top of page

நலம் நல்கும் நாட்டு மாடுகள் -பகுதி-3

உன்னதமான உம்பளச்சேரி மாடுகள்

'முத்து முத்தாய் நெல் விளைந்தாலும் உம்பளச்சேரி மோருக்கு சோறு கிடையாது' என்ற காளமேகப்புலவரின் பாடல் வரிகளிலிருந்து உம்பளச்சேரி பசுவினத்தின் பெருமையை உணர்கிறோம். நாகை, திருவாரூர் மாவட்ட சதுப்பு நிலப்பகுதியில் உள்ள உப்பன் அருகு என்ற உப்புச்சத்து நிறைந்த புல்வகைகளை மேய்ந்து இனவிருத்தி செய்ததால் உப்பளச்சேரி மாடுகள் என்ற பெயர் மருவி உம்பளச்சேரி மாடுகள் என்ற பெயர் வந்திருக்கலாம்.

டெல்டா மாவட்டங்களின் சேறு மிகுந்த வயல்களை திறமையாக உழுவதற்கு இவைகளைத் தவிர வேறு எந்த இனத்து எருதுகளுக்கும் இயலாது. இதற்குத் தக்கவாறு குட்டையான, உறுதியான கால்களைக் கொண்டுள்ளன. இவை தஞ்சாவூர் மாடு, தெற்கத்தி மாடு, மோளை மாடு, மொட்டை மாடு, ஜாதி மாடு, என பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன.

நிறம் மாறும் விந்தை

இவைகளின் நிறம் மாறும் தன்மை வியக்கத் தக்கது. இவை தன் வாழ்நாட்களில் ஒன்பது நிறங்களில் மாறும் இயல்புடையது. பிறக்கும் கன்றுகள் சிவப்பு நிறத்திலோ அல்லது பழுப்பு நிறத்திலோ வெள்ளை மறைகளுடன் இருக்கும். நெற்றியில் வெண்மையான திட்டுடன் அவை துள்ளி ஓடி வருவது உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும்.

மூன்று, நான்குமாதங்களில் சாம்பல் நிறமாக மாறத்தொடங்கும்.. ஆறிலிருந்து எட்டு மாதங்களில் முழுமையான சாம்பல் நிறமாக மாறும். கன்று ஈனாத பசுக்களும், வயது வந்த பசுக்களும் சாம்பல் நிறமாகக் காணப்படுகின்றன.

பெரும்பான்மையான பசுக்களுக்கு முகம், கழுத்து, இடுப்பு பகுதிகள் அடர்ந்த சாம்பல் நிறத்தில் காணப்படுகின்றன. இளம் ஆண் பசுக்களுக்கு, இரண்டாம் ஆண்டில் திமில், உடலின் முன், பின் பகுதிகள்அடர் நிறங்களாக மாறத் தொடங்குகின்றன.

காளைகள் சாம்பல் நிறமாகவும், தலை, இடுப்பு, பின் பகுதிகளில் அடர் சாம்பல் நிறத்துடனும் காணப்படுகின்றன. நான்கு மாதங்களுக்குப் பிறகு ஆண்மை நீக்கம் செய்யப்பட்ட காளைகளுக்கு நிற அடர்த்தி குறையத் தொடங்குகிறது. பசுக்கள், கிடாரிகள் சினையாக இருக்கையில் சாம்பல் நிற உரோமங்கள் உதிர்ந்து கருமை நிறம் பெறும். ஈன்றபின் மூன்று மாதங்களில் பழைய நிறம் திரும்பும். சித்திரை மாதம் பருவ கால கிடைக்குச் சென்று நல்ல மேய்ச்சலில் இருந்து ஆடி மாதம் வீடு திரும்பும் பசுக்களின் நிற மாற்றத்தினால், சில சமயங்களில் உரிமையாளர்களுக்குக் கூட தம் பசுக்களை அடையாளம் கண்டுபிடிக்க முடியாது.

நிறத்துக்கு மட்டுமல்ல, திறத்துக்கும் உம்பளச்சேரி

பெரும்பாலும் இம்மாட்டின் எருதுகளுக்கு கொம்பைத் தீய்த்துவிடுகிறார்கள். காதுகளும் அழகாக கத்தரிக்கப்பட்டு நாவெடை காதுகள் என வழங்கப்படுகின்றன. வெண்மை நிற நெற்றிப்பொட்டு, வெண்மை நிற வால் குஞ்சம், இடுப்பு மறை, திமில் மறை, நான்கு காலிலும் மறை, வெண் குளம்புகள் இவை மற்ற இனங்களிலிருந்து உம்பளச்சேரி பசுவினத்தை வேறுபடுத்திக்காட்டும். காளைகளின் கொம்புகள் கூர்மையாகவும், கடினமாகவும், குட்டையாகவும் இருக்கும். கழுத்து மற்றும் காதுகள் சிறியதாக இருக்கும்.

எருதுகள் வயல் உழவு, பார வண்டி, வைக்கோல் போரடித்தல், சேற்று நிலங்களை சமப்படுத்துதல் போன்ற வேலைகளுக்கு உதவுகின்றன. கடுமையான வெய்யிலில் கூட ஏழு அல்லது எட்டு மணி நேரம் உழைக்கும் திறன் கொண்டவை. இரண்டு மாடுகள் சேர்ந்து பூட்டிய வண்டியில் 2000 கிலோ பாரத்தை வைத்து 20 கி.மீ தூரத்தை ஏழு மணி நேரங்களில் கடக்க வல்லவை. சுறுசுறுப்பான இம்மாடுகளின் தீனிச்செலவும் குறைவே. கலப்பின பசுக்களோடு ஒப்பிடுகையில் இவை நோய் எதிர்ப்பு திறன் அதிகம் உடையவை.

.

பசுக்கள் தாய்மை உணர்வு மிக்கவை. கன்றுகளை தன் அண்மையிலேயே வைத்துகொள்ளும். பால்மடி சிறுத்து அடிவயிற்றோடு ஒட்டிக் காணப்படும். பால் காம்புகள் நல்ல இடைவெளியுடன் சிறுத்துக் காணப்படும். கழுத்தில் தொங்கும் தசை சிறியதாகவும், மார்பெலும்பு வரை நீண்டும் இருக்கும். இப்பசுக்கள் பால் குறைவாகக் கொடுத்தாலும் பால் மிகவும் ருசியானதாகவும், சத்துள்ளதாகவும் இருக்கும். பாலில் கொழுப்பு 4.5% முத்ல் 5% வரை இருக்கும். பாலில் கொழுப்பு இல்லாத திடப்பொருள் 8% உள்ளது. கறவை பசு நாள் ஒன்றுக்கு 2.5 லிட்டர் பால் கொடுக்கும். கன்று ஈன்ற பின் எட்டு மாதங்கள் வரை பால் கொடுக்கும். ஒரு பசு சராசரியாக 10 கன்றுகள் வரை ஈனும்.

இவை சேர்ந்து செல்லும்போது ஒரு அணிவகுப்பு போல செல்லும் அழகே தனி. இவை மென்மையான தோலும் பளபளப்பான குட்டையான உரோமமும் கொண்டவை.இவற்றை பழக்குதல் சற்று கடினம். முரட்டு சுபாவம் உள்ளவை. இதன் மேல் ஈக்கள் உட்காரும்போது தன் தோலை சுண்டி இழுத்து அவைகளை உடனடியாக விரட்டுவது இதன் தனிச்சிறப்பு. உம்பளச்சேரி இன மாடுகள் இன்றளவும், அவற்றை வகைப்படுத்தி வளர்த்த பண்ணையார்கள் பெயரிலேயே அழைக்கப்படுகிறது. இவற்றில் ஆட்டுக்காரி மாடு, வெண்ணா மாடு, சூரியங்காட்டு மாடு, மற்றும் கணபதியான் மாடு என்பவை குறிப்பிடத்தக்க உட்பிரிவுகளாகும்.

இதன் பெருமைகளை உணர்த்தும் கவிதை எளிய நடையில்

நெத்தியில பொட்ட பாரு- நெடுவெடையா உருவம் பாரு

தெக்கத்தி மாட்ட பாரு- திணவெடுத்த தேகம் பாரு

நாவெடாயா காத பாரு- நரூசான சூட்ட பாரு

வெடுவாலில் குஞ்சம் பாரு- கொம்பு மட்டும் பஞ்சம் பாரு

உப்பளருக கடிக்கும் பாரு- ஓங்கு தாங்கா வளரும் பாரு

சரியாத திமில பாரு- சளைக்காது உழவில் பாரு

நிறம் மாறும் அங்கம் பாரு- தரம் மாறா தங்கம் பாரு

பலகை போல முதுகை பாரு- பாய்ச்சலுல சிங்கம் பாரு

சல்லிக்கட்டில் விட்டு பாரு- சுத்து மாடா குத்தும் பாரு

நுகத்தடியில் நுழைச்சு பாரு- நூறு கலம் இழக்கும் பாரு

போரடியில் புனைச்சு பாரு தார் குச்சே வேண்டாம் பாரு

வலசை போகும் அழக பாரு வருசம் ஒரு கன்ன பாரு

கடை சேர்ந்த பிறகும் பாரு கன்னு போல உழைக்கும் (ஊக்கம் ) பாரு.

தூண் போல கால பாரு- மான் போல வேகம் பாரு

தட்டு ரெண்டில் மறய பாரு- சிட்டு போல பறக்கும் பாரு

பட்டறையில் பூட்டி பாரு- பந்தயத்தில் ஜெயிக்கும் பாரு

வெங்கொளம்பு எட்ட(டு) பாரு- வெள்ளி லாடம் கட்ட பாரு

தஞ்சாவூர் மாட்ட பாரு- தங்க லாடம் கட்ட பாரு

கழிமுகத்தின் முத்த(து) பாரு- சோழநாட்டின் சொத்த(து) பாரு

இத்தகைய சிறப்பு வாய்ந்த பசுவினத்தை அழியாமல் பாதுகாப்பது நம் கடமையன்றோ.

Source:

https://www.scribd.com/doc/102091861/Umblachery-Cattle

http://www.tamilkalanjiyam.in/index.php?title=%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AFhttps://www.scribd.com/doc/102091861/Umblachery-Cattle%8D

Courtesy: Smt. Malathi Jayarajaman, Kumbakonam

217 views0 comments
bottom of page