top of page

புதுமுனியாற்றுப்படை

ஒரு புலவன் அரசனைப் பாடிப் பரிசு பெற்று வரும் போது, வழியில் இன்னொரு புலவனைக் கண்டு அவனையும் அம்மன்னன் இருக்கும் இடத்திற்குச் செலுத்தி, அவனுக்கும் பரிசு பெற வழிவகை செய்வது ஆற்றுப் படையாம். ஆறு - வழி, படை - படுத்துதல், செலுத்துதல்.

இங்கு, பெரியவாளைத் தரிசனம் செய்து, அவரின் பெருமையைப் பாடி, அவரது அருளைப் பெற்றபின், பிற பக்தரையும் பெரியவாள் இருக்கும் இடத்துக்குச் செல்ல வழிப் படுத்துவதே இந்த

புதுமுனியாற்றுப்படை.

இப்பாடலில், காஞ்சித் திருமடக் காட்சிகளும் நிகழ்ச்சிகளும் கூறப்படுகின்றன.

காஞ்சிப்பதியின் சிறப்பு

சிவமே மல்கும் தென்திசை யதனில்

தவமே ஓங்கும் தனிப்பெரும் பதியாம்

அன்னை எண்ணான்கு அறமிக வளர்த்த

மன்னு புகழை உடைத்தாம் வான்பதி

மறையொலி மங்கா இணையில் திருநகர்

குறையொன் றறியாக் குடிவாழ் தொல்லூர்

சைவம் வைணவம் தழைக்கும் தனிப்பதி

நைவும் பசியும் பகையும் இலாப்பதி (நைவு - நோய்)

கம்பை என்னும் கங்கையின் நன்னதி

அம்புந் திவளர் அழகிய பதியாம் (அம்பு - நீர்) -- (10)

புதுமுனிவனின் புனிதத் தோற்றம்

காஞ்சி புரத்தில் கடவுளைக் கடந்த

வாஞ்சை மிகுபுது முனிகழல் வணங்கி

எளியேன் பெற்ற இன்னநு பூதியைக்

களிப்புடன் சொல்வேன் கற்றவர் கேட்க

வேதம் வணங்கும் மென்மலர்ப் பாதம்

ஏதம் அறுக்கும் இணையில் பாதம்

அஞ்சல் அளிக்கும் அழகிய அங்கை

நெஞ்சை நெகிழ வைக்கும் சாந்தம்

நிலவினும் தண்ணருள் நேரிய பார்வை

இலையொடு மணியொளிர் எழில்மிகு மார்வம் (இலை - வில்வம்) -- (20)

அண்டம் காக்கும் அணிமிகு தண்டம்

வெண்ணீ றொளிரும் வியத்தகு நெற்றி

தியாகம் காட்டும் செவ்விய ஆடை

வியாபன சீலத் தயாகர ரூபம்

கடலும் அடங்கும் தனிப்பெரும் கமண்டலம்

இடரைக் களையும் எழிற்சிவ பூசை

மடமை அறுக்கும் பிரவசன மருந்து

உடைமையொன் றில்லா ஒருதனித் துறவு

அம்முனி வன்சீர் சொலற்கரி தாகும்

எம்மொழி கொண்டும் இயம்புதற் கரிதாம் ... (30)

திருமடத்தில் இருக்கும் அடியார் கூட்டம்

முனிவன் உறைதரு தனிமடம் கண்டேம்

பனிமலி கயிலையின் புனிதம் மிக்கது

அருமறை ஓதும் அந்தணர் கூட்டம்

திருமுறை ஓதுசீர்ச் சைவக் கூட்டம்

நாலா யிரம்பயில் நாரணன் அடியார்

கோலா கலத்துடன் ஆடிடும் ஆட்டம்

குடிகளின் குறையரி அரசர்கள் கூட்டம்

மடியில் வாணிபம் செய்பவர் கூட்டம் (மடி - பொய்)

ஏவல்செய் வோர்களின் இனியநற் கூட்டம்

காவல்செய் வீரரின் கனிந்தநற் கூட்டம் ... (40)

சித்தர் கின்னரர் தேவர் முனிவர்

பத்தர் சாரணர் பாவலர் கந்தருவர்

எங்கும் நிறையும் எழிற்பெரும் கூட்டம்

தங்க முனியின் தவமட வாயிலில்

அரஅர செயசெய எனமிக ஆர்ப்பப்

புதுமுனிவனின் திருக்காட்சி, வேத சதசு, பக்தரின் காணிக்கை

பரகுரு விடியலில் தரிசனம் தந்த

அதிசயம் கண்டேம் அதிசயம் கண்டேம்

எதியவன் எழிலை இன்புறக் கண்டேம்

மணியொளிர் கண்டன் அவனே அவனே

பணியணி பரமன் அவனே அவனே ... (50)

பாம்பணை யானும் அவனே அவனே

சாம்பவி அன்னையும் அவனே அவனே

கந்தக் கடவுளும் அவனே அவனே

தொந்தித் தூயனும் அவனே அவனே

வன்னியும் அவனே வாயுவும் அவனே

நன்னீர் அவனே நன்னிலம் அவனே

விண்ணும் அவனே வெறுமையும் அவனே

கண்ணும் அவனே காட்சியும் அவனே

கருத்தும் அவனே கருத்தனும் அவனே

விருத்தனும் அவனே இளையனும் அவனே ...(60)

திருப்பார்வை பட்டோர் சிவத்தை உணர்ந்தனர்

திருக்காட்சி அருளி உள்ளே சென்றனன்

வேத சதசில் வித்தக முனிவன்

வேத உருவாய் விளங்கிச் சொலித்தனன்

முற்றிலும் அறிந்த முனியவன் வார்த்தைகள்

கற்றவர்க் கெட்டாக் கருத்துகள் அம்மா

பழவகை காய்வகை பலவகைப் பட்சணம்

கிழமுனி அதிட்டானம் முன்னே கிடத்திய

திருமடக் காணிக்கை நோக்கினன் சீர்முனி

தருபவ னாகித் தருபொருள் ஆகித் ... (70)

தருபவர்க் கருளும் தருமமும் ஆகி

அருளெனும் மழையால் அன்பரை நனைத்தனன்

அப்புது முனிவன் அங்கிருந் தேனை

ஒப்பில் நோக்கால் ஒருகணம் தீண்டினன்

அக்கணம் தன்னில் அடியேன் அவன்மேல்

நெக்குரு கித்துதி நிகழ்த்திட அருளினன்

புதுமுனிவனைத் துதித்தல்

அருள்தரு நிதியே மருளறு மதியே

குருபர மணியே குறையறு தவமே

காலடி கண்ட கண்ணுதற் றேவே

ஆலடி அமர்ந்த அன்பின் ஊற்றே... (80)

கச்சியில் உறையும் கற்பகக் கனியே

பிச்சை யெடுத்தருள் பெருந்தவ முனியே

சத்தும் சித்தும் கலந்தநற் றாயே

மித்தை எரிக்கும் வேதக் கனலே

ஏழைகட் கிரங்கும் இன்னருட் சுனையே

வேழமும் அஞ்சும் விறலுடைச் சீலா

சிவனை நிகர்த்த செவ்வடி வுடையோய்

பவநோய் தன்னைப் பாற்றிடும் பரனே

தமிழொடு வடமொழி தழைத்திட வைத்தோய்

அமிழ்தினும் இனிய அன்பின் உருவே ... (90)

தவமே உருத்துவந் தென்னதொர் தகவோய்

நவமே நலமே நயமே நனவே ( நவம் - புதுமை, நனவு - மெய்ம்மை)

இகத்தும் பரத்தும் இசைதர வல்லோய்

அகத்தில் அமைதி அளிக்கும் பரனே

பாலை வனத்தில் பசுந்தண் ணிழலே

காலை விடியல் காட்டும் கதிரே (மனத்தில் விடியல் என்று கொள்க)

சமயம் காக்கும் தனிப்பெரும் படையே

இமையோர் வியக்கும் இருந்தவ முனியே

அவியா குதியை ஏற்கும் அரனே

புவிமேல் நடக்கும் பொன்னம் பலனே ... (100)

புதுமுனிவன் தரும் பரிசு - மனமற்ற நிலை, மறைத்தல், மீண்டும் குருவுருவே காட்டுதல்

துதித்து நின்றேனைத் தூயோன் கண்டனன்

புதுப்புது உணர்வுகள் பொழிந்தன என்னுள்

வேண்டுவ தனைத்தும் அருளும் வித்தகன்

ஈண்டெனக் கெதனை ஈவனென் றெண்ணினேன்

பொருளாற் சிறப்போ புகழ்தான் சதமோ

அருளால் என்னை அறிந்திட அருளினன்

எனதெனும் இழிந்த எண்ணம் எரித்தனன்

மனமும் அழிந்த வானிலை காட்டினன்

பத்தியை வளர்த்துப் பரத்தினைக் காட்டினன்

அத்து விதமெனும் அந்நிலை அளித்தனன் ... (110)

இப்பெரு நிலையை எம்குரு தந்தனன்

அப்பெரு நிலையில் அதுவாய் நின்றேன்

ஒருகணம் காட்டி மறுகணம் மறைத்தனன்

குருவெனும் உருவையென் மனத்திற் கூட்டினன்

யாண்டும் அந்நிலை வேண்டும் என்று

மீண்டும் அப்புது முனியை வேண்டினேன்

பெரியபெரியவாளைப் பாடுக எனப் பணித்தல் - அப்பழமுனியின் கழலைப் பாட ஆற்றுப் படுத்துதல்

பழமுனி பதத்தைப் பாடுக நித்தம்

அழிவில் நிலையாம் அத்து விதத்தில்

கரையச் செயவல தவன்கழல் என்றனன் ... (ஸ்ரீ புதுப்பெரியவாள் அடியேனை ஆற்றுப் படுத்துகிறார்)

பெரிய பெரியவன் சீர்கழல் பாடும் ... (120)

அப்பேர் ஆற்றுப் படையெனக் கருளினன்

இப்பெரும் பரிசிலை யாவர் பெற்றுளர்

குருவின் கழலைப் பாடும் பரிசிலைக்

குருவரு ளாலே கூடப் பெற்றேன்

எல்லாரும் அம்முனிவனைக் காண வேண்டல்

காலம் எல்லாம் கழற்சீர் பாடும்

சீலம் அன்றிச் சிறுநெறிச் செல்லேன்

இவ்வநு பூதியை இயம்பிடல் அரிதாம்

பவ்வியம் அருளும் பரகுரு உறையும்

கச்சிப் பதிக்குக் கடிது செல்க

சச்சிதா னந்தத் தவமடம் சார்க ... (130)

தெளிவு தருமவன் திருமேனி காண்க

தெளிவு தருமவன் திருநாமம் செப்புக

தெளிவு தருமவன் திருவார்த்தை கேட்க

தெளிவு தருமவன் திருவுருச் சிந்திக்க

ஆவிக் கடைக்கலம் அக்கணம் அருள்வான் ... (ஆவி - ஆன்மா)

காவிக் காமகோடி பீடத்தில்

மின்னா யிரத்தின் மிக்குப் பொலியும்

பொன்னார் மேனிப் புதுமுனி வோனே...(138)

புதுமுனியாற்றுப்படை நிறைவுற்றது.

எங்கும் குருவருள் பரவட்டும்.எங்கும் குருவருள் பரவட்டும்.எங்கும் குருவருள் பரவட்டும்.எங்கும் குருவருள் பரவட்டும்.எங்கும் குருவருள் பரவட்டும். ஜயஜய சங்கர ஹரஹர சங்கர.சிவசிவ.

Courtesy: - தேதியூர் சங்கர தாஸ் நாகோஜி

282 views0 comments

Recent Posts

See All
bottom of page