உ
சிவாயநம திருச்சிற்றம்பலம்.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
*கோவை.கு.கருப்பசாமி.*
____________________________________
*தேவார வைப்புத் தல தரிசனம்: எண் 34*
*வைப்புத் தல அருமைகள் பெருமைகள்:*
*🏜ஆனந்த தாண்டவரேஸ்வரர் திருக்கோயில், கஞ்சாறு:(ஆனதாண்டவபுரம்)*
___________________________________
கஞ்சாறு தலத்தை இன்றைய நாளில் ஆனதாண்டவபுரம் என்று அழைத்து வருகின்றனர்.
*🌙இறைவன்:* ஆனந்த தாண்டவரேஸ்வரர், கல்யாண சுந்தரேஸ்வரர், பஞ்சவடீஸ்வரர், பாரிஜாதவனேஸ்வரர்.
*🔱இறைவி:* பிருகந்நாயகி,
கல்யாண சுந்தரி.
*🌴தல விருட்சம்:* பாரிஜாதகம் என அறியப்படுவது தெரிகிறது.
*🌊தல தீர்த்தம்:* அமிர்த பிந்து தீர்த்தம்.
*🙏🏻வழிபட்டோர்கள்:* பரத்வாஜ மகரிஷி, ஆநந்த முனிவர், மானக்கஞ்சாற நாயனார்.
*📖வைப்புத்தல பதிகம் உரைத்தவர்:*
அப்பர்.
ஆறாவது திருமுறையில், எழுபதாவது பதிகத்தில், எட்டாவது பாடலில், இத்தலத்தைப் பற்றின குறிப்பு உளது.
*🛣இருப்பிடம்:*
மயிலாடுதுறை - சீர்காழி சாலையில் ஒரு கி.மீ. சென்று, அங்கிருந்து ஆனதாண்டவபுரம் செல்ல பிரிந்து செல்லும் சாலையில் ஐந்து கி.மீ. சென்றால் இத்தலத்தை அடையலாம்.
மயிலாடுதுறையிலிருந்து நகரப் பேருந்து வசதிகள் உள்ளன.
நீடூர் பாடல் பெற்ற தலத்திலிருந்தும் ஆனதாண்டவபுரம் செல்ல சாலை வசதி உள்ளது.
*📮ஆலய அஞ்சல் முகவரி:*
அருள்மிகு ஆனந்த தாண்டவரேஸ்வரர் திருக்கோயில்,
ஆனதாண்டவபுரம்.
ஆனதாண்டவபுரம் அஞ்சல்,
கும்பகோணம் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம்,
PIN - 612 703
*🌸ஆலயப் பூஜை காலம்:*
நாள்தோறும் காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
*📞தொடர்புக்கு:*
04364 - 2422127 +91-9442058137 +91-9486032325.
இந்த வைப்புத் தலத்தைக் குறிப்பிடும் பதிகப் பாடலில் கூறப்பட்டுள்ள *உஞ்சேனை மாகாளம், உருத்திரகோடி, பொதியின்மலை, தஞ்சை, வழுவூர், மாதானம், வேதீச்சரம், விவீச்சுரம், வெற்றியூர், பஞ்சாக்கை* ஆகியவையும் தேவார வைப்புத் தலங்களாகும்.
இந்தப் பதிகத்தை அப்பர் திருப்புகலூரில் தங்கி இருந்த பொழுது அருளிச் செய்தவையாகும்
🔔உஞ்சேனை மாகாளம் ஊறல் ஓத்தூர்
உருத்திரகோடி மறைக்காட்டுள்ளும்
மஞ்சு ஆர் பொதியின்மலை தஞ்சை வழுவூர்
வீரட்டம் மாதானம் கேதாரத்தும்
வெஞ்சமாக்கூடல் மீயச்சூர் வைகா
வேதீச்சுரம் விவீச்சுரம் வெற்றியூரும்
கஞ்சனூர் கஞ்சாறு பஞ்சாக்கையும்
கயிலாய நாதனையே காணலாமே.
🙏🏻உஞ்சேனை மாகாளம், ஊறல், ஓத்தூர், உருத்திர கோடி, மறைக்காடு,
மேகங்கள் பொருந்திய பொதியமலை, தஞ்சை, வழுவூர் வீரட்டம், மாதானம்,
கேதாரம், வெஞ்சமாக்கூடல், மீயச்சூர், வைகாவூர், வேதீச்சரம், விவீச்சுரம்,
வெற்றியூர், கஞ்சனூர், கஞ்சாறு, பஞ்சாக்கை ஆகிய இடங்களில்
கயிலாய நாதனைக் காணலாமே.
*🏜கோயில் அமைப்பு:* நல்ல நிலையில் பராமரிக்கப்பட்டு வரும் வைப்புத் தலக் கோயில்களில் ஆனதாண்டவபுரம் பஞ்சவடீஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும்.
கிழக்கில் ஒரு மூன்று நிலை இராஜகோபுரமும், தெற்கில் ஒரு வாயிலும் கொண்டு இவ்வாலயம் காட்சி தருகிறது.
இறைவன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார்.
ஆனந்த தாண்டவம் ஆடியதால் இறைவனுக்கு ஆனந்த தாண்டவரேஸ்வரர் என்றும், பரஞ்சோதி முனிவருக்கு திருமணக் கோலம் காட்டி அருளியதால் கல்யாண சுந்தரேஸ்வரர் என்றும், தனது பஞ்சவடிக்காக மானக்கஞ்சார நயனாரின் மகள் தலைமுடியைக் கேட்டுப் பெற்றதால் பஞ்சவடீஸ்வரர் என்றும் பெயர்.
இத்தலம் முற்காலத்தில் பாரிஜாத வனமாக இருந்ததால் பாரிஜாதவனேஸ்வரர் என்றும் பல பெயர்களால் இறைவன் அழைக்கப்படுகிறார்.
இங்கு இரண்டு அம்பாள் சந்நிதிகள் உள்ளன.
கிழக்கு நோக்கி ஒரு அம்பாள் சந்நிதியும், தெற்கு நோக்கு மற்றொரு அம்பாள் சந்நிதியும் அமைந்துள்ளன.
இராஜகோபுரத்திற்கு முன்னால் அமைந்துள்ள ஆலய தீர்த்தம் அமிர்தபிந்து தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது.
இத்தீர்த்தம் வியாதிகளைப் போக்க வல்லமை கொண்டது.
இந்தத் தீர்த்தத்தில் நீராடி, பிரஹன்நாயகி கல்யாணசுந்தரி சமேத பஞ்சவடீஸ்வரரையும் மானக்கஞ்சாற நாயனாரையும் வணங்கி வழிபட்டால், பிறவிப் பிணிகள் நீங்கும்.
மனதுள் நிம்மதி நிலைக்கும். வியாதிகள் நீங்க இத்தலத்தில் இரவு தங்கி, காலையில் அமிர்தபிந்து தீர்த்தத்தில் நீராடுவது சிறப்பு.
இத்தலத்தில் வழிபட்டால் மறு பிறவி இல்லை என்பது ஐதீகம்.
ஆனந்த முனிவருக்காக நடராஜர் தனது நடனத்தைக் காட்டியருளிய தலம் இதுவாகும்.
எனவே இங்குள்ள நடராஜருக்கு ஆனந்த நடராஜர் என்று பெயர். ஊரின் பெயரும் ஆனந்ததாண்டவபுரம் என்றானது.
எங்கும் இல்லாதபடி இங்குள்ள நடராஜர் மூர்த்தம் திருவாசி துணையில்லாமல் முயலகனின் பிடிப்பில் மட்டும் தனியாக நின்றருளுகிறது.
அருகில் ஆனந்த முனிவர் நின்று கொண்டிருக்கிறார்.
மானக்கஞ்சார் நாயனார், அவர் மனைவி ஆகிய இருவரும் அருகில் நிற்கின்றனர்.
ஒருமுறை பலத்த மழையின் காரணமாக சிதம்பரம் சென்று ஆருத்ரா தரிசனம் பார்க்க முடியாமல் போனதால் தனது உயிரை மாய்த்துக் கொள்ள ஆனந்த முனிவர் முயன்ற போது அவருக்காக இறைவன் தனது ஆருத்ரா தரிசனத்தை இங்கு காட்டி அருளினார்.
ஆனந்த முனிவருக்குக் கொடுத்த வாக்கின் படி இன்றளவும் தில்லையில் காலை பத்து மணிக்கு மேல் தான் ஆருத்ரா தரிசனம்.
அதுவரை இறைவன் இங்கிருப்பதாக ஐதீகம்.
*தல அருமை:*
ஆநந்த முனிவர் என்பவர் இங்கு வாழ்ந்து வந்தார்.
இவர் தினமும் காலையில் சேதுஸ்நானமும், அர்த்த சாமத்தில் சிதம்பர நடராச தரிசனமும் செய்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
ஒரு நாள் நீராடி முடித்துத் தரிசனத்திற்குச் செல்லும்பொழுது, மழையாலும் இரவாலும் தொடர்ந்து செல்ல தடையேற்பட்டது.
வழக்க வணக்கமுறை தடையாகிறதே! என இதனைத் தாங்கிக் கொள்ள முடியாத முனிவர், தன்னுயிரைப் போக்கிக் கொள்ள ஒரு மரத்தில் சுருக்கிட்டுக் கொள்ள முனைந்தார்.
நடராசப்பெருமான் அவருடைய முகத்திற்கு நேரே திருவடியைக் காட்டி, ஆனந்த தாண்டவம் செய்தருளி, சுருக்கிட்டுக் கொள்ளப்போன அவர் நிலையை தடுத்திட்டார்.
ஆதலால், இங்குள்ள நடராசர் *ஆனந்த தாண்டவ நடராசர்* என்றழைக்கப்பட்டு வருகிறார்.
*சிறப்பு:*
பாரிஜாதவனம், பரத்வாஜ ஆசிரமத்தலம் என்ற பெயர்களும் இத்தலத்துக்கு உண்டு.
பரத்வாஜ மகரிஷி தவஞ்செய்து இறைவனின் கல்யாண திருக்கோலத்தைத் தரிசித்த தலம் இது.
*மானக்கஞ்சாற நாயனார்:*
*அவதாரத் தலம்:* கஞ்சாறு (ஆனதாண்டவபுரம் - ஆனந்ததாண்டவபுரம்)
*வழிபாடு:* சங்கம வழிபாடு.
*முத்தித் தலம்:* கஞ்சாறு (ஆனதாண்டவபுரம் - ஆனந்ததாண்டவபுரம்)
*குருபூசை நாள்:* மார்கழி - சுவாதி.
அறுபத்து மூன்று நாயன்மார்களில் இவரும் ஒருவர்.
இவர் கஞ்சாறு என்னும் வளம் மிகுந்த ஊரிலே பிறந்தார்.
இவர் பிறந்தது, பரம்பரை, பரம்பரையாக அரசருக்கு சேனாதிபதியாக பதவி வகிக்கும் குடியைச் சார்ந்தவர் ஆவர்.
இந்தப் பதவியில் மானக்கஞ்சாற நாயனாரும் இருந்தார்.
மேலும் இவர் விவசாயத்திலும் விளைச்சல் கண்டு செல்வ வளம் பொருந்தியவராக வாழ்ந்து வந்தார்.
செல்வ வளம் மிக்கவராக இருந்தாலும், மெய்ப்பொருளான, சிவபெருமானை போற்றிப்புகழும் பணிவுடையவராக இருந்தார்.
தான் ஈட்டிய பொருளையெல்லாம், சிவனடியார் களுக்காக செலவிட்டே வந்தார்.
இருப்பினும் மானக்கஞ்சாற நாயனாருக்கு ஒரே ஒரு மனக்குறை இருந்து வந்தது.
அதாவது அவருக்கு குழந்தைச் செல்வம் இல்லை. இதனால் அவர் சிவபெருமானை, தினமும் தொழுது, தனக்கு குழந்தை பாக்கியம் தர வேண்டி பிரார்த்தித்து வந்தார்.
இறைவனின் அருளால், மானக்கஞ்சாறரின் மனைவி கருவுற்றார்.
அவருக்கு பெண் குழந்தைப் பிறந்தது. அந்தக் குழந்தை, ஒளி மிகுந்த பேரழகுடன் காணப்பட்டது.
அந்தக் குழந்தையையும் சிவனின் மீது அன்பு கொண்டவளாகவே வளர்த்து வந்தார் மானக்கஞ்சாற நாயனார்.
மானக்கஞ்சாற நாயனாரின் மகள் வளர்ந்து திருமணப் பருவத்தை எட்டினாள். அவளுக்கு ஏற்ற மணமகளைத் தேடினார் அவளது தந்தை.
இறுதியில் கஞ்சாறரைப் போலவே சேனாதிபதி குடியில் தோன்றிய ஏயர்கோன் கலிக்காமர் என்ற சிவனடியாரை, தனது செல்ல மகளுக்கு மணம் பேசி முடித்தார்.
திருமண நாள் வந்தது. கஞ்சாறு திருத்தலமே மணக்கோலமும், திருவிழாக் கோலமும் பூண்டிருந்தது.
மணமகனாக கலிக்காமர் மணமுரசொலிக்க கஞ்சாறூர் எல்லையை வந்தடைந்தார்.
மணமகன் வந்த திருமண ஊர்வலம், கஞ்சாறு ஊருக்குள் நுழைவதற்குள், சிவபெருமான், மானக்கஞ்சாற நாயனாரின் வீட்டில் சிவனடியார் வேடத்தில் எழுந்தருளினார்.
நெற்றியில் திருநீற்றுப் பூச்சு, உச்சியில் குடுமி, காதில் வெண்முத்துக் குண்டலம், மார்பில் மயிர்க்கயிற்றுப் பூணூல், கையில் திருநீற்றுப் பை, பஞ்ச முத்திரை பதித்த திருவடி என்பதாக இருந்தது, ஈசனின் சிவனடியார் வேடம்.
தனது மகளின் திருமணம் நடைபெறும் வேளையில், தன் வீட்டிற்கு சிவனடியார் ஒருவர் எழுந்தருளியதைக் கண்டு மனம் மகிழ்ந்து போனார் மானகஞ்சாற நாயனார்.
சிவனடியாரை அன்போடு பணிந்து, வீழ்ந்து கும்பிட்டு, இன்மொழி கூறி ஆசனம் அளித்து அமரச் செய்தார்.
சிவனடியாரோ, இங்கு நடைபெறும் மங்கள நிகழ்ச்சி என்ன? என்று வினவினார்.
ஐயனே! என்னுடைய மகளின் திருமணம் நடைபெற உள்ளது என்று பதிலளித்தார் மானக்கஞ்சாறர்.
அப்படியா! மங்களம் உண்டாகட்டும் என்று வாழ்த்திய சிவனடியாரின் காலில் விழுந்து வணங்கினார் கஞ்சாறரின் மகள்.
அப்போது அந்த இளம்பெண்ணின் கருமேகம் போன்ற கூந்தலைக் கண்ட சிவனடியார், இது நமது பஞ்சவடிக்கு (மயிர்கற்றையால் செய்யப்படும் பூணூல்) சரியாக இருக்கும்’ என்று கூறினார்.
அவரது வார்த்தையைக் கேட்ட மானக்கஞ்சாறர், சிவனடியார் ஆசைப்பட்டு விட்டதை கொடுக்கும் பொருட்டு, அருகில் இருந்த கத்தியை எடுத்து, தனது மகளின் நீண்ட கூந்தலை அடியோடு அரிந்து அடியவரிடம் கொடுத்தார்.
அதனை வாங்கச் சென்ற அடியவர், அப்படியே மறைந்து ரிஷப வாகனத்தில் சிவபெருமானும், பார்வதியுமாக காட்சி கொடுத்தார்.
இதைக் கண்டு மானக்கஞ்சாறர் மற்றும் ஊர் மக்கள் அனைவரும் உள்ளம் நெகிழ்ந்தனர்.
கஞ்சாறரே! நீர் என் மீது வைத்துள்ள மெய்யன்பை உலகம் அறியச் செய்யவே, யாம் வந்தோம் என்று கூறி மறைந்தார்.
கஞ்சாறருக்கு அருள் செய்து இறைவன் மறைந்த நேரத்தில், ஏயர்கோன் கலிக்காமர் மணமகளைக் கைப்பிடிக்க வந்து சேர்ந்தார்.
அவர் அங்கு நிகழ்ந்த அற்புதத்தைக் கேட்டறிந்தார். அவ்வற்புதத்தைக் காணாமல் போனதை எண்ணி மனம் தளர்ந்தார்.
பின்னர் இறைவனின் அருள்மொழியைக் கேட்டு மகிழ்ச்சி அடைந்தார். தொடர்ந்து இறைவனின் அருளால் வெட்டப்பட்ட நீண்ட கூந்தல், மீண்டும் வளரப் பெற்ற மானக்கஞ்சாற நாயனாரின் மகளை மணந்து இறை தொண்டு புரிந்து வந்தார்.
அடியார்களின் ஆசையே, ஈசனின் ஆசையாகக் கொண்டவர்கள் சிவனடியார்கள்.
கூந்தல் மயிற்கற்றையால் திரிக்கப்படும் பஞ்சவடி பூனூலுக்காக, அடியவர் மயிற்கற்றையை ஆசையாகக் கேட்டதும், மறுக்காது அறுத்தளித்தார் மானக்கஞ்சாறரர்.
இருப்பதைக் கேட்கப்படுவதால் கொடுக்கும் நோக்கம் இலாபம் எதுவும் மனத்திலில்லை.
இதனால்தான் நாயன்மார்கள் எல்லோரும் மேலானோர்கள் ஆனார்கள்.
அப்போது, ஈசன் வேதியர் வடிவத்தில் நாயன்மார்களை நாடினான்.
இப்போது, அவன் ஆலயப் புரணமைப்பாக, ஆலயத்துக்கு தேவைப்படும் விதமாக, தீண்டித் தொண்டாற்றும் அடியார்களுக்காகவுந்தான் இதை உணர்த்துவானக அவனிருக்கிறான்.
நாம் உணர்ந்து புரிந்துணர்தல் செழுத்தி வந்தால், நலமே விளையும்.
நாம் இன்று நம் மயிர்கற்றையை அழகதிரிக்கச் செய்ய நிறைய செலவு செய்கிறோம்.
தலைமுடி கருக்குதல், தலைமுடி அலங்கரித்தல் இதற்காக செலவாகும் ஒரு ஒரு சிறு தொகை போலானதைக்கூட ஆலயத்தொண்டுக்காக நாம் அளிக்க முன் வர வேண்டும்.
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Reposting it from sathvishayam google groups.