்றவர்கள். மைசூர் சமஸ்தானத்தின் ஆதரவில் தங்கள் இல்லத்திலேயே பலருக்கு வேதம் கற்பித்தவர்கள்.
1971ஆம் ஆண்டிலிருந்து ஏகாதசி, கோகுலாஷ்டமி, புரட்டாசி சனிக்கிழமை மற்றும் ஸ்ரீ ராம நவமி தினங்களில் ஸம்ப்ரதாய பஜனை செய்து வந்தார். பொருள் வசதி இருக்கும்போது விமரிசையாக, திருச்சி சிவராம பாகவதர், ஜீயபுரம், திருச்சந்துரை பாகவதர்கள் மற்றும் அருகிலுள்ள கிராமங்களிலுள்ள பக்தர்களைக்கொண்டு நடத்தி வந்தார். 1981ஆம் ஆண்டில் ஸ்ரீரங்கத்தில் நடந்த பத்மாவதி வெங்கடேஸ்வர திருக்கல்யாண மஹோத்ஸவம் இவர் மனதில் ஒரு வைராக்கியத்தை ஏற்படுத்தியது. ஸ்ரீரங்கத்தில் இரண்டு கண்களையும் இழந்து, நித்ய உஞ்சவ்ருத்தி செய்து காலக்ஷேபம் செய்து வந்த ஸ்ரீகிருஷ்ண பாகவதர், ஸ்ரீ பத்மாவதி வெங்கடேஸ்வர உத்ஸவம் செய்து வந்தார். பரம ஏழையான அவர் செய்த உத்ஸவத்தைப் பார்த்ததும் இவர் மனதில் இத்திருக்கல்யாண உத்ஸவம் செய்வதற்கான எண்ணம் தோன்றியது.
முதன்மையாக, 1982ஆம் ஆண்டில் கும்பகோணம் பூஜ்யஸ்ரீ பாலு பாகவதர் தலைமையில் பத்மாவதி வெங்கடேஸ்வர கல்யாண உத்ஸவம் விமரிசையாகத் தொடங்கப்பட்டது. அதன்பின் 18 வருடங்கள் ஸஞ்சீவி பாகவதர் தலைமையில் நடந்து வந்தது.
இத்திருக்கல்யாண உத்ஸவத்தில் பலமுறை கொல்லங்கோடு பூஜ்யஸ்ரீராமநாத பாகவதர், செதலபதி ஸ்ரீசௌந்தரராஜ பாகவதர், கிருஷ்ணராயபுரம் ஸ்ரீசோமு பாகவதர், ஸ்ரீபசுபதி பாகவதர், குளித்தலை ஸ்ரீகோபால் பாகவதர், ஈரோடு ஸ்ரீத்யாகராஜ பாகவதர், ரெங்க நரசிம்ம பாகவதர், ஸ்ரீராஜன் பாகவதர், போத்தனூர் ஸ்ரீநாகராஜன் பாகவதர், ஸ்ரீகுருராஜ பாகவதர், கரூர் ஸ்ரீகிருஷ்ணமூர்த்தி பாகவதர், மஹாதானபுரம் ஸ்ரீராதாகிருஷ்ண பாகவதர், கோவை ஸ்ரீ பாலு பாகவதர், கடையநல்லூர் ஸ்ரீராஜகோபால பாகவதர், ஆங்கரை ஸ்ரீஜானகிராம பாகவதர், A.L சந்திரமௌலி பாகவதர், A.L கிருஷ்ணமூர்த்தி பாகவதர், புதுக்கோட்டை ஸ்ரீரவி பாகவதர்(தற்போது மதுரை ஸ்ரீசக்கர ராஜராஜேஸ்வரி பீடாதிபதி ஸ்ரீஸ்ரீ ராமானந்த சரஸ்வதி ஸ்வாமிகள்) மற்றும் பல பாகவத பெரியவர்கள் வந்திருந்து உத்ஸவத்தை சிறப்பித்துத் தருவார்கள். கடந்த பத்து வருடங்களாக ஈரோடு ஸ்ரீ ராஜாமணி பாகவதர் வந்து சிறப்பிக்கிறார்.
உத்ஸவத்திற்கு முன் ஏழு வாரங்கள் சனிக்கிழமை தோறும் திவ்ய நாம பஜனை இரவு 9மணி முதல் காலை 6 மணி வரை நடைபெறும். இதில் பல பஜனை கோஷ்டிகள் கலந்துகொண்டு சிறப்பிப்பார்கள்.மேலும் உத்ஸவத்திற்குமுன் 54நாட்கள் தினமும் இரண்டு சஹஸ்ரநாம அர்ச்சனை வீதம் லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது.
இங்குள்ள குழந்தைகளை நாம சங்கீர்த்தனத்தில் பக்தியுடன் ஈடுபடச் செய்த பெருமை பிரம்மஸ்ரீ மணக்கால் வெங்கட்ராம பாகவதர் அவர்களைச் சாரும். ஏழு வாரங்களும் உத்ஸவத்தில் கலந்துகொண்டு அஷ்டபதி மற்றும் இதர பல கீர்த்தனங்களின் அர்த்தங்களை விளக்குவார்கள்.
கல்யாணத்தில் பூஜையில் வைக்கப்படும் ஸ்ரீ தாயார் படம் ஸ்ரீரங்கம் பூஜ்யஸ்ரீ ஜீயர் ஸ்வாமிகளால் ஆசிர்வதித்துக் கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு வருடமும் சிறப்பாக நடக்கும் இந்த தெய்வீக திருமணத்தில் கிராமத்தில் உள்ள இளம் சிறுவர்கள் பலர் பக்தியுடன் ஈடுபடுவது மகிழ்ச்சியான விஷயம். தன்னுடைய குடும்பத்தின் குழந்தைகளோடல்லாது கிராமத்தில் உள்ள அனைத்து சிறுவர், சிறுமியரையும் இதில் பங்கு பெற ஊக்குவிக்கும் திரு இராஜகோபாலன் அவர்களின் தெய்வத்தொண்டு போற்றத்தக்கது . 70 வயதான அவர் இளஞ்சிறார்களுடன் உற்சாகமாக நடனமாடுவது இந்த பஜனை பாரம்பரியத்தில் அவருக்கு இருக்கும் தீவிர ஈடுபாட்டைக் காட்டுகிறது.
ஸ்ரீ பத்மாவதி வெங்கடேஸ்வர கல்யாணத்தைப் பற்றி ஸ்ரீராஜகோபாலன் அவர்கள் நம்முடன் உரையாடுகிறார்.
கோலாட்டம்
Yorumlar