top of page

திருக்குடந்தை ஸ்ரீபகவத் விநாயகர்

"அன்ய க்ஷேத்ரே க்ருதம் பாபம் புண்ய க்ஷேத்ரே வினஸ்யதி

புண்ய க்ஷேத்ரே க்ருதம் பாபம் வாரணாஸ்யாம் வினஸ்யதி

வாரணாஸ்யாம் க்ருதம் பாபம் கும்பகோணே வினஸ்யதி

கும்பகோணே க்ருதம் பாபம் கும்பகோணே வினஸ்யதி."

என்று பவிஷ்யோத்தர புராணத்தின் கூற்றை நிரூபணம் செய்யும் வகையில் திருக்குடந்தை மடத்துத் தெருவில் ஸ்ரீ பகவத் விநாயகராக கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார்.

நெடு நாட்களுக்கு முன் இந்த விநாயகர் காவிரிக்கரையில் அரச மரத்தடியில்தான் அமர்ந்திருந்தாராம். பின்னாட்களில் காவிரி குறுகியதால் தற்சமயம் பகவத் படித்துறை தனியாகவும் விநாயகர் ஆலயம் தனியாகவும் உள்ளது.

வேதாரண்யத்தைச் சேர்ந்த பகவத் முனிவரின் அன்னை நீண்ட காலமாக நோய்வாய்ப்படிருந்தார். இறக்கும் தறுவாயில் தன் மகனிடம், "நான் இறந்த பிறகு என் அஸ்தியை ஒரு கலசத்தில் வைத்து புனிதத் தலங்களுக்கு எடுத்துச் செல்வாயாக! எங்கே என்னுடைய அஸ்தி மலர்களாக மாறுகிறதோ அத்தலத்தில் ஓடும் நதியில் அதைக் கரைத்துவிடு என்று தன் கடைசி விருப்பத்தைக் கூறுகிறார்.

அன்னையின் மறைவுக்குப்பின், அவர் கூறியபடியே அஸ்தியைக் கலசத்தில் எடுத்துக்கொண்டு ஒரு சீடருடன் காசியில்தான் அஸ்தி மலர்களாக மாறும் என்று நினைத்தபடி தன் யாத்திரையைத் தொடங்குகிறார். வேதாரண்யத்திலிருந்து கிளம்பிய அவர் பல திருத்தலங்களைத் தரிசித்துக்கொண்டு திருக்குடந்தை வந்தடைந்ததும் காவிரியில் நீராட எண்ணி அஸ்திக் கலசத்தை கரையில் இருந்த விநாயகர் சிலைக்கு அண்மையில் வைத்துவிட்டுச் சென்றார்.

அவர் அகன்றதும் சீடர் பானையைத் திறந்து பார்க்க அதில் மலர்கள் நிரம்பியிருந்தன. சீடர் குரு பானையைத் திறந்து பார்த்ததற்குத் தன்னைக் கடிந்துகொள்வாரோ எனப் பயந்து அதைத் திரும்ப மூடிவைத்துவிட்டார். குருநாதரும் தன் பூஜைகளை முடித்துக்கொண்டு குடந்தையிலிருந்து புறப்பட்டு வழியில் உள்ள திருத்தலங்களைத் தரிசித்துக்கொண்டு, காசியை நோக்கிச் செல்கிறார்.

காசியில் அஸ்திக் கலசத்தைத் திறந்து பார்க்க அதில் அஸ்தியே இருந்தது. குருவின் மன வருத்ததத்தை உணர்ந்த சீடர் தன் குருவிடம் தான் குடந்தையில் கலசத்தில் மலர்களைப் பார்த்ததைக் கூறி அப்பொழுதே உண்மை உரைக்காததற்கு மன்னிப்பு கோருகிறார்.

பிறகு அவர்கள் குடந்தையை நோக்கிப் பயணிக்கின்றனர். திருக்குடந்தையில் விநாயகர் சந்நிதியில் கலசத்தை வைத்து மனமுருக வேண்டி கலசத்தைத் திறந்து பார்த்தவர் அதில் மலர்களைப் பார்த்து மகிழ்ந்தார். காசிக்கு வீசம் அதிகமான க்ஷேத்திரம் குடந்தை என்பதை உணர்ந்து, காவிரியில் அஸ்தியைக் கரைத்து தனது அன்னைக்கு கிரியைகளைச் செய்தார்.

அதன் பின்னர் அங்கேயே தங்கி விநாயகருக்குக் கோவில் கட்டி பூஜைகள் செய்து வழிபட்டார். ஸ்ரீபகவர் வழிபட்டதால் இந்தப் பிள்ளையாருக்கு பகவத் விநாயகர் என்றும் படித்துறைக்கு பகவத் படித்துறை என்றும் பெயர் வந்தது

Annaji Rao Image

தஞ்சை மன்னர் சகாஜி காலத்தில் அவருடைய தலைமை அமைச்சரான அண்ணாஜி ராவ் பண்டிதர் நிர்வாகத்தின்போது கோணப்படுகை தொண்டைமான் என்பவரால் 1692ல் திருப்பணி செய்யப்படுகிறது

1952இல் காஞ்சி சங்கரமடத்துக்குச் சொந்தமான சந்திரமௌலீஸ்வரன் என்ற யானை திருவிசநல்லூரில் இறந்ததும் அதன் தந்தங்களை, காஞ்சி பெரியவர் ஸ்ரீபகவத் விநாயகருக்கு சமர்ப்பித்து வழிபட்டார். மேலும் அவர் குடந்தை வரும்போதெல்லாம் இந்தக் கோவிலுக்கு வந்து விநாயகரை வழிபட்டுச் செல்வார். சங்கடஹரசதுர்த்தி, விநாயக சதுர்த்தி ஆகிய நாட்களில் அந்த தந்தங்களைக் கொண்டு அலங்கரிப்பர். சங்கடஹரசதுர்த்தியில் தங்கக்காப்பில் விநாயகர் அருள் பாலிப்பது கண் கொள்ளாக் காட்சி. விநாயக சதுர்த்திக்கு பத்து நாட்கள் உத்சவம் மிகச்சிறப்பாக நடைபெறும்.

நவக்கிரகங்களையும் தன்னிடத்தே கொண்டுள்ளதால் இவர் நவக்கிரக தோஷங்களை நீக்குபவராகத் திகழ்கிறார். திருக்குடந்தையில் அருள் பாலிக்கும் ஸ்ரீபகவத் விநாயகரை வணங்கி அருள் பெறுவோம்.

இங்கு சந்நிதிக்கு வெளியே ஸ்ரீபகவருக்கும் ஸ்ரீஅண்ணாஜி ராவுக்கும் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அண்மையில் இக்கோயிலுக்கு 26-10-2015இல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மிகச்சிறு வயதிலிருந்தே இக்கோவிலில் பூஜை செய்துவரும் ஸ்ரீ சுரேஷ் குருக்கள் அவர்களுடன் ஒரு நேர் காணல்

Courtesy:

Smt. Malathi Jayaraman, Kumbakonam

194 views0 comments
bottom of page