top of page

Power of spatigam

விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது…

1950-களில் ஒருநாள் ஒரு வானொலி நிருபர் ஸ்ரீமஹாபெரியவாளை பேட்டிகண்டு அதனை டேப்ரிகார்டரில் பதிவு செய்துகொண்டிருந்தார்.

திடீரென்று பெரியவா அவரிடமும்,அங்கு இருந்தவர்களிடமும்,”மிகவும் பழைய காலத்து வாய்ஸ் ரிகார்டர் எதுவென்று யாருக்காவது தெரியுமா” என்று கேட்டார்.

யாரும் பதில் சொல்லவில்லை.

பெரியவா மற்றொரு கேள்வியைக் கேட்டார், ”விஷ்ணு சஹஸ்ரநாமம் நமக்கு எப்படி கிடைத்தது?”

யாரோ ஒருவர்,”விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பீஷ்மர் நமக்குத் தந்தார்” என்றார்.

அனைவரும் “ஆம்” என்று ஒப்புக்கொண்டனர்.

பெரியவா சிரித்துக்கொண்டே தலையசைத்து விட்டு, மற்றொரு கேள்வியை வீசினார்,

”குருக்ஷேத்திரத்தில் அனைவரும் பீஷ்மர் சொன்ன விஷ்ணு சஹஸ்ரநாமத்தை பக்தியோடு கேட்டுக் கொண்டிருந்தபோது, அதனை குறிப்பெடுத்ததோ, எழுதிக்கொண்டதோ யார்?” மீண்டும் அமைதி.

ஸ்ரீசரணர் புன்னகையுடன் சொல்ல ஆரம்பி த்தார்

“பீஷ்மர், ஸ்ரீகிருஷணரின் புகழையும், பெருமைகளையும் விஷ்ணு சஹஸ்ரநாமத்தால் விளக்கிக் கொண்டிருந்தபோது, ஸ்ரீகிருஷணரும், வியாசரும் உட்பட அனைவரும் வேறு எந்த நினைப்புமின்றி அவரையே உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருந்தனர்.

பிதாமகர் பீஷ்மர் ஆயிரம் நாமங்களையும் சொல்லி முடித்தபின்பு அனைவரும் விழிப்படைந்தனர்.

முதலில் யுதிஷ்ட்டிரர் பேசினார்,

”பிதாமகர், ஸ்ரீவாசுதேவரின் ஒப்பற்ற பெருமை வாய்ந்த ஆயிரம் புனித நாமாக்களை சொன்னார். அவற்றைக் கேட்பதில் கவனமாக இருந்த நாம் அனைவரும் அவற்றை குறிப்பெடுக்கவோ, எழுதிக்கொள்ளவோ தவறிவிட்டோம்.

நாம் அற்புதமான விஷயத்தை இழந்து நிற்கின்றோம்” என்றார்.

அப்போதுதான் அனைவரும் எப்படிப்பட்ட தவறு நேர்ந்துவிட்டதென்று உணர்ந்து திகைத்தனர்.

பிறகு யுதிஷ்டிரர் ஸ்ரீகிருஷணரிடம் திரும்பி,”ஆயிரம் புனித நாமாக்களை மீட்டுத்தர தாங்களாவது உதவக்கூடாதா” என்று கேட்டார்.

ஸ்ரீகிருஷ்ணர் வழக்கம்போல், “என்னால் மட்டும் என்ன செய்ய முடியும்? உங்கள் எல்லோரையும் போல நானும் ஆச்சார்யர் பீஷ்மரைத்தான் பார்த்துக்கொண்டிருந்தேன் என்றார்.

அனைவரும் சேர்ந்து ஸ்ரீகிருஷ்ணரிடம், “ஹே.. வாசுதேவா, நீ ஆனைத்தும் அறிந்தவர். உம்மால் இயலாததென்பது எதுவுமே இல்லை. தாங்கள் தயைகூர்ந்து எங்களுக்கு உதவ வேண்டும்.

அந்த ஒப்புயர்வற்ற பெருமைவாய்ந்த பரந்தாமனின் ஆயிரம் புனித நாமாக்களை மீட்டுத்தர வேணடும். அது தங்களால் மட்டுமே முடியும்” என்று வேண்டினர்.

அதற்கு ஸ்ரீகிருஷ்ணர்,”இதனை செய்ய முடிந்த ஒருவர் உங்களுக்குள்ளேயே இருக்கின்றார்” என்றார்.

எவருக்கும் ஒன்றும் புரியவில்லை.

ஸ்ரீவாசுதேவர் தொடர்ந்தார்,”சகாதேவன் அதனை மீட்டு சொல்ல, வியாசர் எழுதுவார்” என்றார்.

அனைவரும் சகாதேவனால் எப்படி சஹஸ்ர நாமத்தை மீட்க முடியும் என்பதை அறிய ஆவலாக இருந்தனர்.

ஸ்ரீவாசுதேவர் கூறினார்,”உங்கள் அனைவருள்ளும் சகாதேவன் மட்டுமே ‘சுத்த ஸ்படிக’ மாலை அணிந்திருந்தான்.

சகாதேவன் சிவபெருமானை பிரார்த்தனை செய்து தியானித்து ‘சுத்த ஸ்படிகம்’ உள்வாங்கியுள்ள சஹஸ்ரநாமத்தை சப்த அலைகளாக மாற்ற, அதனை வியாசர் எழுதிக்கொள்ளுவார்” என்றார்.

‘சுத்த ஸ்படிகம்’ அமைதியான சூழ்நிலையில் எழும் சப்தங்களை கிரகித்துக்கொள்ளும்.

இது ஸ்படிகத்தின் குணம், தன்மை.

‘ஸ்வதம்பரராகவும்’ ‘ஸ்படிகமாகவும்’ இருக்கும் சிவபெருமானை தியானித்து அந்த சப்தங்களை மீட்க முடியும்.

உடனே சகாதேவனும் வியாசரும், பீஷ்மர் சஹஸ்ரநாமம் சொல்லிய அதே இடத்தில் அமர்ந்தனர்.

சகாதேவன் மஹாதேவரை பிரார்த்தித்து, தியானம் செய்து சஹஸ்ரநாமத்தை மீட்கத் துவங்கினர்.

அந்த ‘சுத்த ஸ்படிக’ மாலையே உலகின் முதல் ‘வாய்ஸ் ரிகார்டராக’, அற்புதமான விஷ்ணு சஹஸ்ரநாமத்தை நமக்குத் தந்தது………..”

என்று சொல்லி குழந்தைபோல சிரித்தார் ஸ்ரீசரணர்.

ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர.

Courtesy:Reposting it from Amirthavahini Google group.

61 views0 comments
bottom of page