top of page

அமாவாசை அற்புதம்…

திருக்கடவூரில் அந்தணர் மரபில் தோன்றியவர் அபிராமி பட்டர். இவர் அன்னை அபிராமி மீது மிகுந்தபக்தி கொண்டு எந்நேரமும் அன்னையைத் தியானித்துவந்தார்.

ஆனால், ஊராரில் பலர் இவர் ஒரு பித்தர் என்று நினைத்து ஏளனம் செய்வர். ஆனால் அதைப்பற்றி எவ்வித கோபமும் கொள்ளாமல் தம்முடைய கடமை அபிராமியை போற்றி வணக்குவதுதான் என்று கொள்கையை கொண்டிருந்தார். அவர் அன்னை அபிராமி மீதும் அமிர்தகடேஸ்வரர் மீதும் பாடல்களை இயற்றி சன்னதியில் பாடி வரலானார்.

ஒரு தை அமாவாசை தினத்தன்று தஞ்சையை ஆண்ட சரபோஜி மகராஜா பூம்புகார் சங்கமுகத்தில் நீராடிவிட்டு, திருக் கடையூர் ஆலயம் வந்தார். கோயிலில் இருந்த அனைவரும் சரபோஜி மன்னனுக்கு மரியாதை செலுத்தினர். அபிராமி சன்னிதியில் அமர்ந்து அன்னையின் வடிவழகில் ஆழ்ந்திருந்தார், அபிராமி பட்டர்.

மன்னர் அவரின் நிலையை அறிய அவரிடம், ‘இன்று என்ன திதி?’ என கேட்டார்… உலக சிந்தனை சிறிதும் இல்லாத அபிராமி பட்டர் தன் மனதில் அபிராமியின் முழுமதி திருமுகம் தெரிய ‘பவுர்ணமி’ என்று பதிலளித்தார். ஆனால், அன்றோ அமாவாசை! கோபமுற்ற மன்னன், இன்று பவுர்ணமி நிலவை காட்ட முடியுமா என்று கேட்க…

அதற்கு பட்டர் முடியும் என்றார்.

இதனால் மேலும் கோபம் கொண்ட மன்னன், ‘இன்று இரவு நிலவு வானில் உதிக்காவிட்டால் உமக்கு சிரச்சேதம்தான்’ என்று கூறி சென்றுவிட்டார்.

சூரியன் மறைந்தது… அமாவாசை ஆதலால் வானில் நிலவும் இல்லை. உடனே அபிராமி பட்டர் கோவிலுக்குள் ஒரு குழி வெட்டி, அதில் தீ மூட்டினார். அதன்மேல் ஒரு விட்டத்தில் இருந்து 100 ஆரம் கொண்ட ஓர் உறியை கட்டி தொங்கவிட்டு அதன்மேல் ஏறி நின்று அபிராமி அன்னையை வேண்டி துதித்தார்.

‘இன்று நிலவு வானில் வராவிடில் உயிர் துறப்பேன்’ என்று சபதம் செய்தார். பின்பு, ‘‘உதிக்கின்ற செங்கதிர்’’ எனத்தொடங்கும் ‘‘அபிராமி அந்தாதி’’ பாடத்தொடங்கினார். ஒவ்வொரு பாடலும் முடியும்போதும் உறியின் ஒவ்வொரு கயிற்றை அறுத்து கொண்டே வந்தார். அப்போது 79–வது பாடலாக ‘‘விழிக்கே அருளுண்டு’’ எனத்தொடங்கும் பாடலை பாடி முடித்தார்.

உடனே அபிராமி பட்டருக்கு காட்சி கொடுத்த அன்னை அபிராமி, தனது தாடங்கம் (தோடு) ஒன்றை கழற்றி வானில் வீச… அது பல கோடி நிலவின் ஒளியை வெளிச்சமிட்டது. அமாவாசை அன்று வானில் நிலவு வந்தது.

‘‘தொடங்கிய அந்தாதியை தொடர்ந்து பாடுக’’ என அபிராமி அன்னை பட்டரிடம் கூற, பட்டரும் ‘‘ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை’’ என தொடர்ந்து 100 பாடல்கள் வரை பாடி அபிராமி அந்தாதியை நிறைவு செய்தார்.

மன்னரும், மக்களும் பட்டரை பணிந்தனர். பட்டருக்கு மன்னன் நிலபுலன்கள் பல அளித்தான். அதற்கான உரிமை செப்பு பட்டயம் பட்டர் சந்ததியினரிடம் இன்றும் இருக்கிறது.

ஒவ்வொரு தை அமாவாசை அன்று திருக்கடையூரில் அபிராமி பட்டர் விழா நடக்கும்.. அன்றைய தினம் அபிராமி, தன் தோட்டினை ஆகாயத்தில் வீசி பவுர்ணமி உண்டாக்கிய நிகழ்ச்சியை பெருவிழாவாக நடத்துகிறார்கள்…

அபிராமி அந்தாதி 100 பாடல்களுக்கும் ஒவ்வொரு பலன் சொல்லப்பட்டுள்ளது.

அதன் விபரம் வருமாறு:-

1. ஞானமும் நல் வித்தையும் பெறுவார்கள். 2. பிரிந்தவர் ஒன்று சேருவார்கள். 3. குடும்பக் கவலையிலிருந்து விடுபடுவார்கள். 4. உயர்பதவிகளை அடையலாம். 5. மனக்கவலை தீரும். 6. மந்திர சித்தி பெறலாம். 7. மலை யென வருந்துன்பம் பனியென நீங்கும். 8. பற்றுகள் நீங்கி பக்தி பெருகும். 9. அனைத்தும் கிடைக்கும். 10. மோட்ச சாதனம் பெறலாம். 11. இல்வாழ்க்கையில் இன்பம் பெறுவார்கள். 12. தியானத்தில் நிலை பெறுவார்கள். 13. வைராக்கிய நிலை அடைவார்கள். 14. தலைமை பெறுவார்கள். 15. பெருஞ்செல்வமும் பேரின்பமும் பெறுவார்கள். 16. முக்காலமும் உணரும் திறன் உண்டாகும். 17. கன்னிகைக்கு நல்ல வரன் அமையலாம். 18. மரணபயம் நீங்கும். 19. பேரின்ப நிலையை அடையலாம். 20. வீடு வாசல் முதலிய செல்வங்கள் உண்டாகும். 21. அம்பிகையை வழிபடாமல் இருந்த பாவம் நீங்கும். 22. இனிப்பிறவா நெறி அடையலாம். 23. எப்போதும் மகிழ்சியாய் இருக்கும். 24. நோய்கள் விலகும். 25. நினைத்த காரியம் நிறைவேறும். 26. செல்வாக்கும் சொல்வாக்கும் பெருகும். 27. மனநோய் அகலும். 28. இம்மை மறுமை இன்பங்கள் அடையலாம். 29. எல்லா சித்திகளும் அடையலாம். 30. விபத்து ஏற்படாமல் இருக்கும். 31. மறுமையில் இன்பம் உண்டாகும். 32. துர் மரணம் வராமலிருக்கும். 33. இறக்கும் நிலையிலும் அம்பிகை நினைவோடு இருக்கும். 34. சிறந்த நன்செய் நிலங்கள் கிடைக்கும். 35. திருமணம் நிறைவேறும். 36. பழைய வினைகள் வலிமை அழியும். 37. நவமணிகளைப் பெறுவார்கள். 38. வேண்டியதை வேண்டியவாறு அடைவார்கள். 39. கருவிகளைக் கையாளும் வலிமை பெறலாம். 40. பூர்வ புண்ணியம் பலன்தரும். 41. நல்லடியார் நட்புப்பெறும். 42. உலகினை வசப்படுத்தும். 43. தீமைகள் ஒழியும். 44. பிரிவுணர்ச்சி அகலும். 45. உலகோர் பழியிலிருந்து விடுபடுவார்கள். 46. நல்நடத்தையோடு வாழ்வார்கள். 47. யோகநிலை அடைவார்கள். 48. உடல்பற்று நீங்கும். 49. மரணத்துன்பம் இல்லா திருக்கும். 50. அம்பிகையை நேரில் காண முடியும். 51. மோகம் நீங்கும். 52. பெருஞ் செல்வம் அடைவார்கள். 53. பொய்யுணர்வு நீங்கும். 54. கடன்தீரும். 55. மோன நிலை கிடைக்கும். 56. அனைவரையும் வசப்படுத்தலாம். 57. வறுமை ஒழியும். 58. மன அமைதி பெறலாம். 59. பிள்ளைகள் நல்லவர்களாக வளர்வார்கள். 60. மெய்யுணர்வு பெறலாம். 61. மாயையை வெல்லலாம். 62. எத்தகைய அச்சமும் வெல்லலாம். 63. அறிவுத் தெளிவோடு இருக்கலாம். 64. பக்தி பெருகும். 65. ஆண்மகப்பேறு அடையலாம். 66. கவிஞராகலாம். 67. பகை வர்கள் அழிவார்கள். 68. நில வீடு போன்ற செல்வங்கள் பெருகும். 69. சகல சவுபாக் கியங்களும் அடைவார்கள். 70. நுண்கலைகளில் வல்லமை பெறலாம். 71. மனக்குறைகள் தீரும். 72. பிறவிப்பிணி தீரும். 73. குழந்தைப்பேறு உண்டாகும். 74. தொழிலில் மேன்மை அடையலாம். 75. விதியை வெல்வார்கள். 76. தனக்கு உரிமையானதைப் பெறுவார்கள். 77. பகை அச்சம் நீங்கும். 78. சகல செல்வங்களை யும் அடைவார்கள். 79. அபிராமி அருள்பெறுவார்கள். 80. பெற்ற மகிழ்ச்சி நிலைக்கும். 81. நன்னடத்தை உண்டாகும். 82. மன ஒருமைப்பாடு அடையலாம். 83. ஏவலர் பலர் உண்டாகும். 84. சங்கடங்கள் தீரும். 85. துன்பங்கள் நீங்கும். 86. ஆயுத பயம் நீங்கும். 87. செயற்கரிய செய்து புகழ்பெறுவார்கள். 88. எப்போதும் அம்பிகை அருள்பெறலாம். 89. யோக சித்தி பெறலாம். 90. கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்கும். 91. அரசாங்கச் செயலில் வெற்றி பெறுவார்கள். 92. மனப்பக்குவம் உண்டாகும். 93. உள்ளத்தில் ஒளியுண்டாகும். 94. மனநிலை தூய்மையாக இருக்கும். 95. மன உறுதி பெறும். 96. எங்கு பெருமை பெறலாம். 97. புகழும் அறமும் வளரும். 98. வஞ்சகர் செயல்களி லிருந்து பாதுகாப்பு பெறலாம். 99. அருள் உணர்வு வளரும். 100. அம்பிகையை மனத்தில் காண முடியும்.

Abirami Anthadhi

Abirami Ammai Pathigam

Video Courtesy: Smt Malathi Jayaraman

Reposting it from Amritha Vahini google group

140 views0 comments
bottom of page