top of page

காரடை நோன்பு

சத்யவான் சாவித்திரியைப்பற்றி மிகப்பழைமையான கதை, மஹாபாரதத்தில் கூறப்படும் உபகதைகளுள் ஒன்றாக மார்க்கண்டேய முனிவர் யுதிஷ்டிரருக்குக் கூறுவதாகக் கிடைக்கிறது. திரௌபதிக்கு சமமான பதிபக்தியில் சிறந்த பெண்மணிகள் இவ்வுலகில் இருந்தார்களா என்ற யுதிஷ்டிரரின் கேள்விக்கு மார்க்கண்டேய முனிவர் விடையளிப்பதாக உள்ளது.

மத்ர நாட்டு அரசனான அஸ்வபதிக்கும் அவரது மனைவி மாலவிக்கும் மணமாகி பல வருடங்கள் குழந்தைப்பேறு இன்மையால் அரச குலத்துக்கு ஒரு ஆண் வாரிசு வேண்டி சூரிய பகவானுக்கு பல வேள்விகளும், பூஜைகளும் செய்கிறார்கள். வேள்விகளில் மகிழ்ந்த இறைவன் அவர்கள் முன் தோன்றி விரைவில் ஒரு பெண் குழந்தை வரமளிப்பதாகக் கூறுகிறான். வரத்தில் மகிழ்ந்த அரச தம்பதிகள் பிறந்த அந்தக் குழந்தைக்கு வரமளித்த தேவதையின் பெயராலேயே சாவித்திரி என்று பெயரிட்டு மகிழ்கிறார்கள்.

சாவித்திரி ஒழுக்கத்திலும், வீரத்திலும், அறிவிலும், அழகிலும் மிகச்சிறந்தவளாகத் திகழ்கிறாள். அவளுடைய நன்னெறியையும், வீரத்தையும் இன்னும் பற்பல திறமைகளைக் கண்ட ஆண்கள் அவளை தெய்வப்பிறவியாகக் கருதி நெருங்கவே பயந்தார்கள். இதனால் சாவித்திரியுடைய தந்தை தன் மகளையே அவளுக்கு ஏற்ற மணாளனைத் தேர்ந்தெடுக்குமாறு கூறுகிறார். இதற்காக சாவித்திரி ஒரு பயணம் மேற்கொள்கிறாள். அப்பயணத்தில் சால்வ நாட்டு அரசன் த்யுமத்சேனனின் மகனான சத்யவானை அவளுகேற்ற மணாளனாகத் தேர்ந்தெடுக்கிறாள். எதிரிகளிடம் தன் ராஜ்ஜியத்தை இழந்த த்யுமத்சேனன் பார்வையையும் இழந்து காட்டில் தன் மனைவி ஸைவ்யையுடனும் மகன் சத்யவானுடனும் வாழ்ந்து வந்தார். சத்யவானின் பண்பும், பெற்றோர்களுக்குச் செய்யும் பணிவிடையும் அவள் மனத்தைக் கவர்ந்தன.

ஊர் திரும்பிய சாவித்திரி தன் எண்ணத்தைத் தன் தந்தையிடம் தெரிவித்தாள். அப்போது அங்கு வந்திருந்த அஸ்வபதியின் குருநாதரான நாரதர், சத்யவான் சாவித்திரிக்கு ஏற்ற சிறந்த வாழ்க்கைத்துணையாக இருந்தாலும் அவன் ஆயுள் இன்னும் ஒரு வருடமே இருப்பதாகத் தெரிவித்தார். அதைக்கேட்ட அஸ்வபதி தன் மகளிடம் வேறொருவரைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி மன்றாடினார். சாவித்திரியும் சத்யவானை கணவனாக ஒருமுறை தேர்வு செய்தபின் தன் முடிவிலிருந்து மாறமுடியாது என்று திட சித்தமாக இருந்தாள். நாரதரும் அவள் மன உறுதியைப் பாராட்டி திருமணத்தை நடத்தும்படி கூறினார்.

திருமணம் முடிந்தவுடன் சாவித்திரி, சத்தியவானுடன் காட்டுக்குச் செல்கிறாள். அங்கு துறவு உடை தரித்து, தன் மாமனார், மாமியார், கணவர் ஆகியோரிடம் பணிவுடனும், மரியாதையுடனும் நடந்து கொள்கிறாள். விதிப்படி சத்யவானின் முடிவுக்கு மூன்று நாட்கள் முன்பு இரவு, பகல் கண் விழித்து உண்ணாமல் விரதம் இருக்க முடிவு செய்கிறாள். மாமனார், "மகளே, இவ்வளவு கடுமையான விரதம் சாத்தியமா?" என்று வினவ "மனத்தில் உறுதி பூண்டால் எதுவும் சாத்தியமாகும்" என்று கூறி மாமனார் சம்மததுடன் விரதம் தொடங்குகிறாள்.

சத்யவானின் இறப்பு விதிக்கப்பட்ட நாள் காலையில் சத்யவானுடன் தானும் காட்டுக்குச் செல்ல சாவித்திரி மாமனாரிடம் அனுமதி கேட்கிறாள். ஆசிரமத்துக்கு வந்த நாளிலிருந்து தன்னிடம் கேட்ட முதல் வேண்டுகோளை மறுக்க முடியாமல் அவரும் அனுமதி அளிக்கிறார். காட்டில் விறகு வெட்டிக்கொண்டிருந்த சத்யவான் திடீரென்று பலவீனம் அடைந்து சாவித்திரியின் மடியில் தலை வைத்து சாய்கிறான். சத்யவானின் உயிரை எடுக்க யமதர்மராஜனே வருகிறான். சாவித்திரி பதிவிரதை ஆனதால் அவள் கண்களுக்குத் தெரிகிறான். சத்யவானின் உயிரை எடுத்துச்செல்லும் யமதர்மராஜனோடு சாவித்திரியும் உடன் செல்கிறாள். அவள் யமனுடன் உடன் செல்கையில் யமன் அவளைத் திரும்பிச்செல்ல வற்புறுத்துகிறான். அவள் செல்ல மறுத்து யமனுடன் அறிவு பூர்வமாக வாதம் செய்கிறாள். அவர்கள் இருவருக்கும் நடந்த உரையாடல் மிகப்பெரும் ஆன்மீக ரகசியங்களை உள்ளடக்கியது, முதலில் தர்மத்துக்கு அடிபணிதலின் முக்கியத்துவம், தர்மப்படி நடப்பவரோடு நட்பு, பிறகு யமதர்மராஜனின் தர்மத்தில் பிறழாத ஆட்சி, கடைசியில் எதையும் பதிலுக்கு எதிர்பார்க்காத மேன்மையான ஒழுக்கம் இவைபற்றி பேசுகிறாள். சாவித்திரியுடைய சிறந்த வாக்கு வன்மையிலும், சொல் ஆட்சியிலும் பெரிதும் மகிழ்ந்த யமதர்மராஜன் சத்தியவானின் உயிரைத் தவிர வேறு வரங்களைக் கேட்கச் சொல்கிறான். அவளும் மாமனாரின் கண்பார்வை, இழந்த ராஜ்ஜியம், தன் தந்தைக்கு நூறு புத்திரர்கள், தனக்கும் சத்தியவானுக்கும் நூறு புத்திரர்கள் இவைகளைக் கேட்கிறாள்.

அவள் கேட்ட கடைசி வரம் யமனுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால் அவளுடைய அறிவுக்கூர்மை, மன உறுதி, மனத்தூய்மை, கணடு வியந்த யமன் இன்னும் ஒரு வரம் கேட்கச் சொன்னான். ஆனல் இம்முறை 'சத்தியவான் உயிரைத்தவிர' என்று கூறவில்லை. அதைப் பயன்படுத்திக்கொண்ட சாவித்திரி தன் கணவனின் உயிரை கேட்கிறாள். யமதர்மராஜனும் அவ்வரத்தை அருளி சாவித்திரிக்கு நித்தியானந்தவாழ்வு அருள்கிறான்.

சத்யவானும் தூக்கத்திலிருந்து விழித்தவன் போல் உயிர் பெற்று சாவித்திரியுடன் தன் பெற்றோரை நாடிச் செல்கிறான். அவர்கள் அங்கு செல்வதற்குள் த்யுமத்சேனன் கண்பார்வை பெற்றுவிடுகிறான். சத்தியவானுக்கு நடந்தது ஒன்றும் தெரியாத நிலையில் சாவித்திரி தான் யமனுடன் வாதாடி சத்தியவான் உயிரை மீட்ட கதையைதன் மாமனார் மாமியாருக்கும் அங்கு குழுமியிருந்த முனிவர்களுக்கும் எடுத்துரைக்கிறாள். இத்தருணத்தில் த்யுமத்சேனனின் மந்திரிகள் அவனுடைய எதிரி அரசன் இறந்த செய்தியை மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார்கள். அரசனும் தன் சேனைகளுடன் ராஜ்ஜியத்துக்குத் திரும்புகிறான். சாவித்திரி தன் கணவன் உயிரைத் திரும்பத் தந்த யமனை யமாஷ்டகத்தால் போற்றுகிறாள். தன் பொறுமை, கடமை, அறிவுக்கூர்மை, தவ வலிமையால் காலனையும் வென்ற சாவித்திரி நோற்ற நோன்புதான் காமாக்ஷி தேவியைப் போற்றும் காரடையான் நோன்பு.

காரடையான் நோன்பு: சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவனின் நீண்ட ஆயுள் ஆரோக்கியம் வேண்டி நோற்கும் நோன்பு காரடையான் நோன்பு. மாசி மாதமும் பங்குனி மாதமும் கூடும் நேரத்தில் இதை நோற்க வேண்டும். காலை முதல் விரதம் துவங்கி நியமமாக இருக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் ஸ்வாமியிடத்தில் விளக்கேற்றி வீட்டில் உள்ள பெண்குழந்தைகள், சுமங்கலிகள் ஆகியோருக்கு ஒருவருக்கு ஒரு நுனி இலை வீதம், கோலத்தின் மீது, நுனி வடக்கு நோக்கி இருக்குமாறு அதில் நுனியில் வெற்றிலை பாக்கு, தேங்காய், பழம், பூ, பசுமஞ்சள் கட்டிய மஞ்சள் சரடு வைக்கவேண்டும். தேவிக்கென்று ஒரு இலை போடவேண்டும். இலையின் நடுவில் இனிப்பு காரடை, உப்பு காரடை, வெண்ணெய் வைக்கவேண்டும். காமாக்ஷி, சாவித்திரி தேவிகளை மனதில் நினைத்து வணங்கி, "உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் கொடுத்தேன், ஒருகாலும் என் கணவன் பிரியாம இருக்கணும்." என்று கூறி கையில் நீர் எடுத்து மூன்று முறை இலையை சுற்றி நைவேத்தியம் செய்து, கற்பூரம் காட்டி, நமஸ்கரித்து,

தோரம் கிருஷ்ணாமி சுபகே ஸஹாரித்ரம் தராமி அஹம்!பர்த்து:ஆயுஷ்ய ஸித்யர்த்தம் ஸுப்ரீதாபவ ஸர்வதா.

என்று இந்த ஸ்லோகத்தை சொல்லி வணங்கி பின் மஞ்சள் சரட்டைக் கழுத்தில் கட்டிக்கொள்ளவேண்டும். மஞ்சள் சரட்டில் பூவும், துளையிட்ட பச்சை மஞ்சளும் கோர்த்து கட்ட வேண்டும். இதில் ஒரு மஞ்சள் சரட்டை அம்மன் படத்துக்கு சாற்றவேண்டும். வீட்டில் இருக்கும் மூத்த பெண்மணிகள் சிறியவர்களுக்குக் கட்டிவிடவேண்டும். சுமங்கலிப் பெண்கள் தங்கள் இலையிலிருந்து இரண்டு அடைகளை தன் கணவருக்கும், இரண்டு அடைகளை பசுமாட்டுக்கும் எடுத்துவைக்க வேண்டும். மறு நாள் காலை பசுமாட்டுக்கு அடைகளை கொடுக்கவேண்டும்.

இந்த நோன்பை மாசி மாதம் இருக்கும்போதே கட்டிக்கொள்வது நல்லது. 'மாசிக்கயிறு பாசி படரும்' என்று சொல் வழக்குண்டு. மேலும் எந்த ஒரு விரதத்துக்கும் மோர் ஏற்றதல்ல என்றபோதிலும் இந்த காரடையான் நோன்பன்று கண்டிப்பாக மோர், தயிர் சாப்பிடக்கூடாது. 'ஏழையர் நோன்பை மோழையர் கெடுத்தாளாம்' என்ற சொல் வழக்கும் உண்டு.

காலனையும் வெல்லும் சமயோசித புத்தியுடனும் அறிவுக்கூர்மையுடனும் அஞ்சாநெஞ்சம் படைத்த பெண்கள் புராண காலத்தில் இருந்தார்கள் என்று சத்யவான் சாவித்திரி கதையிலிருந்து தெரிகிறது. இக்காலத்தில் கொண்டாடப்படும் உலக மகளிர் தினம் போல் நமது பாரம்பரியத்திலும் இவ்வாறு பெண்மையைப் போற்றும் தினங்கள் ஆன்மீகம் கலந்து பண்டிகைகளாகவும், நோன்புகளாகவும் கொண்டாடப்பட்டன.

அசுவபதியின் அருந்தவப்புதல்வி

மத்ர நாட்டில் உதித்த மாணிக்கம்

கரம் பிடித்த கணவனுக்காக காலனையே

வென்ற கற்புக்கரசி, பிறந்தகத்திற்கும், புகுந்தகத்திற்கும்

பெருமை சேர்த்த புண்ணியவதி

சத்தியவானின் சரித்திர நாயகி

அவள் நோற்ற நோன்பு நாம் போற்றவேண்டிய ஒன்று.

மங்களே மங்களாதாரே மாங்கல்யே மங்களப்ரதே

மங்களார்த்தம் மங்களேசி மாங்கல்யம் தேஹிமே சதா!!

கும்பகோணம் ஸ்ரீமதி அன்னபூரணி அவர்கள் காரடை நோன்பு அனுஷ்டிக்கும் முறையையும் காரடை நோன்பின் நைவேத்தியமான காரடை செய்யும் முறையையும் இந்தக் காணொளியில் விளக்குகிறார்.

333 views0 comments
bottom of page