top of page

காரடையான் நோன்பு

'காரடையான் நோன்பு' பெயர்க் காரணம்:

கார்காலத்தில் கிடைக்கும் நெல்லைக் குத்தி, அரிசி எடுத்து, அதில் வெல்லம் சேர்த்துத் தயாரிக்கப்படும் அடையே 'காரடை' எனப்படுகிறது. அக்காலத்தில் தைமாத அறுவடை முடிந்து, வரும் புது நெல்லையே பொங்கலுக்கும் இந்த நோன்பிற்கும் உபயோகப்படுத்துவர். பார்ப்பதற்கு வடை போல இருந்தாலும், இது காரடை எனப்படுகிறது.

இந்த அடையை வைத்து நைவேத்தியம் செய்வதாலேயே இதற்கு 'காரடையான் நோன்பு' எனப் பெயர் வந்தது. கார்காலம் என்றால் 'முதல் பருவம் ' என்றொரு பொருளும் கூறப்படுகிறது. சுமங்கலிகளும் கன்னிப் பெண்களும் இந்த நோன்பைக் கட்டாயம் நோற்க வேண்டும்.

இந்த நோன்பின் பயன்:

கணவர் தீர்க்காயுளுடன் வாழவும், மாங்கல்ய பாக்கியம் பெருகவும், கன்னிப் பெண்களுக்கு நல்ல கணவர் கிடைக்கவும் இந்த நோன்பை நோற்க வேண்டும்.

சாஸ்திர சம்பிரதாயங்கள் எல்லாமே கண்மூடித்தனமானவை அல்ல. அவை மக்களின் நன்மையை முன்னிட்டும், அக்கால வாழ்வியல் முறையைக் கருத்தில் கொண்டுமே ஏற்பட்டவை.சில சம்பிரதாயங்கள் வேண்டுமானால், காலம் மாறிப் போனதால் மாறிப் போயிருக்கலாம். ஆனால் எல்லாவற்றையுமே அப்படிக் கூறிவிட முடியாது.

இந்திய பண்பாட்டின் சிறப்பே குடும்ப வாழ்க்கை முறைதான். திருமணம் இரு குடும்பங்களின் இணைப்பு. உயிரோடு இருப்பவர்கள் மட்டுமல்ல, இறந்து தெய்வமாக அருளுகிற முன்னோர்களுக்கும் இதில் பங்குண்டு. அதனால் தான், திருமணத்திற்கு முன் சுமங்கலிப் பிரார்த்தனை,சுப நாந்தி, மூதாதையர் படைப்பு என்று வழிபாடு செய்கிறோம். இல்லறத்தின் கூறுகளான, தேவகடன் தீர்த்தல், பித்ரு கடன் தீர்த்தல், விருந்தோம்புதல், உறவுகளைப் பேணல், முதலிய யாவற்றையும் நிறைவேற்றுவது, திருமணமான தம்பதிகளின் கடமை. ஒரு ஆணும் பெண்ணும் இந்தக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக, வாழ்வில் இணைவதை ஊரறியச் செய்யும் நிகழ்ச்சிதான் திருமணம்.

பெண்கள் இரண்டாம் தரப் பிறவிகளென்றும் சம்பிரதாயச் சடங்குகளைச் செய்ய உரிமையற்றவர்களென்றும் நினைப்பது தவறு. மனைவியில்லாமல் ஆணும் எந்தச் சடங்குகளையும் செய்ய இயலாது.

அக்னிஹோத்திரத்திலிருந்து ஆரம்பித்து, வேள்விகள் வரை, எந்தச் சடங்கையும் செய்யத் தொடங்கும் போது, 'என் மனைவியைத் துணையாகக் கொண்டு' என்று பொருள்படும் மந்திரம் சொல்லித்தான் ஆரம்பிக்கவேண்டும்.

திருமணம் செய்த பிறகு, அந்தப் பெண், புகுந்த வீட்டின் ஒரு அங்கம். எக்காரணம் கொண்டும் அவளைக் கைவிடுவது கூடாது. அது, இப்பிறவியிலும், இறப்பிற்குப் பின்னாலும் ஒருவனுக்குத் தீராத துன்பத்தைத்தரும்.

மனுநீதி, கணவனின் புண்ணியத்தில் பாதி, மனைவிக்குக் கிடைக்கும் என்றும் மனைவியின் பாவத்தில் பாதி,கணவனை அடையும் என்றும் கூறுகிறது.

இணைப்பறவைகள் போல குடும்ப வானில் பறந்து செல்ல வேண்டிய கணவன் மனைவி இருவரும் உடலால், மனதால், உயிரால் ஒன்றுபட்டவரே. இருவரும் குடும்பத்தில் சரிபாதி அல்லவா?

இயல்பாகவே செய்நேர்த்தி மிகுந்த பெண்களுக்கு, சம்பிரதாயங்களை அனுஷ்டிப்பதும்,பொறுமையாகக் கோபமின்றி விரதமிருப்பதும் பெரிய விஷயமில்லை. ஆகவே குடும்ப நன்மைக்காக விரதமிருப்பது, பெண்களின் கடமையாயிற்று என்பது பெரியோர்கள் கருத்து!.. தன்னில் சரிபாதியான கணவனின் நன்மைக்காக விரதமிருப்பது, நமது நன்மைக்காக விரதமிருப்பது போல்தானே.... இரண்டு கண்களில் ஒன்று நோயுற்றால் மற்றொன்று அழுவது இயல்பு தானே.....

இம்மாதிரி விரதங்கள் கணவன் மனைவி ஒற்றுமையைப் பலப்படுத்தும் சக்தி கொண்டவை. 'நானும் நீயும் வேறு வேறல்ல,ஒன்றுதான்' என்ற மனப்பான்மையே இன்று, பல தம்பதிகளிடம் தேவையாக உள்ளது.இந்த விரதத்தின் முக்கியப் பலனே, கணவன் மனைவி ஒற்றுமை தான்.

🌼அபூர்வ ஸ்லோகம்-எல்லா நன்மைகளையும் அருளும் யமாஷ்டகம்

தன் பத்தினிப் பண்பால் தன் கணவன் சத்யவானின் உயிரை யமனிடமிருந்து மீட்டாள் சாவித்திரி. யமதர்மராஜனைக் குறித்து யமாஷ்டகம் பாடி அவ்வாறு அவள் தன் கணவனை மீட்டுக்கொண்ட நாளே காரடையான் நோன்பு நாளாக சுமங்கலிப் பெண்களால் கொண்டாடப்படுகிறது.

சாவித்திரி துதித்த இத்துதியை காரடையான் நோன்பு அன்று பாராயணம் செய்தால் மங்கலங்கள் பெருகும். கணவனின் ஆயுள் விருத்தியாகும். சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.

🌼தபஸா தர்மமாராத்ய புஷ்கரே பாஸ்கர: புரா தர்மம் ஸூர்ய ஸுதம் தர்மராஜம் நமாம்யஹம்

முன்பு ஒரு சமயம் புஷ்கரம் எனும் க்ஷேத்திரத்தில் சூரிய பகவான் தவம் செய்து தர்மதேவதையை ஆராதித்து, தர்மன் என்ற மகனை அடைந்தார். அந்த தர்மராஜரை நமஸ்கரிக்கிறேன்.

🌼ஸமதா ஸர்வபூதேஷு யஸ்ய ஸர்வஸ்ய ஸாக்ஷிண: அதோ யந்நாம ஸமனம் இதி தம் ப்ரணமாம்யஹம்

எல்லாப் பிராணிகளின் இதயத்திலும் சாட்சியாக இருக்கும் யமதர்மராஜனே நமஸ்காரம். அனைத்துப் பிராணிகளையும் சமமாக பாவிப்பதால், சமனன் என்றும் பெயர் கொண்ட யமதர்மராஜனே நமஸ்காரம்.

🌼யேனாந்தச்ச க்ருதோ விச்வே ஸர்வேஷாம் ஜீவினாம் பரம் காமானுரூபம் காலேன தம் க்ருதாந்தம் நமாம்யஹம்

உலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் அவை ஒவ்வொன்றன் ஆயுளையும் முடிவு செய்யும் காரணத்தால் கிருதாந்தன் என்றும் போற்றப்படும் யமதர்மராஜனே நமஸ்காரம்.

🌼பிபர்த்தி தண்டம் தண்டாய பாபிநாம் சுத்தி ஹேத வே நமாமி தம் தண்டதரம் யச்சாஸ்தா ஸர்வஜீவினாம்

மனிதர்களுக்கு (சாஸ்தாவாக) எஜமானனாக இருந்து கொண்டு பாவம் செய்பவர்கள், தாம் செய்யும் அந்தப் பாவத்திலிருந்து விலகுவதற்காகத் தண் டனையைத் தருவதால் தண்டதரன் என்றும் பெயர் பெற்ற யமதர்மராஜனே நமஸ்காரம்.

🌼விச்வம் ச கலயத்யேவ ய: ஸர்வேஷு சஸந்ததம் அதீவ துர்நிவார்யம் சதம் காலம் ப்ரணமாம்யஹம்

காலவடிவாக இருந்து கொண்டு ஜீவராசிகளின் காலத்தைக் கணிப்பவரும், எவராலும் ஏமாற்ற முடியாதவருமான காலன் என்ற யமதர்மராஜனே, நமஸ்காரம்.

🌼தபஸ்வீ ப்ரஹ்மநிஷ்டோ ய: ஸம்யமீ ஸந் ஜிதேந்த்ரிய: ஜீவானாம் கர்மபலத : தம் யமம் ப்ரணமாம்யஹம்

சிறந்த தபஸ்வியாக, பிரம்மநிஷ்டராக, இந்திரிய, மன அடக்கமுள்ளவராக, ஜீவன்களின் வினைக்குத் தகுந்த பயனை அளிப்பவராகத் திகழும் யமதர்மராஜனே நமஸ்காரம்.

🌼ஸ்வாத்மாராமச்ச ஸர்வக்ஞோ மித்ரம் புண்யக்ருதாம் பவேத் பாபிநாம் க்லேசதோ நித்யம் புண்யமித்ரம் நமாம்யஹம்

ஆத்மாவில் ரமிப்பவரே, எல்லாம் அறிந்தவரே, புண்ணியம் செய்பவர்களுக்கு நண்பராக விளங்குபவரே, பாவிகளுக்குத் துன்பம் அளிப்பவரே, பு ண்ணியமித்ரன் என்ற பெயருள்ளவரே, யமதர்மராஜனே, நமஸ்காரம்.

🌼யஜ்ஜன்ம ப்ரஹ்மணோம்சேன ஜ்வலந்தம் ப்ரம்மதேஜஸா யோ த்யாயதி பரம் ப்ரஹ்ம தமீசம் ப்ரணமாம்யஹம்

பிரம்மாவின் அம்சமாக அவதரித்தவரே, பிரம்மதேஜஸால் ஒளிர்பவரே, பரப்பிரம்ம ஸ்வரூபத்தை உபதேசிப்பவரே, ஈசனாகத் திகழ்பவரே, யமதர்மராஜனே நமஸ்காரம்.

🌼யமாஷ்டகமிதம் நித்யம் ப்ராதருத்தாய ய: படேத் யமாத் தஸ்ய பயம் நாஸ்தி ஸர்வ பாபாத் விமுச்யதே

சாவித்திரி துதித்த இந்த யமாஷ்டகத்தைத் தினமும் காலையில் படிப்பவர்கள் யம பயத்தை அடைய மாட்டார்கள்; எல்லா பாவங்களிலிருந்தும் விடுபடுவார்கள். குறிப்பாக காரடையான் நோன்பு அன்று இத்துதியை பாராயணம் செய்பவர்கள் சகல நலன்களையும் அடைவார்கள்.

Read More

Kamakshi Pooja

27 views0 comments

Recent Posts

See All

#Tiruvidaimarudur #2Dec2023 Announcement: Paduka Archana to commence at Tiruvidaimarudur today -shortly after 8 AM. His Holiness Jagadguru Pujya Sri Shankara Vijayendra Saraswathi Shankaracharya Swami

bottom of page