முந்தைய பிறவிகளில் செய்த புண்ணியத்தை, 'பூர்வ புண்ணியம்' என்பர். பூர்வ புண்ணியம் இருந்தால், எத்தகைய ஆபத்து மற்றும் பிரச்னைகளில் இருந்தும் மீண்டு விடலாம். நமக்கு பூர்வ புண்ணியம் இருக்கிறதா என்பதை அறிய, ஓர் எளிய வழி இருக்கிறது. அது, திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலுக்குள் இருக்கும், அசலேஸ்வரர் (அறநெறியப்பர்) கோவிலைப் பார்த்திருந்தால், உங்களுக்கு பூர்வ புண்ணியம் இருப்பதாக அர்த்தம்.
அசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் வந்து வழிபடுவார், நாயன்மார்களில் ஒருவரான நமிநந்தியடிகள். ஒருநாள் மாலைஇங்கு வந்த நமிநந்தியடிகள், சுவாமி சன்னிதியில் விளக்கு அணையும் நிலையில் இருப்பதை பார்த்தார். தொலைவிலுள்ள தன் வீட்டிற்கு சென்று நெய் எடுத்து வர நேரமாகி விடும் என்பதால், அருகில் இருந்த வீட்டிற்கு சென்று சிறிது நெய் கேட்டார். அவர்கள் சமண மதத்தினர் என்பதால், 'கையில் அக்னி ஏந்தி, நடனம் செய்யும் உங்கள் சிவனுக்கு தனியாக விளக்கு வேண்டுமா... அந்த தீயின் ஒளியே போதுமே... உங்கள் சிவன் சக்தியுள்ளவர் என்றால், கோவில் எதிரில் உள்ள குளத்து நீரை எடுத்து தீபத்தை ஏற்று...' என்று கேலி செய்தனர். இதைக் கேட்டு வருந்திய நந்தியடிகள், சன்னிதிக்கு திரும்பி வந்து, 'உனக்கு விளக்கேற்ற நெய் கேட்க சென்ற வீட்டில், கேலி செய்ததைப் பார்க்கத்தானே செய்தாய்... இதற்கு தீர்வைச் சொல்...' என, புலம்பினார். அப்போது, 'அவர்களை இங்கே அழைத்து வந்து, அவர்கள் கண் முன் குளத்து நீரை எடுத்து விளக்கேற்று...' என்று அசரீரி ஒலித்தது.
மகிழ்ந்த அடிகள், அவர்களை அழைத்து வந்தார். அங்கிருந்த சங்கு தீர்த்தத்திலிருந்த நீரை எடுத்து, விளக்கில் ஊற்றி, தீபத்தை துாண்ட, தீபம் பிரகாசமாக எரிந்தது. அத்துடன், அங்கிருந்த மற்ற விளக்குகளிலும் நீரை ஊற்றி தீபம் ஏற்றினார்; கோவிலே பிரகாசமானது. இதைப் பார்த்த சமணர்கள், ஆச்சரியமடைந்தனர். அடியாரின் பக்தியை கேள்விப்பட்டு, அவரை கோவிலுக்கு தலைவராக்கினான், சோழ மன்னன். இப்படி ஓர் அதிசயத்தை செய்த சிவன், 'அசலேஸ்வரர்' என்றும், பக்தி எனும் தர்மத்தைக் காத்ததால், 'அறநெறியப்பர்' என்றும் அழைக்கப்பட்டார். இக்கோவிலிலுள்ள மூலஸ்தானத்தின் நிழல், கிழக்கில் மட்டும் விழும்படியாக இருப்பது விசேஷம். தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் விமானம் போன்ற அமைப்பில் இது கட்டப்பட்டுள்ளது. புண்ணியம் செய்திருந்தால் தான், அதிசயிக்கத்தக்க செயல்களை வாழ்வில் நிகழ்த்துவார், கடவுள்.
நமிநந்தியடிகளுக்கு நடந்தது போல, நாமும் புண்ணியம் செய்திருந்தால், இந்த சன்னிதிக்கே நம்மால் செல்ல முடியும் என்பது ஐதீகம். நம் பூர்வ புண்ணியத்தை உறுதி செய்து கொள்ள, தியாகராஜர் கோவிலின் இரண்டாம் பிரகாரத்தில் உள்ள அசலேஸ்வரர் கோவிலுக்கு செல்லும் பாக்கியம் அனைவருக்கும் கிடைக்கட்டும்!
Reposting it from Amirthavahini Google Groups.