top of page

ஸ்ரீ (பால) பெரியவாளுடன் எனது அனுபவங்கள்

“ஹிந்து” என். கணேசன்

ஸ்ரீ மஹாபெரியவாள் பல வருஷங்கள் மஹாராஷ்டிராவில் இருந்துவிட்டு காஞ்சிபுரம் திரும்பி வரும்போது ஆந்திர ப்ரதேஷில் 1983 ஏப்ரல் மாதம் காலடி வைத்தார். கஸ்தூரிபள்ளி எனும் கிராமத்தில் அவருக்கு வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாநிலத்தின் முதல்வர் ஸ்ரீ என். டி. ராமராவ் ஸ்வாமிகளை வரவேற்றார், அவர் உட்கார்ந்ததும் அவர் பாதங்களை தன் இருகைகளால் பிடித்து கொண்டதைப் பார்த்து அங்கு இருந்தவர்கள் எல்லோரும் ஆச்சர்யப் பட்டுப் போனார்கள். அச்சமயம் என் மனைவியும் நானும் அங்கு இருந்தோம்.


அதன் பிறகு ஸ்வாமிகளை மஹபூப்நகரில் தரிசனம் செய்ய சென்றோம். லட்ச்மிநாராயண் காட்டன் மில்லில் அவர் அங்கோல என்னும் மரத்தடியில் உட்கார்ந்திருந்தார். நாங்கள் சென்றபோது ஸ்வாமிகள் ஒரு சிறு பாலகனோடு பேசிக்கொண்டு இருந்தார். அந்த பாலகனும் கூட வந்தவர்களும், ஸ்ரீ மடத்தின் மானேஜர் உட்பட, சற்று நகர்ந்ததும் நாங்கள் சென்று சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தோம். ஸ்வாமிகள் அங்கிருந்தவர்களை பார்த்து “நீங்கள் புதுப்பெரியவாளை பார்த்திரிக்கேள் இல்லையா? இன்னும் சில நாளிள் ஒரு புதுபுதுப்பெரியவாளை பார்க்கப்போறேள்” என்றார்.


அந்த பாலகனை காண்பித்து இவந்தான் அவன் என்று சொன்னார். கட்டுகுடுமியுடன் இருந்த அந்த பாலகனின் முகத்திலிருந்த தேஜஸ் எங்கள் மனதை கவர்ந்தது. அங்கோல மரத்திலிருந்து விழும் காய் மெதுவாக மெதுவாக நகர்ந்து அந்த மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளுமாம். அந்த பாலகனும் மஹாஸ்வாமிகளை போய் ஒட்டிக்கொள்ளுவான் என்றுதோன்றியது.


அந்த வருஷம் வியாசஸபூஜை கர்னூலில் இருந்தது. அதற்க்கும் நாங்கள் சென்றிருந்தோம். பூஜைக்கு முதல் நாள் கர்னூல் அருகே ஓடும் நதியில் தண்ணீரே இல்லை. ஸ்வாமிகள் ஸ்நானம் செய்ய மூன்று ஊத்துகள் மாதிரி தோண்டி இருந்தார்கள். வியாசஸபூஜைக்கு முதல் நாள் இரவு பெரும் மழை பெய்தது. காலையில் பார்த்தால் நதியில் இக்கறைக்கு அக்கறை தண்ணீர் ஓடியது. எல்லோரும் அது மஹாஸ்வாமிகளின் மஹிமையால் என்று கூறினார்கள்.


புதுப்பெரியவாளும் மஹஸ்வாமிகள் புதுபுதுப்பெரியவாள் என்று குறிப்பிட்ட பாலபெரியவாளும் முதல் நாள் வந்து சேர்ந்தார்கள். பாலபெரியவாளை தரிசித்தவர்கள் எல்லோரும் அவர் ஸ்ரீ ஆதிசங்கரரைப்போல் இருப்பதாக சொன்னார்கள்.


பாலபெரியவாளை தனியாக தரிசனம் செய்யும் பாக்கியம் காஞ்சிபுரத்தில் கிடைத்தது. ஸ்ரீஜயேந்திரர் ஹைதராபாத் வரும்போதெல்லம் என் வீட்டுக்கு வருவதுமுண்டு. ஸ்ரீபாலபெரியவாளும் வருவார். 1994ல் இருவரும் ஹைதராபாத் வந்திருந்தனர்.


அவர்கள் காஞ்சிபுரம் செல்ல திரும்பபியபோது ஸ்ரீபாலபெரியவாள் என்னை “நீங்க வண்டி ஏறுங்கோ” என்றார். அடுத்த கேம்ப் மஹபூப்நகரில். அங்கே சென்றதும் அவர் என்னை “நீங்க எங்களோடு காஞ்சிபுறம் வறேள்,“ என்றார். நான் சற்றும் எதிர்பாராதது. “நான் துணிமணி ஒன்றும் கொண்டுவரவில்லையே” என்றேன். “திரும்பி ஊருக்குப்போய் பெட்டி படுக்கையுடன் அடுத்த கேம்ப் வந்து விடுங்கள். எங்களுடன் காஞ்சிபுரத்திலேயே தங்குங்கள்” என்றார்.


நான் 1969லிருந்து ஒவ்வொரு வருஷமும் வ்யாச பூஜைக்கு, அது எங்கு இருந்தாலும், போய் வந்ததுண்டு. மஹாஸ்வாமிகளாகட்டும், புதுபெரியவாளாகட்டும் இட்ட வேலையை செய்துவந்தேன். 1987வரை ஸர்வீஸில் இருந்ததனாலேயோ என்னமோ மடத்துடன் வந்துவிடு என்று சொல்லவில்லை. ஸ்ரீ பாலபெரியவாதான் என்னை மடத்துடன் வந்துவிட ஆக்ஞையிட்டார்.


அவர் ஆக்ஞைப்படி நான் கத்வால் என்ற ஊரில் போய் சேர்ந்தேன். பலமுறை அவருடனேயே அவர் வண்டியிலேயே பிரயாணம் செய்யும் பாக்கியம் கிடைத்தது.


ஸ்ரீசைலத்தில் இருந்தபோது நான் ஹைதராபாத் திரும்பி வரவேண்டியிருந்தது. ஸ்ரீசைலத்திலிருந்து ரயில் வசதி கிடையாது. பஸ்ஸில்தான் பிரயாணம் செய்யவேண்டும். ஹைதராபாத் செல்லும் பஸ்ஸில் நான் உட்கார்ந்திருந்தபோது, ஸ்ரீ பாலபெரியவாளுடன் இருக்கும் ஒரு அனுக்கதொண்டர் ஓடிவந்து “பெரியவா இதை உங்களிடம் கொடுக்கச் சொன்னா. நீங்க வழியிலே எங்கேயும் ஹோட்டலிலே ஒன்றும் சாப்பிட மாட்டேளாம். அதான் கொடுக்கச் சொன்னா” என்றான். பையிலே நிறையா விதவிதமான பழங்கள் இருந்தன. “ஆஹா! என்ன கருணை!!” என்று என் மனம் உருகியது.


நான் திரும்பி கேம்ப் வந்து சேர்ந்தபோது அனுதினம் ஸ்ரீ சந்தரமௌளீஸ்வர ஸ்வாமி பூஜையின்போது “நீங்கள் இப்பொழுது பார்ப்பது 3000 வருஷங்களுக்கு முன்னால் ஸ்ரீஆதிசங்கரர் கைலாஸத்திலிருந்து ஸ்ரீ பரமேஸ்வனிடமிருந்து கொண்டுவந்த ஸ்படிகலிங்கத்தை பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். பால் அபிஷேகம்போது நன்றாக பாருங்கள். அபிஷேகமான பிறகு பூக்களால் அர்ச்சனை செய்வார் ஸ்வாமிகள். அப்போது பார்க்கமுடியாது” என்று விவரமாக பேசுவேன். ஆந்திராவில் இருக்கும் பக்த்தர்களுக்கு தெரியும்படியாக, புரியும்படியாக தெலுங்கில் பேசுவேன். அப்படி பேசச்சொல்லியது ஸ்ரீ பாலபெரியவாதான்.


காஞ்சிபுரத்தில் இருக்கும்போது கௌஹாத்தியில் புதிதாக கட்டிய ஸ்ரீ பூர்வபாலாஜி (வெங்கடேஸ்வர ஸ்வாமி) கோவில் கும்பாபிஷேகம் 1998ல் என்றும், இரு ஸ்வாமிகளும் அதற்க்கு செல்வதாக தீர்மானிக்கபட்டது. என்னை திருப்பதி திருமலை தேவஸ்தான நிர்வாகத்துடன் தொடர்பு வைத்துக்கொள்ள ஸ்ரீ பாலபெரியவா சொன்னார்கள். அச்சமயம் ஸ்ரீ எம். கே. ஆர். விநாயக், ஐ.ஏ.எஸ் அவர்கள் டி.டி.டியின் எக்சிக்யூடிவ் ஆபீஸராக இருந்தார். அவர் ஹைதராபாத்தில் இன்பர்மேஷன் கமிஷனராக இருந்தவர். அவர் எனக்கு நன்றாகவே தெரிந்தவர். அதனால் வேலை சுலபமாகவே இருந்தது.


ஸ்ரீ பாலபெரியவா அனுக்கிரஹத்தால் ஒவ்வொரு மாதமும் திருமலை சென்றுவந்தேன். ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி தரிசனம் கிடைத்தது.


இருபெரியவர்களும் காஞ்சியிலிருந்து கிளம்பி ஆந்திரா, ஒரிஸ்ஸா, வெஸ்ட் பெங்கால் வழியாக ஆஸாம் போவதற்க்கு ப்ளான் போடப்பட்டது. அவர்கள் ஒரு ஊருக்கு போய் சேர்வதற்க்கு முன்னால், அவர்கள் வரப்போவதாக அறிவிக்க loud speaker பொருந்திய ஒரு truck தேவைப் பட்டது. திருப்பதி தேவாஸ்தானம் அந்த மாதிரி ஒரு வண்டியை கொடுக்க ஒப்புக்கொண்டது. அதே மாதிரி கோவில் ஸ்வாமி ஊர்வலமாக வரும்போது பிடிப்பதற்க்கு ஒரு குடை, கோவிலில் புஜை செய்ய சில பட்டர்கள், லட்டு தயார் செய்ய வேலையிலிருந்து ஓய்வு பெற்ற சில நபர்கள், காசிக்கயறு எல்லாவற்றிர்கும் ஏற்பாடு செய்ய எனக்கு காஞ்சி ஸ்வாமிகள் அனுகிரஹாத்தால் சந்தர்பம் கிடைத்தது.


காஞ்சிபுரத்திலிருந்து ஸ்வாமிகள் நெல்லூர், ஓங்கோல், குண்டூர், விஜயவாடா, விசாகபட்டிணம், பூபனேஸ்வர், கல்கத்தா வழியாக ஆஸாமில் கௌஹாதி வந்தார்கள். எனக்கு என்று ஒரு designation இருக்கவில்லை. ஆனால் நான் ஒரு Public Relations Officer மாதிரியாக ஸ்வாமிகளுக்கு சேவை செய்ய சந்தர்பம் கிடைத்தது. அங்கங்கே Press Conference ஏற்பாடு செய்தேன். ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்டால் தமிழில் மொழிபெயர்த்து சொல்வேன். சிலர் வீட்டிற்க்கு ஸ்வாமிகள் விஜயம் செய்யவும் ஏற்பாடு செய்தேன்.


கௌஹாதியில் இருக்கும்போது அங்கிருக்கும் ஆங்கில தினசரி ஒன்றுக்கும் ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தைப் பற்றி வ்யாசங்கள் ஏழுதினேன்.


கும்பாபிஷேகம் ஆனபிறகு ஷில்லாங் சென்றோம். உலகிலேயே அதிக மழை பெய்யும் சிரபுஞ்சியை பார்க்க ஸ்ரீ பாலபெரியவாளுடன் போனேன். வழியிலேயே பெரும் மழை. மேலே போக முடியாமல் திரும்பிவிட்டோம்.


ஷில்லாங், சில்பாய்குரி சிக்கிமின் தலைநகரமான கேங்க்டாக் முதலிய நகரங்களுக்கு விஜயம் செய்துவிட்டு ஸ்வாமிகளுடன் பீஹார், மத்தியபிரதேஷ், மஹாராஷ்டிரா வழியாக திரும்பினோம். பர்லிவைத்தியநாத்தில் இருக்கும்போது ஸ்ரீ பாலபெரியவாள் அவரே செய்த வாழைக்காய் பஜ்ஜி கிடைத்தது.


1999ல் நான் அமெரிக்கா செல்ல நெர்ந்தது. அச்சமயம் பிட்ஸ்பர்க்கில் நார்த் அமெரிக்கா தெலுகு அசோசியேஷன் கான்பஃரன்ஸில் ஸ்ரீகாஞ்சி காமகோடி மடத்தை குறித்து மடத்து சார்பாக பேச ஒருவரை அனுப்புமாறு ஸ்ரீமடத்திற்க்கு கடிதம் எழுதி கேட்டிருந்தனர். எனக்கு தெலுங்கு தெரியும் என்பதால் அந்த கான்பஃரன்ஸில் என்னை பேசச்சொல்லி எனக்கு ஒரு ஈ மெயில் வந்தது.


நான் என்ன பேசவேண்டுமெண்று ஒரு ஈ மெயில் அனுப்பினேன். அதற்க்கு ஐஸிஎஃ மாமா ஸ்ரீ நீலகண்ட தீக்க்ஷதரிடமிருந்து பதில் ஈ மெயில் வந்தது. “உனக்கு நன்றாகவே பேசத்தெரியும் என்று ஸ்ரீ பாலபெரியவா சொன்னார்” என்று பதில் வந்தது,


நான் ஜர்ஸி ஸிடியில் இருந்தேன். ஸ்ரீ கே. குருவாயூரப்பன் வந்து அவர் காரிலே பிட்ஸ்பர்க்கு அழைத்து சென்றார். ஸ்ரீபெரியாவா அனுக்கிரஹத்தால் நான் தெலுங்கில் பேசினேன்.


காஞ்சிபுரத்தில் நான் இருந்தபோது பெங்களூரில் ஸ்ரீபெரியாவாளை ஒரு ஆல் ரிலிஜன்ஸ் கான்பஃரன்ஸில் அனுக்கிரஹபாஷணம் செய்ய அழைத்தார்கள். அதற்க்கும் என்னைத்தான் அனுப்பினார்கள். ஸ்ரீபாலபெரியாவா “அங்கு சாதரண அங்கவஸ்த்திரம் போட்டுக்கொண்டு போனால் நன்றாக இருக்காது,” என்று சொல்லி ஒரு விலை உயர்ந்த சால்வையை கொடுத்தார். ஸ்ரீ “ராமாயணம்” ஸ்ரீநிவாசனனும் என்னுடன் வந்தார். ஹிந்து மதம் என்று சாதாரணமாக அழைக்கப்படும் சநாதன தர்மம் எல்லோர் நன்மையும் கோருகிறது.. “ஸர்வேஜனொ சுகினொ பவந்து” என்பதே அதன் கொள்கை என்றேல்லாம் ஆங்கிலத்தில் பேசினேன்.


2004ம் வருஷம் நான் ஹைதராபாத்தில் இருக்கும்போது என்னை உடனே பெங்களூர் வ்ரும்படியாக தொலைபேசியில் பெரியவா ஆக்ஞ்ஞை விடுத்தார். நான் பெங்களூர் சென்றதும் சிருங்கேயில் நான்கு சங்கராசர்ய ஸ்வாமிகள் கூடி அயோத்தியா ராமர் கோவிலை குறித்து பேச்சுவார்த்தை நடத்தபோகிறார்கள் என்று தெரிந்தது. ஸ்ரீபாலபெரியவாளுடன் நான் சிருங்கேரிக்கு சென்றேன்.


2003ல் ஸ்ரீ ஜயேந்த்ர சரஸ்வதி ஸ்வாமிகள் பீடத்திர்க்கு வந்து 50 வருஷங்கள் பூர்த்தி ஆயிற்று. பீடாரோஹன ஸ்வர்ண ஜயந்தி விழா சென்னை யூனிவர்சிடி சென்டினரி ஹாலில் மார்ச் 22ம் தேதி நடந்தது. அதற்க்கு நேபால் மஹாராஜா, நம் தேசத்தின் உப ப்ரதான் மந்திரி ஸ்ரீ எல். கே, அத்வானி அதிதிகளாக வந்தார்கள். ஸ்ரீ பாலபெரியவாள் என்னைத்தான் ஸ்ரீ ஜயேந்த்ரரை இன்டர்வ்யூ செய்து எல்லா பத்திரிக்கைகளுக்கு கொடுக்கச் சொன்னார்கள். அதையும் செய்து ஸ்ரீமடத்தைக் குறித்து பல விஷயங்கள் எழுதி கொடுத்தேன்.


ராஜ் டீவீகாரர்கள் அன்றய கார்யக்கிரமத்தை நேரடி ஓளிபரப்பு செய்தார்கள். ஸ்ரீ பாலபெரியவாள் என்னைத்தான் ஆங்கிலத்தில் தொகுத்து வழங்க சொன்னார்கள். நான் பேசியதை ஹிந்தியில் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி யூனிவர்சிடியின் ஹிந்தி ப்ரோபஸர் ஒருவர் ஹிந்தியிலும் ராஜ் டீவி நிருவனத்திலிருந்து ஒருவர் தமிழிலும் பேசினார்கள். விழா. முடிந்த்தும் ஸ்ரீ பாலபெரியவாள் “கணேசன், விழா நடந்துகொண்டிருக்கும் போதே அமெரிகாவிலிருந்து போன் வந்தது. நீங்கள் நன்றாக பேசியதாக சொன்னார்கள்”,” என்றார்கள். எனக்கு சந்தோஷமாக இருந்தது என்று சொல்லவும் வேண்டுமா? “எல்லாம் உங்கள் அனுக்ரஹம் தான்” என்றேன்.


அந்த ஸ்வர்ன ஜயந்தி சந்தர்பத்தில் ஸ்ரீ ரா. கணபதி அவர்கள் தமிழில் எழுதிய “சித்திர ஆதிசங்கரர்” புத்தகத்தை என்னை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கச் சொன்னார் ஸ்ரீ பாலபெரியவாள். “ரா. கணபதி எழுதியதா? என்னால் முடியுமா?” என்று கேட்டேன். “முடியும். உன்னால் முடியும்” என்று அனுக்ரஹித்தார் ஸ்வாமிகள். அவர் அனுக்கிரஹம் இருக்கும்போது முடியாமல் இருக்குமா? மொழிபெயர்த்தேன். சிவகாசியில் அச்சடித்து வந்தது, சமிபத்தில் அதை தெலுங்கிலும் மொழிபெயர்த்தேன். ஸ்ரீ பாலபெரியவாளே அதை காஞ்சிபுரத்தில் வெளியிட்டார்.


மஹாஸ்வாமிகள் எங்கோ நடந்ததைப்பற்றி பேசுவார்கள் அவருக்கு எப்படி தெரிந்தது என்று பக்தர்கள் வியந்ததுண்டு. ஸ்ரீ பாலபெரியவாளுக்கும் அந்த சக்தியிருக்கிறது என்று நான் திடமாக நம்புகிறேன். திருச்சூரில் அவர் தங்குவதற்க்காக ஒரு வீட்டில்தான் ஏற்ப்பாடு செய்திருந்தார்கள். நானும் அதே வீட்டில்தான் தங்கவேண்டியிருந்தது.


அவர் என்னை கூப்பிட்டு, அந்த வீட்டுகாரரை காண்பித்து இவர்கள் உங்கள் உறவுகாரர்கள்,” என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் அவர்களை பார்த்ததே கிடையாது. அவர்களோடு பேசியதில் அவர்கள் என்னுடைய ஒரு ஷட்டகருடைய உறவினர்கள் என்று தெரியவந்தது,


அதே மாதிரி காஞ்சிபுரத்தில் ஒரு பெண்ணை காண்பித்து இது உங்கள் உறவுகார பெண்,” என்றார். அந்த பெண்ணையும் நான் பார்த்ததே கிடையாது. என் தகப்பனாருக்கு ஒரு தம்பி இருந்தார். அவரை ஸ்வீகாரமாக கொடுத்துவிட்டார் என் தாத்தா. என் சித்தப்பாவுடைய குழந்தைகளுடன் கொஞ்சம் தொடர்ப்பு இருந்தது. அவருடய பேரன்பேத்திகளுடன் அசலே சம்பந்தம் இருக்கவில்லை, அப்படியிருக்க அவருடைய ஒரு பேத்தியின் பேத்தியை யார் கண்டார்கள். அவர் காண்பித்த பெண் என் சித்தப்பாவின் ஒரு பேத்தியின் பேத்தியாம்.. அதுவும் அல்லாமல் அவள் என் ஒரு தம்பியின் ஷட்டகருடைய தம்பியின் பெண்ணாம். இதெல்லாம் ஸவாமிகளுக்கு எப்படி தெரிந்தது?


சமீபத்தில் நான் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தேன். ஒரு சனிக்கிழமை இரவு 11 மணிக்கு அஞ்ஜியோகிராம் செய்து ஒரு இரத்த குழாயில் ஸ்டேன்ட் போட்டார்கள். திங்கட்கிழமை காலையில் 10 மணிக்கு ஸ்ரீமடம் மானேஜருக்கு இந்த தகவலை சொல்லி பெரியவாளுக்கு தெரிவிக்கவும் என்று என் மனைவி சொல்லவும், அவர் “ஆடே. இன்னிக்கி காலையில் பெரியவா என்னை கூப்பிட்டு “ஹிந்து கணேசனுக்கு ஆபரேஷன் ஆயிடுத்தானு விசாரியுங்கோ’னு” சொன்னாறாம். பெரியவாளுக்கு எப்படி தெரிந்தது?


ஒரு வருஷத்திற்கு முன் பெரியவா சென்னை மடிபாக்கத்தில் இருந்தார். நான் தரிசனம் சென்றபோது ஒரு இருபது பேர் இருந்தார்கள். அச்சமயம் சிதம்பரம் நடராஜர் கோவில்லிருந்து சில தீக்ஷ்தர்கள் வந்து ஸ்ரீ பாலபெரியவாளுக்கு பிரசாதமும் குஞ்சிதபாதம் கொடுத்தார்கள். அதை வாங்கி அவர் தன் சிரஸில் சிறுது நேறம் வைத்துக்கொண்ட பிறகு அதை என்னிடம் கொடுத்தார். அது சர்வரோக நிவாரணி என்று தெரிந்துகொண்டேன்.


நாங்கள் திருச்சூரில் இருக்கும்போது கேரள அரசாங்கம் ஸ்ரீ பாலபெரியவாள் உபயோகத்திருக்கென்று ஒரு கார் கொடுத்திருந்தது. அதில் பெரியவாளும் அவருடைய ஒரு அனுகத்தொண்டரும் பிரயாணம் செய்வது வழக்கம்.


பெரியவா கேம்ப் திருச்சூரில் இருக்கும்போது பூரம் விழா வந்தது, இந்த விழாவில் திருச்சூர் பரமேக்காவு மற்றும் திருவம்பாடியைச் சேர்ந்த இரு குழுக்களும் பங்கேற்கின்றன. இரு குழுவும் பதினைந்து யானைகள் கொண்டுவருகிறார்கள். மிகவும் கலாப்பூர்வமான, வண்ணவண்ண சிறுகுடைகள் யானைகளுக்கு மேலாக உயர்த்தப்படுகின்றன. இதை பார்ப்பதற்க்கு பல லக்ஷ்க்கனக்கான மக்கள் வருகின்றனர்.


ஸ்ரீ பாலபெரியவா இதைப்பார்க்க கிளம்பினார். என்னை மட்டும் காரில் ஏறிக்கொள்ள சொன்னார். அவர் பின் ஸீட்டில் அமர நான் முன் ஸீட்டில் உட்கார்ந்தேன், ஸ்வாமிகளுக்காக பிரத்யேகமாக ஒரு மரத்தடியில் மேடை போடப்பட்டிருந்தது. அதில் நாங்கள் இருவரும் மட்டும் இருந்து அந்த கோலகல விழாவை பார்தோம். என்னை மட்டும் அழைத்து சென்றது மறக்கமுடியாதது.


1996ல் நாங்கள் வசிக்கும் விட்டல்வாடியிலேயே ஒரு விநாயகர் கோவில் கட்டினோம். நான்தான் கோவில் கமிடிக்கு தலைவராக இருந்தேன். கோவில் கும்பாபிஷேகத்தன்று ஸ்ரீ ஜயந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மஹா அபிஷேகம் செய்தார். செய்துவிட்டு என் வீட்டுக்கு வந்தார்.. அவர் கிளம்பி போன பிறகு எல்லாம் நல்லபடியாக நடந்ததென்ற சந்தோஷத்தில் நான் வீட்டிலேயே தங்கிவிட்டேன். அப்போது தெருவிலிருந்து ஒருவர் ஓடிவந்து “இன்னொரு சன்யாசி கோவிலுக்கு வந்திருக்கிறார்,” என்றார். ஸ்ரீ பாலபெரியவா வருவதாக ப்ரோகிராம் இல்லையே, யாராக இருக்கலாம் பார்ப்போம் என்று வீட்டை விட்டு கிளம்பினேன். ஸ்ரீ பாலபெரியவாதான் என் வீட்டைநோக்கி வந்துகொண்டிருந்தார்,


ஸ்ரீ பாலபெரியவா சுமார் 20 வருடங்களுக்கு முன்னேயே இன்றைய சம்பரதாயா பாடசாலைக்கு வித்திட்டார். காஞ்சிபுரத்தில் பெண்களுக்காக ஒரு training programme நடத்தினார். ஸம்க்ஷேபராமாயணம் classes அவரே எடுத்தார். என் மனைவியை அந்த training programmeலே இருக்கச்சொன்னார். அவள் பெண்களுக்கு மாக்கோலம், இழைக்கோலம் போடுவதற்கு சொல்லிக்கொடுத்தாள். அன்று ஸ்ரீ காமாட்சிஅம்மன் கோயில் ப்ராகாரம் முழுவதும் கோலமாக இருந்தது. ஸ்ரீ பாலபெரியவா அதையெல்லாம் பார்த்து ரசித்துக்கொண்டு இருந்தார்.


பெண்களுக்காக Consumer Awareness (நுகர்வோர் விழிப்புணர்வு) கற்றுக்கொடுக்கச் சொன்னார். அவர் இருக்கும்போது அவர் ஆக்ஞை ப்ரகாரம் காஞ்சிபுரத்திலும் சிகிந்திராபாதிலும் சமையல் எரிவாயுவை எப்படி சிக்கனமாகவும் பத்திரமாகவும் உபயோகப்படுத்த வேண்டுமென்று பெண்களுக்கு சொல்லிக்கொடுத்தாள்.

114 views0 comments
bottom of page