மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ
ஓர் ஆணுக்கோ, பெண்ணுக்கோ கல்யாணத்தடை இருந்தால், நாக தோஷம், செவ்வாய் தோஷம் என பல பரிகாரங்களைச் செய்வது வழக்கம். ஆனால், கும்பகோணம் அருகிலுள்ள ஆதனுார் ஆண்டளக்கும் ஐயன் கோவில் துாணைக் கட்டியணைத்து வழிபட்டால், திருமணத்தடை நீங்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
திருமங்கையாழ்வார் ஸ்ரீ ரங்கநாதர் கோவிலில் திருப்பணி செய்தபோது, அவரால் பணியாளர்களுக்கு கூலி கொடுக்க முடியவில்லை. தனக்கு உதவும்படி பெருமாளிடம் வேண்டினார். அவரை கொள்ளிடம் ஆற்றங்கரைக்கு வரும்படி கூறினார், பெருமாள்.
அங்கு சென்ற போது, தலைப்பாகை அணிந்து, நெல் அளக்கும் மரக்கால், ஏடு மற்றும் எழுத்தாணியுடன் நின்றிருந்த வணிகர் ஒருவர், திருமங்கையிடம், 'உங்களுக்கு உதவ ரங்கநாதன் என்னை அனுப்பி வைத்தான்; என்னிடம் உள்ள மரக்கால், கேட்டதை தரக்கூடியது. இதில், மணலை அளந்து தருகிறேன்; பணியாளர்களின் உழைப்பிற்கேற்ப, இந்த மணல் ஊதியமாக மாறிவிடும்...' என்றார். ஆழ்வாரும் ஒப்புக்கொண்டார்.
ஆனால், கூலி வாங்கிய பலருக்கு, மணல் அப்படியே இருந்தது. யார் சரியாக வேலை செய்யவில்லையோ, அவருக்கு ஆண்டவன் படியளக்க மாட்டான் என்பதற்கு உதாரணமாக இந்த சம்பவம் அமைந்தது.
உடனே திருமங்கை, அந்த வணிகரிடம், 'நீங்கள் யார்... எதற்காக, எனக்கு உதவி செய்வதாக சொல்லி ஏமாற்றினீர்கள்?' என்று கேட்டார். உடனே ஓட ஆரம்பித்தார், வணிகர். அவரைத் துரத்தியபடி திருமங்கை ஓட,
அந்த வணிகர் ஓரிடத்தில் நின்று, மகாவிஷ்ணுவாக உருமாறி காட்சியளித்தார். அந்த இடமே தற்போதைய ஆதனுார்; கூலி அளந்ததால் இவருக்கு, 'ஆண்டளக்கும் ஐயன்' என்று பெயர் வந்தது.
சுவாமி சன்னிதி முன் இரண்டு துாண்கள் உள்ளன; பெருமாள் கோவில்களில் முதலில் சுவாமியின் திருப்பாதத்தையும், பின், திருமுகத்தையும் வணங்குவர். இதன் அடிப்படையில், நீண்ட நாட்களாக திருமணத்தடை உள்ளோர், திருமணத்திற்கு வரன் தேடுவோர், அங்குள்ள முதல் துாணைத் தழுவி, சுவாமியின் திருப்பாதத்தையும், மற்றொரு துாணைத் தழுவி, திருமுகத்தையும் தரிசிக்கின்றனர். இதனால், விரைவில் திருமணம் நிச்சயமாகும் என நம்புகின்றனர். இதை, 'மணத்துாண்கள்' என்கின்றனர்.
கையில் ஏடு, எழுத்தாணி வைத்து, மரக்காலை தலைக்கு வைத்து சயன கோலத்தில் அருளுகிறார், மகாவிஷ்ணு. அருகில் ஸ்ரீதேவி, பூதேவி, பிரம்மா, பிருகு, திருமங்கையாழ்வார் உள்ளனர். தாயார் பார்கவிக்கு தனி சன்னிதி உள்ளது. விஷ்ணுவை வேண்டி காமதேனு (ஆ) தவம் செய்து வழிபட்டதால் இத்தலம், 'ஆதனுார்' எனப்பட்டது.
கருத்து வேறு பாட்டால் பிரிந்த தம்பதியரை சேர்த்து வைப்பவராக இங்கு அருளுகிறார், சுவாமி.
ஜெர்மனியில் வசித்த தியோடர் மில்லர் - ஆண்டிபயோடின் தம்பதியர், தங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்தனர்; ஒருசமயம், இவ்விருவரும் ஒருவருக்கொருவர் தெரியாமலேயே கோவில் பற்றிய ஆராய்ச்சிக்காக இந்தியா வந்தனர். யதேச்சையாக ஒரே சமயத்தில் இங்கு சந்தித்தனர். மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ சுவாமி சன்னிதி முன் முடிவெடுத்தனர்.
கும்பகோணத்திலிருந்து, (சுவாமிமலை வழி) 8 கி.மீ., துாரத்தில் உள்ளது, ஆதனுார்.
Reposting the article from Amirthavahini google groups.