சூல விரதம்
சிவபெருமானின் அருள் பெறுவதற்காக மேற்கொள்ளப்படும் விரதங்களில், சோம வார விரதம், மகா பிரதோஷ விரதம்,கேதார கௌரி விரதம்,மகா சிவராத்திரி விரதம் போன்றவை அதிகமாக மேற்கொள்ளப் பட்டு வருபவை. அஷ்ட மகா விரதங்களில் ஒன்றான சூல விரதம் என்பதும் சிறந்த பலன்களைத் தர வல்லது. தை அமாவாசையன்று இவ்விரதம் மேற்கொள்ளப் படுகிறது. அன்றையதினம் விடியற்காலையில் துயில் எழுந்தவுடன் நீராடி, விபூதி ருத்திராக்ஷம் தரித்து, சிவபூஜை செய்து விட்டு, சிவாலயத்திற்குச் சென்று தரிசனம் செய்து, ஏழை-எளியவர்களுக்கு முடிந்த அளவில் தான தருமங்கள் செய்ய வேண்டும். ஒரு வேளை மட்டுமே உணவு மேற்கொள்ளுவது சிறப்பு. இவ்வாறு விரதம் மேற்கொள்பவர்கள், பகை , வியாதி ஆகியவை நீங்கப்பெற்று, விரும்பிய பலன்களை எல்லாம் பெறுவர் என்று புராணம் கூறுகிறது.
சூல விரதத்தன்று , சூல தேவரால் பூஜிக்கப்பெற்ற பெருமை வாய்ந்த சூல மங்கைக்குச் சென்று அங்குள்ள ஸ்ரீ அலங்கார வல்லி சமேத ஸ்ரீ க்ருத்திவாசேசுவரர் ஆலயத்தை வழிபட்டு அங்கு நடைபெறும் ரிஷப வாகனப் புறப்பாட்டைக் கண்டு களித்துத் தீர்த்தவாரியையும் தரிசிக்கலாம்.
ஆலய அமைப்பு
சூல மங்கை என்று தேவாரத்தில் குறிப்பிடப்படும் இத்தலம் , தற்போது சூல மங்கலம் என்று வழங்கப்படுகிறது. கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூர் செல்லும் வழியிலுள்ள ஐயம் பேட்டை என்ற ஊரிலிருந்து சுமார் 2 கி. மீ. தொலைவில் உள்ளது. ஐயம் பேட்டையிலிருந்து ஆட்டோ வசதி இருக்கிறது. மூன்று நிலை ராஜ கோபுர வாயிலுக்கு எதிரில் சூல தீர்த்தம் அமைந்துள்ளது.கோபுர வாயிலைக் கடந்தால் விசாலமான பிரகாரத்தை அடைகிறோம் நந்தி பலிபீடம் ஆகியவை முன்னால் அமைந்துள்ளன. அடுத்த வாயிலின் அருகில் சூல தேவர் காட்சி அளிக்கிறார். அவரது சிரத்தின் மீது திரிசூலம் காட்டப்பட்டிருக்கிறது.இருகைகளையும் சேர்த்துக் கோர்த்த வண்ணம் அருட்காட்சி வழங்குகிறார் இவர். பிராகாரத்தில் கணபதி,கந்தன்,கஜலக்ஷ்மி, சண்டிகேசுவரர் ஆகியோரது சன்னதிகள் உள்ளன. சுவாமி சன்னதி கிழக்கு நோக்கியும் அம்பிகை சன்னதி தெற்கு நோக்கியும் அமைந்துள்ளன.
தல மகிமை
இத்தலத்தில் சூல விரதத்தை அனுஷ்டித்த திருமாலானவர் நோய் நீங்கப்பெற்றும், காலநேமி என்ற அசுரனை வெல்லும் வலிமை பெற்றும், சிவனருள் பெற்றார். பரசுராமரும் இத்தலத்து இறைவனை வழிபட்டுக் கார்த்த வீர்யார்ஜுனனை வென்றார். பிரமனும் இங்கு வழிபட்டுத் தனது தீராத வாயிற்று வலி நீங்கப்பெற்றான். சுதன்மன் என்பவன் இவ்விரத மகிமையால், மரணத்தை வென்றான். மேகாங்கன் என்ற மன்னன் கல்வி அறிவில் சிறந்த மக்களைப் பெற்றெடுத்தான். முடிவில் சிவலோகத்தை அடையும் பேறு பெற்றான்.
தை அமாவாசையன்று இங்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் சுவாமி அம்பாளுக்கும் சூல தேவருக்கும் நடைபெறுகின்றன. பிறகு, ரிஷப வாகனத்தில் சுவாமி அம்பாள் புறப்பாடு நடைபெறுகிறது. வீதி வலம் வந்த பின்னர் தீர்த்தவாரி நடைபெறுகிறது. வெளியூர் அன்பரின் பெருமுயற்சியாலும் அயராத சிவபக்தியாலும் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டு வருவது அனைவராலும் போற்றப்பட வேண்டியது ஆகும். இவ்வளவு தூரம் முன்வந்து விழாவினை நடத்துபவருக்கு உறுதுணையாக இனி வரும் ஆண்டுகளில் உள்ளூர் மக்களும் , இந்து அறநிலையத்துறையும் ஒத்துழைத்து பஞ்ச மூர்த்திகளையும் புறப்பாடு செய்ய வேண்டும் என்பது பல அன்பர்களின் விருப்பமும் வேண்டுகோளும் ஆகும். தஞ்சை,குடந்தை அன்பர்களும் முன்வந்து இவ்விழாவைக் கோலாகலமாக நடைபெறச் செய்யலாம் அல்லவா?
ஆலய வழிபாடு என்பது ஆண்டுக்கு ஒருமுறை விழா நடத்துவதோடு முடிவது அல்ல. நித்தியபூஜைகளும் வழிபாடுகளும் சிறப்பாகவும் நியமத்தோடும் ஆலயத்தில் நடைபெறச் செய்வது அதை விட முக்கியம். இதில் உள்ளூர் மக்களின் ஆர்வமும், பக்தியும்,ஒத்துழைப்பும் மிகவும் தேவைப்படுகிறது. இது இல்லாமல் போகும் பட்சத்தில் தான் ஒருகால பூஜைக்குத் தள்ளப்படும் அவலநிலை ஏற்படுகிறது. பூஜா காலங்களில் கோயில் பூட்டப்பட்டுக் கிடக்கலாமா என்று கிராம மக்கள் சிந்திக்க வேண்டும். எனவே தகுந்த சிவாச்சாரியார்களைக் கொண்டு தங்கள் கிராமத்தில் ஆலய பூஜைகளைத் தினந்தோறும் , காலம் தோறும் நடைபெறச் செய்ய வேண்டிய கடமை உள்ளூர் வாசிகளுக்கு நிச்சயம் உண்டு. அதேபோல் வெளியூர் அன்பர்களும் அவகாசம் கிடைக்கும் போதெல்லாம் இது போன்ற கோயில்களுக்குச சென்று தங்களாலான உதவிகளைச் செய்ய வேண்டும். அந்த எண்ணம் எல்லோரது மனதிலும் உண்டாக வேண்டும் என்று கிருத்திவாசேசுவரப் பெருமானைப் பிரார்த்திக்கிறோம்.
திரு சேகர் வெங்கட்ராமன்,
சென்னை.