தஞ்சை மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு கிராமமுமே பெருமை வாய்ந்த பாரம்பரியத்தைக் கொண்டது. அது ஓர் கோவிலாகவோ, பஜனை ஸம்ப்ரதாயமாகவோ, அரிய கலையாகவோ, சிற்பக் கலையழகாகவோ இருக்கலாம். உமையாள்புரத்தின் பெருமை வாய்ந்த பாரம்பரியத்தின் ஒரு முக்கிய அம்சம், உமையாள்புரத்தின் வடக்கு அக்ரஹாரத்தின் கிழக்குக்கோடியில் உள்ள ஸ்ரீ ராம மந்திரம் என்ற பஜனை மடம்.
இது சுமார் 130 ஆண்டுகளுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது என்று இக்கிராமத்தின் பெரியோர்கள் வாயிலாக அறிகிறோம். ஆரம்ப காலத்தில் கீற்றுக்கொட்டகையில் இருந்தபொழுது சத்குரு ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமிகளின் நேர் சிஷ்யர்களான உமையாள்புரம் ஸ்ரீ கிருஷ்ண பாகவதர், ஸ்ரீ சுந்தர பாகவதர் சகோதரர்களால் பஜனை நிகழ்த்தப்பட்டதாகவும், பின்பு 1923-ல் ஸ்ரீ காசி வைத்யநாத அய்யர் அவர்களால் ஒரு மண்டபம் நிர்மாணிக்கப்பட்டு முறையாக பூஜைகள், ஆராதனைகள், கிராமவாசிகளாலும், மேற்கூறிய பக்தர்களின் பரம்பரை உறவினர்களாலும், இன்றுவரை நடைபெற்று வருகின்றன. ஸ்ரீ ராம நவமி, கோகுலாஷ்டமி போன்ற உத்ஸவங்கள் பத்து நாட்கள் நடை பெற்று வந்தன. அச்சமயம் அக்காலத்து பிரபல சங்கீத வித்வான்களும், பாகவதர்களும், சங்கீத உபன்யாசகர்களும், கலந்துகொண்டு உத்ஸவங்களைச் சிறப்பித்து வந்தனர். பிறகு வைத்யநாத ஐயர் குமாரர் கிருஷ்ணஸ்வாமி ஐயர் காலத்திலும் சிறப்பாக உத்ஸவங்கள் நடந்தன. அதன் பின்பு 1950 முதல் சிறந்த பாகவதர்களைக் கொண்டு ராதாகல்யாண, சீதாராம கல்யாண மஹோத்ஸவங்கள் மிகச்சிறப்பாக நடைபெற்று வந்தன. திருவிடைமருதூர் வெங்கட்ராம பாகவதர், கும்பகோணம் பாலு பாகவதர், மாயூரம் கிருஷ்ணமூர்த்தி பாகவதர், ஸ்ரீவாஞ்சியம் ராமச்சந்திர பாகவதர் போன்ற பாகவதோத்தமர்கள் இவைகளில் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
2004-ம் வருடம் இந்த பஜனை மடம் கிருஷ்ணஸ்வாமி அய்யர் குமாரர் ஸ்ரீ பலராமன் அவர்களால் புதுப்பிக்கப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருகிறது. சுமார் 20 வருடங்களாக ஸ்ரீ இ.கே. ஸ்ரீனிவாச பாகவதர் கோஷ்டியினரால் வருடா வருடம் சீதாராம கல்யாணம் வெகு விமரிசையாக நான்கு நாட்கள் நடைபெற்று வருகிறது. முதல் நாள் உமையாள்புரம் சகோதரர்கள் ஸ்ரீ கிருஷ்ண பாகவதர், ஸ்ரீஸுந்தர பாகவதர் இவர்களின் நினைவு நாளாக ஸ்ரீ சிவராமன் அவர்களின் முயற்சியில் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பிரபல இசை வல்லுநர்களின் இசைக் கச்சேரி நடைபெற்று வருகிறது.
ஆதாரம்: 2009-ல் வெளியிட்ட கும்பாபிஷேக மலர்.
இக்கிராமத்தில் 65 வருடங்களாக வசித்து வரும் ஸ்ரீமதி சரஸ்வதி பட்டாபிராமன், உமையாள்புர பஜனை ஸம்ப்ரதாயத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு அதை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் தொண்டை புரிந்துவருகிறார். இந்த வருடமும் சீதா ராம கல்யாணம் உடையாளூர் ப்ரம்மஸ்ரீ கல்யாணராம பாகவதரின் திவ்ய நாம சங்கீர்த்தனம் சிறப்பாக நடைபெற்றது. 9-7-2016 அன்று மாலை ப்ரம்மஸ்ரீ K.கல்யாணராம பாகவதர் அவர்கள் கும்பகோணம் சாஸ்த்ரா பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றதற்காக பாராட்டு விழாவும் நடைபெற்றது.
Courtesy: Smt. Malathi Jayaraman, Kumbakonam