உ
''''''''
சிவாயநம.திருச்சிற்றம்பலம்.
கோவை.கு.கருப்பசாமி.
பதியும் பணியே பணியாய் அருள்வாய்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
(27)
சிவ தல அருமைகள், பெருமைகள் தொடர்.
(நேரில் சென்று தரிசித்ததைப் போல.....)
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
திருநெடுங்குளம்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
இறைவன்: நித்யசுந்தரேஸ்வரர், நெடுங்களநாதர்.
இறைவி மங்களநாயகி, ஒப்பிலாநாயகி.
தீர்த்தம்: அகத்திய தீர்த்தம், சுந்தர தீர்த்தம்.
தலமரம்: வில்வம்.
சோழ நாட்டில் காவிரி தென்கரையில் அமையப்பெற்றுள்ள 128 தலங்களுள் எட்டாவதாகப் போற்றப்படும் தலம்.
தேவாரம் பாடியவர்கள்:
சம்பந்தர்-1-ல் ஒரே ஒரு பதிகம் மட்டும் பாடியுள்ளார்.
இருப்பிடம்:
திருச்சி-- தஞ்சை சாலையில் சென்று, துவாக்குடி என்னுமிடத்தில் பிரியும் சாலையில் நான்கு கி.மீ சென்று நெடுங்களத்தை அடையலாம்.
திருச்சி மெயின் கார்டு கேட்டிலிருந்து நெடுங்களத்திற்கு நகரப் பேருந்துகள் உள்ளன.
திருச்சி-- மாங்காவனம் பேருந்துகள் இத்தலம் வழியாகச் செல்கிறது.
மக்கள் இவ்வூரை வழக்கில் திருநட்டாங்குளம் என்கின்றனர்.
பெயர்க்காரணம்:
தவஞ்செய்த அம்பிகையை கள்ள உருவில் தோன்றிக் கைத்தலம் பற்றினர்.
அன்னை அச்சமுற்று, தாழைகள் நிறைந்த சோலையில் ஒளிந்தாள்.
இறைவனும் பின் தொடர்ந்து அம்பிகையை ஆட்கொண்டு அவளையும் உடன் அழைத்துக் கொண்டு திருக்கயிலை சென்றார்.
அன்னை ஓடி ஒளிந்த இடம் ஒளிமதிச் சோலை என்ற பெயரோடு திகழ்கிறது.
கோவில் அமைப்பு:
இக்கோவில் இரண்டே முக்கால் ஏக்கர் நிலப்பரப்பளவில் அமையப்பெற்றதாகும்.
ராஜ கோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
இரண்டு பிரகாரங்கள் உள்ளன.
வெளிப்புறம் உள்ள ஆலயத்தில் அம்பாள் தெற்கு நோக்கி சதுர்புஜத்துடன் நின்ற நிலையில் உள்ளனர்.
உற்சவ மூர்த்தங்கள் சோமாஸ்கந்தர், விநாயகர், வள்ளி, தெய்வயானை உடனாய சுப்பிரமணியர் முதலியன சிறப்பாக இருக்கின்றன.
இங்குள்ள வெண்கலக் குதிரை விந்தையான அமைப்புடையது.
மகாமண்டபத்தில் வைக்கப்பட்டுள்ள சோழர்காலக் கல் உரல் சிறந்த வேலைப்பாடுகளுடன் காட்சி தருகிறது.
மூலவர்--நிறைவான மூர்த்தி--நினைவார் தம் இடர்களையும் நிமலலின் தரிசனம்.
மூலத்தானத்தின் மேல் இரண்டு விமானங்கள் அமைந்து புதுமையாகக் காட்சி தருகிறது.
இங்கிருக்கும் யோக தட்சிணாமூர்த்தி, சித்தாசனத்தில் அமர்ந்து, மேற் கரங்களில் மான் மழுவும், கீழ்க்கரங்களில் சின்முத்திரையும் திருநீற்றுப் பெட்டகமும் ஏந்தி, இடக்காலைச் சுற்றியவாறு யோக பட்டம் விளங்கிய நிலையில் காட்சி தருகிறார்.
உட்பிராகாரத்தில் வலம்புரி விநாயகர், முருகன், சோமாஸ்கந்தர், சப்தகன்னியர், அகத்தீஸ்வரர், அய்யனார், நடராசர், துர்க்கை , நால்வர் பைரவர், சூரியன், வரதராசப் பெருமாள் முதலிய சந்நிதிகள் உள்ளன.
வங்கிய சோழ மன்னனுக்கு இறைவன் தன் பேரழகைக் காட்டி அருள் புரிந்த தலம்.
ராஜகோபுர விளக்கம்:
சம்பந்தர் அருளிய இடர் களையும் பதிகமாம் மறையுடையாய் எனத் தொடங்கும் பதிகத்தின் மொத்த சான்றுகளையும் இத்தலத்தில் வரலாற்று நிகழ்ச்சிகளையும் சுதை வடிவத்தில் இத்தலத்தில் செய்வித்து வைத்திருப்பது வேறெங்கும் இல்லாத ஓர் அற்புதப் படைப்பாகும்.
நான்காம் நிலையில் பதிகத்தின் முதலில் மறையுடையாய் என்பதற்கு பெருமான் முப்புரி நூலுடனும், வேதச் சுவடியுடனும் அடுத்து தோலுடையாய் -இடுப்பில் மான் தோலும், மார்பிலும், தோளிலும் புலித் தோலுடனும் வார்சடை மேல் வளரும் பிறையுடையாய்-- சடையும் சடைமேல் பிறையும் சந்திரசேகரராகக் காட்சி அளிக்கிறார்.
இரண்டாம் பாடல் கனைத்தெழுந்த வெண்திரை சூழ் கடலிடை நஞ்சுதன்னை தினைத்தனையா மிடற்றில் வைத்த திருந்திய தேவே -கோபுரத்தின் மேற்கு பாகத்தில் இரண்டாம் நிலையில் வடக்கு நோக்கி-- பிரதோச நிகழ்ச்சியின் விளக்கம்.
மூன்றாவது பாடலுக்கு கோபுரத்தின் கிழக்கு முகமாக வடபாகத்தில்- நின்னடியே வழிபடுவான் நிமலன் நினைக்கருத நின் அடியான் உயிரை வவ்வேல் என்றடற்கூற்றுரைத்த- திருக்கடையூர் தலவரலாறாக அமைந்துள்ளது.
நான்காம் பாடலில்- மலைபுரிந்த மன்னவன் மகளை ஓர்பால் மகிழ்ந்து- இத்தல இறைவன் கள்ள உருவில் மணம் முடித்த வரலாறு-- அலைபுரிந்த கங்கை தங்கும் அவிர்சடை --கங்கையைத் தாங்கும் கங்காதரராக அமைக்கப் பட்டிருக்கின்றன.
ஐந்தாம் பாடலான-- பாரிடமும் பலிசேர்- பூதகணம் தலையில் மண்டை ஓட்டிலான திருவோட்டை ஏந்தி இறைவன் நிர்வாணத் திருமேனி காட்டி தாருகாவனத்து ரிஷிகளின் ஆணவத்தை அடக்கிய செயல்.
ஆறாம்பாடலான-- விருத்தனாகி பாலனாகி-- திருவிளையாடல் புராணத்தில் விருத்தகுமார படலம் கதையை விளக்கும் சுதை அமைக்கப்பட்டுள்ளது.
ஏழாம் பாடலான-- கூறுகொண்டாய் மூன்றும் ஒன்றாங் கூட்டியோர் வெங்கணையால்-- இறைவன் திரிபுரங்களை ஒரே கணையால் அழிப்பதாக திரிபுராந்தகக் கதை சுதையால் அமைக்கப்பட்டுள்ளன.
எட்டாம் பாடலான-- இலங்கை அன்றிநின்ற அரக்கர் கோனை அருவரைக்கீழடத்தாய் --இராவணன் திருக்கயிலையை அசைத்தெடுப்பது போலவும் இறைவன் வலது கால் பெருவிரலால் ஊன்றுவது போலவும் அமைத்திருக்கிறதைக் காணலாம்.
ஒன்பதாம் பாடலான-- மாலும் நான்முகனும் சூழ ஆங்கோர் சோதியுள்ளாகி நின்றாய்-- என்ற நிலையுடன் லிங்கோத்பவ மூர்த்தி அமைக்கப்பட்டுள்ளது.
பத்தாவது பாடலில்-- தோத்திர நின்னடியே நெஞ்சில் வைப்பார்-- சண்டிகேஸ்வரர் சுதை- தன்னுடைய முடிமலை இனி உனக்கே ஆகுக என்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. பதிகத்தை நிறைவு செய்யும் வகையில் சம்பந்தர்- நீலவல்ல வார்சடையான் மேய நெடுங்களம் என்று கூறுகிறார்.
இதற்காக பெருமான் அவிழ்ந்த நீண்ட வார்சடையுடன் காணப்படுகிறார்.
அருகிலேயே சம்பந்தரும், அடியார் பெருமக்களும் சூழ வழிபட்டு சம்பந்தர் பதிகத்தை நிறைவு செய்யும் காட்சியாக உள்ளது.
வேறு பிற செய்திகள்:
திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரும் இத்தலத்தைக் குறித்துப் பாடியுள்ளனர்.
ஐயடிகள் காடவர்கோன் நாயனார் ஷேத்திரத் திருவெண்பாவிலும், அருணகிரிநாதர் திருப்புகழ் பாடலிலும் இத்தலத்தைப் பற்றி பாடியுள்ளனர்.
திருவிழாக்கள்:
மாத விழாக்களுடன் நவராத்திரி, பிரதோஷ காலங்கள், தைப்பூசம், பங்குனி உத்திரம் முதலியவை சிறப்பாக நடைபெறுகின்றன. வைகாசி விசாகத்திலும் பெருவிழா நடந்தேறும்.
பூஜை:
சிவாகம முறையில் நான்கு கால பூஜை.
காலை 8.00 மணி முதல் பகல் 11.30 மணி வரை,
மாலை 5.00 மணி முதல் இரவு 7.30 மணி வரை.
அஞ்சல் முகவரி:
அருள்மிகு, நித்யசுந்தரேஸ்வரர் திருக்கோயில்,
திருநெடுங்களம்&அஞ்சல்,
திருச்சி வட்டம்,
திருச்சி மாவட்டம்-620 015
தொடர்புக்கு:
சோமசுந்தர சிவாச்சாரியார்.
94437 45009
0431--2520126
98420 28774
Reposting it from Amritha Vahini Google group.