top of page

Thirukadavur temple

சிவாயநம திருச்சிற்றம்பலம்.

பதியும் பணியே பணியாய் அருள்வாய்.

*கோவை கு. கருப்பசாமி*

__________________________________________

*தேவாரம் பாடல் பெற்ற தல எண்:179*

*பாடல் பெற்ற சிவ தல தொடர்.*

*சிவ தல அருமைகள் பெருமைகள்.*

*அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில், திருக்கடம்பூர்.*

_________________________________________

நேரில் சென்று தரிசித்ததைப் போல................

___________________________________________

தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரையில் அமைந்துள்ள அறுபத்து நான்கு தலங்களில் இத்தலம் முப்பத்து நான்காவது தலமாகப் போற்றப் படுகிறது.

திருக்கடம்பூர் தலத்தை தற்போது மேலக்கடம்பூர் என்று அழைக்கிறார்கள்.

*இறைவன்:*

அமிர்த கடேஸ்வரர்.

*இறைவி:* ஜோதிமின்னம்மை, வித்யுஜோதி நாயகி.

*தல விருட்சம்:* கடம்பு.

*தல தீர்த்தம்:* சக்தி தீர்த்தம்.

*தேவாரம் பாடியவர்கள்:*

திருநாவுக்கரசர் -ஐந்தாம் திருமுறையில் இரண்டு பதிகங்கள்.

திருஞானசம்பந்தர் -இரண்டாம் திருமுறையில் ஒரு பதிகம். ஆக மொத்தம் இத்தலத்திற்கு மூன்று பதிகங்கள்.

*இருப்பிடம்:*

சிதம்பரம் - காட்டுமன்னார்குடி வழியாக எய்யலூர் செல்லும் சாலை வழியில் சிதம்பரத்தில் இருந்து தென்மேற்கே முப்பத்திரண்டு கி.மி தொலைவில் கடம்பூர் இருக்கிறது.

காட்டுமன்னார்குடியில் இருந்து எய்யலூர் செல்லும் சாலையில் முதலில் கீழ்க்கடம்பூரும் அதையடுத்து மேலைக்கடம்பூரும் இருக்கிறது.

கீழக்கடம்பூர் ஒரு தேவார வைப்புத் தலம்.

மேலக்கடம்பூரில் உள்ள ஆலயமே பாடல் பெற்ற தலம்.

இத்தலத்தில் இருந்து தென்கிழக்கே ஆறரை கி.மி. தொலைவில் திருஓமாம்புலியூர் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் உள்ளது.

ஓமாம்புலியூரில் இருந்து குணவாசல், ஆயங்குடி வழியாகவும் கடம்பூர் தலத்திற்கு செல்லலாம்.

*அஞ்சல் முகவரி:*

அருள்மிகு அமிர்த கடேஸ்வரர் திருக்கோவில்,

மேலக்கடம்பூர் அஞ்சல்,

காட்டுமன்னார்குடி வட்டம்,

கடலூர் மாவட்டம்.

PIN - 608 304

*ஆலயப் பூஜை காலம்:*

நாள்தோறும் காலை 7.30 மணி முதல் 9.30 மணி வரையும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்

*கோவில் அமைப்பு:*

அருள்மிகு அமிரதகடேஸ்வரர் திருக்கோவில் என்ற பெயர்ப் பலகையுடன் முகப்பு வாயிலைக் காணவும் உள் புகுந்தோம்.

இதையடுத்து ஆலயத்தின் கிழக்கு நோக்கியபடி மூன்று நிலைகளைத் தாங்கிய இராஜகோபுரத்தைக் காணக் கிடைத்தது பற்றிய......

*சிவ சிவ, சிவ சிவ* என மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டோம்.

கோபுரம் வழியே உள்ளே நுழைந்தபௌது, நேரே உள்ள முன் மண்டபத்தில் நந்தியெம்பெருமான் இருக்கக் கண்டோம்.

முதலில் வணக்கம் செய்து கொண்டோம். பின், ஆலயப்பிரவேசம் செய்து ஈசனை வணங்குவதற்கு அனுமதி வேண்டிக் கொண்டு நகர்ந்தோம்.

அடுத்திருந்த பலிபீடத்தருகாக நின்று, எம்மிடம் ஆணவமலம் இல்லாதிருப்பது தெரிந்தும், அவையிடம் இனியேனும் ஆணவமலம் ஏற்படாதிருக்கவும் வேண்டுதல் வைத்து திரும்பினோம்.

கொடிமரம் காணக் கிடைக்கவில்லை.

முன்மண்டபத்தில் நின்று பார்த்தால் நேரே மூலவர் சந்நிதி தெரிந்தது. ஈசன் முன் நின்று வணங்கித் தொழுதோம். மனமுருக பிரார்த்தனை செய்தோம். சிறுது கண்களை மூடி தியாணித்தோம்.

தரிசனத்திற்குப் பின், அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியை பெற்றுக் கொண்டு, அப்படியே அவ்விபூதியை திரித்து நெற்றிக்கு தரித்துக் கொண்டோம்.

வெளியேறிதும் வலதுபுறத்தில் தெற்கு நோக்கியபடி அம்பாள் சந்நிதி இருந்தது.

கண்குளிர தரிசனம் செய்து மனங்குளிர தீபாரதனையை ஆராதித்து வணங்கிக் கொண்டு அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.

கருவறை, தேர் சக்கரங்களுடன் குதிரை இழுப்பதைப் போன்று தேர் வடிவில் அமைந்திருந்ததைக் கண்டு மிகவும் பிரமிப்பாக இருந்தது.

மேலும், கருவறை வெளிப்புறம் முழுவதும் சிற்பங்கள் நிறைந்து காட்சியாய் கிடைத்தது.

இச்சிற்பங்களைக் காண்பதற்காகவே ஒவ்வொருவரும் மேலக்கடம்பூர் ஆலயம் அவசியம் வரவேண்டும் என்று ஆவலைத் தூண்டும் வகையில் இருந்தன.

இந்திரன், கோவிலை இழுத்துச் செல்ல முயற்சி செய்யும் போது, விநாயகர் சக்கரத்தை மிதித்தன் அடையாளமாக இடது பக்க சக்கரம் பூமியில் பதிந்து இருக்கிறதைக் காணமுடிந்தது.

கருவறை பின்பக்க சுவரில் மகாவிஷ்ணு அமர்ந்த கோலத்தில் இருந்தார். இவர் கையில் சிவலிங்கத்தை வைத்தபடி காட்சி தருகிறார்.

நாம் முன் நின்று வணங்க, நம் வணக்கத்தை, சிவனும் விஷ்ணும் ஏற்றுக் கொண்டார்கள்.

இவருக்கு அருகில் ஆண்டாள், கருடன், ஆஞ்சநேயர் ஆகிய மூவரும் இருந்தனர்.

இவருக்கு எதிரே முருகன் வள்ளி, தெய்வானையுடன் காட்சி தந்தார். கைதொழுது கொண்டோம்.

இம்முருகனை அருணகிரியார் திருப்புகழில் பாடியிருக்கிறார்.

கோஷ்டத்தில் வலம் செய்து வரும்போது, கோஷ்டத்திலேயே கங்காதரர், ஆலிங்கனமூர்த்தி ஆகியோரின் சிற்பங்களும் இருக்க. தனித்தனியே வணங்கிக் கொண்டோம்.

கருவறை விமானத்தைப் பார்த்தோம். இதில், தட்சிணாமூர்த்தி புல்லாங்குழல், வீணையுடன் இருக்கும் காட்சியைக் கண்டோம் மிக மிக சிறப்பாக இருந்தது.

கோஷ்ட சுவரில் உள்ள பிரம்மா சிவனை பூஜித்தபடி இருந்தார். சிரமேற் கைகுவித்து வணங்கிக் கொண்டோம்.

இவருக்கு இருபுறமும் எமதர்மன், சித்திரகுப்தர் ஆகியோர் இருந்தனர். இவர்களையும் கைதொழுது கொண்டோம்.

இவரருகில் பதஞ்சலி முனிவர் இருந்தார். இவரது தலை மீது நடராஜரின் நடனக்கோலச் சிலை அமைக்கப்பட்டிருந்தது.

வலப்பக்க சுவரில் அர்த்தநாரீஸ்வரர் நந்தியுடன் இருந்தார்கள். பவ்யபயத்துடன் வணங்கிக் கொண்டோம்.

இவருக்கு கீழே ரங்கநாதர் பள்ளிகொண்ட கோலத்தில் இருந்தார்.

அடுத்து, அம்பாளைத் தன்தொடை மீது இருத்தி ஆலிங்கன மூர்த்தியாகக் காட்சி தரும் சிற்பத்தை பார்த்து ரசித்தோம், வணங்கினோம்.

*ரிஷபதாண்டவமூர்த்தி:* இத்தலத்தில் "ரிஷபதாண்டவமூர்த்தி" நந்தி மீது நடனமாடிய கோலத்தில் பத்து கைகளுடன் உற்சவராக இருக்கிறார்.

இவருக்கு பிரதோஷத்தின்போது சிறப்பு பூஜைகள் நடக்கிறது.

அன்று ஒருநாள் மட்டுமே இவரை தரிசிக்க முடியும். இவருக்கு கீழே பீடத்தில் பார்வதி, திருமால், பைரவர், வீரபத்திரர், விநாயகர், நாரதர், நந்திதேவர், பிருங்கி, மிருகண்ட மகரிஷி, கந்தர்வர் மற்றும் பூதகணங்கள் இருக்கின்றன.

*ஆரவார விநாயகர்:*

இந்திரனின் ஆணவத்தை போக்கிய விநாயகர் தனிச்சன்னதியில் இவ்வாலயத்தில் இருக்கிறார்.

இவருக்கு, *ஆரவார விநாயகர்* என்று பெயர்.

அமிர்த கலசத்தை தூக்கிச்சென்றும், தேர் சக்கரத்தை மிதித்தும் ஆரவாரம் செய்ததால் இவருக்கு இந்த பெயர் வந்ததாம்.

இவர் தலையை சற்று இடதுபுறமாக சாய்த்தபடி கோப முகத்துடன் காட்சிதருகிறார்.

சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் செய்ய ஏற்ற தலமாகும் இத்தலம்.

கடன் தீர்க்கும் கடம்பவனநாதர் எழுந்தருளியிருக்கும் தலமாகும் இது.

ஆயுள் பலம் தரும் அமிர்த கடேஸ்வரர் சுயம்பு லிங்க வடிவில் எழுந்தருளியிருக்கும் தலம் இது.

கழுகு வாகனத்தில் மேற்கு நோக்கி தரிசனம் தரும் சனி பகவான் இங்குள்ளவராவார்.

அங்காரகன் வழிபட்ட செவ்வாய் தோஷ நிவர்த்தி தலம் இது.

அருணகிரிநாதரால் பாடப்பெற்ற ஆறுமுகன் எழுந்தருளியிருக்கும் தலம் இது.

கடம்பவன தலமாதலால் சதய நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம் இதுவாகும்.

காலையில் சரஸ்வதி, மாலையில் லட்சுமி, இரவில் சக்தியாக அருள்தரும் ஸ்ரீவித்யுஜோதிநாயகி இங்குள்ள அம்பாள் ஆவாள்.

சங்கு சக்கரத்துடன் சிம்மவாகினியாகவும், மகிஷாசுரமர்த்தினியாகவும் அருள்தரும் துர்க்கை இங்கிருப்பவள்.

அஷ்டமி திதி இரவில் வழிபட வேண்டிய காலபைரவர் தலமும் இதுவாகும்.

ஸ்ரீ முருகப் பெருமான் சூரனை அழிக்க தவம் செய்து வில் பெற்ற தலம் இது.

பங்குனி மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுவதும், ஐப்பசி அன்னாபிஷேகத்தின்போது, இரவில் சந்திர ஒளி சுவாமி மீது விழுவதும் சிறப்பானது இங்கு.

பிரதோஷ சிறப்பு மிக்க நந்தி தலம் இது.

பிரதோஷ காலத்தில் மட்டும் தரிசனம் தருகிறார் ஸ்ரீ தசபுஜ ரிஷப தாண்டவ மூர்த்தி என்பவர்.

முதலாம் குலோத்துங்க சோழனால் கட்டப்பெற்ற சிற்பக்கலை சிறப்பு மிக்க கரக்கோவில் ஆலயம் இது.

*தல அருமை:*

பாற்கடலி வஸ்திரம் அமுதம் கடைந்த தேவர்கள், விநாயகரை வணங்காமல் அதனை பருகச்சென்றனர்.

இதைக் கண்ட விநாயகர் தேவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணி, அமுத கலசத்தை எடுத்துச் சென்று விட்டார்.

அவர் கடம்பவனமாக இருந்த இத்தலத்தின் வழியாக சென்றபோது, கலசத்தில் இருந்த அமிர்தத்தில் ஒரு துளி தரையில் விழுந்தது.

அவ்விடத்தில் சிவன் சுயம்புலிங்கமாக எழுந்தருளினார்.

தன் தவறை உணர்ந்த இந்திரனும், தேவர்களும் இங்கு வந்து விநாயகரிடம் தங்களது செயலை மன்னித்து அமுதத்தை தரும்படி வேண்டினர்.

அவர் சிவனிடம் வேண்டும்படி கூறினார்.

அதன்படி இந்திரன் சிவனை வேண்டினான். அவர் இந்திரனுக்கு அமுத கலசத்தை கொடுத்து அருள்புரிந்தார்.

இங்கேயே தங்கி அமிர்தகடேஸ்வரர் என்ற பெயரும் பெற்றார்.

இந்திரனின் தாய் இத்தலத்திறைவனை வழிபட்டு வந்தாள்.

தாயின் முதுமை கருதி, எளிதாக வழிபட, இந்திரன் குதிரைகளைப்பூட்டி, இக்கருவறையை இழுத்துச்செல்ல முற்பட்டபோது விநாயகரை வேண்ட மறந்தான்.

விநாயகரை வேண்டி தன் காரியத்தில் இறங்காததால், விநாயகர் தேர்ச்சக்கரத்தை தன் காலால் மிதித்து நகராது இருத்திக் கொண்டார்.

இந்திரன் எவ்வளவோ முயன்றும் கோவிலை ஒரு அடிகூட நகர்த்த முடியவில்லை.

இந்திரன் இறைவனை வேண்ட, சிவபெருமான் அவனுக்கு காட்சி கொடுத்து *"தான் இத்தலத்திலேயே இருக்க விரும்புவதாக சொல்லி"*, இந்திரனை இங்கு வந்து தன்னை வணங்கும் படி கூறினார்.

இந்திரனும் ஏற்றுக்கொண்டு தன் தவறுக்கு மன்னிப்பு பெற்றான்.

தற்போதும் தினசரி இங்கு வந்து இந்திரன் பூஜை செய்வதாக ஐதீகம்.

*திருநாவுக்கரசர் தேவாரம்:*

1.தளருங் கோளர வத்தொடு தண்மதி

வளருங் கோல வளர்சடை யார்க்கிடம்

கிளரும் பேரிசைக் கின்னரம் பாட்டறாக்

களருங் கார்க்கடம் பூர்க்கரக் கோயிலே.

🏾தளருகின்ற கொள்ளுதல் தப்பாத பாம்பினோடு , குளிர்ந்த பிறைமதி வளரும் அழகு வளர்கின்ற சடையாராகிய சிவபெருமானுக்கு இடம் , பேரிசை கிளர்கின்ற கின்னரங்களின் பாட்டு அறாத , கரிய கடம்பு நிறைந்த ஊரில் திருக்கரக் கோயிலே .

2.வெலவ லான்புல னைந்தொடு வேதமும்

சொலவ லான்சுழ லுந்தடு மாற்றமும்

அலவ லான்மனை யார்ந்தமென் தோளியைக்

கலவ லான்கடம் பூர்க்கரக் கோயிலே.

🏾கடம்பூர்த் திருக்கரக் கோயிலின்கண் வீற்றிருக்கும் இறைவன் புலன் ஐந்தினை வெல்ல வல்லமை உடையவன் ; வேதமும் சொல்லவல்லவன் ; சுழல்கின்ற தடுமாற்றமும் நீக்க வல்லவன் : மனையார்ந்த மங்கையாகிய மென்றோளுடைய உமாதேவியாரைக் கலத்தல் வல்லவன்

3.பொய்தொ ழாது புலியுரி யோன்பணி

செய்தெ ழாவெழு வார்பணி செய்தெழா

வைதெ ழாதெழு வாரவ ரெள்கநீர்

கைதொ ழாவெழு மின்கரக் கோயிலே.

🏾உலகப் பொருள்களில் பற்றுச் செய்யாது . புலியின் தோலை உடுத்தோனாகிய சிவபிரான் பணியைச் செய்து , அவ்வாறு எழுவார் பணியினையும் உடன்செய்து கரக்கோயிலைக் கைதொழுது வணங்கி உயர்வீராக ! வைதொழாது எழுவார் எள்ளினால் எள்ளட்டும் .

4.துண்ணெ னாமனத் தால்தொழு நெஞ்சமே

பண்ணி னால்முனம் பாட லதுசெய்தே

எண்ணி லாரெயில் மூன்று மெரித்தமுக்

கண்ணி னான்கடம் பூர்க்கரக் கோயிலே.

🏾நல்ல எண்ணமில்லாதாரது முப்புரம் எரித்த முக்கண்ணினானது கடம்பூர்க் கரக்கோயிலை , பண்ணினால் திருமுன்பு பாடல் பரவி அச்சமின்றி நெஞ்சமே தொழுவாயாக !

5.சுனையுள் நீல மலரன கண்டத்தன்

புனையும் பொன்னிறக் கொன்றை புரிசடைக்

கனையும் பைங்கழ லான்கரக் கோயிலை

நினையு முள்ளத் தவர்வினை நீங்குமே.

🏾சுனையுள் பூத்த நீலமலர் போன்ற கண்டத்தனும் , புனையும் பொன்னிறக் கொன்றையுடைய புரிசடையும் ஒலிக்கின்ற கழலும் உடையவனுமாகிய கரக்கோயிற் பெருமானை நினையும் உள்ளத்தவர் வினைகள் நீங்கும் .

6.குணங்கள் சொல்லியுங் குற்றங்கள் பேசியும்

வணங்கி வாழ்த்துவ ரன்புடை யாரெலாம்

வணங்கி வான்மலர் கொண்டடி வைகலும்

கணங்கள் போற்றிசைக் குங்கரக் கோயிலே.

🏾அன்புடையாரெலாம் குணங்கள் சொல்லியும் குற்றங்கள் பேசியும் வணங்கி வாழ்த்துவதும் , கணங்கள் வணங்கி வான்மலர் கொண்டு வைகலும் அடி போற்றிசைப்பதும் கரக்கோயில் தலத்திலாகும் .

7.பண்ணி னார்மறை பல்பல பூசனை

மண்ணி னார்செய்வ தன்றியும் வைகலும்

விண்ணி னார்கள் வியக்கப் படுவன

கண்ணி னார்கடம் பூர்க்கரக் கோயிலே.

🏾திருக்கடம்பூர்க் கரக்கோயில் பண்ணினைப் பொருந்திய மறையோதிப் பல்பூசனைகளை மண்ணினுள்ளார் செய்வதன்றியும் நாள்தோறும் விண்ணினுள்ளாரும் வியக்கப்படும் பூசனைகள் செய்யக்கருதினர் .

8.அங்கை ஆரழ லேந்திநின் றாடலன்

மங்கை பாட மகிழ்ந்துடன் வார்சடைக்

கங்கை யானுறை யுங்கரக் கோயிலைத்

தங்கை யால்தொழு வார்வினை சாயுமே.

🏾உமையம்மை உடனிருந்து மகிழ்ந்து பாட அங்கையில் அழல் ஏந்தி நின்று ஆடல் புரிபவன் , ஆய கங்கை யுறையும் சடையான் வீற்றிருக்கும் கரக்கோயிலைத் தம்கையால் தொழுவாருடைய வினைகள் வலியற்றுக்கெடும்.

9.நங்க டம்பனைப் பெற்றவள் பங்கினன்

தென்க டம்பைத் திருக்கரக் கோயிலான்

தன்க டன்னடி யேனையுந் தாங்குதல்

என்க டன்பணி செய்து கிடப்பதே.

🏾கடம்பமாலை சூடிய நம் முருகனைப் பெற்ற உமாதேவியினைப் பங்கில் உடையவனாகிய தென் கடம்பைத் திருக்கரக்கோயிலான் தன் கடன் அடியேன் போன்றாரைத் தாங்குதல் ; என் போன்றார் கடன் பணிசெய்து தற்போதம் இன்றியே இருத்தல் .

10.பணங்கொள் பாற்கடல் பாம்பணை யானொடும்

மணங்க மழ்மலர்த் தாமரை யானவன்

பிணங்கும் பேரழ லெம்பெரு மாற்கிடம்

கணங்கள் போற்றிசைக் குங்கரக் கோயிலே.

🏾பாற்கடலில் கிடக்கும் படம்கொண்ட பாம்பு அணையானாகிய திருமாலும் மணம் கமழ் மலர்த்தாமரையானாகிய பிரமனும் தம்மில் மாறுபட்ட போது பேரழலாய் நிமிர்ந்த எம் பெருமானுக்கு இடம் , கணங்கள் போற்றிசைக்கும் கரக்கோயிலாகும் .

11.வரைக்கண் நாலஞ்சு தோளுடை யான்தலை

அரைக்க வூன்றி யருள்செய்த ஈசனார்

திரைக்குந் தண்புனல் சூழ்கரக் கோயிலை

உரைக்கு முள்ளத் தவர்வினை யோயுமே.

🏾திருக்கயிலாயத் திருமலைக்கண் இருபது தோளுடைய இராவணன் தலைகள் அரைபடும்படி ஊன்றிப் பின்னர் அருள்புரிந்த ஈசனார் வீற்றிருக்கும் , அலைவீசும் குளிர் புனல் சூழ் கரக்கோயிலைக் கூறும் உள்ளத்தவர் வினைகள் ஓயும்.

திருச்சிற்றம்பலம்.

*திருவிழாக்கள்:*

மார்கழி திருவாதிரை.

நவராத்திரி.

*தொடர்புக்கு:*

விஜயன் அறங்காவலர்.

04144- 264642

98426 76797

Reposting it from Amirtha vahini Google group.

52 views0 comments
bottom of page