சிவபெருமானுக்குரிய விரத நாட்களுள் பிரதோஷம், சோமவாரம், சிவராத்திரி ஆகியவை மிகவும் முக்கியமானவை. அவற்றுள் சிவராத்திரி விரதம் சதுர்தசி திதியில் அனுசரிக்கப்படுகிறது.
மாதம் தோறும் வரும் தேய் பிறை சதுர்தசியை மாத சிவராத்திரி என்றும் அதுவே மாசி மாதத்தில் வந்தால் மகா சிவராத்திரி என்றும் வழங்கப்படும். துலா மாதம் எனப்படும் தேய்பிறை சதுர்தசி , தீப ஒளித் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. ஸ்வயம் ஜோதியாக விளங்கும் பெருமானுக்குத் தீபம் ஏற்றி வழிபடும் திருநாள் தீபாவளி என்று வாரியார் ஸ்வாமிகள் போன்ற பெரியோர்கள் கூறியுள்ளனர்.
துலாக் காவேரி மகாத்மியத்தில் காவிரியின் இருகரைகளிலும் உள்ள பல தலங்கள் குறிப்பிடப்பட்டிருந்தாலும், மயிலாடுதுறை எனப்படும் கௌரி மாயூரத்திற்கு மிகவும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அங்கு காவிரியில் உள்ள ரிஷபப் படித்துறைக்கு, உத்தர மாயூரத்திலிருந்து, ஸ்ரீ வதான்யேசுவரரும் ஞானாம்பிகையும் எழுந்தருளும்போது ஆற்றின் மறு கரையில் ஸ்ரீ மாயூர நாதரும் அபயாம்பிகையும் எழுந்தருளி, தீர்த்தவாரி நடைபெறுகிறது.
தீபாவளித் திருநாளைத் தொடரும் அமாவாசை அன்று, கைலாச வாகனத்தில் ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தியும் முதலை வாகனத்தில் கங்கா தேவியும் பஞ்சமூர்த்திகளுடன் காவிரிக்கு எழுந்தருளித் தீர்த்தவாரி அருளுகின்றனர். அதுவே கங்கா ஸ்நானம் ஆகிறது. கேதார கௌரி விரதம் மேற்கொள்ளும் புண்ணிய தினமாகவும் இது அமைகிறது.
வளர்பிறை சதுர்தசி திதியில் நடராஜப் பெருமானுக்குரிய அபிஷேகங்கள் (ஆறுக்குள் மூன்று , ஆவணி,புரட்டாசி,மாசி ஆகிய மாதங்களில்) நடைபெறுகின்றன.
சதுர்த்தசி நாயகனை தீபாவளித் திருநாளில் வழிபட்டு நலம் யாவும் பெறுவோமாக.