சிவன் கோவில் பிரகாரத்தில் உள்ள சன்னிதியில், பல லிங்கங்கள் இருக்கும். அவற்றை தரிசிக்க மட்டுமே முடியும்; வலம் வர முடியாது. ஆனால், தஞ்சாவூர் அருகிலுள்ள பாபநாசம் ராமலிங்க சுவாமி கோவிலில், 108 லிங்கங்களை ஒரு சேர வலம் வந்து, வழிபடலாம்.
இலங்கையில் சீதையை மீட்ட ராமபிரான், போரினால் ஏற்பட்ட தோஷம் நீங்க, ராமேஸ்வரத்தில் சிவ பூஜை செய்து, அயோத்தி திரும்பினார். அப்போது, கரண் மற்றும் துாஷணன் என்ற அசுர சகோதரர்களை கொன்ற தோஷம் மட்டும், தன்னை பின்தொடர்வதை உணர்ந்தார்.
அதனால், பாபநாசத்தில் தங்கி, 107 சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்தவர், ஆஞ்சநேயரை காசிக்கு அனுப்பி, ஒரு லிங்கம் கொண்டு வரச்செய்தார். அதையும் சேர்த்து, 108 லிங்கங்களைப் பூஜித்த ராமபிரான், தன் தோஷம் நீங்கப்பெற்றார்.
பிரதான சிவனுக்கு, ராமரின் பெயரால், 'ராமலிங்க சுவாமி' என்ற பெயரும், அனுமன் கொண்டு வந்த லிங்கம் அவரது பெயரால், 'அனுமந்தலிங்கம்' என்ற பெயரிலும் உள்ளது. பர்வதவர்த்தினி சன்னிதியும் எழுப்பப்பட்டுள்ளது.
எல்லா சிவன் கோவில்களிலும் நந்திக்கு (காளை) தான் பிரதோஷ பூஜை நடக்கும்; இங்கு, காமதேனு பசுவுக்கும் பூஜை நடக்கிறது. சிவன் எதிரில் நந்தியும், காமதேனுவும் இருக்கிறது. மேற்கு நோக்கிய சிவாலயங்களுக்கு சக்தி அதிகம் என்பர். அவ்வகையில், இக்கோவில் மேற்கு நோக்கி இருப்பது விசேஷம். இங்கு, மூன்று வரிசையில், 106 லிங்கங்கள் ஒரே மண்டபத்தில் உள்ளன. இவற்றை பக்தர்கள் வலம் வந்து வழிபடலாம். மூலவர் ராமலிங்கத்தையும், அனுமந்த லிங்கத்தையும் சேர்த்து, 108 லிங்க தரிசனம்.
கோவிலுக்கு வெளியே உள்ளது, அனுமந்த லிங்கம் சன்னிதி. மூலஸ்தானம் தவிர, மற்ற, 106 லிங்கங்களுக்கும் பக்தர்களே பூ போட்டு, பிரார்த்தனை செய்யலாம். பிரதோஷத்தன்று மதியம் எல்லா லிங்கங்களுக்கும் விசேஷ பூஜை நடைபெறும்.
ராமலிங்க சுவாமி சன்னிதி விமானம், ராமேஸ்வரம் கோவில் அமைப்பிலும், அனுமந்தலிங்க சன்னிதி விமானம், காசி விஸ்வநாதர் கோவில் அமைப்பிலும் உள்ளது. சிவராத்திரி அன்று இரவில், 108 லிங்கங்களுக்கும் ருத்ர மந்திரம் சொல்லி, நான்கு கால பூஜை நடக்கும். ராமலிங்க சுவாமிக்கு ருத்ராபிஷேகம் செய்வர்; அவ்வேளையில், பக்தர்கள் கோவிலை, 108 முறை சுற்றி வருவர். ஐப்பசி பவுர்ணமியன்று, 108 லிங்கங்களுக்கும் அன்னாபிஷேகம் நடக்கும். ராமபிரானின் பாவம் நீங்கப்பெற்றதால், இந்த ஊருக்கு, பாபநாசம் என்ற பெயர் ஏற்பட்டது. அத்துடன், இவ்வூருக்கு, கீழ் ராமேஸ்வரம் என்ற பெயரும் உண்டு. அறியாமல் செய்த பாவம், பித்ரு தோஷம் நீங்க, சுவாமிக்கு அபிஷேகம் செய்வர். ராமாயணத்தோடு தொடர்புடைய கோவில் என்பதால், பிரகாரத்தில் ஆஞ்சநேயர், சுக்ரீவர் அருகருகில் வணங்கியபடி நிற்கின்றனர்.
கும்பகோணம் - தஞ்சாவூர் சாலையில், 15 கி.மீ., துாரத்தில் உள்ளது, பாபநாசம்!
Reposting it from Amirthavahini Google Group.