24/04/2024
காஞ்சி மடம் முகாம்
காஞ்சிபுரம்
இன்று மாலை சுமார் 4 மணிக்கு ஆச்சாரியாள் அவர்கள் என்னைப் பார்த்தவுடன், "உங்களை மூன்று பேர் பார்க்கச் சொன்னேன். பார்த்தீர்களா? " என்றார்.
"பார்த்தேன் பெரியவா" என்றேன். அவர்கள் என்ன சொன்னார்கள் என்று அவர்களின் அனுபவத்தை எழுதுங்கள் " என்றார்.
ஆச்சாரியாள் அவர்கள் இரண்டு கால பூஜை முடித்து விட்டு, மேடை மேல் நின்று கொண்டு பலருக்கு பிரசாதம் தந்து அருளினார்கள்.
உடனே ஆச்சாரியாள் பூஜை மேடைக்கு அருகில் உள்ள படிகள் ஏறிச் சென்றார்கள்.
நான் அச்சமயம் மடத்தின் அலுவலகம் முன் நடந்து சென்று விட்டேன் . அச்சமயம் மூவர் பூஜை மேடை அருகே ஆச்சாரியாள் அவர்கள் இருக்கும் திசை நோக்கி ஓடினார்கள்.
கடைசி படியையை அடைந்தவுடன், ஆச்சாரியாள் திடீரென்று திரும்பினார்கள். அப்பொழுது மூவர் அவசரமாக ஓடி வருவதைக் கண்டு, அவர்களுக்கு பிரசாதம் அருளினார்கள். நான் உணவிற்காக சென்று விட்டேன்.
அப்பொழுது எனக்கு மடத்தின் சிப்பந்தி ஒருவர் ஃபோன் செய்து, உங்களுக்காக மூவர் காத்துக் கொண்டு உள்ளார்கள். பெரியவா உங்களை அவர்களிடம் பேசச் சொன்னார்கள் என்றார்கள்.
நான் உணவு உண்டபின், அந்த மூவர் இருக்கும் இடம் நோக்கி நடந்தேன்.
என்னை நானே அறிமுகம் செய்து கொண்டேன். அறிமுகம் செய்து கொள்ள பெற்றோர்கள் வைத்த பேர் மட்டுமே. அதைத் தவிர வேறொன்றுமில்லை என்னைப் பற்றி சொல்லிக் கொள்ள.
அந்த மூவரில். இருவர் வழக்கறிஞர்கள், ஒருவர் விவசாயி.
தங்களை கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் என்று பெருமையாக நினைத்து இருந்தோம். ஆனால் இன்று நாங்களே அறியாமல் ஏதோ ஒரு சக்தியால் உந்தப்பட்டு இங்கு வந்தோம். முதல் முறையாக இந்த சாமியைப் பார்க்கிறோம். எங்களை அழைத்து பிரசாதம் தந்தது பெரும் பாக்கியம் என்று சொன்னார்கள்.
உண்மையில் அவர்கள் பெரும் பாக்கியவான்கள் என்றே கூற வேண்டும்.
அவர்களுக்கு இரண்டு அதிஷ்டானம் பற்றி விளக்கினேன். அவர்கள் செய்த விஜய யாத்திரைகள், இந்து தர்மம் வளர செய்த முயற்சிகள் பற்றிக் கூறினேன்.
நீங்கள் இங்கே எவ்வளவு சம்பளத்தில் வேலை செய்கிறீர்கள் என்று கேட்டார்கள். நான் மௌனமாக சிரித்துக் கொண்டு எனது ஒரு ,இரண்டு அனுபவங்கள் கூறி, நமது தர்மத்தில் இருக்கும் சுதந்திரம் பற்றி விளக்கினேன். இப்பொழுது உள்ள பீடாதிபதி பற்றியும், குரு பரம்பரை பற்றியும்
கூறினேன். அரைமணி நேர உரையாடல் பின், எனது செல் எண் வாங்கிக் கொண்டு, மீண்டும் வருவோம் என்றார்கள்.
குங்குமப் பிரசாதம் ஒரு வரப் பிரசாதம் போல் தெரிகிறது. ஸ்வாமிகள் யார் என்று தெரியாமல் வந்தார்கள். குங்குமப் பிரசாதம் பற்றித் தெரியாமல் வந்தார்கள். குங்குமப் பிரசாதம் கிடைத்ததில் ஒரு ஆனந்தம். அது கிடைத்தவுடன்,அவர்கள் எண்ணத்தில் ஒரு மாற்றம். அந்தக் குங்குமம் அவர்களுக்கு ஒரு புது அனுபவத்தை தந்தது. சிறந்த அனுபவங்கள் மட்டுமே நமது சொத்து. குரு என்று அறியாமல், ஒருவரைக் கண்டவுடன் ,அவர்கள் மனதில் ஒரு மாற்றம். அந்த மாற்றம் பற்றி அவர்களுக்குள் அலைபாயும் எண்ண அலைகள், அவர்களுக்கு ஒரு நம்பிக்கையைத்
தந்தது.
குங்குமப் பிரசாதம் பலரை மரண வாயில் இருந்து வெளியே கொண்டு வந்தது தெரியும்.
நோய்க்கு தீர்வு இல்லை என்று கூறியவர்களுக்கு. குங்குமம் ஒரு வரப் பிரசாதம் என்று பார்த்து உள்ளேன்.
தாங்கள் தாய், தந்தையாக பல வருடங்களாக ஆக முடியவில்லை என்று கூறிய கணவன்,மனைவியை - தாய் தந்தையாக குங்குமம் அருள் செய்தது பார்த்து உள்ளேன். ஞானிகள் தரும் பிரசாதம், ஒரு வரப் பிரசாதம்.
24/04/2024
காஞ்சி மடம் முகாம்
காஞ்சிபுரம்
இன்று காலை ஒரு மூத்த வயதினர் ஆச்சாரியாள் அவர்களை தன் குடும்பத்துடன் காண வந்திருந்தார். மிக மெதுவாக, கைத்தடியுடன் நடந்து வந்தார். "தங்களை தரிசனம் கண்டு ரொம்ப நாள்.ஆச்சு. வர வேண்டும் என்ற ஒரு ஆசை. " என்று ஆச்சாரியாள் அவர்களைப் பார்த்து தனது அளவில்லாத ஆனந்தத்தை கொட்டினார்.
ஆச்சாரியாள் அவர்கள் உரையாடும் போது நாம் முதியவர்களுக்கு எப்படி மரியாதை தர வேண்டும் என்ற பாடம் கற்றுக்கொள்வது போல இருந்தது.
பல முதிய தம்பதிகள் வரும் போது அவர்களின் அனுபவங்களை www.thanjavurparampara.com என்ற இணைய தளத்தில் வெளியிட ஆணையிடுவார்கள். முதியவர்களின் அனுபவம் அறிவுக் களஞ்சியம். அவர்களின் வாழ்க்கை அனுபவம் நமக்கு வழிகாட்டியாக இருக்கும்.,சரித்திரம் இருக்கும், வாழ்க்கையை கையாண்ட விதம் நமக்கு ஒரு பாதையை காட்டும்.
ஆச்சாரியாள் வந்தவருக்கு பிரசாதம்.தந்து, அருகிலிருந்தவரிடம், "காரை உள்ளே வரச் சொல்லவும்." என்று கூறிய வார்த்தைகள் , நமக்கெல்லாம் ஒரு பாடம். அந்த ஒரு. வரியில், ஆச்சாரியாள் என்னைப் பொறுத்த வரையில் ஒரு பாடம் எடுத்து விட்டார் என்றால் மிகையாகாது.
Comments