top of page

திருக்கஞ்சனூர்

சிவாயநம திருச்சிற்றம்பலம்.

பதியும் பணியே பணியாய் அருள்வாய்.

*கோவை கு. கருப்பசாமி.*

__________________________________________

நேரில் சென்று தரிசித்ததைப் போல.................

_________________________________________

*தேவாரம் பாடல் பெற்ற தல எண் 181.*

*பாடல் பெற்ற சிவ தல தொடர்.*

*சிவ தல அருமைகள் பெருமைகள்.*

*அக்னீஸ்வரர் திருக்கோயில், திருக்கஞ்சனூர்.*

_________________________________________

தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரையில் அமைந்துள்ள அறுபத்து நான்கு தலங்களில் இத்தலம் முப்பத்து ஆறாவது தலமாகப் போற்றப் படுகிறது.

*இறைவன்:* அக்னீஸ்வரர்.

*இறைவி:* கற்பகாம்பிகை.

*தல விருட்சம்:* பலாசமரம்.

*தல தீர்த்தம்:* அக்கினி தீர்த்தம், பராசர தீர்த்தம்.

*ஆகமம்:* காமீக ஆகமம்.

*தேவாரம் பாடியவர்கள்:*

அப்பர்- ஆறாம் திருமுறையில் ஒரே ஒரு பதிகம் மட்டும்.

*இருப்பிடம்:*

கும்பகோணம்- பந்தநல்லூர் சாலையில் சென்று, கதிராமங்கலத்தை அடைந்து, அங்கிருந்து வலப்புறமாகச் செல்லும் பாதையில், கஞ்சனூர் என்னும் வழிகாட்டி பலகை காட்டும் திசையில் பிரிந்து இடப்புறமாகத் திரும்பி, சிறிது தூரம் சென்றால், கோயிலை அடையலாம்.

ஆடுதுறைக்கு வடக்கே நான்கு கி.மீ. தொலைவில் இருக்கிறது.

*பெயர்க்காரணம்:*

கஞ்சன் வழிபட்டதால் கஞ்சனூர் எனப் பெயர். பலாசவனம், பராசரபுரம், பிரம்மபுரி, அக்னிபுரம், கம்சபுரம், முத்திபுரி போன்றவை இத்தலத்தின் வேறு பெயர்களாகும்.

*கோவில் அமைப்பு:*

இவ்வாலத்துக்கு நாம் வந்திருந்தபோது, இக்கோயிலின் இராஜகோபுரம் ஐந்து நிலைகளைத் தாங்கி காட்சி காட்சியானது.

*சிவ சிவ, சிவ சிவ* கோபுரத்தை வணங்கிக் கொண்டோம்.

பார்க்கும்போதே தெரிந்ததது இது பழமையான ஆலயம் என உறுதிபட தெரிந்தது.

தெற்கு திசையில் இருந்த வாயில் வழியாக உள்ளே புகுந்ததும், உள் மண்டபம் காணக் கிடைத்தது.

மண்டபத்தைத் தாண்டியதும், இதனின் இடப்புறத்தில் விநாயகர் காட்சியானார்.

விடுவோமா? சடுதியில் காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டுக் கொண்டு,வணங்கிக் கொண்டோம்.

இதனின் வலப்புறத்தில் விஸ்வநாதர் சந்நிதி இருக்க, முன் நின்று வணங்கித் தொழுதோம்.

உள்மண்டபத்தையும் தாண்டிச் செல்லுகையில், இதனின் இடதுபுறமாக வெளவால் நெத்தி மட்டத்தில், விநாயகர், மயூரசுப்பிரமணியர், மகாலட்சுமி ஆகிய சந்நிதிகள் இருக்க ஒவ்வொருவரையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.

தலமரமான புரசுமரம் (பலாசுமரம்) இருந்தது. இம்மரத்தின் கீழ் அக்னீஸ்வரர் எனும் பெயருடனான லிங்கம் இருப்பதைப் பார்த்து வணங்கி நகர்ந்தோம்.

மேலும் மானக்கஞ்சாறர் நாயனார், கலிக்காம நாயனார் உருவத் திருமேனிகள் இருக்க, சிரமேற் கைகுவித்து வணங்கிக் கொண்டோம்.

இதனின் பக்கத்தில் *சுரைக்காய் பக்தர்* என்ற அடியார் மனைவியுடன் காட்சி கிடைத்தது. இவ்வடியார் பெருமக்களை கண்டு தொழுது கொண்டோம்.

அடுத்து, மகாமண்டபத்தில் பைரவர், சூரியன், சந்திரன், சனி பகவான், நவக்கிரக சந்நிதி மற்றும் நால்வர் சந்நிதிகள் இருக்க ஒவ்வொருவரையும் தொடர்ச்சியாக வணங்கிக் கொண்டு நகர்ந்தோம்.

இங்கிருக்கும் நடராஜசபை மிக மிக அற்புதம்.

நடராஜப் பெருமானின் திருமேனியில் சிவகாமியுடன் இருக்கக்க கண்டது, அழகாவும் இருந்தது. வியக்கும் தன்மையில் திருமேனி காட்சி கிடைத்தது.

கைகளை உயரத் தூக்கி, பிராத்தித்து, திருமேனியை ரசித்தப் பார்வையுடன் கைதொழுது கொண்டோம்.

இந்நிலையான மூர்த்தி தான், பராசர முனிவருக்கும் தாண்டவக்கோனே காட்சி அருளியவர்.

இந்தாண்டும் தான் *முக்திதாண்டவம்* எனப்படுகிறது.

மேலும், இம்மண்டபத்தையும் முக்தி மண்டபம் என்று கூறுகிறார்கள்.

அடுத்து, வாயில் கொடிமரத்தைக் கண்டு, நெடுஞ்சான்கிடையாக விழுந்தெழுந்து, சிரம் கரங்கள் புஜங்கள் செவிகள் தோள்கள் புரள வணங்கியெழுந்து பணிந்து நிமிர்ந்தோம்.

இதனின் அடுத்து, நந்தியாரைக் கண்டோம். முதலில் வணங்கிக் கொண்டோம். பிறகு ஆலயப்பிரவேசம் செய்து ஈசனை வணங்குவதற்கு அனுமதி வேண்டிக் கொண்டோம்.

இந்த நந்தியும் விசேஷமிக்கவர் ஆவார் என அனேகர்கள் கூறினார்கள்.

இந்தக் கல்நந்திதான் புல் அருந்தியவர். இந்நிகழ்வு மிகப் பிரமாதம் மட்டுமல்ல, அதிசயங்கூட.

அடுத்திருந்த இடத்தில், உற்சவத் திருமேனிகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தது காணக் கிடைத்தது.

மூலவரின் சந்நிதிக்கு வந்தோம். சந்நிதியில் கிழக்குப் பார்த்த வண்ணம், அருளிக் கொண்டிருந்தார்.

சற்றே உயரமாண பாணந்தான். சுயம்புவானவருங்கூட. மனநிறைவான தரிசனம் கிடைத்தது.

மனமுருகி பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு, அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியை பெற்று வெளிவந்தோம்.

இதனின் பின், அம்பாள் சந்நிதி சென்றோம். அம்மை நின்ற திருக்கோலத்துடன் காட்சி தந்தாள்.

இங்கேயும் மனமுருக பிரார்த்தனை செய்து வணங்கிக்கொண்டு அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.

*தல சிறப்பு:*

பராசர முனிவருக்கு பீடித்திருந்த சித்தபிரமை இத்தலத்தில்தான் நீங்கப் பெற்றது.

இத்தலத்தில்தான் ஈசனின் திருமணக் காட்சி கிடைத்தது.

அக்னிக்கு ஏற்பட்டிருந்த சோகை நோய் இத்ததல்த்தில்தான் ஒழியப் பெற்றது.

இத்தலத்தில் சந்திரனுக்கு இருந்த சாபம் நீங்கப் பெற்றது.

கம்சன் எனும் மன்னனுக்கு உண்டாகியிருந்த உடற்பிணி இந்த தலத்தில் தான் நீங்கப் பெற்றது.

இத்தலத்திலே கலிக்காம நாயனாருக்கு திருமணம் நடந்தது.

மானக்கஞ்சாற நாயனார் அவதரித்ததும் இத்தலத்தில் தான். அவர் வழிபாடு செய்து வந்ததும் இத்தலத்தில்தான்.

பஞ்சாட்சர மகிமையை வெளிப்படுத்திய ஹரதத்த சிவாசாரியார் என்பவர் அவதரித்த தலம் இது.

கஞ்சனூரில் வாசுதேவன் என்ற வைரவருக்கு ஒரு குழந்தை பிறந்தது.

அக்குழந்தை சிவ பக்தியுடன் சிறந்து விளங்கி வளர்ந்தது.

திருநீறு உருத்திராக்கதாரியாகத் திகழ்ந்த இக்குழந்தையை மாற்றம் செய்ய, என்னவெல்லாமோ முயற்சி செய்து பார்த்தனர். அது முடியவில்லை.

ஒருமுறை, பழுக்கச் சிவக்க காய்ச்சிய இரும்பு முக்காலியில் அமர்ந்து, *சிவமே பரம்பொருள்"* என்று மூன்று முறை கூறியதைக் கண்ட அனைவரும் வியந்து போயினர்.

இக்காட்சியை சித்தரிக்கும் உருவம் இக்கோயிலில் இருக்கிறது.

மேலும், ஹரதத்தருக்கு உபதேசித்து அருள் செய்த தட்சிணாமூர்த்தி திருவுருவில் ஹரதத்தரின் உருவமும் இருக்கிறது.

இம்மூர்த்திதான், சுதர்சனரை ஆட்கொண்டு, ஹரதத்தர் எனும் பெயரளித்துச் சிவநாம தீட்சை செய்தவர்.

இவ்வாலயத்தில் ஹரதத்தரின் குடும்பமும், ஏழை அந்தணராக வந்த இறைவனின் திருவுருவமும் இங்கு இருக்கின்றன.

ஊருக்குள் வரும்போது, அரசமரத்தின் எதிரில், கிழக்கு பார்த்து ஹரதத்தர் சிவபூஜை செய்வதுபோல, ஹரதத்தரின் தனிக்கோயில் ஒன்றும் இருக்கிறது.

*கல்நந்தி புல் அருந்தியது:*

பிராமணர் ஒருவர் புல்லுக்கட்டு ஒன்றை தெரியாமல் கன்றின் மீது போட்டு விட்டதால், பசுகன்று இறந்து போயிற்று.

இதனால் அந்த அந்தணருக்கு பசு தோஷம் பீடித்தது.

பிராமணக் கூட்டத்தாரும், இவரை அவர்களிடமிருந்து விலக்கி வைத்து விட்டனர்.

உடனே அந்த பிராமணன் ஹரதத்தரின் சென்று, நடந்ததை பஞ்சாட்சரத்தை சொல்லியவாறே விவரித்துக் கூறினார்.

இதைக் கேட்ட ஹரதத்தர், நீ பஞ்சாட்சரத்தைச் சொல்லியதால், உனக்குப் பீடித்திருந்த பசுசாபம் நீங்கப் போய்விட்டது என கூறினார்.

இச்செய்தி உண்மையல்ல! என்று பிராமணக்

கூட்டத்தார் அனைவரும் கூறினர்.

மேலும் தங்களுக்கு நேரடியாக சான்று காட்ட வேண்டும் என்றும் கூறிவிட்டனர்.

உடனே ஹரதத்தர் பிராமணடரிடம், நீ காவிரியில் வளர்ந்திருக்கும் கைப்புல்லை அறிந்து கொண்டு வந்து, இந்தக் கல்நந்திக்கு உண்ணக் கொடு என பணித்தார்.

பிராமணரும் இவ்வாறே காவிரியிலுள்ள கைப்புல்லை அறிந்து கொண்டு வந்து கல்நந்தியிடம் நீட்டி,........

இந்தக் கல்நந்தி இப்புல்லைத் தின்னுமானால், பஞ்சாட்சரத்தால் தோஷம் விலகப் பெறும் என்று சொல்லி, புல்லை நீண்ட, கல்நந்தியும் வாய்திறந்து புல்லை மென்று அசையிட்டன.

இக்கல்நந்தி புல்லை மென்று அசைபோட்டதனால், இக்கன்றின் நாக்கு வெளித்தெரியவில்லை நமக்கு.

*சப்தஸ்தானம்:*

திருக்கஞ்சனூர் சப்தஸ்தானத்தில் இடம் பெறும் ஏழூர்த்தலங்கள்.

1.கஞ்சனூர்,

2.திருக்கோடிக்காவல்,

3.திருவாலங்காடு,

4.திருவாவடுதுறை,

5ஆடுதுறை,

6.திருமங்கலக்குடி,

7திருமாந்துறை.(தென்கரை மாந்துறை) ஆகிய தலங்களாகும்.

*தலவிருட்ச பெருமை:*

இத்தலத்து தலவிருட்சத்தை ஒரு மண்டல காலம் பதினாறு முறை சுற்றி வந்து வழிபட்டால், கடன் தொல்லை தீரும் என்பது தொன்நம்பிக்கையாகும்.

*தல பெருமை:*

அமுதம் பெறுவதில் தேவர்கள் செய்த செயலால் கடும் கோபமடைந்த அசுரர்கள், தங்கள் குலகுரு சுக்கிராச்சாரியாரிடம் முறையிட்டனர்.

அவர் தேவர்களை நாடு நகரம் இழந்து பூலோகம் சென்று துன்புற சாபம் தந்தார்.

சாபம் பெற்ற தேவர்கள் வியாச முனிவரிடம் முறையிட்டனர்.

அவர் உத்திரவாஹினி என வழிபடப்படும் வடகாவிரியில் நீராடி *ஸ்ரீகற்பகாம்பிகை சமேத ஸ்ரீ அக்னீஸ்வரரை* வழிபட சுக்கிரன் சாபம் நீங்கும் என்று வழிகாட்டினார்.

தேவர்களும் அவ்வாறே வழிபட்டு சாபவிமோசனமும், சிவபெருமான் தரிசனமும் பெற்றனர்.

*தல அருமை:*

அக்னீஸ்வரன் ஒருமுறை பிரம்மதேவர் செய்த யாகத்தில் சேர்க்கப்பட்ட ஆகுதிகளைத் தேவர்களிடம் தராமல் விட்டுவிட்டார்.

இதனால் சாபம் பெற்று *’பாண்டு ரோகம்’*நோய் அவரைப் பற்றிக் கொண்டது.

இதிலிருந்து விடுபட அக்னிபகவான் பிரம்மதேவன் ஆலோசனைப்படி இங்கு வந்து தீர்த்தம் உருவாக்கி, இத்தல இறைவனை வழிபட்டு நோய் தீர்ந்தார்.

இதனால் இத்தல இறைவனுக்கு

*அக்னீஸ்வரர்* என்ற திருப்பெயரும், அவர் உருவாக்கிய தீர்த்தத்திற்கு *அக்னி தீர்த்தம்* என்ற பெயரும் ஏற்பட்டது.

அக்னிதேவனின் நோயால் ஆரம்பித்த யாகம் தடைபட்டதால், படைப்புத் தொழிலைத் தொடங்க முடியாத பிரம்மதேவரும் இங்கு வந்து சிவபெருமானை நோக்கித் தவமிருந்து அவர் அருளால் படைப்புத் தொழிலைத் தொடங்கினார்.

இதனால் இத்தலத்தில் ஓடும் காவிரி நதிக்கு *’பிரம்ம தீர்த்தம்’*என்ற பெயர் ஏற்பட்டது.

ஒரு செல்வந்தர் தினந்தோறும் அக்னீஸ்வரருக்கு நைவேத்தியம் படைத்து வந்தார்.

அன்றாடம் அவர் கனவில் இறைவன் தோன்றி அவ்வுணவை உண்பதுபோலக் காட்சி தருவதுபோல தொடர்ந்து நடந்து வந்தது.

ஒருநாள் அக்கனவு அவருக்குத் தோன்றவில்லை.

காரணம் புரியாது அவர் விழித்தார். விசாரித்தார்.

அன்று அக்னீஸ்வரர், ஹரதத்தரிடம் ஏழைப் பிராமணர் வடிவில் சென்று கஞ்சியை வாங்கி உண்டதாகவும், அதனால் வயிறு நிரம்பிவிட செல்வந்தரின் உணவை ஏற்கவில்லை என்றும் தெரிந்து உணர்ந்தார்.

இதன்மூலம் ஹரதத்தரின் பெருமையை அறிந்து அச்செல்வர் அவரை நாடிச்சென்று வணங்கியதாக வரலாறு உண்டு.

*அப்பர் தேவாரம்:*

1.மூவிலைநற் சூலம்வலன் ஏந்தி னானை

மூன்றுசுடர்க் கண்ணானை மூர்த்தி தன்னை

நாவலனை நரைவிடையொன் றேறு வானை

நால்வேதம் ஆறங்க மாயி னானை

ஆவினிலைந் துகந்தானை அமரர் கோவை

அயன்திருமா லானானை அனலோன் போற்றுங்

காவலனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்

கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

🏾மூவிலை கொண்ட நல்ல சூலத்தை வலக்கையில் ஏந்தினவனும் , சூரியன் , சந்திரன் , அக்கினி என்னும் முச்சுடர்களாகிய கண்ணினனும் அழகிய தோற்றத்தினனும் , நாவலனும் , வெள்ளிய இடபம் ஒன்றை ஊர்பவனும் , வேதம் நான்கும் அங்கம் ஆறும் ஆயினவனும் , பசு தரும் பஞ்சகவ்வியத்தை விரும்பியவனும் , தேவர்களுக்குத் தலைவனும் , பிரமனும் திருமாலும் ஆனவனும் , அக்கினியால் போற்றப்படும் காவலனும் , கஞ்சனூர் ஆண்ட கோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல்வரும் பிறப்பை நீங்கினேன் .

2.தலையேந்து கையானை யென்பார்த் தானைச்

சவந்தாங்கு தோளானைச் சாம்ப லானைக்

குலையேறு நறுங்கொன்றை முடிமேல் வைத்துக்

கோணாக மசைத்தானைக் குலமாங் கைலை

மலையானை மற்றொப்பா ரில்லா தானை

மதிகதிரும் வானவரும் மாலும் போற்றுங்

கலையானைக் கஞ்சனூ ராண்ட கோவைக்

கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

🏾பிரமகபாலத்தை ஏந்திய கையினனும் , எலும்பை மாலையாகக் கோத்து அணிந்தவனும் , பிரமவிட்டுணுக்களுடைய எலும்புக்கூடுகளைத் தாங்கும் தோளினனும் , வெண்ணீற்றுப் பூச்சினனும் , கொத்தாய்ப் பொருந்திய நறிய கொன்றை மலர்களை முடிமேல் கொண்டவனும் , கொடுமை வல்ல நாகத்தை உடை மேல் கட்டியவனும் , மேன்மை மிக்க கயிலை மலையவனும் , தனக்குவமை யில்லாதவனும் , சந்திரனும் , சூரியனும் தேவர்களும் திருமாலும் போற்றும் உருவத்திருமேனி உடையவனும் , கஞ்சனூரை ஆண்ட கோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல் வரும்பிறப்பை நீங்கினேன் .

3.தொண்டர்குழாம் தொழுதேத்த அருள்செய் வானைச்

சுடர்மழுவாட் படையானைச் சுழிவான் கங்கைத்

தெண்டிரைகள் பொருதிழிசெஞ் சடையி னானைச்

செக்கர்வா னொளியானைச் சேரா தெண்ணிப்

பண்டமரர் கொண்டுகந்த வேள்வி யெல்லாம்

பாழ்படுத்துத் தலையறுத்துப் பற்கண் கொண்ட

கண்டகனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்

கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

🏾தொண்டர்கூட்டமாய்த் திரண்டு தொழுது புகழ அவர்க்கு அருள்செய்பவனும் , ஒளிரும் மழுவாயுதத்தை உடையவனும் , சுழியையுடையதும் , தெளிந்த திரைகளால் மோதி இழிவதும் ஆகிய ஆகாய கங்கையைத் தாங்கிய சடையினனும் , செவ்வானம் போன்ற ஒளியினனும் , தன்னை அடையாமல் பண்டு அமரர்கள் கூடி ஆராய்ந்து மேற்கொண்டு விரும்பிச் செய்த தக்கனுடைய வேள்வி முழுதும் பாழ் செய்து தக்கனையும் எச்சனையும் தலையறுத்துச் சூரியனைப் பல்தகர்த்துப் பகனைக் கண் பறித்துக் கொண்ட கொடியவனும் , கஞ்சனூரை ஆண்டகோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல் வரும் பிறப்பை நீங்கினேன் .

4.விண்ணவனை மேருவில்லா வுடையான் தன்னை

மெய்யாகிப் பொய்யாகி விதியா னானைப்

பெண்ணவனை ஆணவனைப் பித்தன்தன்னைப்

பிணமிடுகா டுடையானைப் பெருந்தக் கோனை

எண்ணவனை எண்டிசையுங் கீழும் மேலும்

இருவிசும்பும் இருநிலமு மாகித் தோன்றுங்

கண்ணவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்

கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

🏾சிவலோகனாய், மேருமலையை வில்லாக உடையவனாய், ஞானியர்க்கு உண்மைப் பொருளாகி, உணர்வில்லார்க்கு இல்பொருள் ஆகி அறநெறியும் அருள்நெறியும் ஆனவனும், பெண் ஆண் ஆனவனும், பித்தனும், பிணத்தைப் புதைக்கும் இடுகாட்டை இடமாகக் கொண்டவனும், மேலான தகுதியினனும், எண்ணமானவனும், எட்டுத் திசைகளும் கீழும் மேலும் பெரிய ஆகாயமும் பரந்த நிலமும் ஆகித் தோன்றுபவனும், கண்போற் சிறந்தவனும், கஞ்சனூரை ஆண்ட கோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு, மேல் வரும் பிறப்பை நீங்கினேன்.

5.உருத்திரனை உமாபதியை உலகா னானை

உத்தமனை நித்திலத்தை ஒருவன் தன்னைப்

பருப்பதத்தைப் பஞ்சவடி மார்பி னானைப்

பகலிரவாய் நீர்வெளியாய்ப் பரந்து நின்ற

நெருப்பதனை நித்திலத்தின் தொத்தொப் பானை

நீறணிந்த மேனியராய் நினைவார் சிந்தைக்

கருத்தவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்

கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

🏾உருத்திரனும் , உமாபதியும் , உலகு ஆள்பவனும் , உத்தமனும் , நித்திலம் அனையவனும் , ஒப்பற்றவனும் , மலையாய் விளங்குபவனும் , மயிர்க் கயிறாகிய பஞ்சவடிப்பூணூல் திகழ் மார்பினனும் , பகலும் , இரவும் , நீரும் , ஆகாயமும் , பரவிய நெருப்பும் ஆனவனும் , முத்தின்கொத்து ஒக்கத் திகழும் திருநீற்றுக் கீற்றினனும் , திருநீற்றைப் பூசிய மேனியை உடையவராய் , இடைவிடாது நினைக்கும் அன்பர்களின் மனத்தில் உறைபவனும் , கஞ்சனூர் ஆண்ட கோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல் வரும் பிறப்பை நீங்கினேன் .

6.ஏடேறு மலர்க்கொன்றை யரவு தும்பை

இளமதியம் எருக்குவா னிழிந்த கங்கை

சேடெறிந்த சடையானைத் தேவர் கோவைச்

செம்பொன்மால் வரையானைச் சேர்ந்தார் சிந்தைக்

கேடிலியைக் கீழ்வேளூ ராளுங் கோவைக்

கிறிபேசி மடவார்பெய் வளைகள் கொள்ளுங்

காடவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்

கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

🏾இதழ் செறிந்த கொன்றைமலர் , பாம்பு , தும்பைப்பூ , பிறைச்சந்திரன் , எருக்க மலர் , வானின்றிறங்கிய கங்கை ஆகியவைகளால் அழகு விளங்கிய சடையினனும் , தேவர்க்குத் தலைவனும் , பெரிய செம்பொன்மலை போன்றவனும் , தன்னை அடைந்தார் சிந்தையில் கேடின்றி இருப்பவனும் , கீழ்வேளூரிலிருந்து ஆளும் அரசனும் , மடவார்கைகளில் அணிந்துள்ள வளைகளைப் பொய்பேசிக் கவர்ந்து கொள்ளும் அதிசயிக்கத்தக்க திறனுடையவனும் , கஞ்சனூர் ஆண்ட கோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல் வரும் பிறப்பை நீங்கினேன் .

7.நாரணனும் நான்முகனும் அறியா தானை

நால்வேதத் துருவானை நம்பி தன்னைப்

பாரிடங்கள் பணிசெய்யப் பலிகொண் டுண்ணும்

பால்வணனைத் தீவணனைப் பகலா னானை

வார்பொதியும் முலையாளோர் கூறன் தன்னை

மானிடங்கை யுடையானை மலிவார் கண்டங்

கார்பொதியுங் கஞ்சனூ ராண்ட கோவைக்

கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

🏾திருமாலும் , நான்முகனும் , அறியாதவனும் , வேதமந்திர உருவினனும் , ஆடவருட்சிறந்தவனும் , பூதங்கள் தான் ஏவிய பணிகளைச் செய்ய தான் பிச்சை ஏற்று உண்ணும் பால் நிறத்தவனும் , தீ நிறத்தவனும் , பகல் ஆனவனும் , கச்சணிந்த கொங்கை யாளை உடலின் ஒரு கூற்றாகக் கொண்டவனும் , மானை இடக்கையில் ஏந்தியவனும் , தேவர்கள் மகிழ்ச்சி நிறைவதற்குக் காரணமானவனாய் , கழுத்துக் கருநிறத்தால் மூடப்பட்டவனும் , கஞ்சனூர் ஆண்ட கோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல் வரும் பிறப்பை நீங்கினேன் .

8.வானவனை வலிவலமும் மறைக்காட் டானை

மதிசூடும் பெருமானை மறையோன் தன்னை

ஏனவனை இமவான்றன் பேதை யோடும்

இனிதிருந்த பெருமானை ஏத்து வார்க்குத்

தேனவனைத் தித்திக்கும் பெருமான் தன்னைத்

தீதிலா மறையோனைத் தேவர் போற்றுங்

கானவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்

கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

🏾வானிடத்தவனும் , வலிவலமும் மறைக்காடும் உறைபவனும் , மதிசூடும் பெருமானும் , ஆதி அந்தணனும் , மற்றை வருணத்தினனும் , இமவான் மகள் பார்வதியோடும் இனிதிருந்து அருள்செய்யும் பெருமானும் , தன்னை ஏத்தி வணங்குவார்க்குத் தேன் போன்று தித்திப்பவனும் , தீது இல்லாமல் அவர்களைக் காத்தற் பொருட்டுக் காலம்பார்த்துக் கரந்து நிற்பவனும் , தேவராற் போற்றப்படும் வேட்டுவனும் கஞ்சனூராண்ட கோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல் வரும் பிறப்பை நீங்கினேன் .

9.நெருப்புருவத் திருமேனி வெண்ணீற் றானை

நினைப்பார்தம் நெஞ்சானை நிறைவா னானைத்

தருக்கழிய முயலகன்மேல் தாள்வைத் தானைச்

சலந்தரனைத் தடிந்தோனைத் தக்கோர் சிந்தை

விருப்பவனை விதியானை வெண்ணீற் றானை

விளங்கொளியாய் மெய்யாகி மிக்கோர் போற்றுங்

கருத்தவனைக் கஞ்சனூ ராண்ட கோவைக்

கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

🏾நெருப்புநிறமுடைய அழகிய திருமேனியில் வெண்ணீற்றை அணிந்தவனும் , நினைப்பவர் நெஞ்சில் நிலைத்து நிற்பவனும் , எங்கும் நிறைந்தவனும் , முயலகன்மேல் காலை ஊன்றி ஆடியவனும் , சலந்தரனைப் பிளந்திட்டவனும் , ஞானிகள் சிந்தையில் விரும்பி வாழ்பவனும் , வேதவிதியானவனும் , சிவாகமவிதியாய் விளங்குபவனும் , இயல்பாகவே விளங்கும் ஒளியாய் , மெய்ப் பொருளாய் , மேலோர்கள் போற்றும் கருத்தாய்த் திகழ்பவனும் , கஞ்சனூர் ஆண்ட கோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக் கண்டு மேல் வரும் பிறப்பை நீங்கினேன் .

10.மடலாழித் தாமரைஆ யிரத்தி லொன்று

மலர்க்கணிடந் திடுதலுமே மலிவான் கோலச்

சுடராழி நெடுமாலுக் கருள்செய் தானைத்

தும்பியுரி போர்த்தானைத் தோழன் விட்ட

அடலாழித் தேருடைய இலங்கைக் கோனை

அருவரைக்கீழ் அடர்த்தானை அருளார் கருணைக்

கடலானைக் கஞ்சனூ ராண்ட கோவைக்

கற்பகத்தைக் கண்ணாரக் கண்டுய்ந் தேனே.

🏾இதழுடைய வட்டமான தாமரை மலரில் ஆயிரத்தில் ஒன்றாகத் தன் தாமரை மலர்போலும் கண்ணைப் பெயர்த்து இடுதலும் நிறைந்த பெரிய அழகினையும் ஒளியையும் உடைய சக்கராயுதத்தை நெடு மாலுக்கு அருள் செய்தவனும் , யானைத் தோலைப் போர்வையாகக் கொண்டவனும் , தன் நண்பன் குபேரன் தோற்றுக் கைவிட்ட வலிய சக்கரத்தையுடைய தேரினைத் தன் உடைமை ஆக்கிக்கொண்ட இலங்கைக்கோனை எடுத்தற்கரிய கயிலை மலைக்கீழ் வைத்து நெரித்தவனும் , பின் அவனுக்கு அருளுதலைப் பொருந்திய கருணைக் கடலானவனும் , கஞ்சனூர் ஆண்டகோவும் ஆகிய கற்பகத்தைக் கண்ணாரக்கண்டு , மேல் வரும் பிறப்பை நீங்கினேன்.

திருச்சிற்றம்பலம்.

*திருவிழாக்கள்:*

மாசி மகத்தில் பெருவிழா ஏகதின விழாவாக நடத்தப்படுகிறது.

தைத் திங்களில் ஹரதத்தருக்கு காட்சி கொடுத்த விழா.

ஆடிப்பூரம்,

திருவாதிரை,

நவராத்திரி,

சிவராத்திரி, முதலியன.

*தொடர்புக்கு:*

நீலகண்ட குருக்கள்.

0435- 2470155

திருக்கோவில்- 0435 2473737

Reposting it from Amirthavahini Google Group.

84 views0 comments
bottom of page