கும்ப ராசியில் சூரியன் சஞ்சரிக்கும்போது, மக நட்சத்திரத்தில் சந்திரன் சஞ்சரிக்கும் கும்ப மாத பௌர்ணமி திருநாளே மாசி மகம். இத்தினத்தில் புண்ணிய நதிகளில் நீராடுவது நமக்கு எல்லா நலன்களையும் தரும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
மாசிமக தினத்தன்றுதான் அம்பிகை ஸ்ரீ லலிதா திரிபுரஸுந்தரியாக அவதரித்தார். சிவபெருமானுக்கு முருகன் மந்திர உபதேசம் செய்த நாள். பெருமாள் வராக அவதாரம் எடுத்து பூமியை பாதாளத்திலிருந்து வெளிக்கொணர்ந்த நாள்.
"குடமூக்கே குடமூக்கே என்பீராகில் கொடு வினைகள் தீர்ந்து அரனைக் குறுகலாமே" என்று அப்பர் பெருமான் போற்றிய தலமான கும்பகோணத்தில் உள்ள மகாமகக் குளத்தில் நீராடுவது மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. மாசிமக உத்ஸவம் கும்பகோணத்திலுள்ள அனைத்து ஆலயங்களிலும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஆலயங்களில் உத்ஸவ மூர்த்திகளுக்கு மிக அழகாக அலங்காரம் செய்யப்பட்டு பல விதமான வாகனங்களில் வீதி உலா வருவதைக் காண 'நாலாயிரங்கண் படைத்திலனே அந்த நான்முகனே' என்று அருணகிரிநாதர் கந்தர் அலங்காரத்தில் கூறுவது போல் நம் இரண்டு கண்கள் போதாது. கோவில்களில் வேத பாராயணம், திருமுறை ஒதுதல் என்று இந்நகரமே ஆன்மீகத்தில் திளைக்கிறது.
Courtesy: Smt. Malathi Jayaraman, Kumbakonam