top of page

ATHREYA MAHARISHI

ஆத்ரேய மஹரிஷி மற்றும் காவேரி வரலாறு

சிதம்பர ரகசியம் (அல்லது ) பதஞ்சலி முனிவர் வரலாறு

அத்ரி மஹரிஷிக்கும், அனசூயைக்கும் பிறந்தவர் பதஞ்சலி முனிவர். பலரும் தெரிந்து கொள்ள ஏதுவாக இப்பதஞ்சலி முனிவர் பற்றிச் சில குறிப்புக்கள். இவரைப் பற்றிய தகவல்கள் முன்னுக்குப் பின் முரணாக இருக்கிறது. சிலர் இவரின் காலம் தொன்மையானது என்று சொல்கிறார்கள். சிலர் வேத காலத்தில் இருந்தே இருந்து வந்ததாயும் சொல்வார்கள். புராணங்களின்படி இவர் ஆதிசேஷனின் அவதாரம்.

மஹாவிஷ்ணு பூவுலகிற்கு அவதாரங்கள் செய்ய வந்த போது இவர் முனிவராக அவதாரம் செய்ததாக சொல்கிறார்கள். ஆகாயத்தில் இருந்து பூமியில் நேரே வந்து ஒரு பெண்ணின் பாதத்தில் அஞ்சலி செய்வது போல் கைகளைக் கூப்பிய வண்ணம் விழுந்ததால் இவர் பெயர் “பதஞ்சலி” என்று ஆனதாய் ஒரு கூற்று. இவரின் அவதார காரணம் குறித்துச் சொல்லப் படுவது யாதெனில்: பாற்கடலில் ஆதிசேஷனின் மேல் சயனித்துக்கொண்டிருந்த விஷ்ணுவின் திடீர் கனம் தாங்க முடியாமல் தவித்தான் ஆதிசேஷன். ஆனால் விஷ்ணுவோ புன்னகை புரிந்து கொண்டிருந்தார். தன் மனதுள்ளே தன் மூச்சுக்காற்று உள்ளே செல்கையிலும், வெளியே வருகையிலும் நடைபெற்ற சிவனின் நடனத்தைத் தன் மானசீகக் கண்களால் தன் உள்ளத்தின் உள்ளே கண்டு ஆனந்தித்துக் கொண்டிருந்த மகாவிஷ்ணுவின் தோற்றத் தாலும், அவரின் திடீர் எடை அதிகரிப்பாலும் வியந்த ஆதி சேஷன் அவரிடம் காரணம் வினவுகின்றார். மகாவிஷ்ணு ஈசனின் ஆனந்த நடனக்கோலத்தை வர்ணிக்க, தாமும் அதைத் தரிசிக்க ஆவல் கொண்டிருப்பதாய் ஆதிசேஷன் சொல்ல, விஷ்ணுவும் அவரைப் பூவுலகில் சிதம்பரம் க்ஷேத்திரத்துக்குப் போய்ப் பார்க்கச் சொல்கின்றார். ஆதிசேஷனும் ஒரு ரிஷியின் மகனாய்ப் பிறக்கத் திருவுளம் கொண்டு அத்திரிக்கும், அனுசூயைக்கும் பிறந்ததாயும், இந்தக் குழந்தையே பதஞ்சலி முனிவர் என்றும் கூற்று.

இவருடைய சம காலத்தினரான புஷ்ய மித்திரர் கி.மு.3-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் ஆகையால் இவரின் காலம் கி.மு. என்று சொல்லுவோரும் உண்டு. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான திருமூலரும் இவரும் ஒரே காலத்தில் வாழ்ந்த தாயும், பதஞ்சலி முனிவர் சம்ஸ்கிருதத்தில் எழுதிய மஹா பாஷ்யத்தின் தமிழாக்கம்தான் திருமூலரின் “திருமந்திரம்” என்று சொல்வோரும் உண்டு. எல்லாமே ஊகங்கள் தான். காலத்துக்கு அப்பாற்பட்ட இம்முனிவரைப் பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார் என்றால்:

“பதஞ்சலி முனிவர் அத்ரி மஹரிஷிக்கும், அனசூயைக்கும் பிறந்தவர். திருமூர்த்திகளும் தனக்குக் குழந்தையாகப் பிறக்க வேண்டும் என்ற ரிஷியின் வேண்டுகோளுக்கு இணங்கப் பிறந்த மூன்று குழந்தைகளான தத்தாத்ரேயர், துர்வாசர், பதஞ்சலி என்ற மூன்று ஆண் குழந்தைகளைத் தவிர அருந்ததி என்ற பெண்குழந்தையும் உண்டு இந்த ரிஷித் தம்பதியருக்கு. இந்த அருந்ததி தான் வசிஷ்டரின் மனைவி. கோவையில் இருந்து 100 கி.மீ. தள்ளி இருக்கும் “திருமூர்த்தி மலைக்குன்றுகள்” இருக்கும் இடத்தில் இவர் பிறந்ததாயும், முன் காலத்தில் தென் இந்தியாவின் இந்தப் பகுதியைத் “தென் கைலாயம்” என்று அழைப்பதுண்டு என்றும் சொல்கிறார் திருமூலர். இங்கே உள்ளஅமணலிங்கேஸ்வரரை அத்ரி மஹரிஷி வழிபட்டு வந்ததாயும் சொல்கிறார். பதினெட்டு சித்தர்களில் பதஞ்சலி முனிவரும் ஒருவர்.”

“தன்னுடைய 7 யோக நண்பர்களுடன் நந்தி தேவரிடம் இருந்து நேரடியாக யோகக் கலையைக் கற்றவர். இதைப் பற்றித் திருமூலர் என்ன சொல்கிறார் என்றால்: “நந்தி அருள் பெற்ற நாதரை நாடினோம் நந்திகள் நால்வர் சிவயோக மாமுனி மறுதொழுத பதஞ்சலி, வ்யாக்ரபர் என்றிவர் என்னோடு எண்மருமாம்!”

சித்தர்களில் ஒருவரான போகர் 7,000 எழுதியதில் சொல்வது என்ன வென்றால்: தனக்குச் சித்தி கிடைத்தது பற்றி வர்ணிக்கிறார். “அது என்னுடைய தாத்தா! மேலே ஏறிப் பார்! ஆனால் என்னைப் பிறப்பித்தவர் காலங்கிநாதர்! பதஞ்சலி, வ்யாக்ரபாதர், சிவயோகி முனி அனைவரும் சொன்னது பார், இதுவே சரியான வழி! அவர்கள் எப்படி மேலே ஏறுவது என்றும் திரும்புவது என்றும் சொல்லிக் கொடுத்தனர். இங்கே சொல்லப்படுவது மூலாதாரத்தில் இருந்து சஹஸ்ராரம் சென்று பரிபூர்ணமாய் ஐக்கியம் அடைவதைக் குறித்து. இங்கே போகர் சொல்லி இருப்பது தனக்குக் குருவாய் அமைந்து யோகத் திற்கு வழிகாட்டியவர்களைக் குறித்தும், அந்த வழியைக் குறித்தும் சங்கேதமாய்ச் சொல்லி உள்ளார். அப்போது அந்த அகில உலகையும் படைத்துக் காத்து ஆளும் அந்த சர்வலோக சுந்தரி காட்சி கொடுத்துச் சொன்னாள்.” அப்பா நீ தேடினாயே இதுதான் அது!” என்று.குண்டலினி யோகம் படிக்கிறவர் களுக்கும், அதைப் பற்றித் தெரிந்தவர் களுக்கும் இது புரியும் என நினைக்கிறேன். நம் உடலில் உள்ள சூக்ஷும நாடியை இட நாடியின் உதவியோடும், பிங்கள நாடியின் உதவியோடும் மெதுவாய் மேலே எழுப்பிக் கொண்டு போய் நெற்றிப் பொட்டில் இருக்கும் சஹஸ்ராரச் சக்கரத்தில் சேர்த்தால் உள்ளொளி தெரியும். இறை தரிசனம் கிடைக்கும். இது சொல்வது சுலபம் என்றாலும் மிகுந்த பயிற்சியும் மன உறுதியும் தேவை. அதைத் தான் போகர் சொல்கிறார். காலங்கிநாதரில் ஆரம்பித்துப் பின் ஒவ்வொருவராய் முயன்று அவர் கடைசியில் தான் தேடியதை அடைந்தார். அவர் வேண்டியது கிடைத்ததும் பிறந்தது “போகர் 7,000”. அதில் பதஞ்சலி பற்றிக் குறிப்புக்கள் கிடைக்கின்றன.

நாட்டிய சாஸ்திரம் எழுதிய பதஞ்சலியும், யோகக் கலை எழுதிய பதஞ்சலியும், மஹா பாஷ்யம் எழுதிய பதஞ்சலியும் வேறு வேறு என்றும் சிலருடைய அபிப்பிராயம். என்றாலும் ஆன்மீகவாதிகள் இதை எல்லாம் எழுதியது ஒருவரே எனச் சொல்கிறார்கள்.

பிறக்கையிலேயே தன் ஆதிசேஷன் உரு மறவாமல் இருக்கவோ என்னவோ, பாம்பின் உடலும், மனித முகமும் படைத்த பதஞ்சலி தன் மாணாக்கர்களை நேரடியாகப் பார்த்துப் பாடம் சொல்லிக் கொடுக்கமாட்டார். ஏனெனில் அவரின் மூச்சுக் காற்றில் கடுமையான விஷம் இருப்பதால் அதன் மூலம் மாணாக்கர்கள் இறந்து விட்டால் என்ன செய்வது என்ற எண்ணம் தான். ஒரு சமயம் 1,000 மாணாக்கர்களுக்குப் பாடம் சொல்லும் சமயம் யாரும் வெளியே செல்லக் கூடாது எனவும் தனக்கும் மாணாக்கர்களுக்கும் நடுவே உள்ள திரையை யாரும் நீக்கக் கூடாது எனவும் கட்டளை இட்டார் பதஞ்சலி முனிவர்.

மாணவர்களுக்கோ ஒரே ஆத்திரம்! ஏன் வேணாம்னு சொல்றார் என்று கண்டுபிடிக்க நினைத்தனர். ஒருநாள் பாடம் நடக்கும்போது ஒரே ஒரு மாணவன் மட்டும் இயற்கையின் உந்துதல் தாங்காமல் ஆசிரியரிடம் தெரிவிக்காமல் வெளியே செல்ல, மற்ற மாணவர்கள் அந்தச் சமயம் திரையை விலக்கிப் பார்க்க அனைவரும் ஆசிரியரின் மூச்சுக் காற்றுப் பட்டுச் சாம்பல் ஆனார்கள். திரும்பி வந்த ஒரு மாணவனைக் காப்பாற்றி அவன் மூலம் வந்தது தான் அவருடைய எழுத்துக்கள் என்றும், அதனாலும் முரண்பாடுகள் இருப்பதாயும் சொல்கிறார்கள். என்றாலும் வியாக்கிரபாதர் ஆசிரமமே காலத்தால் மூத்தது என்றும் சிலர் கூற்று.

ஆத்ரேயா ( Athreya) // புனர்வஸு (Punarvasu )

ஆத்ரேயா (அத்ரியின் மகன்;; ஆயுர்வேதத்தின் தந்தை. பேலர், அக்னிதேவர் ( "அக்னிவேச தந்திர" என்ற நூல் எழுதியவர்) இவர்களுக்கு குரு. சரகஸம்ஹிதையில் இவரை "அத்ரிசுதன்" என குறிப்பிட்டுள்ளது. அத்ரியும் ஆயுர்வேதத்தில் சிறந்தவர் என அஸ்வகோஷம் கூறுகிறது;;. இந்திரன் ஆயுர்வேதத்தை கஸ்யபர், அத்ரி, ப்ருகு, வசிஷ்டர் ஆகியோருக்கு கற்றுக் கொடுத்தான். அத்ரி முடிக்காத "ஆயுர்வேதசிக்ஷாதந்த்ர" என்னும் நூலை இவர் முடித்தார். இவரின் தாய்--சந்திரபாகா;; இவர் பரத்வாஜரிடம் பயின்றவர். இவர் எழுதிய நூல் "ஆத்ரேயஸம்ஹிதை" ;; ஆயுர்வேதத்தில் 30 க்கும் மேற்பட்ட ரசாயன விளக்கங்கள் இவர் பெயரில் உள்ளன;; சரக சம்ஹிதையில், இவர் உருவாக்கிய சில தைலங்களின் செயல்முறை உள்ளது .

அத்ரி (Athri)

அத்ரி ப்ரம்மாவின் மானச புத்ரர்களில் ஒருவர். இவர் மூலம் பத்து ப்ரஜாபதிகள் உருவானார்கள். அஷ்டப்ரக்ருதிகளில் ஒன்றான இவர் அண்ட சராசரங்களை உருவாக்கியதில் பங்கு உண்டு. சித்ரசிகண்டிகள் என கூறப்படும் ஏழு முனிவர்களில் இவர் ஒருவர். கஸ்யபரின் மகன், கஸ்ஸிபு ஒர் அரசன். ஆனால் மஹாகொடியவன். இவன் தேவாசுர யுத்தத்தில் மாண்டான். பிறகு ப்ரஹ்லாதன் அரசனானான். இவனும் இந்திரனிடம் தோற்றான். பிறகு மஹாபலி அரசனானான். இவனும் தேவாசுர யுத்தத்தில் பங்கேற்றான். விஷ்ணு தேவர்களுக்கு உதவ, குல குரு சுக்ராச்சாரியார் அசுரர்களுக்காக, சிவனிடம் செல்ல, அச்சமயம், விஷ்ணு, சுக்ராச்சாரியாரின் தாய் காவ்யமாதாவை கொல்ல, இதனால் கோபமடைந்த, ப்ருகு, விஷ்ணுவை பல முறை பிறப்பாய் என சபிக்க அவரும் அவ்வாறே பிறந்தார். ஒரு முறை அவர் அத்ரிக்கு தத்தாத்ரேயராக பிறந்தார். (தேவி பாக.4)

வசிஷ்டரும் விஸ்வாமித்ரரும் எப்போதும் தகராறு செய்து கொண்டேயிருக்க, ஒரு முறை வசிஷ்டரின் மகனுக்கும் (சக்தி) அரசன் கல்மாசபாதனுக்கும் யார் முதலில் வழி விடுவது என்பதில் தகராறு ஏற்பட, சக்தி அரசனை ராக்ஷசனாக்க, அது சக்தியையே விழுங்க, பிறகு வசிஷ்டரின் 100 பிள்ளை களையும் விழுங்க, அதற்கு விஸ்வாமித்ரர் துணை புரிய, வசிஷ்டரும், சக்தியின் மனைவி அத்ருஸ்யந்தியும் மிகவும் வருத்தமடைந்தனர். அச்சமயம் அவள் கருவுற்றிருந்தாள். பிறகு அவளுக்கு பிறந்தவர் பராசரர். இவர் பருவ வயதடைந்ததும், நடந்ததை அறிய, யாகம் செய்து ராக்ஷச கூட்டத்தையே அழிக்க திட்டமிட்டனர். இதை அறிந்த அத்ரி நேரே சென்று சமாதானம் செய்தார். (ஆதி-181). வறுமையில் வாடிய அத்ரி தன் மனைவியின் வேண்டுதலால், அரசன் வைன்யாவிடம் சென்று அவன் புகழ் பாட அதை அரசன் வெறுக்க, அவன் இவரை மஹரிஷி சனத்குமாரரிடம் அழைத்துச் செல்ல அவர் இருவரையும் சமாதானம் செய்தார். அரசன் அத்ரிக்கு பல பரிசுகள் அளித்தான்.

வாயு பகவான் அர்ச்சுனனுக்கு சொன்ன கதை:- தேவாசுர யுத்தத்தின் போது, தேவர்களின் பலம் குறைய, சந்திர சூர்யர்களின் ஒளியும் குன்றியது. அதனால் அத்ரி தானே சூர்ய சந்திரனாகி, தேவர்களுக்கு சந்திரனாக குளிர்ச்சியையும் சூர்யனாக அசுரர்களை தகித்தார். (அனு--156).

பீஷ்மர் தர்மனுக்கு சொன்ன கதை:- மஹரிஷிகள் தங்கள் பத்தினிகளுடன் ப்ரம்மலோகம் செல்ல ஆசைப்பட்டனர். அச்சமயம் உலகில் ஒரே வறட்சி. அதற்காக அரசன் வ்ருஷாதர்பி யாகம் செய்து மஹரிஷிகளுக்கு தானம் அளிக்க நினைத்தான். அவர்கள் மறுக்க, அரசன் கோபப்பட்டு ஒரு யாகம் செய்து அதிலிருந்து வந்த கொடிய அரக்கியை விட்டு ரிஷிகளை கொல்ல யத்தனித்தான். ரிஷிகள் யாதுதானி என்ற அரக்கி வாழும் இடமறிந்து, அங்கே அந்த தாமரை குளத்தை அடைந்து அவளை தங்களின் சூலாயுதத்தால் கொன்றனர். பிறகு ப்ரம்மலோகம் சென்றனர். (அனு--93). இவரின் மகன் தத்தாத்ரேயர். தத்தாத்ரேயருக்கு பிறந்தவன் நிமி. நிமியின் மகன் 1000 ஆண்டுகள் அரசாண்டான். பிறகு இறக்க அதனால் நிமி புத்ரசோகம் கவ்வ, அத்ரி அவனுக்கு ஸ்ரார்த்ததின் மகிமையை கூறினார். அவனும் அவ்வாறே செய்து பலனடைந்தான். (அனு--91).

உக்ரஸ்ரவஸின் மனைவி சீலாவதி. கற்பு நெறிக்கு அவள்தான் இலக்கணம். அவள் தன் கணவனின் காம பசிக்காக தினமும் அவனை தலையில் சுமந்து பரத்தை வீட்டிற்கு செலவாள். ஒரு முறை இதை கண்ட மாண்டவ்ய முனி அவளிடம் "உன் கணவ்ன் சூர்யோதயத்திற்கு முன் இறப்பான்" என சபித்தார். அவள் திருப்பி அப்படியானால் சூர்யனே உதிக்காமலிருக்க என்று சபதம் செய்ய, அவ்வாறே சூர்யன் உதிக்கவில்லை. மூவுலகம் நடுங்க மும்மூர்த்திகள் அத்ரியின் மனைவி அனுசுயாவை அணுகி, சீலாவதியிடம் சமரசம் பேச சொன்னார்கள். அனுசுயாவும் அவ்வாறே செய்ய, சீலாவதி தனது சாபத்தை விலக்கினாள். அதற்கு கைம்மாறாகஅனுசுயா மும்மூர்த்திகளிடம் அவர்கள் தனக்கு பிள்ளைகளாக பிறக்க வேண்டினாள். ஆக விஷ்ணு தத்தாத்ரேயராகவும், சிவன் துருவாசராகவும், ப்ரம்மா சந்திரனாகவும் அவதரித்தனர். (ப்ரம்மாண்ட புரா--39-43).

ஒரு முறை இவர் தவமிருக்க, நாட்டில் கடும் வறட்சி நிலவியது. அனுசுயா மண் லிங்கம் செய்து தொழுது வந்தாள். அத்ரி ரிஷி நீர் கேட்க அவள் கங்கையை வர சொல்ல. அவளும் வந்தாள். அவளை ஒருமாதமிருக்க சொல்ல, கங்கை அனுசுயையின் ஒரு மாத தவப் பலனைக் கேட்டாள். அத்ரிக்கும் தரிசனம் கொடுத்தாள் கங்கை. பிறகு கங்கையை நிரந்தரமாக பூவுலகில் இருக்க சொல்ல அதற்கு அவள் அனுசுயையின் ஒரு வருட தவப் பலனை கேட்க அவளும் சம்மதித்தாள். அச்சமயம் சிவன் அங்கு தோன்ற அவரை எல்லோரும் அத்ரிஸ்வரர் என வழிபட்டனர். (சிவ புரா).

ப்ராசினபர்ஹஸ் அத்ரியின் மகன். இவனும் ஸ்ருஷ்டி தொழிலில் ஈடுபட்டான். (சாந்தி--208). அத்ரியின் வம்சத்தில் வந்தவர்களை பாவகர்கள் என அழைப்பர்.(வன--222);; அத்ரி ரிக் வேத ஐந்தாவது மண்டலத்தை எழுதியவர். அசுரர்கள் இவரை நூறு துளைகள் கொண்ட யந்திரத்தில் போட்டு துன்புறுத்தினர். எரிக்க முயற்ச்சித்தனர் (ரிக்-மண்1-அனு16,17, சுக்--51,112,16);; துரோணரிடம் சென்று போரை நிறுத்த சொன்னவர்களில் இவரும் ஒருவர் (துரோ--190);; அரசன் ஸோமனின் ராஜசூயயாகத்தை நடத்தியவர் (சால்ய--43);;பரசுராமரின் தவத்தை சென்று பார்த்தவர் (ப்ரம்மாண்ட புரா--64);; ராவண வதம் முடிந்து ராமர் திரும்பும்போது இவர் ராமரை சந்தித்தார் (உத்தர ராம);; விஷ்ணுவின் நாபியிலிருந்து ப்ரம்மா வந்தார். ப்ரம்மவிலிருந்து அத்ரி, அத்ரியிலிருந்து ஸோம, ஸோமாவிலிருந்து புரூரவஸ் (அக்னி புரா--12);;

அத்ரி;;; சுக்ராச்சாரியாரின் மகன். (ஆதி--65).

அத்ரி;;; சிவனின் ஒரு பெயர். (அனு--65).

அத்ரி (ப்ரம்மாவின் மானச புத்ரர்களில் ஒருவர். )

ஆத்ரேயா (அத்ரியின் மகன்;; ஆயுர்வேதத்தின் தந்தை.)

அர்ச்சநானஸ் (Arcananas) (அத்ரி வம்சம்..)

ஸ்யாவாஸ்வன் (அத்ரி வம்சம்..)

ஆத்ரேய கோத்ரம். இவர் இளவரசி ரதவீதியை மணக்க ஆசைப்பட்டார். ஆனால் அவளின் தந்தை தன் பெண்ணை ஒரு மஹரிஷிக்குத்தான் கொடுப்பேன் எனக்கூற, பிறகு மருத்தர்களின் உதவியால் இவர் மஹரிஷியாகி அவளை மணந்தார். இவர்களுக்கு பிறந்தவனே முனிவர் ஸ்யாவாஸ்வன்

‘சுருதி’ என்றால் காதால் மட்டும் கேட்டவை; கேட்கப்பட வேண்டியவை; அதாவது வேதங்கள்; இதை சங்க கால தமிழ்ப் புலவர்கள் “எழுதாக் கிளவி” என்றும் “நான் மறை” என்றும் “எழுதாக் கற்பு” என்றும் அற்புதமாக வருணித்துப் போற்றியுள்ளனர். இதற்கு அடுத்த படியாக இந்துக்கள் போற்றுவது ‘ஸ்மிருதி’; அதாவது நினைவில் வைத்து க்கொள்ளப்படவேண்டியவை. இதில் ஒன்றுதான் மனு ஸ்மிருதி. உலகில் மிகப் பழைய சட்டப்புத்தகம். கிருத யுகத்தில் ஒரு லட்சம் பாடல்களாக இருந்தது. இப்பொழுது 12 அத்தியாயங்களில் 2685 பாடல்களாகச் சுருங்கிவிட்ட து.

மனு ஸ்மிருதி தவிர வேறு என்ன சட்ட நூல்கள் உள்ளன:

நாரத ஸ்மிருதி, யாக்ஞவல்கியர் ஸ்மிருதி, பராசரர் ஸ்மிருத, சங்க ஸ்மிருதி, லிகித ஸ்மிருதி, விஷ்ணு ஸ்மிருதி. இது தவிர, ஆபஸ்தம்ப சூத்ரம், போதாயன தர்ம சூத்ரம், கௌதம தர்ம சூத்ரம், வசிஷ்ட தர்ம சூத்ரம். இது தவிர பொருளாதார குற்றங்கள் பற்றியும் தண்டனைகள் பற்றியும் கூறும் அர்த்தசாத்திரம், ப்ருஹஸ்பதி நீதி, சுக்ர நீதி இப்படி எத்தனையோ நூல்கள்!!

பிராமணர்கள், பெரியோரை வணங்கும்போது சொல்லும் “அபிவாதயே” என்று துவங்கும் வணக்க மந்திரத்தில், என்ன சட்டப் புத்தகதைப் பின்பற்றுபவன் என்றும் சொல்லி அவர்கள் காலில் விழுந்து வணங்குவர். இன்று வரை சட்டப் புத்தகத்தின் பெயரைச் சொல்லி வணங்கும் முறை வேறு எங்கும் இல்லை. இது நாகரீகத்தின் உச்ச கட்டத்தை நாம் எய்தியதைக் காட்டுகிறது. எடுத்துக் காட்டாக நான் என் வீட்டிற்கு வரும் பெரியோரின் காலில் விழும்போது என் கோத்திரம் கௌசிக கோத்திரம், நான் யஜுர் வேதத்தை அத்யயனம் செய்பவன், நான் ஆபஸ்தம்ப தர்ம சூத்திரத்தைப் பின்பற்றுபவன், எனது ரிஷிகள் யார் யார், என் பெயர் என்ன என்று சொல்லி வணங்குவேன். உலகில் சட்ட நூலின் பெயரைச் சொல்லி வணங்கும் சமூகம் வேறு எங்கு உள்ளது ?

ஆத்ரேய மஹரிஷி மற்றுமொரு நிகழ்ச்சி.

ஆத்ரேய முனிவர் தனது யாக பலத்தினால் எங்கு வேண்டு மானாலும், எப்போதுவேண்டுமானாலும் செல்லக்கூடிய வல்லமை பெற்றவர். ஒருசமயம் அவர் இந்திரலோகம் சென்று, அங்கு நன்கு உபசரிக்கப்பட்டு, இந்திரலோகத்தின் அழகிலும், உபசரிப்பிலும், உல்லாசங்களினாலும், வகைவகையானஉணவு வகையினாலும் கவரப்படுகிறார். .தன்னுடைய இருப்பிடம் திரும்பியதும், கட்டுமானங்களில் பெயர்பெற்ற விஸ்வகர்மாவை கூப்பிட்டு, தன்னுடைய பர்ணகசாலையை உடனே பிரித் தெடுந்துவிட்டு இந்திரலோகத்தைப்போன்று தன் இருப் பிடத்தை மாற்றியமைக்குமாறும், அவ்வாறு செய்யத்தவறினால் விஸ்வகர்மாவை எரித்து சாம்பலாக்கி விடுவதாகவும் கட்டளை யிட்டார்..

முனிவரின் சாபத்திற்கு பயந்த விஸ்வகர்மா முனிவர் ஆக்ஞையிட்டபடி ஐராவதம் போன்ற யானை, குதிரை, இந்திரலோகத்தில் உள்ளதுபோல கட்டிடங்கள், நடன மாதுக்கள், இசை வல்லுனர்கள், ராஜசபை, உணவு வகையறாக்கள், அந்தப்புரம் அனைத்தும் அடங்கிய இந்திர லோகத்திற்கு ஒப்பான ஒரு புதிய இந்திரலோகத்தை, பர்ணகசாலை இருந்த இடத்தில் கட்டி முடித்தான். மிகவும் சந்தோஷமடைந்த முனிவர், புதிய மாகிகையில் அவர் விரும்பிய அனைத்து சுகங்களையும் அனுபவிக்கலானார்.

முனிவரால் இந்திரலோகத்திற்கு ஒப்பான ஒரு புதிய இந்திரலோகத்தை, பெற முடிந்ததே தவிர, இந்திரபலத்தைப் பெற முடியவில்லை.

அனைத்து சுகங்களை அனுபவிக்கும் இந்திரனுக்கு, எப்போதுமே எதிராளிகள் இருந்தனர். அவர்கள் இந்திரனை அழித்து விடவேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண் டிருந்தனர். பூவுலகில் புதிய இந்திரலோகம் தோன்றியதும், இந்திரன் அங்கு குடியேறிவிட்டான் என எண்ணி, இந்திரனுடைய எதிராளிகள் / தீய சக்திகள், புதிய இந்திர லோகத்தினை அடைந்து, தேவேந்திரனுக்கு எதிரான முழக்கங்களுடன், “கொன்றுவிடு, கொன்றுவிடு”, என்று முழக்கமிட்டதுடன், ஸ்ருஷ்டிசெய்த புதிய இந்திர லோகத்தை, முழுவதுமாக தூள், தூளக்க தொடங்கின.. தீய சக்திகளிடமிருந்து முனிவராலும் தப்பிக்க முடியவில்லை. உடலில் ஏற்பட்ட சிறு சிறு காயங்களுடன், தீய சக்திகளை நோக்கி, தன் இரு கரம் கூப்பி, தான் இந்திரன் இல்லையென்றும், தன்னை விட்டுவிடுவிடுமாறு கெஞ்சவும், நீங்கள் இந்திரன் மாதிரி நடந்துகொள்வதால்தான் தங்களை தாக்கவேண்டிய சூழ் நிலை ஏற்பட்டது எனக்கூற, உடனே முனிவர், விஸ்வகர்மாவை கூப்பிட்டு, புதிய இந்திரலோகத்தை அழித்துவிட்டு, பழையபடியே பர்ணகசாலையை உருவாக்க கேட்டுக்கொண்டார்.. முனிவர் ஆக்ஞையிட்டபடி புதிய இந்திரலோகத்தை முழுவதுமாக அழித்துவிட்டு, பழையபடியே பர்ணகசாலையை விஸ்வகர்மா கட்டி முடித்தான். புத்தி தெளிந்த ஆத்ரேயர் நிம்மதியாக முன்போலவே வாழத் தொடங்கினார்.

Courtesy:

Sri.D. SIVASUBRAMANIAN

676 views0 comments
bottom of page