வட்டிக்கு வாழைப்பழக் கணக்கு
By -தமிழாகரர் தெ. முருகசாமி | Published on : 08th October 2017 05:21 AM
திருமூலர் தம் திருமந்திர முதல் தந்திரப் பகுதியில், ""வட்டிகொண் டீட்டியே மண்ணில் முகந்திடும்; பட்டிப் பதகர் பயன்அறி யாரே''(260) எனத் பேராசையுடன் வட்டி மேல் வட்டி வாங்கி அறஞ் செய்யாது வாழ்வோரைச் சாடுகிறார். திருமூலரின் இந்த ஏசலுக்குப் பொருத்தமாகவே நாட்டில் ""தம்படிக்குத் தம்படி வட்டி'' எனப் பரவலாகப் பேசப்படும் பழிப்புரையும் உண்டு. அகராதியில், "வட்டி' என்பதற்குப் பணத்தைப் பிறர் பயன்படுத்தியதற்காக உடையவன் பெறும் ஊதியம் அல்லது இலாபம் எனக் கூறப்பட்டுள்ளது. இதனால் பணத்தையே முதலீடாக வேண்டியவர்களுக்குத் தந்து, அதனை திருப்பிப் பெறும்போது அடையும் கூடுதல் தொகை, அதாவது முதலோடு கூடிய தொகைக்கு வட்டி எனக் கூறப்பட்டதாகக் கொள்ளலாம். பிற வகையில், முதலீட்டின் கூடுதல் வருவாயை "உபரி ஊதியம்' என்பதால் அதற்கு இலாபம் என்பதாகக் கூறப்பட்டது எனலாம். இந்த இருவேறு நிலை குறித்த பொருள் வருவாய்க்கான வாழ்வியல் முறை, தொன்று தொட்டதாக உள்ளதை மாமன்னன் இராசராசனின் 29ஆவது ஆட்சி ஆண்டில் வடித்த (அவனது) கல்வெட்டால் அறியலாம். இக்கல்வெட்டு "கணபதியாருக்கு வாழைப்பழம் அமுது செய்தருளியது' பற்றியது. இது பெருவுடையார் கோயிலின் திருச்சுற்றில் தனித்த கோட்டத்தில் (சிறிதளவான கோயில்) எழுந்தருளிய பிள்ளையாருக்கு நாள்தோறும் வழிபாட்டின் நைவேத்தியமாக 150 வாழைப் பழங்கள் கொடுக்க இராசராசன் செய்த ஏற்பாட்டைக் குறிப்பிடுகிறது. மாமன்னன் கோயில் கருவூலத்தில் 360 காசுகளை மூலதனமாக வைத்து, அதிலிருந்து வரும் வட்டியைக் கொண்டு வாழைப் பழங்கள் நிவேதிக்கப்பட வேண்டும் என்பது முறைப்பாடாகும்.
கருவூலத்தில் செலுத்தப்பட்ட காசுகள் பெருக வேண்டுமென்றால், அதனை முதலீடாகத் தொழிற்படுத்த வேண்டும். அதன்படி தஞ்சாவூரைச் சார்ந்த நான்கு இடங்களில் வாழ்ந்த தன வணிக குல நகரத்தார்கள் அந்த 360 காசுகளை முறையே அறுபது அறுபதாக இரு பிரிவினரும் நூற்றிருபது நூற்றிருபதாக இரு பிரிவினரும் வட்டிக்காக வாங்கிச் சென்று முதலீடு செய்ததன் வட்டி வருவாயைக்கொண்டு முட்டுப்பாடில்லாமல் நாளும் கணபதிக்கு 150 வாழைப் பழங்கள் அமுது செய்யப்பட்டது.
360 காசுகளை நகரத்தார் பெற்ற விவரம்: (கல்வெட்டில் உள்ளபடி) 1. தஞ்சாவூர்க் கூற்றத்துத் தஞ்சாவூர்ப் புறம்படி நித்த விநோதப் பெருந் தெரு நகரத்தார் பெற்ற காசுகள் 60. 2. திரிபுவன மாதேவிப் பேரங்காடி நகரத்தார் பெற்ற காசுகள் 60. 3. மும்முடிச் சோழப் பெருந் தெரு நகரத்தார் பெற்ற காசுகள் 120. 4. வீர சிகாமணி பெருந் தெரு நகரத்தார் பெற்ற காசுகள் 120. மேற்படியாகக் காசுகளை நகரத்தார்கள் இராசராசனின் 29ஆவது ஆட்சி ஆண்டின் கதிர் அறுவடையின்போது பெற்றுக்கொண்டதாகவும், பெற்ற காசுகளின் வட்டிக்கு 150 வாழைப் பழங்களை முட்டுப்பாடின்றிச் சூரிய சந்திரர் உள்ள வரை நாளும் கருவூலத்தில் சேர்க்க வேண்டுமென்றும் கல்வெட்டில் முறைப்பாடு செய்து வெட்டப்பட்டுள்ளது.
வாணிபத்தைத் தொழிலாக உடைய தன வணிக நகரத்தார்கள் பெரிய நகரங்களில் தொழில் நடத்தியதோடு பெருஞ் செல்வந்தர்களாக இருந்தனர் என்பது கல்வெட்டாலும் இலக்கியங்களாலும் காணக் கிடக்கும் உண்மையாகும். நகரத்தார் வட்டிக்கு வாழைப்பழம் வழங்கிய கணக்கீடு (கல்வெட்டில் உள்ளவாறு): ஒரு காசுக்கு ஓராண்டுக்கு வட்டி - 1/8 காசு. 360 காசுக்கு ஓராண்டுக்கு வட்டி - 45 காசு. (360/8 = 45). ஒரு காசுக்கு ஓராண்டுக்கு வாழைப்பழம் - 1,200. 45 காசுக்கு ஓராண்டுக்குப் பழம் - 54,000 (1,200ல45 = 54,000). இக்கணக்கின்படி ஓராண்டுக்கு 360 நாளாகக் கணக்கிட்டால் ஒரு நாளைக்கு 150 வாழைப்பழங்கள். இக்கணக்கு விவரப்படி நான்கு தெரு நகரத்தார்கள் தாம் பெற்ற காசுகளுக்கு வாழைப்பழம் தந்த குறிப்பும் தெளிவாக உள்ளது.
ஒரு காசுக்கு ஓராண்டுக்கு 1/8 காசு வீதம் 60க்கு 7 1/2 காசு. ஒரு காசுக்கு ஓராண்டுக்கு 1,200 பழம் வீதம் 7 1/2 காசுக்கு 9,000 பழம். 360 நாளைக்கு 9,000 பழம் என்றால் ஒரு நாளைக்கு 25 பழம். இதுபோல் 60 காசு பெற்ற மற்றொருவரால் 25 பழம் செலுத்தப்பட்டன. ஆக 50. இக்கணக்கின்படி 120 காசுகள் பெற்ற இரு நகரத்தார்கள் நாளும் ஐம்பது ஐம்பதாக நூறு பழங்கள் செலுத்துவார்கள் (50+50 = 100). இம்முறைப்படி நான்கு வகையில் ஒரு நாளைக்குப் பிள்ளையாருக்கு 150 வாழைப் பழங்கள் அமுது செய்விக்கப்பட்டன (25+25+50+50=150). இந்தக் கல்வெட்டால், முறையான வட்டி வருவாய் பற்றியும் நம்பிக்கையான முறையில் தருமத்தை நேர்த்தியாகச் செய்த வாழ்வியலும் தற்காலத்திற்கான நல்ல அறிவுறுத்தல்களாக உள்ளன.
Thanks to Dr. D. Srinivasan for sharing this article.