top of page

An Article about "Thiruvalampozhil" Village by D.Sivasubramanian

ஆலயங்கள் வலம் வருவோம் !

குறை தீர்ந்து நலம் பெறுவோம் !! ( பகுதி 1. ) திருவாலம்பொழில் தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் இறங்கி, நகரப்பேரூந்து அல்லது ஆட்டோவில் ஏறி, தஞ்சாவூர்--கண்டியூர் மார்க்கமாக திருக்காட்டுப்பள்ளி செல்லும் வழியில் சுமார் 13 கி.மீ. பயணம் செய்தால், திருப்பூந்துருத்தியை அடுத்து வரும் ஊர், திருவாலம்பொழில். 1950 ம் வருடங்களில், திருவாலம்பொழில் அக்ரஹாரத்தில் 7 அல்லது 8 பிராம்மண வீடுகள் மட்டுமே இருந்தன. இந்த அக்ரஹாரத்திற்குள் நுழையும்போதே ஸ்ரீலலிதா சஹஸ்ரநாமம் ராகமாலிகையாகப் பாடும் கணீரென்ற குரல் நம்மையெல்லாம் பரவசப்படுத்தி ஊருக்குள் அழைக்கும்.

அந்தக் குரல் வந்த திசை நோக்கிச் சென்றால்,அக்ரஹாரத்தில் இரண்டாவது வீடு, ஸ்ரீவித்யாபரம்பரை, தர்மராஜ அய்யர் வீடு. இந்த வீட்டிலுருந்துதான் லலிதா சஹஸ்ர நாமாவளி வெள்ளிக்கிழமை, மற்றும் பௌர்ணமி தினங்களில் இரவு 9-00 முதல் 10--00 மணிவரை ஒலிக்கும். தற்போதய கால கட்டத்தில் அக்ரஹாரத்தில் உள்ள குடும்பங்கள் பிழைப்பு காரணமாக வெளியூர்களில் குடி பெயர்ந்துவிட்ட நிலையில், தர்மராஜ அய்யர் குடும்பத்தினரும் மற்றும் அவர் செய்துவந்த விக்ரஹ பூஜையும் சென்னைக்கு குடி பெயர்ந்து விட்டது. தற்போது அக்ரஹாரத்தில் ஒரேஒரு பிராம்மண வீடு மட்டுமே ( பிழைப்பு-- விவசாயம் ) எஞ்சியுள்ளது. திருவாலம்பொழிலைச் சேர்ந்தவரும் தற்போது சென்னை கொரட்டூரில் வசித்துவருபவருமான, ஸ்ரீவித்யா உபாசகர் தர்மராஜஅய்யர் வம்சம், அவரது மகளும் எனது சகோதரியுமான ஸ்ரீமதி ருக்மணி, கூறுகிறார்--- "இந்த ஊருக்கு ஒரு சிறப்பு உள்ளது.

காஞ்சி காமகோடி பீடாதிபதி மஹாபெரியவர் என போற்றப்பட்ட ஜெகத்குரு ஸ்ரீ சந்த்ரசேகர சரஸ்வதி சங்கராச்சாரிய ஸ்வாமிகள் 1950ம் ஆணடு என ஞாபகம். தஞ்சையிலிருந்து திருக்காட்டுப்பள்ளிக்கு, திருவாலம்பொழில் வழியாகப் போகும்போது, எங்கள் கிராம அக்ரஹாரத்தில் இருதினங்கள் பூஜையுடன் தங்கி, திரிபுரசுந்தரி ஸமேத ஸ்ரீ சந்த்திரமௌளீஸ்வரர் பூஜை செய்துள்ளார். வந்த அனைத்து பக்தர்களுக்கு தரிசனமும் தந்து அருள் புரிந்துள்ளார். “எங்கள் வீட்டுக்கு மேற்குப்புற வீட்டில் மஹாபெரியவர் தங்கி பூஜை செய்யும்பொது ஒரு நாள் அதிகாலை 4-30--5-00மணி வாக்கில் தீப்பந்த ஒளி ஏந்தி, தனது சிஷ்யர்கள் புடை சூழ, பக்கத்திலுள்ள எங்கள் கிரஹத்திற்கும் திடீர் விஜயம் செய்துள்ளார்.. நேரே வீட்டிலுள்ள பூஜை அறைக்குச் சென்று, எங்கள் தகப்பனார், ஸ்ரீவித்யா உபாசகர், பூஜை செய்துவந்த ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி விக்ரஹம், ஸ்ரீ ஸோமாஸ்கந்தர் விக்ரஹம், ஸ்ரீ மீனாக்ஷி விக்ரஹம், மற்றும் ஸ்ரீசக்ரம், பஞ்சாயதன பூஜை விக்ரஹங்கள் ஆகியவைகளைதரிசனம் செய்துகொண்டு அவைகளின்விவரங்களை விசாரித்திருக்கிறார்.

அவர் செய்துவந்த ஸ்ரீவித்யா பூஜை முறைகளைப் பற்றியும் விசாரித்திருக்கிறார் ." " மேற்படி விக்ரஹங்கள் திருவையாரில் வசித்து வந்த ஒருவரிடம் இருந்ததாகவும், அவர் செய்துவந்த விக்ரஹ பூஜைகள் ஏதோ காரணங்களுக்காக தடைபட்டு விட்டதாகவும் விக்ரஹங்ளை மூட்டைகட்டி வீட்டுப் பரணையில் வைத்துவிட்டதாகவும்,

அவரது கனவில் திருவாலம்பொழிலில் அப்போது வசித்துவந்த ஸ்ரீ விஸ்வநாத அய்யரிடம் ( தர்மராஜ அய்யரின் தகப்பனார் ) விக்ரஹங்களை ஒப்படைத்துவிடுமாறும் ஸ்ரீஅம்பாள் தோன்றி, உத்திரவு கொடுத்திருக்கிறாள். அதேபோன்று திருவாலம்பொழில், ஸ்ரீ விஸ்வநாத அய்யர் கனவிலும் அம்பாள் தோன்றி, தான் பூஜை. புனஷ்காரங்கள் இன்றி, திருவையாறில் இன்னார் வீட்டில் இருப்பதாகவும், உடனே அந்த நபர்வீட்டிற்குச் சென்று விக்ரஹங்களை பெற்றுவந்து, தினசரி பூஜை செய்து தன்னை பராமரிக்க வேண்டுமென்றும் உத்திரவு ஆகியுள்ளது..

ஸ்ரீ விஸ்வநாத அய்யர் விடிந்தவுடன், திருவையாறு சென்று, அம்பாள் கனவில் குறிப்பிட்ட நபர் வீடு தேடிச்சென்று, அவரிடம் விவரங்களைக் கூற, அந்த நபரும், தன் கனவிலும் அம்பாள் தோன்றி இவ்வாறே கூறியதாகவும் தெரிவித்திருக்கிறார். விக்ரஹங்கள் தங்கள் வம்சத்தில் பரம்பரையாக இருந்து வருவதாகவும், தற்போது முறையாக பூஜை செய்ய வசதி இல்லாததால், மூட்டைகட்டி மேலே பரணியில் வைத்து விட்டதாகவும் அந்த நபர் கூறி, அம்பாள் உத்திரவு கொடுத்தபடி விக்ரஹங்கள் அனைத்தையும் ஸ்ரீ விஸ்வநாத அய்யர் வசம் ஒப்பதைத்துவிட்டார். விக்ரஹங்கள் தங்கள் பரம்பரையில் சுமார் 300 வருடங்களாக இருந்து வருகிறது. இவ்வாறாக தங்கள் வம்சத்திற்கு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி மற்றும் இதர விக்ரஹங்கள் வந்த கதையை ஸ்ரீ பெரியவாளிடம், தர்மராஜ அய்யர் கூறி, தான் செய்யும் பூஜை முறைகளைப் பற்றியும் அவரிடம் தெரிவித்து மஹாபெரியவாளின் ஆசிகளை பெற்றுள்ளார்.”

மேலும் ஸ்ரீமதி ருக்மணி அவர்கள் இன்னொரு நிகழ்ச்சியையும் நினைவு கூறுகிறார்.

" மஹாபெரியவர் எங்கள் வீட்டிற்கு விஜயம் செய்து, பூஜை அறையைவிட்டு, வெளியே வரும்போது, வீட்டுக் கூடத்தில், ஒருவர் மட்டும் தரிசனம் செய்ய வராமல் படுக்கையாக இருந்ததைப் பார்த்துவிட்டு, இது யார் ? ஏன் எழுந்திருக்கவில்லை? என பெரியவர், என் தந்தையாரிடம் கேட்க, தனது தமயனாரின், மாட்டுப்பெண் கடந்த சில தினங்களாக உடம்பு சரியில்லாமல் இருந்து, தற்போது, பக்கவாத நோயினால், எழுந்திருக்கமுடியாமல் உள்ளதாகவும், அதனால் பெரியவா தரிசனத்திகு வரமுடியாமல், மனம் வேதனைப்படுவதாகவும் கூறினார். மஹாபெரியவா நின்ற இடத்திலேர்ந்து, அந்த அம்மாள் படுத்திருந்த திசை நோக்கி, தன் கை கமண்டலத்திலுள்ள தீர்த்தத்தினால், தெளித்துவிட்டு, தான் தங்கியிருந்த இடம் நோக்கி, திரும்பச் சென்றுவிட்டார்.

என்ன ஆச்சரியம் ! கை, கால், இயங்காமல் கடந்த சில தினங்களாக அவதிப்பட்டு வந்த எங்கள் மன்னி,(பெரியப்பாவின் மாட்டுப் பெண் ) பெரியவர் எங்கள் கிரஹத்திற்கு வந்து சென்ற இருதினங்களிலேயே உடம்பு ஸ்வஸ்தமாகி, எழுந்து நடமாடஆரம்பித்துவிட்டார்."

என்று கூறி முடிக்கும்போது அவள் கண்களில் நீர் முட்டியது.

1.தஞ்சாவூரிலிருந்து, திருக்காட்டுப்பள்ளிக்கு மேற்கு திசை நோக்கி செல்லும்போது, இந்த ஊரின் முகப்பிலேயே பஸ் நிற்கு மிடத்தில் அமைந்துள்ளது கிராமதேவதை பொன்னியம்மன் கோவில். வெளியூர்களுக்கு குடி பெயர்ந்துவிட்ட இந்த கிராமத்து மக்கள் வருடம் ஒருமுறை கிராம தேவதை, பொன்னியம்மனை தரிசிக்க வருகிறார்கள். நேரே வரமுடியாவிட்டலும் வருடம் ஒருமுறை அம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து பிரசாதம் பெற்றுக் கொள்கிறார்கள்.

2.ஊரின் மேற்கே சாலையோரத்திலேயே திருவாலம்பொழில்: ஆத்மநாதேஸ்வரர் சிவஸ்தலம் உள்ளது. இது திருக்கண்டியூரிலிருந்து திருக்காட்டுப்பள்ளிக்குச் செல்லும் சாலையில் உள்ள ஸ்தலம். மேலத்திருப்பூந்துருத்தியை அடுத்துள்ளது. மக்கள் வழக்கில், திருவாலம்பொழில், திருவாம்பொழில். என வழங்கப்படுகிறது. கண்டியூரிலிருந்து நகரப்பேரூந்து செல்கிறது..

3. கும்பகோணம் மற்றும் அரியலூரிலிருந்து, திருவையாருக்கு ஒருமணி நேரத்திற்கு ஒரு பஸ் வசதி ஊள்ளது.திருவையாரிலிருந்து பூதலூர் வழியாக திருச்சி செல்லும் பேரூந்தில் வந்தால் இத்தலத்திலேயே இறங்கலாம். தஞ்சாவூரிலிருந்து டவுன் பஸ் வசதி அடிக்கடி உள்ளது. 4. மேற்கு நோக்கிய சன்னிதி. சிறிய ஐந்து அடுக்கு ராஜகோபுரம். வாயிலில் துவாரபாலகர்கள் தரிசனம். உட்புகுந்தால் இடது பக்கம் சுப்பிரமணியர் சன்னிதி.நேரே சென்றால் மூலவர் தரிசனம். இங்கு மூலவர் ஆத்மநாதேஸ்வரர் சுயம்புமூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். இடது பக்கம் தெற்கு நோக்கியவாறு அம்பாள் சன்னிதி. நின்ற கோலம். அம்பாள் சன்னிதியை சுற்றி வரும்போது, பிரகாரத்தில் விநாயகர், விஸ்வநாதர், விசாலாட்சி அம்பாள் சன்னிதிகள் உள்ளன. அடுத்த மண்டபத்தில் வலது பக்கம் நவக்கிருஹ சன்னிதி உள்ளது, உள்மண்டபத்தில் வலது பக்கம் நால்வர் காட்சி. அடுத்து பழமையான அப்பர் திருமேனி தனியாக உள்ளது.

5. மூலவர் அழகான மூர்த்தி.நாள்தோறும் இருகால பூஜைகள். நடைபெறுகின்றன. இத்தல கல்வெட்டுக்கள் இறைவனை "தென்பரம்பைக்குடி, திருவாலம்பொழில் உடைய நாதர்" என குறிக்கிறது. அப்பர் தன் திருத்தாண்டகத்தில் "தென் பரம்பைக் குடியின்மேய.திருவாலம்பொழிலானைச் சிந்திநெஞ்சே" என்று பாடியுள்ளார். இதிலிருந்து ஊர், தென்பரம்பைக்குடி என்றும், கோயில் திருவாலம்பொழில் என்றும் வழங்கப்படுவதாகத் தெரிகிறது. சஷ்டி, நவராத்திரி, கார்த்திகை சோம வாரங்கள், சிவராத்திரி, பிரதோஷ பூஜைகள் நடைபெறுவதாகத் தெரிகிறது.

6. மஹ நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு, இந்த ஸ்தலம் பரிஹாரஸ்தலம் என கூறப்படுகிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இறைவனை பிரார்த்தனை செய்து கொண்டால், அவர்கள் வேண்டுவது நிறைவேறும், இது கண்கூடு.

7. திருவாலம்பொழில்--- பதிக வரலாறு: அப்பர் சுவாமிகள்,ஆவடுதண்டுறையிலிருந்துதிருப்பழையாறை வடதளி சென்று தொழுது, பொன்னியின் இருகரைகளிலும் உள்ள ஸ்தலங்களை வணங்கிக் கொண்டு திருவானைக்கா செல்லும்வழியில் திருவாலம்பொழில் ஈசனை பணிந்து திருப்பதிகம் பாடியருளினார் (தி.12 திருநாவு. புரா. 301.) தேவார பாடல் பெற்ற காவிரி தென்கரை தலங்களில் இது 10 வது ஸ்தலம். அப்பர் பாடிய முதல் பாடல்---"கருவாகிக் கண்ணுதலாய் நின்றான் தன்னை----திருவாலம்பொழிலானைச் சிந்தி நெஞ்சே"

8. இதன் பொருளாவது:: எல்லாவற்றிற்கும் முதல் ஆனவனும், நுதலிடத்துக் கண் பெற்றவனும், பிரமனது தலையை அரிந்து, அரிந்த அத்தலை ஓட்டை விரும்பிக் கொண்டவனும், அழகிய உமையம்மையை தன்னுடைய உடலில் ஒரு பாகத்தில் கொண்டவனும் உயிர்களின் உணர்வுகள் எல்லாம் ஆனவனும், அவ்வுணர்வுகளை உணர்த்தும் ஓசையாகி வருபவனும், வலஞ்சுழியில்காட்சி தரும் எம்பெருமானும், மறைக்காட்டி லும் ஆவடுதண்டுறையிலும் பொருந்திவாழும் மேன்மையுடையவனும் ஆகும், தென்பரம்பைக்குடியைச் சார்ந்த திருவாலம்பொழில் சிவபெருமானை, நெஞ்சே! இடைவிடாது சிந்திப்பாயாக. இப்பதிகத்தின் 10-ம் பாடல் சிதைந்து போயிற்று.

9. இக்கோவிலுக்கு எதிரே உள்ள வெண் பொற்றாமரைக் குளத்தில் இந்திரன் நீராடி சாப விமோசனம் பெற்றதாக ஐதீகம். இத்தலத்து அம்மனை வழிபட்டால் ஞானம் கிடைக்கும் என்பது ஐதீகம்

10. சூரிய பகவான் வெண்தாமரை தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டு தன் பிரும்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்ற ஸ்தலம். வருடம்தோறும் ஏப்ரல் மாதம் 21 ம் தேதி முதல் 23ம் தேதிவரை சூரியன் கிரணங்கள் ஆத்மநாதேஸ்வரர்மீது விழுவது காணக்கிடைக்காத காட்சியாகும்

11.இராமலிங்க அடிகள் (வள்ளலார்) இங்குள்ள ஈசனைப் பற்றி கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்.

திருவருட்பா---மூன்றாம் திருமுறை.விண்ணப்பக் கலிவெண்பா ( 1961 - 1962)

“நின்றெழன்மெய் யன்றெனவே நேர்ந்துலகு வாழ்த்துகின்ற நன்றெறும்பி யூரிலங்கு நன்னெறியே - துன்றுகயற் ...71 கண்ணார் நெடுங்களத்தைக் கட்டழித்த மெய்த்தவர்சூழ் தண்ணார் நெடுங்களமெய்த் தாரகமே - எண்ணார் ...72 தருக்காட்டுப் பள்ளித் தகைகொண்டோ ர் சூழுந் திருக்காட்டுப் பள்ளியில்வாழ் தேவே - மருக்காட்டு ...73 நீலம் பொழிற்குள் நிறைதடங்கட் கேர்காட்டும் ஆலம் பொழிற்சிவயோ கப்பயனே - சீலநிறை ...”74

12. இத்தலத்தில் உள்ள துர்க்கை மிகவும் சக்தி வாய்ந்தவள். தட்சிணாமூர்த்தி- இத்தலத்தில் மேதாதட்சிணாமூர்த்தியாக உள்ளார்

13. திருமணத்தடை நீங்கவும், குழந்தைப்பேறு வேண்டியும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தல இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்கின்றனர் பிரார்த்தனை நிறைவேறியதும் இறைவனுக்கு அபிஷேகம் செய்தும்,புதுவஸ்திரம் சாத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்

14.சுந்தரமூர்த்தி நாயனார் திருச்சோற்றுத்துறையைத் தரிசித்துப் பதிகம் பாடி, திருவாலம்பொழில் வந்து சேர்ந்து திருமடத்தில் எழுந்தருளினார் நந்தியின் திருமணத்தை சுந்தரருக்கு ஞாபகப்படுத்தி மழபாடிக்கு சுந்தரரை வரவழைத்த தலம் அப்போது கொள்ளிடக் கரையின் சிவத் தலங்களை எல்லாம் தரிசிக்கப் பயணம் மேற்கொண்டு இருந்தார். திருவையாறு மற்றும் அதன் சுற்றியுள்ள ஊர்கள் பயணித்துவிட்டு, அன்று இரவு திருவாலம்பொழில் என்னும் ஊரில் இரவு தங்குதல். அடுத்த நாள் கொள்ளிடக் கரையைக் கடந்து போக வேண்டும்! சுந்தரருக்கு தூக்கம் வரவில்லை! அப்போது " சுந்தரா மழபாடியுள் எனை மறந்தனையோ “ என்ற குரல் கேட்டு திடுக்கிட்ட சுந்தரர், அக்குரல் தன்னை ஆட்கொண்ட சிவபெருமானின் குரல் என்பதை உண்ர்ந்தார். காலையில் எழுந்தவுடன் “அருகில் எங்கேயாவது சிவன் கோவில் இருக்கிறதா” என்று தன்னுடன் வந்த சீடர்களைக் கேட்டார். அவர்களும் குடமுருட்டி, காவிரி ஆகிய இரு ஆறுகளைக் குறுக்கே கடந்து சென்றால் அருகில் உள்ள மழபாடியில் ஒரு சிவன் கோவில் இருக்கிறது என்பதைக் கூறினார்கள். திருமழபாடி ஆலயத்திற்கு வந்த சுந்தரர் "தங்களை மறந்து விட்டு வேறு யாரை நினைப்பேன்" என்னும் கருத்து அமைத்து, ‘வஜ்ரஸ்தம்பநாதர்’ மேல் ஒருபதிகம் பாடியருளினார். அந்தப் பதிகம் இதோ!

பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

15. வாணியம்பாடி டாக்டர், அப்துல் கௌஸ் தனது புத்தகத்தில் திருவாலம்பொழில் ஆலயத்தைப்பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார் “திருஆலம்பொழில் என்னும் ஊர் தஞ்சாவூரிலிருந்து திருவையாறுச் சாலையில் 10 கி.மீ. சென்று திருக்கண்டியூரை அடையலாம். மேலும் 2 கி.மீ. தூரத்தில் இவ்வூரை அடையலாம். இங்கு ஆத்மநாதர், ஞானாம்பிகை ஆலயம் உள்ளது.இக்கோவிலின் தலவிருட்சம் ஆலமரமாகும். மருத்துவ குணம் கொண்டது. இங்கு பக்தர்கள் தெய்வத்துடன் ஆலமரத்தையும் சேர்த்து வணங்குகின்றார்கள்.”

16. ஒவ்வொரு சிவஸ்தலங்களாக ஆலய வழிபாடு செய்துகொண்டு திருஞானசம்பந்தர், ஆலம்பொழிலுக்கு வந்தபோது, சம்பந்தர் வருகையைப் பற்றி தெரிந்து கோண்ட அப்பர் தன்னை இன்னாரென்று காட்டிக் கொள்ளாமல் கூட்டத்தினுள் புகுந்து சம்பந்தர் ஏறி வந்த சிவிகையை தாங்கி வந்தார். திருநாவுக்கரசர் அருகில் எங்கோ உள்ளார் என்பதை அறிந்த திருஞானசம்பந்தர், “ அப்பர் பெருமான் எங்கு உள்ளார் ? ” என்று அங்கு உள்ளோரிடம் வினவ, “உங்கள் சிவிகையை தாங்கும் பேறு பெற்று, இங்குள்ளேன் ஐயா,” என்று உடனே பதில் வருகிறது, திருநாவுக்கரசரிடமிருந்து. சம்பந்தர் சிவிகையினின்றும் கீழே குதித்து "என்ன காரியம் செய்தீர் ஐயா" என்று அப்பரை வணங்க, அப்பரும் சம்பந்தரை வணங்கி இருவரும் உளமுருகித் தொழுது போற்றினர். அப்பர், திருஞான சம்பந்தரை சந்தித்த இடம் அப்பர்மேடு என்று வழங்கப்படுகிறது. திருவாலம்பொழிலுக்கருகில் மேற்கே நடுக்காவேரி போகும் வழியில் உள்ளது, அப்பர்மேடு திருப்பூந்துருத்தியில் உள்ளதாக ஒருசிலர் கூறுவார்கள்

17. இது அட்டவசுக்கள் பூசித்த தலம். ** காஸ்யப முனிவர் , அஷ்டவசுக்கள் வழிபட்ட ஸ்தலம். ஒருமுறை காமதேனு மேய்ந்தபடியே இந்த ஸ்தலத்திற்கு வந்துவிட்டது. அங்கு வசித்த அஷ்டவசுக்கள் இந்த பசுவின் அருமை பெருமை தெரிந்து அதனை சிறைபிடித்துவிட்டனர். இதையறிந்த வசிஷ்டர் அஷ்டவசுக்களை சபித்தார் இதையடுத்து காமதேனுவை அஷ்டவசுக்கள் விடுவித்தனர். அஷ்டவசுக்கள் அங்கேயுள்ள புஷ்கரணியில் நீராடி ஆத்மநாதரை வழிபட சாபவிமோசனம் பெற்றனர்.

18. வெள்ளாம்பரம்பூர் மற்றும் தென்னபரம்பூர் இரண்டும் சேர்ந்து தென்பரம்பைக்குடி என ஆயிற்று. இத்தென்பரம்பைக்குடியில் உள்ள ஆலயத்தின் பெயரே திருவாலம்பொழில் ஆகும்.

சுவாமியின் பெயர் ஆத்மநாதர்.

அம்பிகையின் பெயர் ஞானாம்பிகை.

தலவிருட்சம் ஆலமரம்.

தீர்த்தம்-- வெண் பொற்றாமரைக் குளம்.

ஸ்தல விருட்சம் ஆலமரம்.

இக்கோயில் பழங்கால கற்கோயிலாகும்.

ஆலய முகவரி:-

ஆத்மநாதேஸ்வரர் திருக்கோயில், திருவாலம் பொழில் அஞ்சல், வழி கண்டியூர், திருபூந்துருத்தி, தஞ்சை மாவட்டம், 613103,

For any information about Thiruvalampozhil or the Siva Temple or Grama Devathai Koil,

Please contact Mr. J.Srinivasan, Mirasdar, Thiruvalampozhil, Mob.No.9952537647 (Or)

D. Sivasubramanian, Mob. 9789061449

Posted by: D.Sivasubramanian

159 views0 comments

Recent Posts

See All

தெய்வத்தின் குரலைத் தொகுத்த - ரா. கணபதி அண்ணா படைப்புகள்

அன்புடையீர், நமஸ்காரம் பூஜ்ய மகா பெரியவாளின் தெய்வத்தின் குரலைத் தொகுத்தவர் ரா. கணபதி அண்ணா என்பதை அனைவரும் அறிவோம். காஞ்சி மடத்தின்...

bottom of page