top of page

Kundalanathar temple

சிவாயநம திருச்சிற்றம்பலம்.

பதியும் பணியே பணியாய் அருள்வாய்.

*கோவை கு.கருப்பசாமி.*

----------------------------------------------------------------

*தேவார பாடல் தல எண் 173*

*தேவாரம் பாடல் பெற்ற சிவ தல தொடர்.*

*சிவ தல அருமைகள் பெருமைகள்*

*குந்தளநாதர் திருக்கோவில், திருக்குரக்குக்கா.*

----------------------------------------------------------------

தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரையில் அமைந்துள்ள அறுபத்து நான்கு தலங்களில் இத்தலம் இருபத்தெட்டாவது தலமாகப் போற்றப் படுகிறது.

(தற்போது இத்தலவூரை திருக்குரக்காவல் என்று அழைக்கின்றனர்.)

*இறைவன்:* குந்தளநாதர், குந்தளேஸ்வரர், குண்டலகர்ணேஸ்வரர்.

*இறைவி:* குந்தளநாயகி.

*தல விருட்சம்:* வில்வம்.

*தல தீர்த்தம்:* கணபதி நதி.

*ஆகமம்:* காமீக ஆகமம்.

*தேவாரம் பாடியவர்கள்:*

திருநாவுக்கரசர். ஐந்தாம் திருமுறையில் ஒரே ஒரு பதிகம்.

*இருப்பிடம்:*

வைத்தீஸ்வரன் கோயில் - திருப்பனந்தாள் சாலையில் *"இளந்தோப்பு"* என்ற ஊரை அடைந்து, ஊரிலுள்ள மருத்துவமனைக் கட்டிடத்திற்குப் பக்கத்தில் செல்லும் திருக்குரக்காவல் சாலையில் மூன்று கி.மீ. உள்ளே சென்றால் கோயிலையை அடையலாம். கோயில் வரை வாகனங்கள் செல்ல முடியும்.

*அஞ்சல் முகவரி:*

அருள்மிகு குந்தளநாதர் திருக்கோவில்,

திருக்குரக்காவல்,

இளந்தோப்பு அஞ்சல்,

மயிலாடுதுறை வட்டம்,

நாகப்பட்டிணனம் மாவட்டம்,

PIN - 609 201

*ஆலயப் பூஜை காலம்:*

காலை 6.00 மணி முதல் பகல் 12.00 மணி வரையும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.

பஞ்சகாரண்ய தலங்களில் திருக்குரக்குக்கா என இந்தத் தலமும் ஒன்று.

மற்ற தலங்கள்: திருவானைக்கா, திருகோடிக்கா, திருநெல்லிக்கா, திருகோலக்கா.

*பெயர்க்காரணம்:*

குரங்கு வழிபட்டதால் இத்தலம் திருக்குரக்குக்கா என்று பெயர் பெற்றது.

இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை என தெரிந்து, ஆலயவாயிலைப் பார்த்து *சிவ சிவ, சிவ சிவ* என மொழிந்து வாயிலை வணங்கிக் கொண்டோம்.

*கோவில் அமைப்பு:*

ஒரு முகப்பு வாயில் மட்டுமே இருக்க, அதனுள் உள் புகுந்தோம்.

முகப்பு வாயிலைக் கடந்து செல்லவும் பலிபீடம் இருக்கக் கண்டோம்.

இதனருகாக வந்த நின்று, எம்மிடமுள்ள ஆணவமலம் பூராவும் ஒழிய வேண்டும் என்று வேண்டிக்கொண்டு நகர்ந்தோம்.

அடுத்து நந்தியார் இருந்தார். நம் வணக்கத்தை முதலில் அவருக்குச் செலுத்திக் கொண்டோம்.

மேலும் ஆலயத்தொழுகைக்கு உள்புக இவரிடம் அனுமதியும் வேண்டிக் கொண்டு நகர்ந்தோம்.

அடுத்து இருக்கப்பெறவேண்டிய கொடிமரம் இருக்கப்பெறவில்லை.

வெளிப் பிராகாரத்தில் விநாயகர், வள்ளி, தெய்வயானை சமேத ஆறுமுகர் சந்நிதிகள் இருக்க கைதொழுது வணங்கிக் கொண்டோம்.

முன்மண்டபத்தில் வலதுபுறம் பைரவர், சூரியன், அநுமன் மூர்த்தங்கள் இருக்கக்க கண்டு, இங்கும் வந்து வந்து நின்று வணங்கிப் பணிந்தோம்.

அப்பர் பெருமானின் மூலத்திருமேனியைக் கண்டு பயபவ்யத்துடன் விழுந்தெழுந்து வணங்கி நகர்ந்தோம்.

சுவாமி வாயிலின் முகப்பில் அநுமன், சுவாமியைப் பூசிப்பது போல வண்ண ஓவியம் தீட்டப்பட்டிருந்ததை கண்டோம்.

முன் மண்டபம் வழியே உள்ளே சென்றால் நேரே சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கி இருந்தன. சுவாமிக்கு முன்புள்ள கம்பி தடுப்பு அருகே வந்து நின்றோம்.

திரையிட்டு அர்ச்சகர், சுவாமிக்கு நைவேத்யம் படைத்துக் கொண்டிருந்தார். நின்றபடியே கண்களை மூடியபடியே சிறிது நேரம் தியாணித்தோம்.

அர்ச்சகர் ஏற்றித்தந்த தீபாராதணையை ஒற்றிக் கொண்டு வணங்கினோம்.

இறைவன் இங்கு மணலான சுயம்புவாக காட்சியருளித் தந்தார். மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியை பெற்று வெளிவந்தோம்.

சுவாமி சந்நிதிக்கு வலப்புறமாக தெற்கு நோக்கியபடி இருந்த அம்பாள் சந்நிதிக்கு வந்தோம்.

கண்குளிர அம்மையைத் தரிசித்து மனங்குளிர பரவசம் பெற்று அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.

அனுமனுக்கு தனி சந்நிதி இவ்வாலயத்தில் இருக்கிறது.

இக்கோவிலை ஆஞ்சனேயர் உருவாக்கி சிவனை பூஜித்தார் என்று தலபுராணம் கூறுகிறது என அங்கிருந்தோர் கூறினர்.

திருமால் ராம அவதாரம் எடுத்த போது, அவருக்கு உதவுவதற்காக, ஈசனே ஆஞ்சநேயராக வந்தாராம்.

ஆக இந்த ஆஞ்சநேயர் சிவ அம்சமாகிறார். அந்த வகையில் இத்தலத்தில் சிவனே தன்னை வழிபடும் கோலத்திருப்பதாக கூறுகிறார்கள்.

ஆதலால் இவரை, சிவ ஆஞ்சநேயர் என்றும், சிவபக்த ஆஞ்சநேயர் என்றும் அழைக்கிறார்கள்.

இவர்தான் இத்தலத்தின் பிரசித்தி பெற்ற மூர்த்தியுமாவார்.

அமாவாசை அன்று இவரது சந்நிதியில் ஹோமம் நடத்துவிக்கிறார்கள்.

*தல அருமை:*

இராமேஸ்வரத்தில் சீதை பிரதிஷ்டை செய்த மணல் லிங்கத்தை தன் வாலினால் கட்டி அகற்ற முற்பட்ட போது அனுமனின் வால் அறுந்து போயிற்று.

சிவஅபராதம் நீங்க இராமர் அறிவுரைப்படி, ஆஞ்சனேயர் இத்தலத்திற்கு வந்து ஒரு லிங்கத்தை நிறுவி இறைவனை பூஜித்தார்.

வருடத்திற்கு ஒருமுறை சித்திரை மாதத்தில் இரண்டு குரங்குகள் இத்தலத்திற்கு வந்து, சிவலிங்கம் மீது வில்வ இலை தூவி வழிபடுகிறதை, அப்போதைய நேரத்தில் தரிசனத்திற்கு வந்திருப்போர் இதைக் காணப் பெறகின்றனர்.

இது ஊர் மக்கள் இன்றளவும் பார்க்கும் உண்மை சம்பவமாகும்.

ஆஞ்சனேயர் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டதால், சூரியன் மற்றும் சனியினால் ஏற்படக்கூடிய தோஷம் உடையவர்கள் இத்தலம் வந்து இறைவனையும் ஆஞ்சனேயரையும் வழிபட தோஷங்கள் நீங்கி நலமுடன் வாழ்வார்கள்.

ஆலய தீர்த்தம் கணபதி நதி எனப்படும் பழவாறு. இதில் நீராடினால் புத்திர பாக்கியம் ஏற்படும், திருமணத் தடை நீங்கும்.

*சிறப்பு:*

ஒவ்வொரு மாணவ, மாணவியரும் கண்டிப்பாக நினைவாற்றல், ஆழ்ந்த அறிவு, சோர்வின்மை பெற இக்கணபதிப் பொய்கையில் நீராடி குந்தளேஸ்வரரை அடிபணிய மேன்மையடைவர்.

‘‘திருக்கரக்கா விலுறை வில்வ தளமே

தேவரும் போற்றும் பாரிசாதமெனப்

பேச யீண்டு இறைபணியவே

கற்ற கல்வி வித்தை தழைத்தலோடு

உற்ற அறுபணியுங் காலத் தெட்டுமே’’ என்றார் இராம தேவர் எனும் சித்தர்.

ஈண்டு உறையும் தலவிருட்சம், வில்வமரம். இத்தலவிருட்சம், பாரிஜாதம் என்ற தேவலோகத்து மரத்தை யொத்திருப்பதென தேவர்கள் தொழுது போற்றுகின்றனராம்.

இதனை தொழுதபேருக்கு கற்ற வித்தைகள், கல்வி மேம்பாடு அடையும். படித்த படிப்புக்கு ஏற்ற வேலைவாய்ப்பு உருவாகும்.

அதுவும் தகுந்த காலத்தில் சீக்கிரமாக வேலை கிடைக்கும் என்கிறார் சித்தர்.

இத்திருத் தலத்திற்கு அருகில் எட்டு கி.மீ. தூரத்தில் நவகிரகங்களில் ஒன்றான செவ்வாயின் தலமாம் வைத்தீஸ்வரன் கோயில் இருக்கின்றது.

இத்திருத்தலத்தில் தொழுதக்கால் வைத்தியநாத சுவாமி அருளைப் பெறலாம் என்று பண்டைய பாடல் பேசுகிறது.

‘‘மேட விருச்சிகாசனை பரிகாரஞ் செய

யீண்டு குந்தளாம்பிகையானை

தொழுதக்கால் கூடுமே விமோசனம்’’ என்றார் அகத்தியர்.

பாவ விமோசனமோடு, பழி நீங்கவும் பெற்றார் என்கின்றார் காகபுஜண்டர்.

சேதுக்கரையில் ராமேஸ்வரத்தில் சிவபூஜை செய்ய எண்ணம் கொண்ட ராமன், ஆஞ்சநேயரிடம் ஒரு லிங்கம் எடுத்துவர ஆணையிட்டார்.

சற்று கால தாமதம் ஆகவே, முகூர்த்த நேரம் முடியும் முன், கடல் மணலில் சீதாபிராட்டியார் ஒரு லிங்கம் உருவாக்கினார்.

தாமதமாக வந்த ஆஞ்சநேய மூர்த்தி சற்று கோபம் கொண்டு, தனது வாலால் மணலால் ஆன லிங்கத்தை கலைக்க முற்பட்டு, தோற்றுப் போனார்.

வாலால் லிங்கத்தை உடைக்க முற்பட்டது பெரும் தோஷம். சிவ அபச்சாரம், சிவ அபச்சாரம் தீர மன்னிப்பு வேண்டி, ஆஞ்சநேயர் பூஜித்த லிங்கமே இந்த குந்தளேஸ்வரர் என்கின்றார் காக புஜண்டர்.

‘‘சிவனடியாருக்கு செய் அபச்சாரமும்

சிவாபச்சாரமும் அடியவர் தம்மை

நோவச் செய்த பிழையும் பொறுக்கவே

பொறுத்துத் தொழா நிற்குமிறை

குண்டலகேஸ்வர சுவாமியப்பரே’’ என்றார் போகமுனி.

சிவனுக்கு செய்யும் அபச்சாரத்தைவிட அதிக பாவம், சிவனடியாரைத் துன்புறுத்துவது.

அடியாருக்கு அடியாரை அவமதித்தல் பெரும் தோஷம். இவ்வாறு தம்மை அறியாது தவறு இழைத்திருந்தால் நாம் தொழவேண்டிய கோயில் குண்டலகேஸ்வரர் கோயிலே.

சிவ அபச்சாரம் செய்த ஆஞ்சநேயர், குந்தளேஸ்வரரை பழி நீங்க மலரிட்டு, வில்வத் தளத்தால் அர்ச்சித்தார்.

அப்போது அகத்தியரின் ஆலோசனைப்படி தனது காதில் அணிந்திருந்த திருக்குண்டலங் களைக் கழற்றி வில்வத் தளத்துடன் அர்ச்சித்தார்.

அப்போது அகத்தியப் பெருமான் *‘‘குண்டலகேஸ்வரா’’* என குந்தளேஸ்வரரை அழைக்க, தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர் என்கின்றார் கொங்கணர்.

‘‘குடமுனி மாற்றங்கொண்டு வில்வ

தளத்துடன் வாயுமைந்தா! செவியுறை

குண்டலத்தாலாராதனை புரியென்ன யவ்வண்

ணமே வானரயூத முக்கியோனாற்ற

‘குண்டலகேசுவராய நம‘ வென்றாங்

குடமுனியுமே’’

‘‘கண்டோம் யீண்டளவும் மேடத்தே

மந்தி யிரண்டு பில்வ தளமிட்டு

யீசனை யேத்த யது மாருதியே

யன்றி வேறில்லை சத்தியமே’’ என்றார் பாம்பாட்டி சித்தர்.

இக்கலியில், இத்தலத்திற்கு இரண்டு குரங்குகள் வருகின்றனவே என்ற கேள்வி எழுமானால், அதற்கு அகப்பைச் சித்தர் அழகுற விளக்கம் அளிக்கிறார்.

‘‘வாயுமைந்தனம்சமென மந்தியேகத்துடன்

இசைந்து வரவே சாம்பவானென அம்சம்

தாங்க அரூபமாய் அங்கதனொரு சுக்ரீவ

னுமுறைய ஞானவழி கண்டு மெய்சிலிர்த்தோமே’’ இப்பாடல் பற்பல ரகசியங்களை கை கோக்கின்றது.

மாருதி அம்சம் தாங்கி ஒரு குரங்கும், மற்றது ஜாம்பவானின் அம்சம் எனவும், அங்கதன், சுக்ரீவன் போன்ற ஏனைய வானர முக்கியஸ்தர்கள் அரூபமாகி வில்வத் தள ஆராத னையை பூஜித்து மகிழ்கின்றனராம்.

இத்திருக்கோயிலில் குந்தளநாயகி அம்மனுக்கு வளையல் சாத்தி வழிபட்டால் தீர்க்க சுமங்கலி பாக்கியமும், சத்புத்திர பேறும் சேரும் என்கின்றார் அகத்தியப் பெருமான்.

‘‘அம்பிகை குந்தளத் தாளுக்குக் கரவளை

சாத்தி தொழ மங்களங் குன்றா மகிமை

குலப் பெண்டிருக்கு கூடவே கூடுஞ்

சத்புத்ர சவுபாக்யமே’’

அமாவாசையன்று அன்னையை பூஜிப்பது சாலச் சிறந்தது என்கிறார் சித்தர்.

இத்திருத்தலத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சற்று வலதுபுறமாக திரும்பி இருக்கிறார்.

‘‘வலப்புறமே வதனங்காட்டு மண்ணல்

தென்திசைக் கோன் தம்மை மதியிலா

திதி தொழுவாருக்கு கோளால் கோளாறு

தோன்றாவே’’ என்றார் மூலர்.

நவகிரகங்களால் ஏற்படும் தீமையாவும் விலக, எந்த பாவத்துக்கும் விமோசனம் காண, இங்கு கோயில் கொண்டுள்ள தட்சிணாமூர்த்தியை தொழுகவே என்பது திருமூலர் வாக்கு.

கண் திருஷ்டி, ஓமல், தாண்டு தோஷம், காத்து, கருப்பு போன்றவற்றை விரட்டி அடிப்பாள் என்கின்றார் பொய்யாமொழியார்.

‘‘பொய்யாமொழி புகழுவோமே யன்னை

செல்லியம்மன் வாவிளங் காப்பாள்

அருளுடனே வலுவூட்டுவாள்

கண்ணேறுடனே கூடிய பதினாறு

தோஷமும் பீடையுமறுப்பாள் காத்துக்

கருப்பெனு மறுபத்து நான்கு வழி யாவியு

மழிப்பாளே’’

*அப்பர் தேவாரம்:*

1மரக்கொக் காமென வாய்விட் டலறிநீர்

சரக்குக் காவித் திரிந்தய ராதுகால்

பரக்குங் காவிரி நீரலைக் குங்கரைக்

குரக்குக் காவடை யக்கெடுங் குற்றமே.

🏾மரத்தின்கண் இருக்கும் கொக்கைப்போல வாய்விட்டுக்கூவி , தீயகுணங்களாகிய பொருள்களையே சுமந்து திரிந்து வருந்தாமல் , கால்வாய்கள் வழியாகப் பரந்து பாயும் காவிரி நீர் அலைக்கின்ற கரையில் உள்ளதாகிய குரக்குக்காவை அடைய , குற்றங்கள் கெடும் .

2.கட்டா றேகழி காவிரி பாய்வயல்

கொட்டா றேபுன லூறு குரக்குக்கா

முட்டா றாஅடி யேத்த முயல்பவர்க்

கிட்டா றாஇட ரோட எடுக்குமே.

🏾கட்டப்பட்ட கரைக்குள்ளடங்கிய நெறியின் வழியே கழிகின்ற காவிரி பாய்கின்ற வயல்களில் கொட்டும் நெறியெல்லாம் புனல் ஊறுகின்ற குரக்குக்காவினை முட்டாத நெறியே திருவடியேத்த முயலும் அடியவர்களுக்குப் பொருந்தும் நெறியாய துன்பங்கள் ஓடுமாறு அருள் புரிவான் இறைவன் .

3.கைய னைத்துங் கலந்தெழு காவிரி

செய்ய னைத்திலுஞ் சென்றிடுஞ் செம்புனல்

கொய்ய னைத்துங் கொணருங் குரக்குக்கா

ஐய னைத்தொழு வார்க்கல்ல லில்லையே.

🏾பக்கமெங்கும் கலந்து எழுகின்ற காவிரியின் வயல்களனைத்தினும் சென்றிடும் செம்புனல் வெள்ளம் கொய்மீன்களைக் கொணரும் குரக்குக்காவில் உள்ள ஐயனைத்தொழும் அடியார்களுக்கு அல்லல் இல்லை .

4.மிக்க னைத்துத் திசையும் அருவிகள்

புக்குக் காவிரி போந்த புனற்கரைக்

கொக்கி னம்பயில் சோலைக் குரக்குக்கா

நக்க னைநவில் வார்வினை நாசமே.

🏾அனைத்துத் திக்குகளும் மிகுந்து அருவிகள் புகுந்து பெருகுதலால் காவிரி போந்த புனற்கரையின் கண் கொக்குச் சாதிகள் பயிலும் சோலையை உடைய குரக்குக்காவின்கண் திகம்பரனாய பெருமானைப் போற்றிப் புகழ்வார் வினை நாசமாகும் .

5.விட்டு வெள்ளம் விரிந்தெழு காவிரி

இட்ட நீர்வய லெங்கும் பரந்திடக்

கொட்ட மாமுழ வோங்கு குரக்குக்கா

இட்ட மாயிருப் பார்க்கிட ரில்லையே.

🏾வெள்ளம் பொருந்தி விரிந்தெழுங் காவிரி இட்ட நீரானது வயல் எங்கும் பரந்திடுதலால் சிறந்து , மாமுழவுகள் கொட்ட ஓங்கும் குரக்குக்காவின் விருப்பமாய் இருப்பவர்களுக்கு இடர்கள் இல்லை .

6.மேலை வானவ ரோடு விரிகடல்

மாலும் நான்முக னாலும் அளப்பொணாக்

கோல மாளிகைக் கோயில் குரக்குக்காப்

பால ராய்த்திரி வார்க்கில்லை பாவமே.

🏾மேல் உலகத்திலுள்ள தேவர்களோடு விரிந்த கடலில் துயிலும் திருமாலும் , நான்முகனும் ஆகியவராலும் அளக்க வியலாத பெருமான் உறைவதும் , அழகு மிக்க மாளிகையாகிய கோயிலை உடையதுமாகிய குரக்குக்காவின்பால் வாழ்வோராய்த் திரிவோர்க்குப் பாவம் இல்லை .

7.ஆல நீழ லமர்ந்த அழகனார்

கால னையுதை கொண்ட கருத்தனார்

கோல மஞ்ஞைக ளாலுங் குரக்குக்காப்

பால ருக்கருள் செய்வர் பரிவொடே.

🏾கல்லால நிழற்கீழ் அமர்ந்த அழகரும் , காலனை உதைத்தலைக் கொண்ட கருத்தருமாகிய பெருமான் உறைகின்ற அழகு மிக்க மயில்கள் ஆர்க்கின்ற குரக்குக்காவின்பால் வாழ்வோர்க்குப் பரிவொடு அருள்செய்வர் .

8.செக்க ரங்கெழு செஞ்சுடர்ச் சோதியார்

அக்க ரையரெம் மாதி புராணனார்

கொக்கி னம்வயல் சேருங் குரக்குக்கா

நக்க னைத்தொழ நம்வினை நாசமே.

🏾செவ்வானத்தைப் போன்றெழுகின்ற சிவந்த சுடர் வீசும் சோதியாரும் , அக்கு மணியை இடுப்பில் அணிந்துள்ளவரும் , ஆதியிலே தோன்றிய பழமை உடையவரும் , கொக்குச் சாதிகள் வயலில் சேர்கின்ற குரக்குக்காவின் திகம்பரனுமாய பெருமானைத் தொழ நம்வினை நாசமாம் .

9.உருகி யூன்குழைந் தேத்தி யெழுமின்நீர்

கரிய கண்டன் கழலடி தன்னையே

குரவ னஞ்செழுங் கோயில் குரக்குக்கா

இரவு மெல்லியு மேத்தித் தொழுமினே.

🏾திருநீலகண்டன் கழலணிந்த பாதங்களை நீர் உருகி , உடல் குழைந்து ஏத்தி எழுவீராக . நம் செழுங்கோயிலாகிய குரக்குக் காவில் வீற்றிருக்கும் பரமாசாரியனாகிய அப்பெருமானையே இரவும் பகலும் ஏத்தித் தொழுவீர்களாக .

10.இரக்க மின்றி மலையெடுத் தான்முடி

உரத்தை யொல்க அடர்த்தா னுறைவிடம்

குரக்கி னங்குதி கொள்ளுங் குரக்குக்கா

வரத்த னைப்பெற வானுல காள்வரே.

🏾மலையெடுக்கலுற்ற இராவணன் முடிகளையும் ஆற்றலையும் சுருங்கும்படியாக இரக்கம் இல்லாமல் வருத்தியவனுக்கு இடமாகிய , குரங்குச்சாதி குதித்தலைக்கொள்ளும் குரக்குக்காவில் வரம் அருளும் அப்பெருமானைப் பெற வானுலகு ஆள்வர் .

திருச்சிற்றம்பலம்.

*திருவிழாக்கள்:*

அமாவாசை நாட்களில் ஹோமம் சிறப்பாக நடைபெறுகிறது.

சிவராத்திரி,

திருக்கார்த்திகை,

அனுமன் ஜெயந்தி, முதலானவை.

*தொடர்புக்கு:*

வி.ஆபத்சகாய குருக்கள்.

04364- 258785

Courtesy:Reposting it from Amirthavahini google group.

55 views0 comments
bottom of page