top of page

Famous Incidents (Devotees Experience)

 

 • ஆனைமுகனுக்கு தந்தம் தந்த மகாபெரியவா!

 

வக்ர துண்ட மஹாகாய சூர்ய கோடி சமப்ரபா

நிர்விக்னம் குருமே தேவ சர்வ கார்யேஷு சர்வதா…

கோயில் நகரம் எனப்படும் திருக்குடந்தையை, காசி க்ஷேத்திரத்தைவிட வீசம் அதிகம் கொண்ட தலம் என்று போற்றுவர். அதற்குக் காரணம், இங்கு அருள்பாலிக்கும் ஸ்ரீபகவத் விநாயகர்! கும்பகோணம் மடத்துத் தெருவில், கிழக்கு நோக்கி கோயில் கொண்டிருக்கிறார் இந்தப் பிள்ளையார்.

பன்னெடுங்காலத்துக்கு முன்பு, இந்தத் தெருவில்தான் காவிரியின் கரைப் பகுதி இருந்ததாம். பிறகு அகண்ட காவிரி, தனது அகலத்தைக் குறைத்து ஓடத் துவங்கியதாகச் சொல்வர். தற்போது இங்கே கோயில் தனியாகவும், பகவத் படித்துறை என்பது தனியாகவும் அமைந்துள்ளது.

வேதாரண்யம் எனும் ஊரைச் சேர்ந்தவர் பகவர் முனிவர். இவரின் தாயார் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாகக் கிடந்தார். ஒருநாள், தன் மகனிடம்… ‘நான் இறந்த பிறகு, என்னுடைய அஸ்தியை ஒவ்வொரு தலத் துக்கும் எடுத்துச் செல்வாயாக! எந்தத் தலத்தில் அஸ்தி புஷ்பமாக மாறு கிறதோ, அங்கே கரைத்துவிடு! இதுவே என் கடைசி விருப்பம்’ என்று சொல்லி மறைந்தார். பகவர் முனிவர், தாயாரின் இறுதிக் காரியங்களை முடித்தார். ‘இந்த அஸ்தி, காசியில்தான் பூக்களாக மாறும்’ என நினைத்தபடி, யாத்திரைக்கு ஆயத்த மானார். அஸ்தியை சிறிய பானை ஒன்றில் வைத்துக் கட்டிக் கொண்டு, சீடர்களுடன் புண்ணியத் தலங்கள் தோறும் சென்றார். திருக்குடந்தைக்கு வந்தவர், காவிரியில் நீராடினார்.

அப்போது அவரின் சீடர், கரையில் இருந்த விநாயகர் திருவிக்கிரகத்துக்கு எதிரில் வைக்கப்பட்டிருந்த அஸ்திப் பானையைத் திறந்து பார்த்தார். அதில் பூக்கள் நிரம்பியிருந்தன. ஆனால் அந்தச் சீடர், ‘பானையை ஏன் திறந்தாய்?’ என்று குருநாதர் திட்டுவாரோ என்று பயந்து, அமைதியாக இருந்துவிட்டார்.

பிறகு, குடந்தைத் தலத்தில் இருந்து வழியில் உள்ள தலங்களை தரிசித்தபடி, காசியம்பதிக்குச் சென்றார் முனிவர். அங்கே சென்று, பானையைத் திறந்தபோது, அதில் அஸ்தியே இருந்தது. அதைக் கண்டு சீடர் அதிர்ந்தார். ‘குருநாதா, என்னை மன்னியுங்கள். திருக்குடந்தையில், காவிரி ஆற்றில் நீங்கள் நீராடியபோது, அஸ்தி கலசத்தைத் திறந்து பார்த்தேன். பூக்களாக மாறியிருந்ததைக் கண்டேன்’ என்றார். அதைக் கேட்ட முனிவர், உடனே திருக்குடந்தைக்கு திரும்பினார். காவிரி ஆற்றங்கரையில் இருந்த ஸ்ரீவிநாயகரின் சந்நிதிக்கு முன்னே அஸ்தியை வைத்து, மனமுருக வேண்டினார். பிறகு அஸ்திப் பானையைத் திறந்து பார்க்க… உள்ளே பூக்கள் நிரம்பியிருந்தன. அதையடுத்து காவிரியில் நீராடி, உரிய கிரியைகளைச் செய்து முடித்தார்.இதனால், ‘காசியைவிட அதிகம் வீசம் கொண்ட க்ஷேத்திரம்’ என்பதை உணர்ந்து, சிலிர்ப்புடன் வழிபட்டாராம் முனிவர்.

அஸ்தியானது பூக்களாக மாறிய காவிரிக்கரையே பகவத் படித்துறை என்றும், பகவர் முனிவர் வழிபட்டதால் இந்தக் கணபதிக்கு ஸ்ரீபகவர் விநாயகர் என்றும் பெயர் அமைந்ததாம். இங்கே ஸ்ரீபகவர் முனிவருக்கும் அவரின் சீடருக்கும் விக்கிரகங்கள் உள்ளன.

காஞ்சிப் பெரியவர் கும்பகோணம் வரும்போதெல்லாம், இந்த விநாயகரை வணங்கிச் செல்வாராம். 1952-ஆம் வருடம், காஞ்சி சங்கர மடத்துக்குச் சொந்தமான சந்திரமௌலீஸ்வரன் எனும் யானை திருவிசநல்லூரில் இறந்தது. அப்போது காஞ்சி மகாபெரியவா, யானையின் இரண்டு தந்தங்களையும் ஸ்ரீபகவத் விநாயகருக்கு அளித்து வழி பட்டார். சங்கடஹர சதுர்த்தி, விநாயக சதுர்த்தி முதலான வைபவங்களில் ஸ்ரீபகவத் விநாயகருக்கு, அந்த தந்தங்களைக் கொண்டு அலங்கரித்து வழிபடுவது வழக்கமாம்!

மார்கழியில் சிறப்பு பஜனை, சங்கடஹர சதுர்த்தியில் தங்கக் காப்பு அலங்காரம், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 10 நாட்கள் உத்ஸவம் என அமர்க்களப்படும் ஆலயம். அப்போது, ஸ்ரீபகவத் விநாயகருக்கு கொழுக்கட்டையும் அருகம்புல் மாலையும் சமர்ப்பித்து வழிபட, நன்மைகள் கைகூடும்!

Thanks to Hinduism for the article (Reposting it from http://mahaperiyavaa.wordpress.com)

 

 • ஒரு பக்தர் பெரியவாளுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு எழுந்தபோது கண்களில் கண்ணீர் மல்கியது.

 

"என்னாச்சு?...." சிஸுவின் வேதனைக்கு வடிகாலாக, தாயின் குரல் கேட்டதும், அப்படியே கொட்டித் தீர்த்துவிட்டார்."பெரியவாதான் எங்களைக் காப்பாத்தணும்! ஆத்துல நிம்மதியா இருக்க முடியலே...பீரோவுல வெக்கற பணம், நகை எல்லாம் எப்டியோ காணாமப் போய்டறது..யாரும் வந்து திருடிண்டும் போகலே; உள்ள இருக்கற வேஷ்டி, பொடவை, காயப் போட்ட துணிமணில்லாம் கண்டபடி கிழிஞ்சு போறது! எல்லாம் ஏதோ துர்சக்தி பண்ற வேலையாத்தான் தெரியறது....மாந்த்ரீகன் ஒர்த்தன்ட்ட போனோம். என்னமோ பரிஹாரம் சொன்னான்...பண்ணியும் ப்ரயோஜனமில்லே ! நாளுக்கு நாள் இன்னும் ஜாஸ்தியாத்தான் ஆறது....காப்பாத்துங்கோ!..." என்று அழுதார்.

 

மெளனமாக அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தார் பெரியவா. சற்று தொலைவில் ஒரு பாரிஷதர் ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம் பாராயணம் பண்ணிக் கொண்டிருந்தார். பெரியவாளுக்கே உரித்தான கைச்சொடுக்கு, அவரை மேற்கொண்டு பாராயணம் பண்ண விடாமல் நிறுத்தியது. அழுது கொண்டு நின்ற பக்தரிடம்,"போ! போயி அவன் என்ன ஸ்லோகம் படிக்கறான்..ன்னு கேளு. நீயும் அந்த ஸ்லோகத்தை ஆயிரந்தடவை ஜபம் பண்ணு!..."ஓடிப்போய் அந்த பாரிஷதரிடம் "நீங்க பாராயணம் பண்றது என்ன ஸ்லோகம்?...""லலிதா ஸஹஸ்ரநாமம்"..

 

வீட்டுக்குப் போன கையோடு கணவனும் மனைவியுமாக ஸ்வாமிக்கு விளக்கேற்றி வைத்து விட்டு, ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தை தொடர்ந்து ஜபம் செய்ய ஆரம்பித்தார்கள். அதி ஆச்சர்யமாக, பீரோவில் காணாமல் போகும் பணம், நகை, கிழிந்து போகும் துணிமணி போன்ற துர் உபாதைகள் சுத்தமாக நின்றே போனது!"லலிதா ஸஹஸ்ரநாமத்தோட ஒவ்வொரு ஸ்லோகத்துக்கும் அபாரமான மஹிமை உண்டு." என்று பெரியவா சொன்னார். எந்த மந்த்ரமோ, ஸ்லோகமா, பாராயணமோ "உரு ஏறத் திரு ஏறும்" என்பதால், பண்ணப் பண்ண அதன் பலன் கைகூடும். "fast track" பலன் உண்டாக, "இதை ஜபம் பண்ணு!" என்று லலிதாம்பிகையே [பெரியவா] சொன்னால், அது உடனே பலனைக் குடுக்கும்.

 

ஒருமுறை ஒரு குதர்க்கி பெரியவாளிடம் ரொம்ப புத்திசாலித்தனமாக, பெரியவாளையே மடக்குவதாக நினைத்துக் கொண்டு ஒரு கேள்வி கேட்டார்."லலிதா ஸஹஸ்ரநாமத்ல, "ஆப்ரஹ்ம கீட ஜனனி" [ப்ரஹ்மா முதற்கொண்டு புழு பூச்சி வரை, எல்லாருக்கும் தாயானவள்] ன்னு வருதே, அப்டீன்னா, மனுஷாள்ள ஏன் அவன் ஒசந்தவன், இவன் தாழ்ந்தவன்..ன்னு பாகுபாடு?" என்று கேட்டார்.பெரியவா நிதானமாக அவருக்கு ஒரே வரியில் பதில் சொன்னார்.......

"அடுத்தாப்ல, "வர்ணாஸ்ரம விதாயினி" [வர்ணாஸ்ரம தர்மங்களை வகுத்தவள்] ன்னு சொல்லியிருக்கே!.."குதர்க்கியின் முகம் மறைந்து கொள்ள இடமில்லாமல் தவித்தது.

 

 • பெரியவாளுக்கு, சேஷாத்ரி ஸ்வாமிகள், ரமண மகரிஷிகள் போன்ற மகான்களிடம் ரொம்ப மதிப்பு

 

ஒரு ஞாயிற்றுக்கிழமை. காஞ்சிபுரம் ஸ்ரீ மடத்துக்கு எதிரிலுள்ள கங்கை கொண்டான் மண்டபம் ஆஞ்சநேயர் கோயிலுக்குப் போய் உட்கார்ந்து விட்டார்கள், பெரியவா.

 

ஏராளமான பக்தர்கள் விச்ராந்தியாக தரிசனம் செய்தார்கள்.

 

சாயங்கலம் நாலு மணி ஆகியும், பெரியவா, கங்கை கொண்டான் மண்டபத்திலிருந்து புறப்படுவதாக இல்லை. ஞாயிற்றுக்கிழமை சூரிய அஸ்தமனம் ஆகி விட்டால் பெரீயவா தீர்த்தம் கூட அருந்த மாட்டார்கள் என்பதால், சிஷ்யர்களுக்குக் கவலை வந்து விட்டது. ஞாயிற்றுக்கிழமை இரவு உபவாசம் இருக்க வேண்டும் என்பது அறநெறி. ஒரு சிஷயர் தைரியமாக சென்று, “அனுஷ்டானம், பிக்‌ஷை செய்யனும். இன்னிக்கு ஞாயிற்றுக்கிழமை, அஸ்தமனமாகி விட்டால் பிக்‌ஷையும் கிடையாது. பெரியவா மடத்துக்கு வரணும்” என்று விண்ணப்பித்துக் கொண்டார்.

 

பெரியவா சொன்னார்கள், “சேஷாத்ரி ஸ்வாமிகள் சர்வதீர்த்த ஸ்நானம், ஸ்ம்சான ஜபம் செய்துவிட்டு, கங்கை கொண்டான் மண்டபம் வந்து, பல நாட்கள் தங்குவாரம். நானும் ஒரு நாளாவந்து இங்கே இருக்கனும்னு வந்தேன். என்னை விரட்டுகிறீர்களே” (பெரியவாளுக்கு, சேஷாத்ரி ஸ்வாமிகள், ரமண மகரிஷிகள் போன்ற மகாஙளிடம் ரொம்ப மதிப்பு).

 

பின்னர், ஒரு வழியாக, மண்டபத்திலிருந்து புறப்பட்டார்கள். அங்கே பக்தர்கள் சமர்ப்பித்த பழங்கள் கல்கண்டு தேங்காய் எல்லாம் ஏராளமாக சேர்த்திருந்தார்கள்.

 

“எல்லாம் இங்கேயே இருகட்டும். அனுமார் பூஜகர், குடைக்காரர்கள் எடுத்துக் கொள்ளட்டும்’ என்றார்கள்.(இன்றைக்கும் அங்கே குடை-பாவட்டா தயாரிக்கும் தொழிலாளர்கள் பலர் இருக்கிறார்கள்).

 

 • ஸ்ரீ மகா சுவாமிகளின் அருங்குணங்கள் பலவற்றை விவரிக்கிறார் மந்திரிரத்னம் சேஷையா சாஸ்திரிகள்.

 

“பரமாச்சாரியார் எளிமையான வாழ்க்கையை விரும்பியவர். கைராட்டையால் வீட்டில் நூற்ற கதர் நூலால் புனைந்த ஆடையையே அணிவார். ஒரு சிறிய அறையைத் தனது இருப்பிடமாக ஏற்றுக்கொண்டு எளிமையாக அதில் வாழ்ந்தவர். அவர் உப்பு சாப்பிடுவதில்லை. அதனால் அவருக்கு வியர்வையின் அவஸ்தை கிடையாது. குக்குடாசன நிலையில் ஒரே காலில் நின்று கொண்டு ஒரு மணி நேரத்திற்கு உரைநிகழ்த்தக்கூடிய அபூர்வ சக்தி படைத்தவர் அவர். யோகாசனங்கள் பலவற்றையும் கற்றுத் தேர்ந்தவர்.

 

மகா சுவாமிகளின் உணவு மிக எளிமையானது. பீடத்தில் அமர்ந்த நாளிலிருந்து உணவில் புளி,உப்பு,காரம் சேர்த்துக் கொண்டதே இல்லை. நெற்பொறியும் சில பழங்களும் [கிடைத்தால் மட்டுமே] பாலும்தான் அவருடைய ஆகாரம். குணத்தாலும் செயலாலும் தவறு செய்தவர்களைப் பார்க்க நேர்ந்து விட்டால் அன்று முழுவதும் உபவாசம் இருந்து விடுவார். கல்கத்தாவில் ஒருமாதம் வில்வப் பழம் மட்டுமே சாப்பிட்டு அவர் இருந்ததை நான் பார்த்திருக்கிறேன்.

 

எப்போதும் கமண்டலம்,தண்டம்,காஷாயவஸ்திரம் இல்லாமல் இருக்கமாட்டார். பெண்கள் யாரும் அவரைத் தனிமையாகத் தரிசிக்கமுடியாது. குளிக்கப்போகும் நேரம் தவிர மற்ற வேளைகளில் தண்டம் அவருடன் இருக்கும். தூங்கும் போதும்கூட அதைப் பிடித்துக் கொள்வார். எவ்வளவு நேரம் கழித்துத் தூங்கப் போனாலும் விடியற்காலை நான்குமணிக்கே எழுந்து விடுவார். முழுமையாக ஜபத்தில் ஈடுபட்டுவிடுவார்.

 

வேதம், தர்ம சாஸ்திரம்,புராணம்,இதிகாசம் ஆகியவற்றை முழுமையாகக் கற்றறிந்தவர். ஆங்கிலம், பிரெஞ்சு, தெலுங்கு,கன்னடம்,லத்தீன் மொழிகளை நன்கு அறிந்தவர். தமிழ்மொழியில் தனிப்புலமை பெற்றவர். திருப்பாவை திருவெம்பாவை பாடல்களும், கோளறுபதிகத்தையும் தமிழ் மக்களிடையே பக்தியுடன் பரவச் செய்வதற்கு முயற்சி செய்தவர்.

 

நோயாளிகளுக்கு மருத்துவமனையில் விபூதிப் பிரசாதம் வழங்கவும்,சாகும் தருவாயில் உள்ளவர்களுக்கு உதவி, இறுதிகடன்களைச் செய்யவும் உதவியவர். ஒரு தடவை அவர் மடத்தில் உள்ள காரியஸ்தரிடம் கல்கத்தாவில் உள்ள ஒருவருக்கு உடனே ஐந்நூறு ரூபாய் அனுப்பி வைக்கும் படி கூறினார். பலருக்கும் அதன் காரணம் புரியவில்லை. சில மாதங்களுக்குப் பிறகு அவரைத் தரிசிக்க வந்த எளியவர் ஒருவர் “சுவாமி! அன்று தாங்கள் அனுப்பி வைத்த ஐந்நூறு ரூபாய்தான், தந்தை இறந்ததும் இறுதிக்கடன்களைச் செய்ய உதவிற்று! என்று கூறினார்.

 

மகா சுவாமிகளின் கண்ணோட்டமும், எளிமையும், இரக்கசுபாவமும் இணையே இல்லாதவை

 

 • பஸுவே ப்ரத்யக்ஷ தெய்வம். அவள் பாலமுதளித்து தெய்வத்துக்கே அம்மாவானாள்!

 

பெரியவாளுக்கு கொஞ்சம் உடம்பு சரியாக இல்லை. எந்த மோசமான உடல் உபாதையிலும் அவர் ஒருநாள் கூட தன் அனுஷ்டானங்களை விட்டார் என்பதில்லை; பூஜையை விட்டார் என்பதில்லை; ஏதோ சுருக்கமாக பூஜையை முடித்தார் என்பதும் இல்லை. நாமோ, "ஹச்"சென்று ஒரு தும்மல் வந்துவிட்டால் கூட, ஏதோ பெரிய வ்யாதி வந்த மாதிரி, குளிக்கக் கூட யோஜிப்போம்.

 

1945ல் பெரியவாளுக்கு ஹார்ட்டில் கோளாறு உண்டானது. மயிலாப்பூர் டாக்டர் T N கிருஷ்ணஸ்வாமி ஐயர் வந்து வைத்யம் பண்ணினார். பெரியவா கொஞ்ச நாள் பேசாமல் அவர் சொன்னதை கேட்டுக்கொண்டாலும், தான் பாட்டுக்கு "சிவனே" என்று தன் கார்யங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒருநாள் டாக்டரிடம்,

 

"நீ குடுக்கற அலோபதி வைத்யம் போறும்..." என்று நிறுத்திவிட்டு, பாரிஷதர் ஒருவரிடம் "மேலகரம் கனபாடிகளை அழைச்சிண்டு வா!" என்று உத்தரவிட்டார். கனபாடிகளைப் பெரியவாளுக்கு ரொம்ப பிடிக்கும். முதலில் அவரிடம் உள்ள வேதம்; அதோடு வைத்யம், ஜோஸ்யம் எல்லாம் அவருக்கு கை வந்த கலை! அவர் வந்தால் பெரியவா நேரம் போவது தெரியாமல் அவரோடு நிறைய விஷயங்களைப் பற்றி பேசுவார்.

 

கனபாடிகள் வந்து பட்டுத் துணி போர்த்தி, பெரியவாளுடைய நாடியைப் பார்த்தார்.

 

"ஒரு பஸுவுக்கு தெனோமும் நாகமரத்தோட தழையை [இலை] மட்டும் ஆகாரமாக் குடுக்கணும். பெரியவாளுக்கு, அந்த பஸுவோட பாலை மட்டும் குடுக்கணும்" என்றார்.

 

"செரியாப் போச்சு! எனக்கு ஒடம்பு செரியாகணுங்கறதுக்காக ஒரு பஸுமாட்டைக் கஷ்டப்படுத்தலாமா? நாகத் தழை மட்டும் அதுக்கு எப்டிப் போறும்? கோஹத்தி தோஷம் வந்துட்டா என்ன பண்றது?..." ரொம்ப கவலையோடு கேட்டார்.

 

(பஸுவுக்கு ஒரே மரத்தின் இலையை ஆஹாரமாகப் போடுவதையே பெரியவா கோஹத்தி என்றால், அன்றாடம் அந்த மஹாமாதாவை பாலுக்காகவும், மாம்ஸத்துக்காகவும், தோலுக்காகவும் கொடூரமாக வதைக்கும், வதைக்க அனுப்பும், மற்றும் அதோடு தொடர்பு கொண்ட மனிதர்கள் என்று சொல்லிக் கொள்ளும் மிருகங்களின் "கோஹத்தி" தோஷம் சித்ரகுப்தனுக்கும் எழுத முடியாத அளவு இருக்கும்.)

 

அதற்குள் பாரிஷதர்கள் "பஸுவை பட்னி போடலியே பெரியவா! நாக எலையை நெறைய போடலாம்..." என்று எதையோ சொல்லி, பெரியவாளை சம்மதிக்க வைத்தனர்.

 

பெரியவாளுக்கென்றே தன் உதிரத்தைப் பாலாக்கி பிக்ஷையாகக் குடுக்க அந்த கோமாதா செய்த பாக்யந்தான் எப்பேர்ப்பட்டது! பஸுவே ப்ரத்யக்ஷ தெய்வம். அவள் பாலமுதளித்து தெய்வத்துக்கே அம்மாவானாள்!

 

ஜம்மென்று நாகத் தழையைத் தின்று கொண்டு, நல்ல தண்ணீரைக் குடித்துக் கொண்டு சௌக்யமாக இருந்தாள் அந்த அம்மா! பெரியவாளும் அவள் தந்த பாலை மட்டுமே பிக்ஷையாக ஏற்று, மூன்று கால பூஜை, தர்சனம் என்று சௌக்யமாக இருந்தார்.

 

இதை பார்த்துக் கொண்டிருந்த பாரிஷதர்கள், பக்தர்கள் சிலர்,

 

"என்னத்துக்கு நமக்கெல்லாம் இந்த தண்டமான மனுஷ ஜன்மா, ஒண்ணுத்துக்கும் உபயோகமில்லாம? இந்தப் பஸுவா பொறந்திருந்தா.... இந்த ஜன்மா கடைதேறியிருக்குமே! பெரியவாளோட பிக்ஷைக்கு பாலைக் குடுக்க இந்தப் பஸு என்ன புண்யம் பண்ணித்தோ !.." என்று மனமுருகினார்கள்.

 

கொஞ்சநாளில் "குழந்தை" பெரியவா தாயாரின் கவனிப்பினால், சொஸ்தமானார்.

 

 • மண மங்கலம் பெரியவா திக் விஜயம்

அந்த விடியற்காலை வேளையில்…. ஜெயகோஷத்துடனும், மாறாத நம்பிக்கையுடனும் யாத்திரை போய்க் கொண்டிருந்தது. மாசிமாத ஊதற்காற்று உடலில் ஊசியாய் இறங்கிற்கு. யானை, ஒட்டகம், குதிரைகள் முன் செல்ல நடுவில் பல்லக்கு அசைந்து வந்தது. பின்னே பக்தர் குழாம், நாகங்குடி, சாத்தனூர், பழையனூர், கிளியனூர் என்று வெண்ணாற்று வடகரையில் தொடர்ந்து கொண்டிருந்தது பயணம். அடுத்து மாயனூர், ஹரிச்சந்திரபுரம், திட்டச்சேரி, தாண்டி நத்தம் வந்த பொழுது பிள்ளையார் கோவில் முக்கில் இரு ஊராய் பிரந்தது பாதை. பல்லக்கின் உள்ளிருந்து தண்டத்தால் பலகையைத் தட்டும் ஓசை கேட்டது. பல்லக்கு நின்றது. உள்ளிருந்த கை வலது பக்கப் பரிவில் போகச் சொல்லி சைகை செய்தது. அவர்கள் பயணத் திட்டப்படி இடது பக்கப் பாதையில் நெடுங்கரை வழியாக ஆத்தூரைக் கடந்து நாட்டியத்தான் குடி செல்ல வேண்டும். ஆனால் திடீரென்று உத்தரவு வேறு விதமாக வருகிறதே? என்று ஒன்றும் புரியாமல் திகைத்தது பின்னே வந்த கூட்டம்.

 

“ஏன் நிப்பாட்டியாச்சு?’ என்றார் வைத்தா.

“இல்லே; பிளான்படி அந்தப்பக்கம்னா போக….’ என்று முடிக்கவில்லை மகாலிங்கம்.

“நீரும், நானும் யாருங்கானும் பிளான் பண்றத்துக்கு? இந்தப் பக்கம் போகச்சொல்லி உத்தரவாச்சுன்னா, கண்ண மூடிண்டு, போய்த்தான் ஆகணும். ஒரு சின்ன அசைவுலையும் ஆயிரம் அர்த்தம் இருக்கும். காரண, காரியத்தை கேட்டுக் கொண்டிருக்கப்படாது. உமக்கும் எனக்கும் என்ன தெரியுமா? பின்னாடி தான் புரியும் எல்லாம்’ என்றார் வைத்தா தீர்மானமாக.

“இது எந்த ஊர் போற பாதை’?

“மண மங்கலம்!’

“யப்பா, யானை, ஒட்டகம், குதிரை எல்லாத்தையும் இந்தப் பக்கம் திருப்புங்கோ, பிரயாணம் இந்த மார்க்கமா போப்போறது!’ என்று அவர்குரல் கொடுத்ததும், இடது பக்கம் திரும்ப எத்தனித்த கூட்டம், வலது பக்கப் பாதையில் திரும்பிற்று.

அந்த அதிகாலைக் குளிருக்கு கட்டுண்டு சுகமாய் உறங்கிக் கொண்டிருந்தது ஊர். வழக்கம்போல விடியற்காலை எழுந்த வேம்பு அகல் விளக்குகள் இரண்டை ஏற்றி வாசல் பிறையில் ஒன்றையும், பக்கவாட்டில் இருந்த பெருமாள் கோவிலில் ஒன்றையும் வைத்தாள். வாளியிஷள் கை வைத்து சாணம் கரைக்க முடியவில்லை. அத்தனை ஜில்லிப்பு; மார்கழி, தை, எல்லாம் முடிந்து மாசியும் பிறந்து விட்டது. ஆனால் பனியின் உக்கிரம் இன்னும் குறையவில்லை. கை வளையலை மேலே ஏற்றிவிட்டுக் கொண்டு, நன்கு கரைத்து, வீட்டு வாசலில் நாலுகை, கோவில் வாசலில் நாலுகை தெளித்து, கட்டை விளக்குமற்றால் கூட்டும் பொழுது தூரத்தில் ஏதோ, புது அரவம் கேட்பது போலிருந்தது. “என்ன’ என்று கூர்ந்து அவதானித்தாள். ஒன்றும் விளங்கவில்லை.

 

சரி விடு என்று பரக்கப் பரக்க நாலு இழை வீட்டு வாசலில் இழுத்து விட்டு பெருமாள் பலிபீடத்தின்முன் கோலம் போட்டு, காவி எழுதி நிமிரும் போது வெகு அருகில் காலடி ஓசையும் குளம்பொலியும் துல்லியமாய் கேட்டது.

 

“என்னவாய் இருக்கும்?’ என்று எண்ணியபடியே மாவு சம்புடத்தை மூடித் திண்ணைக் குறட்டில் வைத்துவிட்டு நிமிர்வதற்குள், காட்சி பிரசன்னமாயிற்று. யானை, ஒட்டகம், குதிரைகள், பல்லக்கு, என்று ஒவ்வொன்றாய் வர… விக்கித்துப் போய் பார்த்துக் கொண்டிருந்தாள் வேம்பு. பல்லக்கின் உள்ளிருந்து தண்டத்தால் மீண்டும் தட்டல். பல்லக்கு நின்றது. மீண்டும் ஒரு சின்ன தட்டில் கீழ் நோக்கி பல்லக்கு தரை இறங்கிற்று. மெல்லிய இரண்டு பாத கமலங்கள் வெளிப்பட்டன. வலது பாதத்தை முதலில் எடுத்த அழுந்த பூமியில் ஊன்றி, அடுத்து இடது பாதத்தைத் தூக்கி வைத்து காவிமுக்காட்டை சரிபண்ணியபடி தண்டம் ஊன்றி அந்தத் “திரு’ எழுந்து நிற்கவும் வேம்புவிற்கு பாதாதிகேசம் சிலிர்ப்பு ஓடியது. உடம்பே கிடுகிடுத்து, கால்கள் துவண்டும் இற்றும் போய்விடும் போல் இருந்தது. சிரமப்பட்டு வாசல் தூண் பிடித்து கீழிறங்கி “சர்வேசா’ என்று கதறியபடி நமஸ்கரித்தாள்.

 

கமல விரல்கள் “ஹஸ்த்தம்’ போல் காட்டி ஆசி வழங்கியதை எல்லாம் அவள் கவனிக்கவில்லை. எழுந்து பின்னாலேயே நாலுத்தப்படி நடந்து வீட்டு வாயிற்கதவு தள்ளி, உள்ளே கூடம்தாண்டி, காமிரா உள்ளினுள் ஓடி, கணவனை எழுப்பினாள். கலவரத்துடன் அவன் எழுந்து “என்ன, ஏது’ என்று கேட்டபொழுது.

 

“யானை, குதிரை, தெய்வம்; பெரியவா…’ என்று சொல்ல முடியாமல் திணறினாள். ஜன்னல் வழி வாசலில் எட்டிப் பார்த்த பொழுது காட்சி தெரிந்தது. மண்டைக்குள் உரைத்த பொழுது உடம்பு சிலிர்த்தது. ஓடிப்போய் கொல்லைக் கிணற்றில் நாலு வாளி இழுத்து தலையில் கொட்டிக் கொண்டு புதிது உடுத்தி, விபூதி தரித்து வருவதற்குள் அவன் மனைவி நிறைகுடமும் பூரண கும்பமும், ஆரத்திதட்டும் தயார் செய்து வைத்த விட்டாள். பாதபூஜை செய்து, கற்பூரம் ஏற்றி, ஆரத்தி எடுத்து நமஸ்காரம் பண்ணி உள்ளுக்கழைக்கவும், பொழுது லேசாய் விடியவும் சரியாய் இருந்தது. அதற்குள் யானையின் பிளிறலும், குதிரைகளின் கனைப்பொலியும் தெருவையும், ஊரையும் எழுப்பிவிட்டு விட்டது. தீப்பிடித்தது போன்ற பரபரப்பு ஊருக்குள். “திக் விஜயம்’ செய்திருக்கும் செய்தி பரவ ஆரம்பித்ததும், ஜனங்கள் சாரி சாரியாய் வர ஆரம்பித்தனர். சுத்தமாய் அலசிவிடப்பட்டு கோலத்துடன் காய்ந்திருந்த பெரிய திண்ணையில் நட்ட நடுநாயகமாக வெறுந்தரையில் அமர்ந்துவிட்டது “பரபிரம்மம்’. பக்கத்துத் தூணில் தண்டம் சார்த்தப்பட்டிருந்தது. குளித்து, முழுகி ஈரத்தலையுடன் தெருமக்கள் பழத்தட்டு, பூக்குடலை ஏந்தி ஜோடி ஜோடியாய் வந்து தெண்டனித்துச் சென்றார்கள்.

 

யானை, ஒட்டகம், குதிரையெல்லாம் வெண்ணாற்றுப் பக்கம் ஓட்டிச் செல்லப்பட்டன. கூட வந்த குழாமிற்குத் தெரிந்து விட்டது. உடனடியாக இந்த இடத்தை விட்டுப் புறப்படப் போவதில்லை என்று, அடுத்தடுத்த திண்ணைகளில் மறைவாய் அமர்ந்து சிரமப் பரிகாரம் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள்.“என்ன, ஸ்ரீமடம் இந்தப் பாதையில் வரப்போறதா தகவலே இல்லையே; எப்படி?’ என்றார் தெரு முக்கியஸ்த்தர் வைத்தாவிடம்.

 

“நெடுங்கரை பக்கமா அப்படித் திரும்பறதாத்தான் பிளான் என்னவோ கையகாட்டி இந்தப் பக்கம் உள்ள வரச்சொல்லி உத்தரவு வந்தது. வந்துட்டோம். ஏதோ முக்கியமான காரணமிருக்கும்’ என்றார் வைத்தி.

“ஏன் பெரியவா வாயத் தொறக்கவே மாட்டேங்கறா?’“ரெண்டு நாளா “காஷ்ட்டிக மௌனம்’ இப்போ உபவாசமோ, விரதமோ கிடையாது. நம்ம பேச்சுக்கு ஓர் அர்த்தம்னா, அவா மௌனம்கறது ஆழ்கடல் போல ஆயிரம் அர்த்தம் இருக்கும் அதுக்கு; எப்போவேனா திருவாய் மலரலாம்.’

 

“ஒரு வார்த்தை சொல்லி இருந்தா, ஊர் எல்லையிருந்தே மேளதாளம், பூரண கும்ப மரியாதையோட அழைச்சுட்டு வந்திருப்பமே!’

“அதான் சொன்னேனே, நாம என்ன செய்ய முடியும்? அவாதிருவுளம் அப்படி, திடும்னு திரும்பியாச்சு, இப்படி!

 

மாலியும், சேஷூவும் அலுக்காமல் கிராமத்தார் சந்தேகத்திற்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்தனர்; ஸ்னானம், பூஜை, சாப்பாடு என்று எல்லாம் நியமமாய்நடந்தேரியது. “பரப்பிரம்மம்’ பசும்பாலும், உலர்திராட்சையும் மட்டும் ஏற்றுக் கொண்டது; மற்றவர்களுக்கு அடுத்தடுத்த வீடுகளில் தலை வாழை இலையில் சாம்பார், ரசம், பொரியல், கூட்டு, பொரித்த அப்பளம், வடை, பாயசம் என்று அமர்க்களப்பட்டது. செய்தி கேள்விப்பட்டு உள்ளூரிலிருந்தும், பக்கத்து கிராமங்களிலிருந்தும் சாரிசாரியாக மக்கள் வந்த வண்ணமிருந்தனர். மாசி மாத அறுவடை மும்முரமாய் நடந்து கொண்டிருந்த நேரம். களத்திலிருந்தபடியே மிரசுகளும், விவசாயிகளும், தொழிலாளர்களும் வந்தனர். ஒரு மூதாட்டி மடியில் கட்டி வந்த னத கூலி நெல்லை சுவாமியின் முன் சமர்ப்பித்து தெண்டனிட்டார். இளநீரும், வாழைத்தாருமு“, வெள்ளரிப் பிஞ்சும், நார்த்தங்காயும், எலுமிச்சம் பழங்களும், தாமரைப் பூவுமாய் மக்கள் கொண்ட வந்த காணிக்கைகளால் திண்ணை நிறைந்துவிட்டது.

 

“பெரியவா எங்க வீட்டு பாகப்பிரிவினைல சிக்கல், சரி பண்ணணும்? பொண்ணுக்கு கல்யாணம் திகையலை; அனுக்கிரகம் பண்ணணும்!’

புது வீடு கட்ட ஆரம்பிச்சு மனைபோட்டதோட அப்படியே நிக்கறது. மேக்கொண்டு ஒரு செங்கல் வைச்சு கட்டலை, கட்டிமுடிக்க பெரிவத அனுக்கிரஹிக்கனும்.

 

வடக்க இந்து முஸ்லிம் கலவரம் சதா நடந்திண்டிருக்கு; ஒயரதே இல்லை; ரத்த வெள்ளம்தான்; அமைதியே இல்லை. அமைதி உண்டாக பெரயவா தான் மனசு வைக்கணும்.நம்ம ஊர்லயே மதமாற்றம் நிறைய நடக்க ஆரம்பிச்சாச்சு. சிலுவைக்கு பாதி, மசூதிக்கு பாதின்னு நிறைய மனுஷா மாறிண்டிருக்கா, தடுத்து நிப்பாட்டணும். ஏதாவது வழி ஊர் மக்கள் கொட்டித் தீர்த்தார்கள்.

வீட்டு பிரச்சனையிலிருந்து, ஊர் பிரச்சனை, சமூகப் பிரச்னை, தேசப் பிரச்னை வரை வகை வகையாக ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார்கள். புழுக்கத்தாலும், வேண்டுதலாலும், பேராசையாலும், யாகத்தாலும், அத்திண்ணையே இறுக்கமாய் இருந்தது. சாது எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டது மௌனமாய். விருப்பப்பட்டால் ஒரு பூவோ, ஒரு துளசி விள்ளலோ, ஒரு எலுமிச்சை பழத்தையோ எடுத்துக் கொடுத்தது. சிலருக்கு அதுவும் கிடையாது. ஆனால் யாருக்கும் ஒரு வார்த்தை வாய் திறக்க வில்லை.

இடையில் மாலியை சைகை செய்து கூப்பிட்டார். லிங்க வடிவில் அபினயம் செய்து கோபுர வடிவில் கைகளை உயர்த்தி எங்கே? என்று வலது கை மடித்துக் கேட்டார்.மற்றவர்கள் ஒன்றும் புரியாமல் மௌனமாய் நின்றனர். மாலி கற்பூரமாய் புரிந்து கொண்ட கூட்டத்தைப் பார்த்து கேட்டார்.

 

“இந்த ஊரில் சிவன் கோவில் எங்க இருக்கு?’ கூட்டம் விழித்தது; ஒருவருக்கும் தெரியவில்லை,

 

“இந்தூர்ல ஒரு அய்யனார் கோயில், ஒரு மாரியம்மன் கோயில், ஒரு பெருமாள் கோயில், நத்தம் எல்லையில் ஒரு பிள்ளையார் கோயில் இதுதான் உண்டு; சிவன் கோயில் இல்லையே?’ என்றார் தொன்னூரு வயது ரெங்கண்ணா. அவருக்கே தெரியவில்லை என்றால் இங்கே வேறு யாருக்கும் தெரியப்போவதில்லை, பரப்பிரம்மம் மீண்டும் ஏதோ சைகை செய்தது.

 

“இல்லையே’ இருந்திருக்கு நிச்சயமா தெருவின் மேல் கோடீல பெருமாள் கோவில் இருந்தா கீழ்க்கோடீல கண்டிப்பா சிவன் கோவில் இருந்திருக்கணுமே!இருந்தது! கண்டிப்பா இருந்திருக்கு?பதில் சொல்லத் தெரியாமல் கூட்டம் விழித்தது. குழப்பமான மௌனம் நிலவியது அங்கே. சிவன் கோவில் எங்கே, எப்பொழுது, இப்பொழுது எங்கே எப்படி? என்று யோசித்துக் கொண்டிருக்கும்பொழுதுதான். லத்திஃப்பாயும், அவர் மனைவி மெகருன்னிசாவும் வந்தனர். கொண்டு வந்திருந்த பேயன் பழம் இரண்டு சீப்பையும், கொழுந்து வெற்றிலை ஒரு கவுளியையும் அப்பொழுது தான் பறித்த இரண்டு ரோஜாப் பூக்களையும் சுவாமி முன் வைத்து வந்தனம் செய்தனர்.

தாமரைக் கண்கள், வந்தவர்களை பாதாதி கேசம் உற்றுப் பார்த்தது; ஊடுருவிப் பார்த்தது. ஆசிர்வதித்தது; குளிறப் பண்ணிற்று. லத்திஃபும், அவர் மனைவியும் மெய்மறந்து நின்றனர்.பின்னர் ஒருவாறு சுதாரித்து, திக்கித்திணறி அவர் கோர்வையற்று சொல்லிய விஷயத்தின் சாராம்சம் இதுதான்.

 

“நேற்று கொல்லைப்புறம் செத்தி, கொத்திய பொழுது மண்வெட்டியில் ஏதோ தட்டுப்படடது. கடப்பாறையைக் கொண்டு ழத்தோண்டி பார்த்தபொழுது பெரிய சிவலிங்கம் ஒன்று தட்டுப்பட்டது. அடுத்தடுத்து தளவரிசை, படிந்து போன கருங்கற் தூண்கள், பின்னால் பாழடைந்த கிணறு என்று ஒவ்வொன்றாய்த் தட்டுப்பட்டது; எனக்கு இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை, ஒரே கலக்கமாகவும், கலவரமாகவும் இருந்தது. என்ன செய்றது அல்லாவே!ன்னு ராத்திரி முழுக்க விசனப்பட்டு உட்கார்ந்திருந்த போதுதான் பெரியவர் வந்திருக்கும் செய்தி வந்தது; இதற்குமேல் கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று தாங்கள் தான் கூற வேண்டும்.

’லத்திஃப் சொல்லச் சொல்லக் கூட்டம் மெய்மறந்து உட்கார்ந்திருந்தது.

 

பல நூற்றாண்டுகளுக்கு முன் சிவன் கோயில் அங்கு இருந்திருக்கிறது. காலப்போக்கில் கவனிப்பாரில்லாது சிதிலற்று மண்ணுள் புதைந்து மறைந்து விட்டது. நில ஆக்கிரமிப்பால் அடைக்கப்பட்டு, பலகை மாறி, கடைசியில் லத்திஃப்பாய் கைக்கு வந்து இன்று வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.“எங்க வாப்பா பள்ளிவாசல் நிலங்களை சாகுபடி செய்யும்பொழுது கூடவே கோவில் நிலங்களையும் குத்தகைக்கு எடுத்து சாகுபடி செய்தாக; நெல் அளக்கும் போது ஒரு மரக்கால் கூட குறையாம அளப்பாக சிவ சொத்து குல நாசம்ன்னு சொல்லி அல்லா சாட்சியா அத்தனை நேர்மையா அளப்பாக எனக்கும் அதே தர்ம புத்தி நியாபுத்தி உண்டு; அப்படியும் பொறந்த ஒத்த பொம்பள புள்ளையும் மனவளர்ச்சி இல்லாததாவே இருந்தது. குமருவாயி பத்து வருஷத்துக்கு முன்ன செத்து போச்சி. அறியாம செய்த பாவத்துக்கே அந்த கூலி; தெரிஞ்சும் பாவம் செய்ய மனம் ஒப்பலை. மனசார எழுதித்தர்ரேன் எனக்கு பறம் பைசா வேண்டாம். சுயநினைவோட, சுத்த மனசோட தர்ரேன்; பழையபடி அங்க சிவன் கோவில் கட்டிக்குங்க. ஊர் ஜனத்துக்கு பயன்பட்டா அதவே அல்லாவை சந்தோஷப்படுத்தும். இந்தாங்க கோவில் கட்ட எங்களால் ஆன் பணம் 101. இதை முதல் வரவா வச்சிகிங்க!’ என்று வெற்றிலை பாக்கு தட்டில் வைத்து அவர் கொடுத்த பொழுத கூட்டத்தில் எல்லோருக்கும் உடம்பு சிலிர்த்தது. இரு உதடுகளையும் அழுந்த மூடிக் கொண்டிருந்த ஞானி, அடுத்து சைகையால் கேட்டதை அவரது அணுக்க தொண்டராலும் விளக்கிக் கொள்ள இயலவில்லை. படிக்கும் பையன்களிடமிருந்து ஸ்லேட்டும், குச்சியும் தருவிக்கப்பட்டு பெரியவாளிடம் கொடுக்கப்பட்டது.

“மார்க்கக் கடமையை முடித்துவிட்டீர்களா?’ என்று எழுதிக் கொடுத்ததை கூட்டத்திடம் காட்டினார் வைத்தா.

அவர்கள் மலங்க விழித்தனர்.

 

பின்பு ஸ்லேட் லத்தீஃப் தம்பதியை நோக்கித் திரும்பியது.“இன்னும் இல்லை; பாவியாகத்தான் இருக்கோம். அதுக்குண்டான வசதியை இன்னும் அல்லா எங்களுக்குக் கொடுக்கலை. பல வருஷமா எத்தனையோ முயற்சி பண்ணியும், மெக்காமதீனா போறது இன்னைக்கு வரைக்கும் கனவாத்தான் இருக்கு!’ இதைச் சொல்லம் பொழுது லத்தீஃப்பாய் மனைவியின் குரல் தழுதழுத்தது. பெரியவா வைத்தாவைப் பார்த்தார். பார்வையின் பொருள் புரிந்த வைத்தா கூட்டத்தைப் பார்த்து, “இந்த உயர்ந்த மனிதர்களிடமிருந்து கோயில் கட்ட இடத்தை இனாமா வாங்கிக்கறேளளே? பிறதியா, நாம ஒண்ணும் செய்யவாண்டாமா அவாளுக்கு?’

பரபரவென்று யோசித்து, சடாரென்று முடிவு செய்து, “அவங்க புனிதப் பயணம் போய் வர்ர செலவு அத்தனையும் எங்களோடுது?’ ஏகமனதாய் கூட்டம் சொல்ல திண்ணையில் அமிர்தம் நிறைந்து வழிந்தோடியது, லத்தீஃப் தம்பதி நெஞ்சில் கைவைத்து சிரம் தாழ்த்தி நன்றி நவின்றனர். கண்களில் நீர் வழிந்தது.ஞானி தாமரைக்கண்களால் எல்லோரையும் ஆசிர்வதித்தார். கூட்டம் மெய் மறந்து விழுந்து வணங்கிற்று. அபயஹஸ்த்தம் காட்டி ஆசிர்வதித்த மகான் எழுந்தார். தண்டத்தை எடுத்துக் கொண்டார். பல்லக்கு அருகில் வர ஏறிக் கொண்டார்.

 

யானை, ஒட்டகமெல்லாம் தொடர்ந்து வர பயணம் மீண்டும் திருநாட்டியத்தான்குடி நோக்கிப் புறப்பட்டது. “என்னங்காணும், புரிஞ்சுதா உமக்கு ஏன் இந்தப் பக்கம் திரும்பித்துன்னு?’ என்று வைத்தா பார்வையால் கேட்க, “உணர்ந்தேன்! தெரிந்தேன்!’ என்று மகாலிங்கம் கன்னத்தில் போட்டுக் கொண்டார்.

 

“ஜெய ஜெய சங்கரா, ஹர ஹர சங்கரா…’ என்று ஜெய கோஷத்தடன் பயணம் புனிதமாய் தொடர ஆரம்பித்தது.

 

 • பெரியவா அனுக்ரஹத்தால கல்யாணம் நன்னா நடந்தது...

ஒரு கல்யாண வீடு. நாதஸ்வரம் தடபுடலாக மேளதாளத்துடன் வாசிக்கும் சப்தம், குழந்தைகள் அங்குமிங்கும் ஓடிக்கொண்டு விளையாடும் சப்தம்; காரண,கார்யமே இல்லாமல் சும்மாவாவது வேகவேகமாக நடந்து கொண்டிருக்கும் உறவும் நட்பும் என்று களைகட்டிக் கொண்டிருந்தது.

 

இதோ பையன் காஸி யாத்ரை கிளம்பினான், பெண்ணைப் பெற்றவர் அவன் காதில் ஏதோ குசுகுசுவென்று சொன்னார், திரும்பி வந்தான்; பெண்ணும் பையனும் ஊஞ்சல் ஆனது, த்ருஷ்டி என்று நாலாபக்கமும் பொத்து பொத்தென்று கலர்சாத உருண்டைகள் வீசப்பட்டன; பையனும் பெண்ணும் கையைக் கோர்த்துக் கொண்டு மணமேடையில் வந்து உட்கார்ந்தார்கள்.

 

திடீரென்று அத்தனை சந்தோஷமும் ஏக காலத்தில் நின்றது! ஒரே பரபரப்பு! ஏன் ?

 

உட்கார்ந்திருந்த கல்யாணப்பெண் அப்படியே மயங்கிச் சாய்ந்தாள்! கூடவே fits வந்து, கையும் காலும் இழுத்துக் கொள்ள, வாயில் நுரை தள்ள ஆரம்பித்தது! பாவம்! பெற்றவர்களுக்கு உயிரே போய்விட்டது! இரண்டு குடும்பமும் தவித்தன. யாரோ சொந்தக்கார டாக்டர் உடனே வந்து உள்ளே தூக்கிக்கொண்டு போய் முதலுதவி பண்ணினார்.

 

இனி என்ன செய்வது? கல்யாணம் நடக்குமா? ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை.

பகவானே! என்ன சோதனை? இப்போதுதான் முதல் முறையாக பெண்ணுக்கு fits வந்திருக்கிறது. அவளுக்கு எதிர்காலமே இனி இல்லாமல் போய்விடுமோ?

 

இரண்டு குடும்பமுமே பெரியவாளிடம் பக்தி பூண்ட குடும்பம். பத்திரிகை அடித்ததும் முதலில் பெரியவாளிடம் சமர்ப்பித்து அவருடைய அனுக்ரஹத்தோடுதான் நடக்கிறது. பின் ஏன் இப்படி?

 

கல்யாணம் பண்ணி வைத்துக் கொண்டிருந்த "ஆத்து வாத்யார்" [வைதீகர்] அம்ருத தாரை மாதிரி ஒரு யோஜனை சொல்லி, எல்லார் வயிற்றிலும் பாலை வார்த்தார்!"

 

இங்க பாருங்கோ! யாரும் அச்சான்யப்படவேண்டாம்! லக்னத்துக்கு இன்னும் நெறைய டைம் இருக்கு. நேக்கு என்ன தோண்றதுன்னா... நம்ம மாதிரி திக்கத்தவாளுக்கெல்லாம் கண்கண்ட தெய்வம் பெரியவாதான்! பேசாம, பெரியவாகிட்ட விஷயத்தை சொல்லச் சொல்லி, என்ன பண்ணலாம்ன்னு கேளுங்கோ!..அவர் என்ன சொல்றாரோ, அந்த உத்தரவுப்படி நடப்போம்.." என்றதும், உடனே மடத்தின் மானேஜருக்கு விஷயத்தைச் சொல்லி, அவரும் உடனேயே பெரியவாளிடம் சொன்னார்.

 

கொஞ்ச நேரம் மெளனமாக இருந்த பெரியவா, "பொண்ணாத்துக்காராளுக்கு குலதெய்வம்.. ஒரு மஹமாயி! அவளுக்கு ப்ரார்த்தனை பண்ணிண்டு, ஒரு வேப்பிலைக் கொத்தை எடுத்துப் பொண்ணோட தலேல சொருகணும்...அனேகமா செரியாப் போய்டும்..

 

"உடனே மானேஜர் போனில் விஷயத்தை சொன்னதும், பெண்ணின் அம்மா, குலதெய்வமான மகமாயியை வேண்டிக்கொண்டு, வேப்பிலைக் கொத்தை பெண்ணின் தலையில் சொருகினாள். ஆச்சர்யமாக மயங்கிக் கிடந்த பெண்,உடனேயே பளிச்சென்று எழுந்து உட்கார்ந்து கொண்டாள்!

 

பையன் குடும்பத்தார், பெரியவாளுடைய உண்மையான பக்தர்கள் என்பதால், எந்தவித ஆக்ஷேபணையோ, முகச்சுளிப்போயில்லாமல் உடனேயே பெண்ணையும், மாப்பிள்ளையையும் மணமேடையில் உட்கார வைத்து, குறித்த நேரத்தில் நல்லபடியாக கல்யாணம் முடிந்தது. சேஷ ஹோமம் ஆனதும், காஞ்சிபுரம் நோக்கி இருவீட்டாரும் ஓடினார்கள்.

 

"பெரியவா அனுக்ரஹத்தால கல்யாணம் நன்னா நடந்தது..." நன்றிக் கண்ணீரோடு பெற்றவர்கள் கூறினார்கள்.

 

"மஹமாயி அனுக்ரஹத்தால...ன்னு சொல்லு!..." புன்னகைத்தார் பெரியவா.

 

"வந்து.....பொண்ணுக்கு இப்டி fits வந்துடுத்தே பெரியவா! ..." அப்பா இழுத்தார்.

 

"FIT ...ன்னு சொல்லு!.." சமத்காரமாக பெரியவா சிரித்துக் கொண்டே சொல்லிவிட்டு, "க்ஷேமமா இருப்பா!" என்று திருக்கரங்களைத் தூக்கி ஆசீர்வாதம் பண்ணினார். இது போறுமே !

 

Fits வந்தது, தெய்வ குத்தம்; FIT ஆனது, பெரியவா அனுக்ரஹம்!

 

 • எந்தப் பொருளையும் வீணாக்கக்கூடாது என்பதில் பெரியவர் கொண்டிருந்த அக்கறையை இந்த சம்பவம் எடுத்துக் காட்டியது.

" மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் அவர் முகாமிட்டிருந்தார். சுவாமிகளைத் தரிசிக்க ஆயிரக்கணக்கில் மக்கள் கூடியிருந்தனர். பெரியவர் தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்த இடத்தில் தரையில் சில வெற்றிலைகள் கிடந்தன. அதைப் பார்த்த சுவாமிகள் சிஷ்யனை அழைத்து, அதனை எடுத்து வைக்கும் படி சொன்னார். தரையில் கிடக்கும் வெற்றிலையை ஏன் எடுக்கச் சொல்கிறார் என்ற குழம்பிய சிஷ்யர் வெற்றிலையை எடுத்து பத்திரப்படுத்தி வைத்தார். அந்த சமயத்தில், எப்படியாவது பெரியவரை தரிசித்து ஆசிர்வாதம் பெற வேண்டும் என்ற வைராக்கியத்துடன் முண்டியடித்து கூட்டத்தின் நடுவே கர்ப்பிணி பெண் ஒருவர் வந்து கொண்டிருந்தார். கூட்டநெரிசலில் சிக்கி முன்னேறிய அந்தப் பெண்ணுக்கு தலைசுற்றல் ஏற்பட்டது. அவளது நிலையைப் புரிந்துகொண்ட பெரியவர் சிஷ்யரை அழைத்து, அந்த வெற்றிலைகளை அந்தப் பெண்ணுக்கு கொடுக்கச் சொன்னார்.

 

அந்தப் பெண் வெற்றிலையை வாயில் போட்டுக் கொண்டதும் அவளின் தலைசுற்றல் தீர்ந்து போனது. அப்பெண் வேறு யாருமல்ல. அமரர் ரசிகமணி டி.கே.சி. பரம்பரையைச் சேர்ந்தவர். அவரது பெயர் ஞானஒளி.

“”உடலை உறுத்தும் நோயை

உள்ளன்போடு போக்கும் தெய்வம்!

சாந்த சொரூபமான

சந்திரசேகரேந்திர சரஸ்வதியாக

அருள் தரும் தெய்வம்!

தாயாகி தந்தையுமாகி

எனை தாங்குகின்ற தெய்வம்!

துன்பம் துயர் போக்கும் நண்பனாகி

துணை நின்ற தெய்வம்!”

 

என்று பெரியவர் மீது ஒரு அருமையான கவிதையும் பாடிச் சென்றார். எந்தப் பொருளையும் வீணாக்கக்கூடாது என்பதில் பெரியவர் கொண்டிருந்த அக்கறையை இந்த சம்பவம் எடுத்துக் காட்டியது."

 

 • நெடுநாட்கள் சுத்த உபவாசமிருந்த பெரியவா


ஒருமுறை காசியிலிருந்து திரும்பும் வழியில் பெர்ஹாம்பூரில் சாதுர்மாஸ்ய அனுஷ்டிக்கும்போது நெடுநாட்கள் சுத்த உபவாசமிருந்தார் பெரியவா. அதையும் மடத்தினருக்கே தெரியாமல் ரொம்ப ரகசியமாக செய்தார். மடத்து கஜானாவை நிர்வகித்து வந்த ராமச்சந்திர ஐயருக்கு எப்படியோ ரகசியம் தெரிந்து விட்டது. பெரியவாளிடம் சென்று உபவாசத்தை விடுமாறு வேண்டினார்.

 

அவரும் உடனே பிக்ஷை தயாரித்து கொண்டிருந்த பணியாளரை கூப்பிட்டு, மறுதினம் தம் உணவில் இன்ன இன்ன சேர்க்கும்படி கூறினார். "கஜானா" சந்தோஷம் தாங்காமல் திரும்பினார். திரும்பியபின் அவருக்கு சந்தேகம் எழுந்தது. "ஆனானப்பட்ட அன்னதான சிவன் போன்றவர்களின் வேண்டுகோளுக்கும் மசியாத பெரியவாளா நம் கோரிக்கைக்கு இத்தனை சுலபமாக மசிந்து விட்டார்?" என்ற சந்தேகம்.

 

பிக்ஷை தயாரிக்கும் பாரிஷதரிடம் போய் குடைந்தார். அவருடைய சந்தேகம் சரியானதே என்று நிரூபணமாயிற்று. "நீங்க அந்தண்டை போனதுமே பெரியவா, "அவர் மனசு சமாதானமாறதுகக்காகத்தான் அப்படி சொன்னேன். அதை அடியோட மறந்துடுன்னார்" என்று அந்த பாரிஷதர் நிஜத்தை கக்கி விட்டார்.

 

"கஜானா" மறுபடி பெரியவாளிடம் போனார். பல முறை போனார். அனால் அவர் வாயை திறக்கவே பெரியவா இடம் கொடுக்காமல் அடியார்கள், சிப்பந்திகள், பண்டிதர்கள் என்று எவரையேனும் சுற்றிலும் வைத்து கொண்டு ரொம்பவும் சீரியசாக ஏதாவது அலசி கொண்டிருந்தார். இப்படி பல நாட்கள் ஓடின. கடும் உபவாசமும் தொடர்ந்தது. கடைசியாக ஒருநாள் இரவு 10 மணிக்கு மேல் "கஜானா"விடம் பெரியவா பிடிபட்டார். சுக்ரவார பூஜை சற்று தள்ளாட்டத்துடனேயே முடித்துவிட்டு, ஓய்வுக்கு பெரியவா சாய்ந்த சமயத்தில் கஜானா அவரை பிடித்து விட்டார்.

 

"நாளைக்கு பெரியவா வயிறார பிக்ஷை பண்ணலேன்னா நான் மடத்தை விட்டே போய்டறேன்" என்று முரண்டு செய்து பார்த்தார் கஜானா.அதுவும் பலிக்கவில்லை. முகமெல்லாம் சிரிப்பாக பெரியவா "நீ இல்லாட்டா மடம் நடக்காதோ?" என்றார்.

 

"அப்போ இந்த லோகத்தை விட்டே போய்டறேன்" என்று தம்மை மீறிய ஆவேசத்துடன் சொல்லி அழுதே விட்டார் கஜானா.

 

"சரி! பிக்ஷை பண்ணறேன். நாளைக்கு என்ன? இப்பவே பண்றேன். வயிறார பண்ணனும்னியே பண்றேன், பண்ணி  வைக்கறையா?"

 என்றார் பெரியவா

 

"காத்துண்டு இருக்கேன்" என்று கஜானா நமஸ்காரம் செய்தார். அந்த இரவு வேளையில் பெரியவா பாலும் பழமும் தவிர எதுவும் உட்க்கொள்ளமாட்டார் என்று நினைத்தார். பெரியவா உட்கொள்ளும் அளவு தெரிந்த பிக்ஷை பாரிஷதரை கூப்பிட்டார்.

 

"அவனை ஏன் கூப்பிடறே? ஒன்னையேதானே பிக்ஷை பண்ணி வெக்க சொன்னேன்? நீயும் ஒப்புத்துண்டையே!""அளவு தெரியாததால அவனை கேட்டுக்கலாம்னு....." கஜானா இழுத்தார்."அளவு தெரியாட்டா என்ன? இருக்கறதை ஜாடா கொண்டா""சரி நாம் பழக்கூடைகள், தட்டுகள் யாவும் கொண்டு வந்து வைப்போம். பெரியவாளே வேண்டியதை எடுத்து கொள்ளட்டும்" என்று கஜானா நினைத்து அவ்வாறே செய்தார்.

 

அதியாச்சரியமான கட்டளை பெரியவாளிடமிருந்து பிறந்தது "சுக்ரவார நைவேத்யம் சொஜ்ஜி, சுண்டல் எங்கே? கொண்டா சட்னு" கஜான ஓடோடிபோய் பெரிய பெரிய பத்திரங்களில் நிறையவே இருந்த சொஜ்ஜியையும், சுண்டலையும் சமர்ப்பித்தார்.

 

"அதி"க்கும் மேற்பட்ட ஆச்சரியம் நிகழ்ந்தது. பெரியவா அவ்வளவையும் வெகு விரைவில் உட்கொண்டு பாத்திரங்களை காலி செய்தார். "இவ்வளவுதானா?" என்று வேறு கேட்டார்.

 

பன்னிரண்டு திருவோணம் அட்டேன்;"இன்னம் உவப்பன் நான்" என்று சொல்லி எல்லாம் விழுங்கிட்டு போந்து நின்றான்!............என்று ஆய்ச்சி மொழியாக ஆழ்வார் பாடியது உண்மையாயிற்று.

 

பழக்கூடையும் சடுதியில் காலியாயிற்று "இன்னும் என்ன இருக்கு" என்று கேள்வி கஜான வெலவெலத்து போனார்.

 

"வயிறார பண்ணறேன்னு ஒப்புண்டு பசியை கிளறிட்டியே! உசிர் போறதே!" என்ற பெரியவாளின் வார்த்தையை தாங்காமல் ஒரு பெரிய கூஜா பாலை திருமுன் வைத்தார். கடகடவென்று அதையும் பெரியவா காலி பண்ண, தடதடவென கஜானா கன்னத்தில் போட்டுகொண்டு அவரது பாதத்தில் தடாலென விழுந்தார்.

 

"பெரியவா க்ஷமிக்கணும். இனிமே ஒருநாளும் பெரியவாளை தொந்திரவு பண்ண மாட்டேன்" என்று விக்கினார்.குழந்தையாக சிரித்த பெரியவா, "இனிமே என் வம்புக்கு வரமாட்டியோல்யோ?" என்று கை தூக்கி ஆசிர்வதித்தார்.

 • குடிசையில் பிள்ளையார் சிலை

என்னுடைய படிப்பு முடிந்தவுடன் வேலைக்காக நான் தேர்ந்தெடுத்த துறை பத்திரிகைத் துறை. ஒரு வாரப் பத்திரிகையில்1960 ஆம் ஆண்டு உதவி ஆசிரியராகப் பணியாற்றினேன். மாதச் சம்பளம் 70 ரூபாய்.

 அங்கு சரியாக சம்பளம் தரவில்லை என்பதால், என் தந்தை என்னை சிம்சன் கம்பெனிகளில் ஒன்றில் சேர்த்துவிட்டார். மாதச் சம்பளம் 110 ரூபாய். இருந்தாலும் நான் எழுத்துத் துறையை விடவில்லை. (இந்த 70 வயதிலும்). ஆனால் நான் பணிபுரிந்த- அந்த சிம்சன் குரூப் கம்பெனிகளில் ஒன்றான அது எந்த நிமிடத்திலும் மூடப்படும் அபாயத்தில் இருந்தது. அந்த மனக் கவலையோடு இருந்த நேரத்தில், என்னோடு பணிபுரிந்த நண்பருக்கு காஞ்சிபுரத்தில் திருமணம் நடந்தது. அதிகாலையிலேயே நடந்து முடிந்துவிட்டதால், பெரியவர் ஒருவர், ""மகா பெரியவா இங்கதான் கலவைல இருக்கார்... போய் தரிசனம் பண்ணிட்டு வாங்களேன்...'' என்றார்.

 கலவை ஒரு சிறிய கிராமம். அக்ரஹாரம் மாதிரி இருந்த அந்தத் தெருவே மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஒருபுறம் முழுவதும் பழைய காலத்து வீடுகள் முனிவரின் பர்ணசாலையைப்போல் காட்சியளித்தன. அமைதியான கிராமம். சிறிய குளம் ஒன்றும் இருந்தது. ""பெரியவா ஸ்னானம் பண்ணிண்டிருக்கா...'' என்றார் ஒருவர்.

நாங்கள் அந்தக் குளத்தை விட்டு சற்று தூர நின்று பெரியவரை தரிசித்தோம். ஈரம் சொட்டச் சொட்ட குளக்கரைக்குமேல் நின்று எங்கள் பக்கம் பார்வையை ஓட்டினார் பெரியவர். நாங்கள் அனைவரும் சாஷ்டாங்க மாக அவரின் பாதத்தில் விழுந்து நமஸ்கரித் தோம். அற்புதமான அந்தப் பேரொளியின் தீட்சண்யத்தை எங்களால் தாங்க முடியவில்லை. நாங்கள் ஏதேனும் பாவம் செய்திருந்தால் அது அந்த நிமிடமே தொலைந்திருக்கும். அது ஒரு கங்கை நதி. மறுபடியும் சட்டென்று எங்களைப் பார்த்தார்.

""எதுக்கும் கவலைப்படாதீங்கோ... கம்பெனி எல்லாம் நல்லா நடக்கும். எல்லாம் க்ஷேமமா இருப்பேள்'' என்றார்.

எங்களுக்கு உடலெங்கும் மின்சாரம் பாய்ந்த மாதிரி ஓர் உணர்வு. "நாங்கள் யார்... எங்கிருந்து வருகிறோம்? நாங்கள் பணிபுரியும் அலுவலகம் மூடும் நிலையில் இருக்கிறது. எங்கள் எதிர்காலம் என்ன ஆகுமோ...' என்று அவரிடம் யார் சொல்லியிருப்பார்கள்? மகா பெரியவர் எங்களுக்கு கருணா கடாட்சம் எப்படி அளித்தார்? இவருக்கு எப்படித் தெரிந்தது? கண்களில் நீர்வழிய மறுபடியும் அந்த மகானை நமஸ்கரித்தோம். ஏனெனில் அனைத்தும் அறிந்த சர்வேஸ்வரன் அல்லவா அவர்?

இந்த அற்புதம் நடந்து முடிந்த சில ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் அந்த இறைவடிவத்தை சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. அநேகமாக 1963 அல்லது 1964-ஆம் ஆண்டாக இருக்கலாம். நான் அப்போது என் தாய், தந்தை, தம்பிகளோடு பெரம்பூரில் திரு.வி.க. நகர் என்னுமிடத்தில் வாழ்ந்து வந்தேன். அங்கே ஒரு "சத்சங்கம்' இருந்தது. அதில் நானும் ஓர் அங்கம். திரு.வி.க. நகரின் நுழைவுவாயிலில் ஓர் ஏழைப் பிள்ளையார் வசித்து வந்தார். ஆம்; ஒரு குடிசையில் பிள்ளையார் சிலை வைத்து வழிபட்டு வந்தோம். தினமும் ஒரு அர்ச்சகர் காலையும், மாலையும் பூஜை செய்துவிட்டுப் போவார். சனிக்கிழமை மாலை பஜனை நடக்கும். சுண்டல் விநியோகம். பலர் கலந்து கொள்வார்கள்.

திடீரென்று எங்கள் சத்சங்க உறுப்பினர் களுக்கு இந்த ஏழைப்பிள்ளையாருக்கு ஒரு கோவில் கட்டவேண்டும் என்கிற எண்ணம் உண்டாயிற்று. அந்த முடிவின்படி நல்ல உள்ளம் படைத்த ஆன்மிகப் பெருமக்களிடம் நன்கொடை வசூலித்து கோவில் திருப்பணியை ஆரம்பித்தோம். ஓர் அன்பர், ""காஞ்சி மகா பெரியவாளிடம் ஸ்ரீமுகம் வாங்கி, பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தால் நன்கொடை குவியும்...'' என்று சொன்னார். நாங்கள் மகா பெரியவரை சந்திக்க ஸ்ரீ மடத்துடன் தொடர்புகொண்டோம். மகா பெரியவர் ஆந்திர மாநிலத்தில் இருப்பதாக தகவல் கிடைத்தது. ஆனால் காஞ்சிபுரத்திற்கு எப்போது திரும்புவார் என்கிற சரியான தகவல் தெரியவில்லை. நாங்களும் பெரியவர் வரட்டும் என்று காத்திருந்தோம். அவர் வருகைக்காகத் தவமிருந்தோம் என்றுகூடச் சொல்லலாம்.

அன்றிரவு-வழக்கம்போல் உணவுண்டு பகவானை பிரார்த்தித்து விட்டு உறங்கப் போனேன். ஓர் அற்புதமான கனவு. நாங்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த மகாசுவாமிகள், பெரம்பூர் ராவ் பகதூர் கண்ணன் செட்டியார் பள்ளியில், புதுப்பெரியவரோடு (ஜெயேந்திரர்) முகாமிட்டிருப்பது போலவும், எங்கள் சத்சங்கத்தினர் மகா பெரியவரிடம் பிள்ளையார் கோவில் கட்ட ஸ்ரீமுகம் வேண்டி நிற்பதுபோலவும் இருந்தது அந்தக் கனவு.

திடுக்கிட்டு எழுந்தேன். இரவு மணி இரண்டரை. அந்த அற்புதக் கனவை மறுநாள் காலையில் எழுந்ததும் எங்கள் சத்சங்க முக்கியஸ்தர்களிடம் சொன்னேன்.

""நீ அதையே நெனைச்சிண்டு படுத்திருப்பே. அதுதான் அந்த சொப்பனம். மடத்துக்காராளுக்கே பெரியவா எந்த ஊர்ல இருக்கார்னு தெரியலே. நீ என்னடான்னா நம்ப ஊர் ஸ்கூல்ல வந்து தங்கின மாதிரி சொப்பனம் கண்டிருக்கே... அவ்வளவுதான்...'' என்று சிலர் சொன்னார்கள்.

என்ன அற்புதம் பாருங்கள். ஒருசில மணித் துளிகள் கழித்து ஸ்ரீ ரங்காச்சாரி என்பவர் ஓடிவந்தார்.""சுவாமிகள் நெல்லூர் வழியா வந்து நம்ப ஆர்.பி.சி.சி. ஸ்கூல்ல தங்கியிருக்காராம். எல்லாரும் வாங்கோ... பெரியவாகிட்ட கோவில் கட்டற விஷயத்தைச் சொல்லிடுவோம்...'' மூச்சிரைக்க பொங்கிப் பொங்கிப் பேசினார் ரங்காச்சாரி. அவர் சொன்னதைக் கேட்டதும் அனைவரும் என்னைப் பார்த்தார்கள்.

""உன்னோட சொப்பனம் பலிச்சுடுத்துப்பா...'' நாங்கள் ஒரு ஏழெட்டு சத்சங்க உறுப்பினர்கள் உடனே அந்தப் பள்ளிக்குச் சென்றோம். பள்ளி வகுப்புகள்மேல் ஓலை வேய்ந்திருந்த இடத்தில், புதுப்பெரியவரோடு அமர்ந்து சுவாமிகள் அனைவருக்கும் ஆசி வழங்கிக் கொண்டிருந்தார். சுவாமிகள் எந்த இடத்தில் அமர்ந்திருந்ததாகக் கனவு கண்டேனோ அதே இடத்தில் அதே கோலத்தில் அமர்ந்திருந்தது எனக்கு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. நாங்கள் அவரிடம் கோவில் விஷயத்தைப் பற்றி பேசியதைக் கேட்டுக் கொண்டார். அன்று மாலையே புதுப் பெரியவரை கோவிலுக்கு அனுப்பி வைப்பதாகக் கூறினார். அனைவரும் அவரை நமஸ்கரித்துவிட்டுப் புறப்படும்போது, நான் எங்கள் குடும்பப் பெயரான ""பாளேகெட்டே குடும்பம் நான்'' என்றேன். ஏனெனில் என் தந்தை, "பெரியவாளிடம் நம் குடும்பப் பெயரை சொல்லிவை' என்றிருந்தார். சட்டென்று சுவாமிகள் என்னை உற்றுப்பார்த்து புன்னகைத்தார். கன்னடத்தில், ""நீ கும்மோணமா?'' என்றார். ""ஆம் ஸ்வாமி'' என்றேன். ""பத்து உனக்கு என்ன ஆகணும்?'' என்று கன்னடத்திலேயே கேட்டார். ""என் சிறிய தாத்தா'' என்றேன். மீண்டும் என்னை ஆசிர்வதித்தார். ""போ... சாயங்காலம் இவா வருவா உங்க ஊருக்கு'' என்று ஜெயேந்திரரைக் காட்டினார்.

புத்துணர்ச்சி பெற்றவர்களாக திரு.வி.க. நகர் திரும்பினோம். மாலை புதுப்பெரியவர் வரும்போது எப்படி வரவேற்பு கொடுக்க வேண்டும் என்பதை மடத்து ஊழியர் எங்களிடம் தெரிவித்தார். எங்கள் சத்சங்கத்திலோ பணம் இல்லை. என்ன செய்வது? எங்கள் நகரில் ஐந்நூறு வீடுகள் இருந்தன. ஒரு குழுவாக நாங்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்றோம். சுவாமிகள் நம் ஊருக்கு வருகை தர இருக்கிறார் என்கிற செய்தி கேட்டு அனைவரும் நாங்களே எதிர்பாராதவிதமாக பணத்தை அள்ளிக் கொடுத்தனர். இரவு ஏழு மணியளவில் புதுப்பெரியவர் வரும்போது அதி அற்புதமான வரவேற்பு கொடுத்தோம். புதுப்பெரியவர் குடிசையிலிருந்த பிள்ளையாரை தரிசித்துவிட்டு, "சரி' என்பதற்கு அடையாளமாக புன்சிரிப்புடன் தலையாட்டினார். மறுநாள் மகா சுவாமிகள் ஸ்ரீமுகம் கொடுக்க, "கல்கி' வார ஏடு அதை இலவசமாகப் பிரசுரித்தது. எங்களுக்கு நன்கொடைகள் குவிய ஆரம்பித்தன. முதலில் சிம்சன் கம்பெனிகளின் அதிபர் ஸ்ரீ அனந்தராமகிருஷ்ணன் ஆயிரம் ரூபாய் நன்கொடை அளித்தார். அன்றைய தினம் இது மிகப்பெரிய தொகை. பலரிடம் வசூல் செய்து, 64-ஆவது நாயன்மார் என்று போற்றப்படும் ஸ்ரீ கிருபானந்த வாரியார் சுவாமிகளின் தலைமையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இப்போது அந்த ஆலயம் மிகச்சிறப்பாக வளர்ந்துள்ளது. அந்த வழியாகப் போகும்போதெல்லாம் இந்த மகான்கள் நினைவில் தோன்றுவர்.

 

 • தாத்தா பாட்டியை விட வேறே சிறந்த குரு யாரும் கிடையாது

"ஸ்ரீ சி. ஆர். சுவாமிநாதன் - மத்திய அரசில் பெரும் பதவி வகித்தவர் அவர் சொன்னதிலிருந்து:

சென்னை ஸம்ஸ்கிருத கல்லூரியிலே 1956-57லே மஹா பெரியவா சில நாள் தங்கி, சாயந்திரம் தினமும் பிரசங்கம் நடைபெறும். கேக்கணுமா. பெரியவா பேச்சை கேக்க கூட்டம் அலைமோதும். அன்று ராஜாஜி வந்திருந்தார். என்ன பேசறதுன்னு மகாபெரியவா முடிவு பண்ணலை.பக்கத்திலே ப்ரொபசர் சங்கரநாராயணன் நிக்கறதை பெரியவா பாத்து அவரை பக்கத்திலே கூப்பிட்டா.

அவர்கிட்ட ஒரு ஸ்லோகத்தைச் சொல்லி அதிலே முதல் ரெண்டு வரியை சொன்னா.

''உனக்கு அடு த்த ரெண்டு வரி இருக்கே அது தெரியுமா? .

''பெரியவா க்ஷமிக்கணும். எனக்கு தெரியலை''

இப்படி பெரியவா ஒரு ஸ்லோகத்தை பத்தி பேசினது மைக்லே எல்லோருக்கும் கேட்டுடுத்து.

கூட்டத்திலே ஒருத்தருக்கு அந்த ஸ்லோகம் தெரிஞ்சிருந்தது. அவர் மெதுவாக மேடைக்கு அருகே வந்து ப்ரொபசர் சங்கரநாராயணன் கிட்டே '' சார், பெரியவா கேட்ட அந்த பாக்கி ரெண்டு அடி எனக்கு தெரியும் அது இதுதான் என்று அவரிடம் சொன்னதை ப்ரொபசர் சந்தோஷமா மேடையிலேறி பெரியவா கிட்ட

''பெரியவா அந்த மீதி ரெண்டு வரி இது தான் என்று சொன்னவுடன் ''நான் கேட்ட போது தெரியாதுன்னியே''?''

ஆமாம் பெரியவா. கூட்டத்திலே யாரோ ஒருவருக்கு தெரியும்னு வந்து எங்கிட்ட சொன்னதைத்தான் பெரியவா கிட்ட சொன்னேன். ''''அவரை இங்கே அழைச்சிண்டு வா''

இந்த நிகழ்ச்சியை சொன்ன சி.ஆர். சுவாமிநாதனை மேடையில் தன் கிட்ட கூப்பிட்டு பெரியவா

''நீ தான் அந்த ரெண்டு வரியை சொன்னதா?''

''ஆமாம் பெரியவா''

''எங்க படிச்சே?''

''மெட்ராஸ்லே பிரெசிடென்சி காலேஜ்லே''

''நான் அதைக் கேக்கலே. இந்த ஸ்லோகத்தை எங்கே படிச்சே?''

''எங்க தாத்தா சொல்லிகொடுத்தது சின்ன வயசுலே''

''எந்த வூர் நீ, உங்க தாத்தா யார்?'

'சுவாமிநாதன் விருத்தாந்தம் எல்லாம் சொன்னார்.

பெரியவா சுவாமிநாதன் பேசினது அத்தனையும் மைக் வழியா சகல ஜனங்களும் கேட்டிண்டு இருந்தா.

பெரியவா சொன்ன ஸ்லோகம் இது தான்

அர்த்தாதுரணாம் ந குருர் ந பந்து ,

க்ஷுதாதுராணாம் ந ருசிக்கி ந பக்வம் ,

வித்யாதுராணாம் , ந சுகம் ந நித்ரா ,

காமாதுராணாம் ந பயம் ந லஜ்ஜா

பணமே லக்ஷியம் என்று தேடுபவனுக்கு குரு ஏது பந்துக்கள் ஏது?

பசி காதடைக்கிறவனுக்கு ருசியோ, பக்குவமோ அவசியமா?

படித்து முன்னேர முனைபவனுக்கு வசதியோ தூக்கமோ ரெண்டாம் பக்ஷம் தானே?

காமாந்தகாரனுக்கு பயமேது வேடகமேது?

தான் பிறகு பேசும்போது பெரியவா கேநோபநிஷதிலிருந்து மேற்கோள்கள் காட்டினார். எப்படி பார்வதி தேவி தேவர்களுக்கு பிரம்மத்தை உபதேசித்தால் என்றெல்லாம் விளக்கிவிட்டு

இப்போ பேசுறதுக்கு முன்னாலே ஒருத்தரை மேடைகிட்ட கூப்பிட்டு ஒரு ஸ்லோகத்தின் முதல் ரெண்டு அடிகளை சொல்லி பாக்கி தெரியுமா என்றதற்கு தெரியும் என்றார். எங்கே தெரிஞ்சுண்டே என்று கேட்டதற்கு,சின்ன வயசிலே தாத்தா வீட்டிலே சொல்லிக்கொடுத்தார் என்றார். எனக்கு அவா குடும்பத்தை தெரியும்.

இந்த நிகழ்ச்சியிலிருந்து என்ன தெரிகிறது?

நான் எதுக்கு இதை பெரிசா எடுத்து சொல்றேன்னா, இதெல்லாம் வீட்டிலே பெரியவா கிட்டே தெரிஞ்சிக்கணும். இதெல்லாம் பள்ளிக்கூடத்திலேயோ, காலேஜ்லேயோ சொல்லித்தரமாட்டா. சேர்ந்து ஒண்ணா வாழற குடும்ப வாழ்க்கையிலே இது ஒரு பெரிய லாபம் என்பதைபுரிந்து கொள்ள உதவும்.

தாத்தா பாட்டிகள் ஒரு பொக்கிஷம். நிறைய விஷயங்களை அவா கிட்டேயிருந்து தெரிஞ்சிக்கலாம்.

சின்ன வயசிலேயே சொல்லிக்கொடுக்க தாத்தா பாட்டியை விட வேறே சிறந்த குரு யாரும் கிடையாது. மனதில் நன்றாக படியும் . அது தான் பசுமரத்தாணி என்கிறது.

 

 

 

 

ஒரு ஆசாரசீலர் பெரியவா கிட்ட போய் மிக வினயத்துடன், "பெரியவா இப்போஎல்லாம் conversion அதிகமா ஆயிண்டே இருக்கு, போற போக்க பாத்தா நம்ம தேசத்துல ஹிந்துக்கள் கொறஞ்சி மற்ற மதத்தவர் அதிகமா ஆயிடுவா போல இருக்கே.பெரியவா தான் இந்த இக்கட்டான சூழலுக்கு முடிவு காணனும்" என்று தன் வருத்தத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.வருத்தத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.

உடனே பெரியவா "இப்போ மாட்டும் இல்ல எப்பவுமே இந்த பிரச்சனை நம் பாரத தேசத்துல உண்டு.

பகவத் பாதாள் காலத்துல பௌத்த ஜைன உள்பட 72 மதங்கள் இருந்தது.ஆனா பகவத்பாதாள் அனைத்தையும் கண்டனம் செய்து நம் சனாதன தர்மத்தை நிலைக்கச்செய்தார்.நமது சனாதன தர்மமானது யுகங்களை கடந்தது.அதற்க்கு எப்பவுமே அழிவில்லை.க்ஷீணம் ஆவதுபோல தெரியும் ஆனா எப்பவுமே நமத தர்மம் க்ஷீநிப்பது இல்லை.

மழைக்காலத்துல பனைமரத்த சுத்தி பல கொடிகள் வளரும்.அந்த கொடிகள் பனைமரத்தயே மறைக்குறா போல மரத்துமேல படர்ந்து வளரும்.ஆனா அந்த கொடிகளுக்கு ஆயிசு அதிகம் இல்ல.

பலமா ஒரு காத்து அடிச்சாளோ, மழைமுடிஞ்சு வேனல்காலம் வந்தானோ மரத்த மறைத்திருக்குற அந்த கொடிகள் எல்லாம் காஞ்சி கீழே விழுந்துடும்.

ஆனா பனைமரம் எந்த பாதிப்பும் இல்லாம அப்படியே இருக்கும்.அது போலத்தான் நம் சனாதன தர்ம மதமும் பனைமரம் போல ஸ்திரமா இருக்கும்.அதற்கு என்னைக்குமே அழிவோ க்ஷீனமோ இல்லை.

வீணா கவலைப்படாம உன் ஸ்வதர்மத்துள இருந்து வழுவாம உனக்கு விதிக்கப்பட் நித்ய கர்மாக்களை ஒழுங்காசெய்து வா.அதுவே நீ நம் மதத்துக்கு செய்யுற மிகப்பெரிய உபகாரம்.அனைத்தையும் காமாக்ஷி பாத்துண்டே இருக்க.எப்போ எத செய்யனும்னு அவளுக்குத்தான் தெரியும்."என்று அருளாசி வழங்கினார்!!!

 

 

 • ஆண் மூலம் அரசாளும்; பெண் மூலம் நிர்மூலம்!(மகா பெரியவா)

      மகா பெரியவா ஏன் மூலா நக்ஷத்ரத்தில் காஷ்ட மௌனம் அனுஷ்டிக்கிறா? ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலமா?மகா பெரியவா பதில் சொன்னார்..."மூலா நக்ஷத்ரம் சரஸ்வதியோட நக்ஷத்ரம். சரஸ்வதி வாக்குக்கு தெய்வம். அன்னிக்கு காஷ்ட மௌனம் இருந்து அவளை பிரார்த்தனை பண்ணிண்டு இருந்தா வாக் விரயம் ஆகாமலும் இருக்கும். அவளை பிரார்த்தனை பண்ணிண்டு இருந்த மாதிரியும் இருக்கும். அதனால, மூலா நக்ஷத்ரம் அன்னிக்கு எதுவும் பேசாம இப்படி காஷ்ட மௌனம் இருக்கறது. "ஆண்டாண்டு காலமாக மக்கள் மத்தியில் நிலவிவரும் தவறான நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று. 'மூல நட்சத்திரப் பெண்ணா? வேண்டவே வேண்டாம்!’ என்று நட்சத்திரத்தைப் பார்த்ததுமே அவர்களின் ஜாதகத்தை ஒதுக்கித் தள்ளும் வேதனையான வழக்கம் இன்றும் தொடர்கிறது.அந்த குழந்தைகளும் கல்யாணம் ஆறதுக்கு ரொம்ப சிரமப் பட்டுண்டு இருக்கா. இன்னொரு சிஷ்யர். அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. மூலா நக்ஷத்ரம். மகா பெரியவா அவரிடம் 'ஏண்டா, பொம்மனாட்டி கொழந்தை, அதுவும் மூலா நக்ஷத்ரம். ஒனக்கு கவலையா இல்லியோ?' என்றாராம். அடியாருக்குத் தெரியாதா என்ன? ஐயனின் திருவிளையாடல்கள்...'பெரியவா இருக்கா. அதெல்லாம் பெரியவா பாத்துப்பா. அப்புறம் அவள் க்ஷேமத்துக்கு என்ன குறை இருக்கப் போறது?' என்ற ரீதியில் சொல்லிவிட்டாராம். மகா பெரியவா அவரை நிரம்ப ஆசிர்வாதம் பண்ணி, 'மூலா நக்ஷத்ரம் சரஸ்வதி அம்பாளோட நக்ஷத்ரம். குழந்தைக்கு சரஸ்வதி ன்னு பேரு வை. க்ஷேமமா இருப்பா' என்று ஆசி சொன்னாராம். இன்று அந்த பெண் குழந்தை நல்ல இடத்தில் மணமாகி குழந்தைகளுடம் பரம க்ஷேமமாக இருக்கிறார்.ஆம். அதெல்லாம் மகா பெரியவா பாத்துப்பா.

 

 

 • என்னை விட்டால் உயர்ந்த பக்தன் யாரு

     என்னை விட்டால் இந்த ஊரில் <உயர்ந்த பக்தன் யாரு! தூக்கத்தில் கூட "கிருஷ்ணா, ராமா' என்று தானே கத்துகிறேன்,'' என்ற ஆணவம் சிலரிடம் இருந்தது. அவர்கள் தான் நாரதர், பிரகலாதன், திரவுபதி, அர்ஜுனன் ஆகியோர் இந்த நான்கு பேருக்குமே பாடம் புகட்ட கிருஷ்ணர் எண்ணினார். அர்ஜுனனை தேரில் ஏற்றிக் கொண்டு, காட்டுவழியே போய்க் கொண்டிருந்தார். வழியில், ஒரு மகரிஷி கத்தியைத் தீட்டிக் கொண்டிருந்தார்."

      "கண்ணா! கமண்டலம் ஏந்த வேண்டிய இந்த மகான் ஏன் கத்தியைத் தீட்டிக் கொண்டிருக்கிறார். உனக்கு ஏதாச்சும் தெரியுமா?''""எனக்கென்ன தெரியும்! நானும் உன்னோடு தானே வருகிறேன். இப்போது அது தெரிந்து நமக்கென்ன ஆகப்போகிறது. போவோம் நம் வேலையைப் பார்த்துக்கொண்டு..'' என அதில் அக்கறையே இல்லாதவர் போல் நடித்தார் அந்த மாயவன்.அர்ஜுனன் அடம் பிடிக்கவே, தேரை நிறுத்தி விட்டு அவர் அருகே சென்று வணங்கினார்கள்."

   "மகரிஷி! சாந்தமூர்த்தியான தாங்கள் தாங்கள் கத்தியைத் தீட்டும் நோக்கமென்ன!'' என்றனர்.""அதுவா! நாரதன்னு ஒருத்தன் இருக்கிறானே! அவன் என் சுவாமி தூங்கும் நேரம் கூட பார்க்காமல், அவன் இஷ்டத்துக்கு வைகுண்டத்துக்குப் போய் "நராõயணா நாராயணா' என்று கத்தி தூக்கத்துக்கு இடைஞ்சல் செய்கிறான். அவனை குத்தப் போகிறேன்,'' என்றவரிடம், ""ஓஹோ!'' என்ற கண்ணன் கிளம்பத் தயாரானார்.அவரை மகரிஷி நிறுத்தினார்.""இன்னும் கேள்! பிரகலாதன்னு ஒரு பொடியன்.

    எங்க சாமி எங்கேயும் இருக்கிறார்னு சொல்லி, எல்லா இடத்திலும் அவரை நிற்க வைத்து பதறடித்தான். ஒரு தூணுக்குள் இருப்பதாகச் சொல்லி அவரை மூச்சு விட முடியாமல் செய்தான். இப்படி அவரைத் துன்பப்படுத்திய அவனுக்கும், இந்தக் கத்தி பதில் சொல்லப்போகிறது,'' என்றவரிடம் "கிளம்பட்டுமா!'என்றார்கண்ணன்.""இன்னும் கேளுங்க!'' என்று அவர்களை நிறுத்திய மகரிஷி, ""திரவுபதின்னு ஒருத்தி. அவளது சேலையை துச்சாதனன் பறித்தான். ஒன்றுக்கு அஞ்சு புருஷன் உள்ள அவள் புருஷன்மாரை கூப்பிட வேண்டியது தானே! கண்ணனைக் கூப்பிட்டாள். அவன் கை வலிக்க புடவை தந்தான். அவளும் என் கையில் சிக்கினால்...,'' என்று பற்களைக் கடித்த அவரை சாந்தம் செய்ய முயன்றான்கண்ணன்."

    "இன்னும் கேளுங்கப்பா!'' என்றவர், ""இன்னும் ஒருத்தன் இருக்கிறானே,'' என்றார்.""அட...சீக்கிரம் சொல்லுங்க சாமி! உங்க பட்டியல் நீண்டுகிட்டே போகுது. எங்க வேலையைப் பார்க்க போகணும்,'' என்ற கண்ணனிடம், ""அர்ஜுனன்னு ஒரு பயல் இருக்கிறானாம். அவனை இதுவரை நான் பார்த்ததில்லை. அவன் என் பரமாத்மாவையே தேர் ஓட்ட வைத்திருக்கிறான். உலகத்துக்கே எஜமான், அந்தச சிறுவனுக்கு வேலைக்காரனாக இருக்கிறார். கண்ணனையே வேலைக்காரனாக்கியவனுக்கு காத்திருக்கிறது கத்திக்குத்து,'' என்று முடித்தார்."

    "பார்த்தாயா அர்ஜுனா! நீ மட்டுமே என்னிடம் பக்தி கொண்டதாக எண்ணாதே! இவரைப் போன்ற ஆயிரம் பக்திமான்கள் உலகில் இருக்கிறார்கள். அவர்கள் என் மீது வைத்துள்ள அன்புக்கு எல்லையே கிடையாது,'' என்றார் கண்ணன்.அர்ஜுனன் தன் அறியாமையை எண்ணி தலை குனிந்தான்.

 

 

 • பணத்துக்காக விடாதே

      கும்பகோணம் ரங்கராஜ ஐயங்கார் (இன்றைய அஹோபில மட ஜீயங்கார் ஸ்வாமிகள்) 1971ம் வருடம் ரிக்வேதம் பயின்றதும் அதன் பின் வைதீகத் தொழிலில் தன் ஜீவனத்தை மேற்கொள்ளலாமென்று நினைத்ததும் சரிதான் என்றாலும் மஹாபெரியவா அதற்கான உத்தரவைத் தரவில்லை.

அந்த வைணவ அன்பர் 1968ம் ஆண்டிலிருந்தே மஹாபெரியவாளின் பக்தர்களில் ஒருவர். வைதீகத் தொழில் வேண்டாம் என்ற அவரிடம் மஹான் என்ன சொன்னார் தெரியுமா?

“நீ மேற்கொண்டு எல்லா வேதங்களையும் படிக்கணும். அதற்கு உபகாரம் செய்ய நான் ஏற்பாடு பண்றேன். நீ மேலே படி” என்று அன்புக் கட்டளை இட்ட மஹான், அவர் குடும்பம் நடத்த மாதம் ரூ.200/- கொடுக்க ஏற்பாடு செய்ததோடு நில்லாமல், சுயமாக அவரே தனது ஆகாரத்தை சமைத்து சாப்பிடும் உயர்ந்த வழக்கத்திற்கும் வழி செய்து அருளினார்.

ரங்கராஜ ஐயங்காரின் குடும்பமோ பெரியது. இவருடைய சகோதரிகளின் திருமணத்தையும் தமது கருணை உள்ளத்தால் பெரியவா நடத்தி வைத்தார்.மஹான் பண்டரிபுரத்தில் இருந்தபோது ஐயங்கார் ஸ்வாமிகள் அங்கே சென்று அவரை நமஸ்கரித்தார். அப்போது மஹான் அவரிடம் கேட்டார்:

“நீ எனக்கு நமஸ்காரம் செய்யலாமா?”

அதற்கு ஐயங்கார் ஸ்வாமிகள் சொன்ன பதில்:“எங்கள் சம்பிரதாயம் பிரகாரம் யக்ஞோபவீதம், சிகை இல்லாத சன்னியாசிகளை தரிசித்தாலே ஸ்நானம் செய்யணும்னு இருக்கு” என்றார்.

“அப்போ நீ ஏன் எனக்கு நமஸ்காரம் செய்யறே?”

“சாட்சாத் விஷ்ணு அம்சம்தான் இந்த ஜோதி ஸ்வரூபம் என்று எனக்குத் தோன்றுகிறது” என்று தன் வைணவப் பார்வைக்கு ஈஸ்வரரான மஹா பெரியவா அருளிய தரிசனத்தை மெய்சிலிர்ப்போடு கூறி மகிழ்ந்தார்.

இந்த பரம பக்தரான வைணவப் பெரியவருக்கு மஹானின் அருள், ஒரு அதிசயத்தை நிகழ்த்திக் காட்டியது.

இவரது குடும்பம் பெரியதென்றாலும் அதை நன்றாக நடத்திச் செல்லக்கூடிய அளவுக்கு வருமானமே இல்லை. சகோதரிகளின் திருமணம், தினசரி நடைமுறைகளுக்குத் தேவையான பொருட்கள் வாங்க, இதர காரியங்கள் எல்லாவற்றிற்கும் பணம் தேவை. தொடர்ந்து வேதங்களைக் கற்றுக் கொள்ள இவர் முயற்சி செய்து கொண்டு இருந்தபோதுதான் 1978ம் வருடம் இவரை ஜெர்மனிக்கு வரச்சொல்லி ஒரு அன்பர் கேட்டுக் கொண்டார்.

“ஜெர்மனிக்குச் சென்றால் கை நிறையப் பணம். அதனால் குடும்பத்தின் வறுமை நீங்கும்” என்றெல்லாம் ஐயங்கார் ஸ்வாமிகளின் உள்ளத்தில் ஆசை தோன்ற ஆரம்பித்தது. மாத சம்பளம் மூவாயிரம். அத்துடன் திரும்பி வரும்போது கையில் மூன்று இலட்சம் பணம் தரப்படும் என வாக்குறுதி. இந்த வாய்ப்பைத் தவறவிடாமல் இருந்தால் தன் குடும்பம் ஒரு நல்ல நிலைமைக்கு வரும்” என்று நினைத்த ஐயங்கார் ஸ்வாமிகள் அழைப்பு விடுத்தவரிடம் வருவதாக ஒப்புக் கொண்டு ‘மேற்கொண்டு என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்யுங்கள்’ என்று சொல்லிவிட்டார்.

எல்லா ஏற்பாடுகளும் துரிதமாக நடந்து, அக்டோபர் 31ம் தேதி புறப்பட வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது.

இவ்வளவு நடந்திருந்தும், இதுபற்றி இவரது கிராமத்தில் இருந்த தந்தையிடம் கூட சொல்லாமல் மிகவும் இரகசியமாக வைத்திருந்தார். அவரிடம் சொல்லாமல் அயல் நாட்டிற்குப் போக முடியுமா? அக்டோபர் 27ம் தேதி கிராமத்திற்குப் போனார்.

தகவலைக் கேட்டவுடன், தந்தை ஒரே ஒரு கேள்வியைத் தான் கேட்டார்.

“மஹாபெரியவா கிட்டே உத்தரவு வாங்கிட்டியோ?”

“இல்லேப்பா, மஹானிடம் சொன்னா அவர் உத்தரவு தருவாரோ மாட்டாரோங்கிற சந்தேகம் எனக்கிருக்கு. அப்படி அவர் உத்தரவு தரலைன்னா, இவ்வளவு வருமானத்தை விட்டுட மனசு கேட்காதே. அதனாலே தான் நானே முடிவு எடுத்துண்டு கிளம்பறேன். நமக்கோ பணத்தேவை அதிகம். எனக்கும் இதைத் தவிர வேறு வழி தெரியல்லேப்பா” என்றார்.

அன்றிரவு அவர் கிராமத்தில் தங்கி விட்டார். மன உளைச்சலில் அவர் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்துக் கொண்டிருந்த போது, திடீரென அவர் முன் மஹான் தோன்றினார்.

மஹான், ஐயங்கார் ஸ்வாமிகளின் தலையை மெதுவாகத் தடவிக் கொடுத்துவிட்டு,“நீ போகத்தான் போறாயா?” என்று ஏக்கத்தோடு கேட்பதாக ஐயங்கார் ஸ்வாமிகளுக்குத் தோன்றியது.

அது முழுமையான கனவுமல்லாமல், முழுமையான நினைவுமல்லாமல் தெரிந்ததில் இவருக்கு மஹா பெரியவா ஏதோ உத்தரவிடுவது போலத் தெரிந்தது. அதனால் மறுதினம் தாமதிக்காமல் மஹானைத் தரிசித்து அவரது அனுமதியைப் பெறக் கிளம்பிவிட்டார்.

அப்போது மஹான், கர்நாடகாவில் பதாமி என்னும் நகருக்கு அருகில் இருந்த வனசங்கரி என்னும் சிறுகிராமத்தில் முகாமிட்டிருந்தார்.

மஹானின் தரிசனத்திற்கு முன், ஐயங்கார் ஸ்நானம் செய்து கொண்டு இருந்தபோது, மடத்து சிப்பந்தி ஒருவர் வந்து இவரிடம், “உன்னை பெரியவா வரச்சொல்லி உத்தரவாகியிருக்கிறது” என்றார்.

தான் வந்திருப்பதையோ, வந்திருக்கும் நோக்கமோ யாருக்குமே தெரியாத நிலையில், மஹான் வரச் சொல்லியிருப்பது இவருக்கு அளவுகடந்த வியப்பைத் தர நேராக மஹானின் முன் நின்று தரிசித்தார்.

“எப்போ கிளம்பப் போறே?” என்று பெரியவா கேட்டதும், தரிசனம் முடிந்ததும் தன் ஊருக்கு எப்போது போகிறோம் என்பதைத்தான் மஹான் கேட்கிறார் என்று ஐயங்கார் ஸ்வாமிகள் நினைத்துத் “தரிசனம் முடிந்ததும் கிளம்புவதாக உத்தேசம்” என்றார்.

மஹான் லேசாகப் புன்முறுவலித்தவாறே,

“நீ ஊருக்குப் போறதே பத்தி நான் கேட்கலே, அசல் தேசம் போகணும்னு ஏற்பாடு செஞ்சுண்டிருக்கியே, அதைத் தான் கேட்டேன்” என்று மஹான் சொல்ல, ஐயங்கார் ஸ்வாமிகளுக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

அந்த அதிர்ச்சியிலிருந்து அவர் மீள்வதற்குள், மஹான் தொடர்ந்து அதிர்ச்சிகளை அளித்தவாறு பேசலானார்:

“நீ இங்கு வந்த காரணத்தை நான் சொல்லவா? முந்தா நாள் நான் உன்னைத் தடவிக்கொடுத்து, ‘என்னை விட்டுப் போறயா?’ன்னு கேட்டேன்…. இல்லையா? அதனாலேதான் போகும்போது பார்த்துட்டுப் போகலாமுன்னு இங்கே வந்திருக்கே” என்றார். எப்பேற்பட்ட அதிசயத்தை மஹான் சர்வ சாதாரணமாகச் சொல்கிறார் என்று திகைத்துப் போய் நின்றார் ஐயங்கார் ஸ்வாமிகள்.

தன்னை கிராமத்துக்கு வந்து ஆட்கொண்டது பிரமை அல்ல என்பதை அறிந்த அவர் கண்களில் நீர் மல்க, மஹானின் பொற்பாதங்களில் வீழ்ந்தார். மஹான் அவரை ஆசீர்வதித்தவாறே சொன்னார்.

“உன் ஆசாரத்தை விடாமல் இரு. பணத்துக்காக எதையும் விடாதே. ஆசாரம் தான் முக்கியம். எங்கே போனாலும் அவரவர் ஆசாரத்தை நிச்சயம் கடைபிடிக்க வேண்டும்” என்பது மஹானின் அருள்வாக்கு. ஐயங்கார் ஸ்வாமிகள் என்ன செய்திருப்பார் என்பதை உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன்……..

 

 

 • தேடித் தேடித் போய் கொடுக்கிற தெய்வம்...

உயிர் உருக்கும் சம்பவம் இது...

எத்தனை முறை நினைத்தாலும் கண்களில் கண்ணீர் வரும்...ஸ்ரீ கணேச சர்மா மாமா அவர்கள் சொல்லும் போது அவரும் நெகிழ்வார். நம்மையும் நெகிழ பண்ணுவார்.

ஐயன் ஏதோ ஒரு கிராமத்தில் முகாம். காலை எங்கோ செல்லும் போது வயல்வெளியாக செல்வார் பரிவாரத்துடன்.

தூரத்தில் ஒரு குடியானவர்(ன் போட முடியவில்லை) கோவணாண்டியாக, ஐயனை பார்த்து கைகூப்பிக்கொண்டு நிற்பார்.ஐயன் சென்று விடுவார்.

திரும்பி வரும்போது வயக்காடு மேட்டில் பூசணி, வாழை, பரங்கி என்று நிறைய காய் கறி கீரை பழங்கள் அடுக்கி வைக்கப்பட்டு இருக்கும்.ஐயன் சொடுக்கி தன் உயிரே ஆன அந்த குடியானவ பக்தரை கூப்பிடுவார்.

'சாமி நான் கொடுத்த வாங்கிப்பீங்களோ ன்னு தான், காய் கறி... எடுத்துப்பிங்களா சாமி?'.

ஐயன் கருணையோடு நோக்கி... சொல்வார் பாரிஷதரிடம் ,'இன்னிக்கு பிக்ஷைக்கு இதெல்லாம் தான். எடுத்துக்கோங்கோ'.

அங்கே நிற்காது கருணை வெள்ளம்.

சிறிதே தூரம் சென்று நட்ட நாடு சாலையில் நின்று ஸ்ரீ மடம் பாலு மாமா அவர்களிடம் ஏதோ விஷயம், உப்பு பெறாது என்போமே, அதை ஆரம்பிப்பார். இதை ஏன் இங்கே வெட்ட வெளியிலே, நட்ட நாடு ரோட்டிலே, மொட்டை வெயிலிலே என்று பாலு மாமா பாடாத பாடு படுவார். ஸ்ரீ கணேச சர்மா மாமா சொல்லி கேட்கவேண்டும்.கிழக்காலே மேற்காலே, தெக்காலே, வடக்காலே, ஒத்தை காலை மடிச்சிண்டு, தலைல வஸ்த்ரம் போட்டுண்டு போடாம, குனிஞ்சு, நிமிந்து என்று கிட்டத்தட்ட ஒரு மணி நேரம்...

அப்புறம் கிளம்பி, ஸ்நானம் ஆகி, பூஜை முடிஞ்சு, பிக்ஷை பண்ணி, விஸ்ராந்தி பண்ணிக்கும் போது மெதுவாக, ஸ்ரீ பாலு மாமாவிடம் கேட்டாராம் ஐயன்.

'ஏண்டா பாலு, ஒன்னை ரொம்ப நேரம் வெயில்ல கால் கடுக்க நிக்க வெச்சுட்டேனோ?'.

வெச்சாச்சு.

வெச்சுட்டு என்ன கேள்வி வேறே?

எப்படி கேட்க முடியும்?

மாமா சொன்னார்களாம், 'அதெல்லாம் ஒன்னும் இல்லே'.

சும்மா விடுமா நம் தெய்வம்?

'இல்லேடா, ஒன்னை ரொம்ப நிக்க வெச்சுட்டேன். ஏன் ன்னு கேளு?'.

இதுவேறயா, பண்றதையும் பண்ணிப்பிட்டு...ஏன்? பெரியவா?'.

'இல்லே, என்னை முன்னாடி பார்க்கணும் ன்னா நீ என்ன பண்ணுவே?

''இது என்ன கேள்வி பெரியவா, இதோ ஒங்க முன்னாடி வந்து நின்னு நன்னா நன்னா பாத்துட்டு போவேன்'.

'சரி, பின்னாடி இருந்து என்னை பார்க்க?'.

விடமாட்டாரே... 'இதோ, பின்னாடி போய் உங்க முதுகை பார்த்துண்டு நிப்பேன், பக்கவாட்டிலேயும் அப்படித்தான்' என்றார் மாமா முன்யோசிதமாய்.

'அதெல்லாம் சரி டா, ஒன்னாலே இதெல்லாம் முடியும். அங்கே வயல்ல வெயில்ல நின்னு வேலை பார்த்துண்டு இருந்தானே, அவன் நந்தன் அம்சம் டா. அவனால இதெல்லாம் பண்ண முடியுமா? இதுக்கெல்லாம் நேரம் இருக்குமா? அதுனால தான் நான் திரும்பி திரும்பி நின்னு அவன் நன்னா பார்க்கற மாதிரி பண்ணினேன்'.

வேறு எதுவும் சொல்லவேண்டுமா?

 

 

 • லோக க்ஷேமம் குறித்து காஞ்சி பெரியவா:

லோக க்ஷேமம்’ என்று சொன்னது வேத சப்தத்தாலும், யக்ஞாதி கர்மாக்களாலும் சுஷ்மமாக ஏற்படுகிற நன்மையை மட்டுமல்ல.

வேதாந்தத்தை பார்த்தால் தான் சகல தேசத்தில் உள்ளவர்களுக்குமே பொதுப்படையான மகோன்னத தத்துவங்கள் கிடைக்கின்றன.இந்தத் தத்துவங்களால் எல்லா தேசத்தாரும் ஆத்மவ்ருத்தி அடைகிறார்கள். வேதாந்தத்தை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் எப்படி இவர்களுக்கு வந்தது?

அவர்கள் இங்கே வந்த போது வேதரட்ஷணமே ஜீவியப்பணி என்று ஒரு கூட்டம் இருந்ததால் தான் ‘இதென்ன இப்படி ஆயுள் முழுவதையும் அற்பணிக்கும் படியான புஸ்தகம்’ என்று அவர்களுக்கு ஒரு ஆர்வம் பிறந்து அதை ஆராய்ச்சி செய்தார்கள். பல விஷயங்களை தெரிந்து கொண்டார்கள்.

குறிப்பாக, உலகம் முழுவதிலும் உள்ள பண்பாடுகளில் (cultures) இருக்கிற ஒற்றுமைகளை இந்த ஆராய்ச்சியால் தெரிந்து கொண்டார்கள்.லோகத்துக்கு எல்லாம் உபயோகம் என்பது மட்டுமில்லாமல், லோகம் முழுக்கவே வேத culture தான் ஆதியில் இருந்தது என்பதே என் அபிப்ராயம்.

நன்றாக ஆராய்ந்து பார்த்தால் மற்றவர்களுக்கும் இந்த அபிப்ராயம் வரலாம். எல்லோருக்கும் பொதுவாக ஒன்று இருப்பதாக அறிவதிலேயே சர்வதேச சௌஜன்யம் சர்வமத சமரச பாவனை எல்லாம் வந்து விடுகிறது. அது தவிர, தன தத்துவங்களால் எந்த மதங்களும் தங்களை உயர்த்தி கொள்ளவும் முடிகிறது.

வேதத்துக்காக என்றே சகலத்தையும் தியாகம் செய்யும் ஒரு கூட்டம்நம் தேசத்தில் இல்லாவிட்டால், மற்றவர்களுக்கு அதில் எப்படி பிடிப்பு ஏற்படும்?

உதவாத விஷயம் என்று நாமே ஒன்றை விட்டு விட்டால், மற்றவர்களுக்கு அதன் தாத்பர்யங்களை அறிவதில் எப்படி ஈடுபாடு உண்டாகும்?

ஜாதி அழிவதை பற்றி எனக்கு கவலை இல்லை. லோகக்ஷேமம் போகிறதே என்று தான் கவலைபடுகிறேன். வேதரட்ஷணம் விட்டு போனால் இந்த பரம்பரையை மறுபடி உண்டு பண்ண முடியாதே என்றுதான் கவலை படுகிறேன்.

நம் தேசத்தில், சகல ஜாதியாரை உத்தேசித்து மட்டுமின்றி, எல்லா தேச மக்களையும் உத்தேசித்து வேத பரம்பரையை தொடர்ந்து இருக்கப் பண்ணவேண்டியது இப்போதைய தலைமுறையின் பெரிய பொறுப்பு.

லோகம் முழுவதும் க்ஷேமமாக இருக்க வேண்டும் என்பதே நமது வேதத்தின் சாரம்..

 

 

 • குழந்தை:

ஒரு தம்பதி உத்தம குணங்களோடு ஸங்கமித்தால் தான் நல்ல பிண்டம் ஏற்பட்டு உள்ளே இருக்கும் ஜீவனுக்கும் நல்ல சுபாவம் உண்டாகும்

.சிறு பிராயத்தில் இருந்தே ஆஸ்திக புத்தியை வளர்க்க வேண்டும்.

நமது மத அனுஷ்டானங்களை விடாமல் பற்றி, ஒழுகி, உத்தமமாக வாழ்கிற சிஷ்டர்களின் சங்கத்தில் குழந்தைகளைப் பழக்கவேண்டும்.

குழந்தைப் பருவத்திலேயே ஒழுங்கில் கொண்டு வந்துவிட வேண்டும்.

ஒழுக்கத்திற்கு முதல் அங்கமாக என்ன வேண்டும்?

பணிவு, அடக்கம், விநயம்,கட்டுப்பாடு இருந்தால் தான் ஒழுக்கத்தோடு முன்னேற முடியும்.

கட்டுப்பட்டு நடப்பதற்கு அடக்கம் முதலில் இருக்கவேண்டும்.

அஹங்காரம் போனால் தான் அடக்கம் வரும்.

ஸகல சீலங்களுக்கும் அடிப்படையாக இருக்க வேண்டியது விநயம் தான்.

பால பிராயத்திலேயே காயத்ரீயை ஜபிக்க ஆரம்பித்துவிட்டால் பசுமரத்தாணியாக அது பதியும்.காயத்ரீயானது முக்கியமாக மனோ சக்தி (Mental Power) தேஜஸ், ஆரோக்யம் எல்லாவற்றையும் அபரிமிதமாகத் தரவல்லது.

நம் குழந்தைகளுக்கு சாஸ்திர தாத்பரியங்களை முழுக்கவும், நன்றாகச் சேர்த்துப் பிடித்துப் பார்த்துச் சொல்லவேண்டும்.

குழந்தைக்கு பகவந் நாமாக்களாகப் பேர் வைக்க வேண்டும். அந்தப் பேரைச் சொல்லிக் கூப்பிடுவதே நம்மையும் சுத்தப்படுத்தும் ஸம்ஸ்காரமாகிறது. ஸ்வாமி பெயராக வைத்தாலும் அதைக் கன்ன பின்னா என்று சிதைத்துக் கூப்பிடுவது ரொம்பத்தப்பு.

புருஷப் பிரஜைகளை விட பெண்பிரஜைகள் அதிகமாக இருப்பதற்கு ஒரு காரணம், புருஷர்கள் மெய்வருந்தி உழைக்காமல் உட்கார்ந்து வேலை செய்வது தான்.

சாஸ்திரத்திலேயே சொல்லி இருப்பது-ஔபாஸனாதிகளைப் பண்ணிக் கொண்டு ஆசார சீலனாகப் புருஷன் இருந்தால் அவன் ஆரோக்கியமாகவும் நல்ல மனவிருத்தியோடும் இருப்பதோடு ஆண் சந்ததியும் உண்டாகும்.

 

 • இதை மாற்றினால் போதும்!

ஒரு பக்கம் சாஸ்திர நம்பிக்கையுள்ள கட்டுப் பெட்டிகள், மறுபக்கம் நவீனக் கல்வி படித்தவர்கள் என்று பிரிந்திருப்பதே தவறு. சாஸ்திரத்தில் நம்பிக்கை மட்டுமில்லாமல், நாமே எல்லா சாஸ்திரங்களையும், வித்யைகளையும் படித்தால் கட்டுப்பெட்டிகளாக இருக்க வேண்டியதேயில்லை. அதனால் அவற்றையும் படித்து, மாடர்ன் ஸயன்ஸ்களையும் படித்து, இந்த ஸயன்ஸிலும் நிறைய அம்சங்கள் நம் சாஸ்திரங்களில் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.இதே மாதிரி ஸயன்ஸ்காரர்களும் சாஸ்திரங்களைப் படித்துப் புரிந்து கொள்ள வேண்டும் என்பது என் ஆசை. இதற்காக பகவானைப் பிரார்த்தனை பண்ணுகிறேன். ஒன்றுக்கொன்று ‘காம்ப்ளிமென்டரி’யாக பழசும் புதிசும் இட்டு நிரப்பிக் கொள்ள வேண்டும்.

நானும் சரி, மற்றவர்களும் சரி எவ்வளவு பேசினாலும் லெக்சரால் கல்சர் (கலாசாரம்) வளராது. படிப்பதாலும் வளராது. நமக்கென்று காரியத்தில் பின்னி வைத்திருக்கிற அநுஷ்டானங்களைப் பண்ணினால்தான் சித்த சுத்தி ஏற்பட்டு, நாம் படிப்பதில் ஸாரம் எது என்று புரிந்துகொண்டு அதைக் கிரஹித்துக் கொண்டு கல்சரை வளர்க்க முடியும். பிற தேச விஷயங்களில் எதை எடுத்துக் கொள்வது என்று பரிசீலித்து முடிவு செய்வதற்கு அஸ்திவாரமாக முதலில் நம் சாஸ்திரப்படி வாழ முயற்சி பண்ண வேண்டும்.

இக்காலத்தில் ஆஹாரம், விஹாரம், வாஹனம் எல்லாமே மாறித்தான் விட்டது. அத்தனையும் நம் பண்பாட்டுப்படி மாற்ற முடியுமா என்று மலைப்பாயிருந்தாலும், கொஞ்சம் strain பண்ணிக் கொண்டாவது (சிரமப்படுத்திக் கொண்டாவது) சிலதையாவது மாற்ற ஆரம்பிக்கத்தான் வேண்டும். நம் மதத்துக்கு ஆதாரமான ஆசாரங்கள், ஆஹார சுத்தி முதலியவை, பழக்கத்தில் இருந்தால்தான் போஷிக்கும். முதலில் லெக்சராகவும் அப்புறம் லைப்ரரியில் புஸ்தகமாகவும் மட்டும் இருந்தால் வெறும் வறட்டுப் பெருமை தவிர பிரயோஜனமில்லை.

நான் சொல்கிறபடி மாறுவது ஒன்றும் பெரிய கஷ்டமில்லை. ஒரே ஒரு அம்சத்தை மட்டும் நாம் பிடிவாதமாக மாற்றிக் கொண்டு விட்டால் இது ஸாத்யம்தான். ‘பணம்தான் பிரதானம்’ என்பதே அந்த அம்சம். பணமே குறி என்று நாம் இறங்கின பிற்பாடுதான் ஆசாரங்கள், வித்யா ஞானம் எல்லாமே போய்விட்டன. நம் தேசத்தில் பணம் முக்யமாய் இருந்ததேயில்லை. லௌகிக வாழ்க்கையை ஆத்ம அபிவிருத்திக்கு உபாயமாக மட்டும் வைத்துக் கொள்வதுதான் நம்முடைய தேசாசாரம்.

 

 • பெரியவா மகிமை - நடுக்காவேரியில்...

 

திருவையாறு க்ஷேத்ரத்தில் காவிரி, குடமுருட்டி, வடவாறு, வெண்ணாறு, வெட்டாறு என்ற ஐந்து நதிகள் பாய்வதால், திருவையாறு என்று பெயர் பெற்றது. 1942 ல் நடுக்காவேரியில் வசித்து வந்தது .சின்னஸ்வாமி ஐயரின் குடும்பம். இறை பக்தி, ஆசார அனுஷ்டானங்கள், எல்லாவற்றுக்கும் மேலே பெரியவாளிடம் அப்படி ஒரு ஆத்மார்த்தமான பக்தி! திருவையாறு வரும்போதெல்லாம் பெரியவா இவருடைய க்ருஹத்துக்கு கட்டாயம் வருவார்... click here to read more

 

Courtesy:

sreemuttdevotees@gmail.com

Posted By N.Ramesh Natarajan/S.Ramanathan/WB Kannan

(SRI KARYAM) Mobile Nos 98422 92536/90039 26542

bottom of page