top of page

மண்ணின் மைந்தர்கள் பண்ணில் பாடினர்

கேட்டவுடன் கிடைத்த பாடல்

By - ஈ. லட்சுமணன் | Published on : 08th October 2017 05:20 AM |

நாமக்கல் கவிஞர் வாழ்க்கையில் ஒரு நிகழ்வு, நண்பர் வெங்கடகிருஷ்ணையருடன் புதுச்சேரிக்குச் சென்று பாரதியாரைச் சந்திக்கிறார்.

"தங்கள் பாடல்களில் ஏதாவது ஒன்றைத் தாங்களே பாடுவதைக் கேட்க வேண்டுமென்று வெகு ஆசை,'' என்று கோருகிறார். "அப்படியா! என்னைப் பாடச் சொல்லுகிறீரா? பாட்டு "ஆர்டருக்கு' வராது, பாடும் போது கேளும்,'' என்று பதிலளிக்கிறார் பாரதியார். ஆனால், வேண்டுகோள் (அன்பால் இருக்கலாம்; சீண்டுவது போலவும் இருக்கலாம்) விடுத்ததும் சில கவிஞர்கள் பாடியிருப்பதை இலக்கியத்தில் காணலாம்:

ஒரு நாள் கவிபாடும் நண்பரை அழைத்து, பிரபல அறிஞரைக் காணச் சென்றார் தொ.மு. பாஸ்கரத் தொண்டைமான், நண்பரின் திறமையைப் பற்றி நிறைய சொன்னார். அனைத்தையும் பொறுமையோடு கேட்ட அறிஞர், "காகம் கா - கம்பி கம்பி - கம்'' என்பதைக் கடையடியாக வைத்து ஒரு வெண்பா பாடும் பார்ப்போம்,'' என்றார். நண்பர் விழித்தவுடன், "பயப்படாதீர்கள், பிரித்துச் சொன்னால், காகம் காகம் பிகம் பிகம் அவ்வளவுதான்! பிகம் என்றால் வடமொழியில் குயில் என்று அர்த்தம்,'' என்று காதில் மெதுவாகக் கூறினார் தொ.மு.பா. உடனே கவிஞர் உற்சாகமாகப் பாடிய பாட்டு இது: "காகம் குயில் இரண்டும் கார் நிறத்தால் தம்முள் ஒப்பே ஆகும் எனினும் அணி வசந்தம் - மோகம் செய் வேகமுறும் காலத்துவேறு வேறாம் அவை தாம் காகம் காகம், பிகம் பிகம்'' (வேங்கடம் முதல் குமரி வரை - பாகம் 3) தென் மாவட்டத்தைச் சேர்ந்த இராஜவல்லிபுரம் என்ற இடத்தில் செப்பறை என்ற தலம் உண்டு. முத்தமிழின் சுவை தேர்ந்த வித்தகர் பலர் அங்கு வாழ்ந்தனர். அவர்களுள் ஒருவர் மன்னன் முத்துசாமி, தென்பாண்டி நாட்டுக் கவிஞருள் ஒருவரான அழகிய சொக்கநாதர்.

செப்பறைப்பதியை நோக்கி ஒரு நாள் முத்துசாமியும், கவிஞரும் செல்லும்போது, காயும் சோலையும் செறிந்து குலுங்கிய ஒரு செழுஞ் சோலை அவர் கண்களைக் கவர்ந்தது, அப்போது வள்ளல், கவிஞரை நோக்கி, "ஐய! காய் என்று தொடங்கி, இலை என்று முடியும்படி ஒரு கவி சொல்லும்'' என வேண்டினார். உடனே ஒரு பாட்டு எழுந்தது: "காய் சினம் இல்லாதான் கருணைமுத்து சாமி வள்ளல் வாய்மையுளான் பாடி வருவோர்க்கு - தாய் நிகர்வான் எல்லையில்லா மாண்பொருளை ஈவான் இவனிடத்தில் இல்லை என்ற சொல்லே இலை'' வள்ளலுக்கு ஏமாற்றம்; ஏனெனில், அவர் காயும் பழமும் நிறைந்த சோலையைக் கவிதையிலே காணலாம் என்ற எண்ணத்தில் இருந்தார், அதனால் என்ன? ஒரு பெருமகனைப் பற்றிய பாட்டு தமிழுக்குக் கிடைத்ததே? (ஆற்றங்கரையினிலே - ரா.பி. சேதுப்பிள்ளை) உ.வே.சா. விடம் தமிழ் பயின்று கொண்டிருக்கையில் பட்டீசுவரத்திலிருந்து ஆறுமுகத்தா பிள்ளை என்பவர் அறிமுகமானார். ஒரு நாள் ஆசிரியர்பிரானுடனும், ஆறுமுகத்தா பிள்ளையுடனும் உ.வே.சா, சுவாமிமலைக்குச் சென்றார். வரும்போது காவிரிக் கரையில் பட்டுச் சாலியர்களிற் சிலர் பட்டு நூலை தண்ணீரில் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். ஆறுமுகத்தா பிள்ளை திடீரென்று உ.வே.சா.வைப் பார்த்து "இந்த நூலுக்கும் நீருக்கும் சிலேடையாக ஒரு வெண்பா பாடும், பத்து நிமிஷத்தில் சொல்ல வேண்டும்,'' என்றார். அதுவும் அதிகாரத் தோரணையுடன் இட்ட கட்டளை! உ.வே.சா.வின் வருத்தத்தை உணர்ந்த ஆசிரியர் "இவ்வளவு கடினமான விஷயத்தைச் சொல்லி, சீக்கிரத்தில் பாடச் சொன்னால் முடியுமா? பாட்டென்றால் யோசிக்காமல் யந்திரம் போல் இருந்து செய்வதா?'' என்று கூறிவிட்டு, விரைவிலேயே அவர் "முதல் இரண்டு அடிகளை சிலேடை அமையும்படி நான் செய்து விடுகிறேன்,'' என்று கூறினார். "வெள்ளை நிறத் தாற் செயற்கை மேவியே வேறு நிறம் கொள்ளுகையாற் றோயக் குறியினால்'' மேற்குறிப்பிட்ட இரண்டடிகளை மீண்டும் சொல்லி, உ.வே.சா.வைப் பூர்த்தி செய்யச் சொன்னார். உ.வே.சா. பூர்த்தி செய்த பாடல் இது: "வெள்ளை நிறத் தாற் செயற்கை மேவியே வேறு நிறம் கொள்ளுகையாற் றோயக் குறியினால் - உள்ள வன்பில் தாய் நேர்ந்த வாறுமுகத் தாளாளா நீ மொழிந்த ஆய்நூலு நீரு நிகராம்.''

நூலுக்கு: வெள்ளை நிறத்தை உடைமையாலும் செய்கையினால் வெவ்வேறு நிறத்தை அடைதலாலும், சாயத்தில் தோய்க்கின்ற அந்தச் செயலாலும். நீருக்கு: இயல்பாக வெண்மை நிறம் உடைமையாலும் செயற்கையால் வேறு வேறு நிறங்களைக் கொள்வதலாலும் தோயமென்னும் பெயரை உடைமையாலும் என்பது இப்பாட்டின் பொருள். தோய் அக்குறி, தோயம் குறி - இரண்டு வகையாகப் பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும். தோயம் - நீர், குறி - பெயர், தாய் நேர்ந்த - தாயை ஒத்த. (உ.வே.சா. என் சரித்திரம் பக்.42 - சிலேடையும் யமகமும்)

99 views0 comments
bottom of page