top of page

கழற்சிங்கர் குருபூஜை

கோவில் சொத்தை இன்று எப்படி யெல்லாமோ பயன்படுத்துகின்றனர். ஆனால், சில நூற்றாண்டுகளுக்கு முன், கோவிலில் பூத்த பூ கூட, கடவுளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டது. மற்றவர்கள் அதை தொட்டால் கூட, கொடிய தண்டனை விதிக்கப்பட்டது. பல்லவ நாட்டை ஆட்சி செய்தவர், கழற்சிங்கர். இவர் சிறந்த சிவபக்தர்; நீதிமான்; திருவாரூர் தியாகராஜப் பெருமான் மீது மிகுந்த பக்தி கொண்டவர். ஒருமுறை, தன் பட்டத்து ராணியுடன், திருவாரூர் வந்தார். அங்கே புற்றிடங்கொண்ட பெருமான் சன்னிதியில். பெருமானை வணங்கி, பிரகாரத்தை வலம் வந்தார், கழற்சிங்கர். சற்று முன்னதாகவே, ஏவலர்கள், தாதியர் புடைசூழ பிரகாரத்திற்குள் நடந்து சென்றாள், ராணி. அப்போது, ஓரிடத்தில், இறை சிந்தனையுடன், 'நமசிவாய' எனும் மந்திரத்தை சொல்லியபடி, இறைவனுக்கு மாலை தொடுத்துக் கொண்டிருந்தனர், சிவனடியார்கள். அந்த பூக்களின் நறுமணம் ராணியைக் கவர, அவர்கள் முன், கொட்டிக் கிடந்த பூக்களில் ஒன்றை எடுத்து முகர்ந்து பார்த்தாள்; இது கண்டு முகம் சுளித்தனர், சிவனடியார்கள். அப்போது, வேகமாக எழுந்த ஒரு சிவனடியார், 'ராணி என்ற ஆணவத்தில், சிவனுக்கு சூட்டும் பூவை முகர்ந்து, அபச்சாரம் செய்து விட்டாயே...' என்று கத்தியபடியே, தன் கையில் இருந்த குறுவாளால் ராணியின் மூக்கை அறுத்து விட்டார். 'ஐயோ... பூவை முகர்ந்ததற்காக இப்படி செய்து விட்டாரே...' என்று கதறினாள் ராணி. இவ்விஷயம் சன்னிதானத்தில் நின்ற கழற்சிங்க மகாராஜாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அவர் பதைபதைப்புடன் ஓடி வந்தார். மூக்கை பிடித்தபடி, ரத்தம் ஒழுக, தரையில் அமர்ந்து அரற்றிய ராணியைப் பார்த்தார். 'இந்த கொடுமையை செய்த கொடியவன் யார்?' என்று கர்ஜித்தார், கழற்சிங்கர். 'மகாராஜா... இந்தச் செயலைச் செய்தவன் நான் தான்; என் பெயர் செருத்துணையார்...' என்றார், ராணியின் மூக்கை அறுத்தவர். பக்திப்பழமாக நின்ற செருத்துணையாரைக் கண்ட கழற்சிங்கருக்கு, 'இந்த அடியவர் ராணிக்கு துன்பம் செய்துள்ளார் என்றால், ஏதோ காரணம் இருக்க வேண்டும்...' என்று நினைத்து, 'ஏன் இப்படி செய்தீர்?' என்று கேட்டார். 'மகாராஜா... இந்தப் பூக்கள் திருவாரூர் ஈசனுக்கு உரியவை. இதை, இவர் எடுத்து முகர்ந்து அபச்சாரம் செய்தார்; எனவே தான் மூக்கை வெட்டினேன். தவறு என்றால், எனக்கு என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள்...' என்றார். 'தவறு தான் செய்து விட்டீர் செருத்துணையாரே... இவள் மூக்கை மட்டும் அரிந்தது பெரிய தவறு; கையையும் அல்லவா வெட்டியிருக்க வேண்டும்...' என்றவர், வாளை எடுத்து, அவளது கையையும் வெட்டி விட்டார். அப்போது, வானத்தில் சிவ, பார்வதி காட்சி அளித்து, 'என் தீவிர பக்தர்களான உங்கள் இருவரின் பெருமையை வெளிக்கொணரவே இத்தகைய நாடகத்தை நடத்தினேன். இருவரும் என் திருவடி நிழலில் கலந்து, பிறவாநிலை பெறுவீர்கள்...' என்று வாழ்த்தினர். கழற்சிங்கரும், செருத்துணையாரும் நாயன்மார் அந்தஸ்து பெற்றனர். கழற்சிங்கரின் குருபூஜை, வைகாசி பரணி நட்சத்திரத்தில் நடைபெறும். அவரின் குருபூஜையை முன்னிட்டு, கோவில் சொத்துக்களுக்குரிய குத்தகையைக் கொடுக்காதவர்களுக்கு, கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கும் வகையில், சட்டம் கொண்டு வர வேண்டும்.

source:Re-posting it from Amritha Vahini Google group.

Courtesy

dinamalar- தி.செல்லப்பா

83 views0 comments

Recent Posts

See All
bottom of page