திருக்கொள்ளிக்காடு!

!டிச.2017, 19ம் தேதி, விருச்சிக ராசியிலிருந்து, தனுசு ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி. இக்காலகட்டத்தில், திருவாரூர் மாவட்டம், திருக்கொள்ளிக்காடு கிராமத்தில் கையில் கலப்பையுடன் அருள்பாலிக்கும், சனீஸ்வரரை, குடும்பத்துடன் வணங்குவது சிறப்பு! காதல் என்பதற்கு, பஞ்சையும், நெருப்பையும் உதாரணம் சொல்வர். அக்னியும், பஞ்சும் ஒன்றோடு ஒன்று இயைந்து விடும்; தம்பதியரும் இப்படித் தான் பிரியாமல் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில், ஒற்றுமையான இல்லறத்திற்கு எடுத்துக்காட்டாக, இத்தலத்தில், அக்னீஸ்வரர் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார், சிவபெருமான். அம்பாளின் பெயர், பஞ்சின் மெல்லடியாள். மனைவி இல்லாமல் செய்யும் தானத்துக்கு மதிப்பில்லை; தானம் செய்யும் போது மனைவியும் அருகில் இருக்க வேண்டும். இதனால் தான் மனைவியை, 'தர்மபத்தினி' என்பர். இங்கு, அக்னீஸ்வரர், தன் மனைவியுடன் இணைந்து, பக்தர்களுக்கு அருள் புரிகிறார். ஏழரை, அஷ்டமம், கண்டச்சனி காலங்களில், சனீஸ்வரர் சிரமம் தருவாரோ என எண்ணுவதுண்டு. அந்த பயத்தைப் போக்கும் வகையில், தனி சன்னிதியில், கலப்பை மற்றும் அம்பு, சூலம் ஏந்தியவாறு, பொங்கு சனியாக அருளுகிறார், சனீஸ்வரர். அத்துடன், வழக்கமாக, ஈசான்ய மூலையில் பைரவர், மகாலட்சுமி சன்னிதிகள் அமைப்பதுண்டு. ஆனால், இங்கு, மகாலட்சுமியின் ஸ்தானத்தில் சனீஸ்வரர், வற்றாத பணமும், தானியங்களும் தருகிறார் என்பது, விசேஷம். மேலும், நவக்கிரக சன்னிதி மற்ற கோவில்களில் இருப்பது போன்று இல்லாமல், 'ப' வடிவில் உள்ளது. வரிசையாக இருக்கும் ஒன்பது கிரகங்களும் ஒன்று சேர்ந்து, பக்தர் களுக்கு அருளாசி வழங்குகின்றன. இங்கே குடும்ப சகிதமாக வரவேண்டும்; பிரமசாரிகளாக இருந்தால் நண்பர்களுடன் வரவேண்டும். 'கூட்டு வழிபாடு செய்தால், கோள் அறுப்பார் கொள்ளிக் காடர்...' என்கிறார், ஞானசம்பந்தர். புகழ், பொன், பொருள் சேர்க்கை, வெளிநாட்டு வேலை கிடைக்க, மூளை, கண், காது தொடர்பான நோய் தீர, பொங்கு சனீஸ்வரரை வணங்குகின்றனர்.
சுவாமி சன்னிதி விமானத்திலுள்ள முருகனும் வித்தியாசமானவர். இவர், வேலுக்குப் பதிலாக வில்லுடன் காட்சியளிக்கிறார். தனுசு சுப்பிரமணியர் எனப்படும் இவர், நம் சிரமங்கள் மீது, வில்லைப் பாய்ச்சி விடுவிப்பார் என்பது நம்பிக்கை!
திருவாரூர் - திருத்துறைப் பூண்டி சாலையில், 15 கி.மீ., துாரத்தில் உள்ளது, கச்சனம் கிராமம். இங்கிருந்து, கோட்டூர் செல்லும் கிராமச் சாலையில், 8 கி.மீ., தொலைவில் உள்ளது, திருக்கொள்ளிக்காடு.
Reposting it from Amirthavahini Google Group.