*முதல் திருமுறை*
*திருமருகலும் -* *திருச்செங்காட்டங்குடியும்*
*பதிகத்தின் வரலாறு*
திருஞானசம்பந்தப் பெருமான் வணிகனது விடந்தீர்த்து அவனுக்கு மணவாழ்வு வகுத்துத் திருமருகலில் எழுந்தருளியிருந்தார்கள். அப்போது சிறுத்தொண்ட நாயனர் வந்து மீட்டும் தமது ஊருக்கு வரவேண்டும் என விண்ணப்பித்தார். பிள்ளையார் மற்றத் தலங்கலளயும் சென்று வழிபட வேண்டும் என்ற திருவுள்ளக் குறிப்போடு மருகலானடியைப் போற்றத் திருக்கோயிலுள் சென்றார்கள். அப்போது மருகற்பெருமான் திருச்செங்காட்டங் குடிக் கணபதியீச்சரத்திலுள்ள திருவோலக்கத்தைக் காட்டியருள இப்பதிகத்தைப் பாடினர்கள். இங்கேயே அக்கோலத்தைக் காட்டியருளிய உள்ளக் குறிப்பை உணர்த்திச் சிறுத்தொண்டர்க்கு விடை கொடுத்தனுப்பினார்கள்.
இப்பதிகம் திருமருகற்பெருமானைக் கணபதியீச்சரங் காமுறக் காரணம் என்ன? என்று வினாவுவதாக அமைந்தமை யின் வினாவுரையாயிற்று.
*திருமருகலில்*
சுவாமிபெயர் - மாணிக்கவண்ணர்.
தேவியார் - வண்டுவார்குழலி.
*திருச்செங்காட்டங்குடியில்*
சுவாமிபெயர் - கணபதீசுவரர்.
தேவியார் - திருக்குழல்நாயகி.
*பதிகம்*
அங்கமும் வேதமும் ஓதும்நாவர்
அந்தணர் நாளும் அடிபரவ
மங்குன் மதிதவழ் மாடவீதி
மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்
செங்கய லார்புனற் செல்வமல்கு
சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்
கங்குல் விளங்கெரி யேந்தியாடுங்
கணபதி யீச்சரங் காமுறவே.
*பொருள்*
நான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் ஓதும் நாவினராகிய அந்தணர்கள் நாள்தோறும் தன் திருவடிகளை வணங்க, வானமண்டலத்திலுள்ள சந்திரன் தவழ்ந்து செல்லுதற்கு இடமாய் உயர்ந்து விளங்கும் மாடவீதிகளை உடைய திருமருகலில் எழுந்தருளியுள்ள இறைவனே! செங்கயல்கள் நிறைந்த புனல் சூழ்ந்ததும், செல்வ வளம் நிறைந்ததுமான புகழார்ந்த திருச்செங்காட்டங்குடியில் எரியைக்கையில் ஏந்தி நள்ளிருளில் நட்டம் ஆடுதற்கு இடமாய்க் கணபதியீச்சரத்தைக் காமுறுதல் ஏன்? சொல்வாயாக.
திருச்சிற்றம்பலம்.
Reposting it from Amirthavahini google group.