top of page

திப்பிராஜபுரம்

ஊருக்குள் நுழையும்போதே மாசு இல்லாத காற்று, தூசு இல்லாத வீதிகள் கொண்டு நம் மனத்தை மகிழச்செய்யும் இந்த அழகிய சிற்றூர் கோவில் நகரமான குடந்தைக்குத் தெற்கே ஏழு கி.மீ தொலைவில் காவிரியின் கிளை நதியான திருமலைராஜன் ஆற்றின் கரையில் உள்ளது. தஞ்சையை ஆண்ட நாயக்கர்களின் ஆட்சிக்காலத்தில் மந்திரியாக இருந்த திப்பையா, இங்கிருக்கும் அந்தணர்களின் மூதாதையர்களுக்கு தானமாகக் கொடுத்ததால் இக்கிராமம் திப்பையாராஜபுரம் என அழைக்கப்பட்டது என்று காஞ்சி ஸ்ரீபரமாசார்யாள் கூறி உள்ளார்கள். திப்பையாராஜபுரம் என்ற பெயர் காலப்போக்கில் மருவி திப்பிராஜபுரம் ஆனது. சதுர வடிவில் நான்கு தெருக்கள் அழகாக உள்ளன. அபிராமி சமேத சோளேஸ்வரர் கோவில் அக்ரஹாரத்தின் வடகிழக்கு மூலையிலும் பெருமாள் கோவில் தென்மேற்கு மூலையிலும் அமைந்து அக்ரஹாரத்தின் லட்சணத்தோடு உள்ளது. ஸ்ரீஅபிராமி அம்பிகை சமேத விக்ரம சோளேஸ்வரர் கோவில் விக்ரம சோழனால் ப்ரம்மஹத்தி தோஷத்திலிருந்து விடுபடுவதற்காகக் கட்டப்பட்டது. பூமி, நீளா சமேத வரதராஜ பெருமாள் கோவிலின் தீபாராதனையை தெற்கு வீதி தொடங்கும் இடத்திலிருந்து எங்கு நின்றாலும் பார்க்கலாம். அக்ரஹாரங்களின் சிறப்பே அதுதான். வருடாவருடம் சங்காபிஷேகம், தேவசேனா கல்யாணம், ராதாகல்யாணம், நவராத்திரி, கந்த சஷ்டி போன்ற உத்ஸவங்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

வாஜபேயம், சோமயாகம், கருட சயனம் ஆகிய யாகங்கள் செய்த சிறந்த வேத பண்டிதர் ஸ்ரீநாராயணஸ்வாமி ஸ்ரௌதிகள் இவ்வூரைச் சேர்ந்தவர். வாஜ்பேய யாகம் செய்ததற்காக அவரை சிறப்பித்து பரமாசார்யாள், வெண்கொற்றக்குடை அளித்தார். இந்த ஊரை சிறப்பித்த ஸ்ரீவைத்யநாத சாஸ்திரிகள் ஸமஸ்கிருத இலக்கணத்தில் நிபுணர்.அவ்ர் ஸமஸ்கிருத இலக்கணத்தில் பல புத்தகங்கள் எழுதியதோடு இவ்வூரில் அருள் பாலிக்கும் தெய்வங்களின் மேல் பல ஸ்லோகங்கள் இயற்றி உள்ளார். ஹரிகதா கலைஞரான ஹரிகதா கௌஸ்துபம் ஸ்வாமிநாத ஐயர் ஸ்தல பாகவதராக இருந்துகொண்டு ஏகாதசி பஜனைகளும், ராதா கல்யாண உத்ஸவங்களும் நடத்தி வந்தார். ஸ்ரீ பி.என்.ராமமூர்த்தி தீக்ஷிதர் சிறந்த உபன்யாசகரோடல்லாது சோமயாகம் செய்தவர். தமிழ் நாடு இயல் இசை நாடக மன்றத்தால் 'கலைமாமணி' விருது வழங்கப்பட்டவர். இவ்வூரைச் சேர்ந்த யக்ய நாராயண தீக்ஷிதர் நித்ய அக்னிஹோத்ரம் செய்ததோடு சோம யாகமும் செய்தவர். இங்கு வாழ்ந்த ஸ்ரீசீதாராம கனபாடிகள் வேத பாஷ்யங்களில் ஆழ் புலமை பெற்றவர். காஞ்சி மடம், திருப்பதி தேவஸ்தானம், மனித வள அமைச்சகம் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்பட்டவர். அவர் திப்பிராஜபுரம் வேத பாடசாலையில் ஆசிரியராக இருந்தவர். அவருடைய புத்திரர் ஸ்ரீஅனந்தநாராயண கனபாடிகள் தற்போது கும்பகோணம் சங்கர மடத்தில் கிருஷ்ண யஜுர் வேத அத்யாபகராக உள்ளார்.

பிரம்ம வித்ய சபா:

ஸ்ரீகாஞ்சி பரமாச்சார்யாளின் ஆசியுடன் சுமார் 66 வருடங்களுக்கு முன் சமய தத்துவ பிரசங்களுக்காக ஆரம்பிக்கப்பட்டது. இச்சபை உபநிஷதங்கள், புராணங்களைப்பற்றி வாராந்திர பிரசங்கங்கள் நடத்தி வந்தது. ஸனாதன தர்மத்தில் தேர்ந்தவர்களான பல பண்டிதர்கள் இதில் பங்கேற்று, அறிவுக்கூர்மை மிகுந்த திப்பிராஜபுரவாசிகளுக்கு மேலும் மெருகூட்டியுள்ளனர்..

திப்பிராஜபுரவாசிகள் கலைகளில் மிகுந்த நாட்டம் உடையவர்கள். பல தலை சிறந்த கலைஞர்கள் இங்கு வந்து, இசை நிகழ்ச்சிகள், நாட்டிய நிகழ்ச்சிகள், சமயச்சொற்பொழிவுகள், இசைப்பேருரைகள் நிகழ்த்தியுள்ளனர்.

மற்ற தஞ்சை மாவட்ட வாசிகளைப்போலவே திப்பிராஜபுர வாசிகளும், இயற்கையிலேயே சிறந்த புத்திக்கூர்மை, கலைஞானம் உடையவர்கள். திப்பிராஜபுரவாசிகள் இன்றளவும் ஸ்ரீபரமாச்சார்யாளின் அனுக்கிரகத்தால் ஒற்றுமையாக, தன்னலமற்று, பங்களித்து, பகிர்ந்து வாழ்கிறார்கள். இவ்வூர் வாசிகள் அக்கிரஹாரத்தை பழமை மாறாமல் பாதுகாத்துவருவது மிகவும் போற்றத்தக்கது.

நன்றி:

ஸ்ரீ N.காமகோடி, ஸ்ரீ T.V.ராமமூர்த்தி, ஸ்ரீ N. ராமன், ஸ்ரீ S.கிருஷ்ணன்

இக்கட்டுரையில் இருக்கும் செய்திகள் தவிர இவ்வூரைப்பற்றிய அரிய செய்திகளை இந்த வலைத்தளம் வரவேற்கிறது.

Article Courtesy: Smt. Malathi Jayaraman

155 views0 comments
bottom of page