1970களில் ஆரம்பித்த வெண்மைப் புரட்சியின் காரணமாக வெளி நாட்டு மாட்டினங்களான ஹோல்ஸ்டைன் ஃப்ரீசியன் ஜெர்சி, பிரவுன் ஸ்விஸ் போன்றவை வளர்க்கப்பட்டன. நம் நாட்டு மாடுகளுடன் சேர்ந்த அவற்றின் கலப்பினங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் இவ்விரு வகை மாட்டினங்களிலுமே வெப்பத்தைத் தாங்கும் சக்தி, நோய் எதிர்ப்பாற்றல் ஆகியவை குறைந்து காணப்பட்டன. நமது நாட்டின் வெப்பத்தைத் தாங்கமுடியாததால் இவை மேய்ச்சலுக்கும் தகுதியில்லாதவை. நின்ற இடத்திலேயே தீவனம் கொடுப்பதால் தீவனச்செலவும் அதிகம். மேலும் கலப்பின மாடுகளின் இனப்பெருக்கத் திறனும் குறைவே.
இப்போது நம் நாட்டில் அதிகம் வளர்க்கப்படும் சில வெளிநாட்டு மாடுகளப்பற்றித் தெரிந்துகொள்வோம்.
ஹோல்ஸ்டைன் ஃப்ரீசியன்
நெதர்லாந்தின் வடபகுதிகளில், குறிப்பாக ஃப்ரீஸ்லாந்தில் அதிகம் காணப்படுகிறது, இந்த மாட்டினம் அதிக பால் தருவதால் இந்தியாவின் மலைப்பிரதேசங்களில் வளர்க்கப்பட்டவை. பெரிய உடலமைப்பையும், பெரிய பால் மடிகளையும் கொண்டவை. இவற்றின் உடல் கருப்பு மற்றும் வெள்ளை நிற திட்டுக்களுடன் காணப்படும். ஒரு நாளைக்கு 25 லிட்டர் பால் தரும். இதன் கலப்பின மாடுகள் 10, 15 லிட்டர் பால் தரும். இதன் பாலில் கொழுப்புச்சத்து குறைவாகக் காணப்படும். (3.45%)
ஜெர்சி.
இங்கிலாந்தின் ஜெர்சி தீவில் உருவான மாட்டினம். நம் நாட்டு தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றவை. வெளி நாட்டு மாடுகளிலேயே மிகவும் குட்டையானது. மிகவும் லேசான சாம்பல் நிறம், செம்பட்டை நிறம் அல்லது கருப்பு நிறத்தில் கூட இருக்கும். இம்மாடுகளின் முன் பகுதி தலை தட்டையாக இருக்கும். காளைகளுக்கும் பசுக்களுக்கும் உடல் பகுதிகளைவிட இடுப்பு, தலை, தோள் பகுதிகள் மிகவும் அடர்த்தியான நிறத்தில் இருக்கும். இவை நாள் ஒன்றுக்கு 20 லிட்டர் பால் தரக் கூடியவை.
இதன் கலப்பின மாடுகள் 8-10 லிட்டர் பால் தரும். இம்மாட்டினங்களின் பாலில் 5.3% கொழுப்பும், 15% சாச்சுரேடெட் இயற்கை கொழுப்பும் தரவல்லவை. நம் நாட்டில் காணப்படும் கலப்பின மாடுகளில் பெரும்பான்மையானவை இந்த ஜெர்சி இனத்தின் கலப்பின மாடுகளே. இந்தியாவின் வெப்பமான, ஈரப்பதம் மிகுந்த தட்ப வெப்ப நிலை இம்மாடுகளுக்கு பல வித உடல் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
ப்ரௌன் ஸ்விஸ்
ஸ்விட்சர்லாந்தின் மலைப்பகுதிகளில் உருவான இந்த இனப் பசுக்கள் பால் உற்பத்திக்குப் பெயர் பெற்றவை. சாஹிவால், சிவப்பு சிந்தி ஆகிய மாடுகளுடன் இவை கலப்பு செய்யப்பட்டு வட இந்தியாவில் கரண் ஸ்விஸ் என்ற பெயரில் இந்த மாடுகள் காணப்படுகின்றன.
நாட்டு மாடுகள்
இந்தியாவில் பாரம்பரியமாக பல்வேறு வகையான மாட்டினங்கள் இருந்தன.சிவப்பு சிந்தி, சாஹிவால், வாள் போன்ற கொம்புகளை உடைய அம்ரித் மஹால், குஜராத்தின் கிர் பசுக்கள், சிறிய உருவத்தைக் கொண்டுள்ள வேச்சூர் பசுக்கள், உறுதி வாய்ந்த நமது உம்பளச்சேரி மாடுகள் என்று பட்டியல் நீட்டிக்கொண்டே போகலாம். இவைகளின் பராமரிப்பு சுலபமாகவும், அதிக செலவில்லாமலும் இருந்தது. அதே நேரத்தில் மருத்துவ குணங்கள் நிறைந்த மிகவும் சத்தான பாலை அளித்து, நம் கிராமப்புறப் பொருளாதாரத்துக்கு முதுகெலும்பாக இருந்தன. கடந்த ஐந்து வருடங்களில் வெளி நாட்டு மாட்டினங்கள் 32% அதிகரித்துள்ள அதே சமயத்தில் நமது நாட்டு மாட்டினங்கள் 37% குறைந்து விட்டன.
இத்தகைய சிறப்பு வாய்ந்த நம் நாட்டு மாடுகளின் சில வகைகளைப்பற்றிக் காண்போம்.
கிர் பசுக்கள்
குஜராத்தின் கிர் பசுக்கள் ஜெர்சி பசுக்களுக்கு ஈடாக அதிகம் பால் கொடுக்கக் கூடியவை. அவை உடலின் உறுதியான கட்டமைப்புக்கும், மென்மையான சுபாவத்திற்கும் பெயர் பெற்றவை. இவை உருவத்தில் தனித்துவம் வாய்ந்தவை. குவிந்த முன் நெற்றியையும், குறுகிய முகத்தையும், பின் நோக்கி வளைந்து சுருளும் விநோதமான கொம்புகளையும் உடையவை. இதன் காதுகள் மிக நீளமாகவும் அகலமாகவும் சுருண்டு வளைவுடனும் இரு பக்கமும் தொங்கியும் இருக்கும். தனது சாட்டையை ஒத்த வாலால் பூச்சிகளை விரட்டி அடிக்கும் தன்மை கொண்டது. இந்த இனப் பசுக்கள், சிவப்பு, வெள்ளை, கறுப்பு போன்ற பல நிறங்களில் இருக்கும். பாலுக்கும் வேலைக்கும் பயன்படக் கூடியது. நாள் ஒன்றுக்கு 10-12 லிட்டர் பால் கொடுக்கும். இவைகளுக்கு மனிதர்களுடன் கூடி வாழப் பிடிக்கும். மனிதர்களின் அரவணைப்பில் மகிழ்ச்சி அடையும். நோய் எதிர்ப்பு சக்தியும், எளிதில் தொற்று வராத தன்மையும் கொண்ட இவ்வகைப் பசுக்களை தற்சமயம் இந்தியாவில் காண்பது அரிதாகப் போய்விட்டது. பிரேசில் நாடு, கிர் பசுக்களின் முதன்மையான ஏற்றுமதியாளராக உள்ளது.
வேச்சூர் பசுக்கள்
கேரளாவின் கோட்டயம் தாலுக்காவில் உள்ள வேச்சூர் என்ற ஊரில் உருவானவை. கால்நடை இனங்களிலேயே மிகச் சிறிய உருவமைப்பு கொண்டவை என கின்னஸ் பதிவு பெற்றது. மூர்த்தி சிறிதாக இருந்தாலும் கீர்த்தி பெரியது என்ற வழக்குச்சொல் படி இதன் உருவத்தையும் இதற்கு வேண்டிய தீவனத்தையும் கணக்கிடுகையில் அதிகமான பால் கறக்கக் கூடியது. கேரளாவில் 1960கள் வரை அதிகமாக வளர்க்கப்பட்ட இந்தப் பசுவினம் வெளி நாட்டு மாட்டினங்களுடன் கலப்பு செய்யப்பட்டதால் தற்சமயம் மிக அரிதாகி விட்டது. இதன் பால் மிகுந்த மருத்துவ குணங்கள் உடையது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதன் மிகச் சிறந்த மருத்துவ குணங்கள் பற்றி பின்னர் விரிவாகக் காண்போம். கால்நடை வளர்ப்பு, மரபியல் ஆய்வு பேராசிரியர் டாக்டர் சோசம்மா லைப் (Dr Sosamma Lype) என்பவர் தம் மாணவர்களுடன் சேர்ந்து இந்த இனத்தைப் பாதுகாக்க மிகவும் உதவியுள்ளார்.
அடுத்து நம் தஞ்சைத் தரணியின் செல்வமான, உன்னதமான உம்பளச்சேரி பசுவினத்தைப் பற்றிக் காண்போம்.
தொடரும்...
Article Source
http://saveindiancows.org/gir/
http://www.biodiversityofindia.org/index.php?title=Native_cow_varieties_of_India
http://tamil.thehindu.com/general/environment/%
Image Source
https://mahaperiyavaa.files.wordpress.com/2016/07/bala-periyava-gho-matha-1.jpg?w=700
http://gircowbreeders.com/uploads/1470661782_9.jpg
https://en.wikipedia.org/
https://www.google.co.in/imgres?imgurl=http://www.ansi.okstate.edu/breeds/cattle/brownswiss/images/
http://agritech.tnau.ac.in/expert_system/cattlebuffalo/Images/Content%20photos/jerseycross1.png
http://www.narwaldairyfarm.com/karan-swiss-cow/image.raw?type=orig&id=97
Thanks to Smt. Malathi Jayaraman, Kumbakonam.