ஸ்ரீ ஜயேந்திரர் கண்ணி
அவிட்டத்தில் தோன்றியவா அற்புதச்சொல் என்றன்
செவிட்டுக்கா திற்சொல்லாய் தேவே சயேந்திரனே...(1)
பான்மதியைச் சூடிவரும் பாம்பரையன் நீயன்றோ
நான்மறைகள் தேடரிய ஞாநீ சயேந்திரனே...(2)
எட்டெழுத்தில் நிற்போன் எதியெனமுன் வந்தன்ன
சிட்ட முனியே சிவனே சயேந்திரனே...(3)
தன்னிகரில் லாத தனிக்கருணை கொண்டவளாம்
அன்னையுமை நீயன்றோ அத்தா சயேந்திரனே...(4)
திருவார்த்தை செப்பாமல் சின்மயத்தைக் காட்டும்
குருமூர்த்தி நீயன்றோ கோவே சயேந்திரனே....(5)
பாருயிர் காக்கவே பட்டொளி வீசியருள்
சூரியன் நீயன்றோ சோதீ சயேந்திரனே...(6)
மந்திரக் கண்ணாலே தண்ணருள் பாய்ச்சுகிற
சந்திரன் நீயன்றோ சம்போ சயேந்திரனே...(7)
தவமொன்றே மூச்சென் றியற்றிவரும் தந்தாய்
நவகோளும் தாள்பணியும் நாதா சயேந்திரனே...(8)
சராசரங்கள் எல்லாம்நின் தாளடிக்கீழ்த் தூசாம்
புராணங்கள் போற்றும் புனிதா சயேந்திரனே...(9)
அண்டம் அனைத்துக்கும் அப்பால் அமர்ந்தவனே
தண்டம் தனையேந்தும் தாயே சயேந்திரனே...(10)
பந்தமறச் செய்யும் பரம்பரனே நாவினிற்
செந்தமிழாய்த் தித்திக்கும் தேனே சயேந்திரனே...(11)
மடமழியச் செய்யும் மனத்தூய்மை காட்டி
வடமொழி யாறங்கம் வல்ல சயேந்திரனே...(12)
சாத்திரச் சாரத்தின் ஊற்றாய்ச் சகம்புரக்கும்
தோத்திரத்துக் குள்ளோங்கும் தொல்லோய் சயேந்திரனே...(13)
அருள்நோக்கால் அன்பைச் சுரப்போனே உள்ளத்(து)
இருள்நீக்கி வானளிக்கும் ஈசா சயேந்திரனே...(14)
இடைமருதில் வேதம் பயின்றோனே என்னை
உடையவனே ஓயாத ஒண்தாட் சயேந்திரனே..(15)
ஆனைக்கா தன்னில் அருமறைகள் கற்றிட்டோய்
தேனைப்போல் நன்மொழிகள் செப்பாய் சயேந்திரனே...(16)
ஏனாத்தூர் சர்வகலா சாலை இனிதமைத்தாய்
வானாட்டார் போற்றும் மணியே சயேந்திரனே...(17)
சனகல்யாண் தந்திட்ட சாதுவே ஈடில்
மனவலியால் பற்றறுத்த மன்னே சயேந்திரனே...(18)
ஓரிருக்கை மாமண்ட பம்கண்ட ஒண்முனியே
காரிருக்கும் கண்டனுருக் காட்டாய் சயேந்திரனே...(19)
நன்மறைகள் நான்கினையும் நாடெங்கும் நன்குணர்த்தி
வன்முறையை வேரறுக்கும் மன்னா சயேந்திரனே...(20)
அன்புப் பெருங்கடலே ஆற்றலின் சீர்த்திரளே
என்பும் பிறர்க்கீயும் ஏந்தால் சயேந்திரனே...(21)
காவி யுடுத்துவரும் கண்ணுதலே நீயென்று
கூவியழைத் தேனையாட் கொள்வாய் சயேந்திரனே...(22)
போற்றிப் பணிவாரின் பொல்லா வினையறுக்கும்
நீற்றை அணிந்த நிமலா சயேந்திரனே...(23)
பரிகாசம் செய்தாலும் பாலூட்டும் தாய்போல்
பரிதாபப் பட்டருள்செய் பண்பே சயேந்திரனே..(24)
நேபாளம் சென்றங்கு நீறொளிரச் செய்திட்ட
காபாலி நீயன்றோ கண்ணே சயேந்திரனே..(25)
தருமம் தழைக்கச் சதாமிகவு ழைத்த
அருமந் திரப்பொருளே அண்ணால் சயேந்திரனே...(26)
ஆரியமும் தண்டமிழும் ஆத்திகத்தின் கண்களென்ற
சீரியனே செல்வச் சிவனே சயேந்திரனே...(27)
எளியோருக் கென்றும் இரங்கியருள் ஈசா
வளையாத கோலேந்தும் மன்னே சயேந்திரனே...(28)
துட்டமா சத்திகளைத் தூர விரட்டிட்டோய்
அட்டமா சித்திக் கதிபா சயேந்திரனே...(29)
அம்பாரம் அம்பார மாயாம் விளைத்திட்ட
எம்பாவம் நீயேற்றாய் ஏறே சயேந்திரனே...(30)
சிஷ்ய பாபம் குரும் வ்ரஜேத் - நாம் செய் பாவங்களின் பலனை, நம் மேல் உள்ள கருணையினால் அவர் ஏற்றுக் கொண்டார்.
தவமன்றி வேறொன் றறியாநற் றாயே
பவந்தன்னைப் பாற்றும் பரமே சயேந்திரனே...(31)
கூவிளம் ஆர்தரு கோலக் குருமணியே
நாவளம் தாராயோ நாதா சயேந்திரனே...(32)
ஆறந்தத் துக்கப்பால் ஆரும் அரனுருவே
ஆனந்தத் தாயே அறிவே சயேந்திரனே...(33)
பொன்போல் மிளிர்கின்ற மேனியுடைப் புண்ணியனே
அன்போ டரவணைக்கும் அம்மா சயேந்திரனே...(34)
மணிமாலை சூடும் மணியே எனையுன்
பணியேவி ஆட்கொள்ளாய் பற்றில் சயேந்திரனே..(35)
கருணைப் பெருநோக்கே கள்வனெனை யாளத்
தருணம் இதுவன்றோ சாற்றாய் சயேந்திரனே...(36)
பொற்கூரை வேய்ந்திட்ட போதனே என்றனுக்கு
நற்கூலி கிட்டுவதெந் நாளோ சயேந்திரனே...(37)
காமாட்சி அம்மன் கோவிலுக்குக் பொற்கூரை வேய்ந்தவர்.
கச்சி நகர்மேய இச்சை யறுதேவா
நச்சி வருவோரின் நம்பா சயேந்திரனே...(38)
அஞ்செழுத்தின் உள்ளே அமர்ந்தொளிரும் அப்பனே
அஞ்சலெனச் சொல்லியெமை ஆள்வாய் சயேந்திரனே...(39)
சிங்க முனியெனவே எங்கும் வலம்வந்த
தங்கத் தவமுனியே சத்தே சயேந்திரனே...(40)
சேரிகள் சென்று திருவார்த்தை செப்பியவா
மாரியை அன்ன வரதா சயேந்திரனே...(41)
ஏழைகள் பந்துவே என்றும் புதியவனே
வாழிய மெய்ஞ்ஞான வாளே சயேந்திரனே..(42)
மருத்துவம் கல்வி வளமுறவு ழைத்தோய்
குருத்துவம் மிக்கோங்கும் கோவே சயேந்திரனே...(43)
சித்தெட்டும் ஏவல்செய் சீலனே எந்நாளும்
எத்திக்கும் ஏத்தும் இறையே சயேந்திரனே...(44)
நோக்காலே பத்தரது நோவகற்றும் சற்குருவே
வாக்கோடுள் ளம்செயலில் மாசில் சயேந்திரனே...(45)
தெருக்கூத்து நன்கு செழித்திடச் செய்தோய்
இருக்காதி நான்மறையின் ஈறே சயேந்திரனே...(46)
கிராமக் கலைகள் வளர ஊதியம் அளித்தார்.
எல்லோரும் நல்லிணக்கத் தோடிருக்க எண்ணியெண்ணிச்
செல்லா இடமெல்லாம் சென்றாய் சயேந்திரனே...(47)
பட்டி தொட்டிகளுக்கெல்லாம் சென்று மக்களுக்கு அருகிருந்தார்.
நடுவுநிலை அன்றிமற்றொன் றெண்ணாத நல்லோய்
கொடுவினையை வேரறுக்கும் கோவே சயேந்திரனே...(48)
மதங்களின் எல்லைகடந் தெல்லார்க்கும் நல்ல
இதங்காட்டி எங்கும்நிறை ஈசா சயேந்திரனே...(49)
ஈசா என்ற இறைத்தன்மையுடைய பெயர், இந்து-ஈசன், முஸ்லிம்-ஈஸா நபி, கிருத்துவர்-ஏசு மூவருக்குமே பொருந்தும்.
எண்ணில் குடமுழக்குக் கண்ட இளையோனே
எண்ணம் கடந்தொளிரும் இன்பே சயேந்திரனே...(50)
கிராமங்கள் தோறும் புராணஒலி கேட்க
இராப்பகலாத் தொண்டுசெய்த ஏறே சயேந்திரனே...(51)
காட்சிக் கெளியனே கண்கண்ட தெய்வமே
மாட்சி மிகுந்த மணியே சயேந்திரனே...(52)
அத்துவிதம் காட்டும் அனாதியே வீணாகக்
கத்திடுமென் கட்டைக் களையாய் சயேந்திரனே...(53)
சத்தியனே தற்பரனே தத்துவனே சங்கரனே
நித்தியனே நின்மலனே நேயா சயேந்திரனே..(54)
கங்கையின் புண்ணியக் காலுடைய பொற்குருவே
அங்கையிற் கோலேந் தரசே சயேந்திரனே...(55)
நம்பி வருவோர்க்கு நன்மை மிகப்பொழியும்
கம்பை நதிதீரக் கண்ணே சயேந்திரனே.(56)
நாத்திகம் ஓய்ந்தழிய நான்மறை செழிக்கவந்த
ஆத்திக மாமருந்தே அன்பே சயேந்திரனே...(57)
சங்கர என்பாரின் சங்கடம் தீர்த்தருள்
புங்கவனே பொய்யறுக்கும் பொன்னே சயேந்திரனே...(58)
மாமுனிவன் வித்திட்ட பாதை வழுவாத
கோமகனே கோலேந்தும் கோலா சயேந்திரனே...(59)
மூவுருவும் காட்டும் முனிச்சுடரே வைதிகக்
காவலனே நற்கதியைக் காட்டாய் சயேந்திரனே...(60)
எல்லார்க்கும் செந்தண்மை காட்டிய எம்மானே
பொல்லார்க்கும் நன்றேசெய் போதா சயேந்திரனே....(61)
ஆதிசங்க ரர்க்கோர் அரும்சிலை கண்டவனே
சோதியெங்கும் காட்டியருள் தூயா சயேந்திரனே...(62)
ஏனாத்தூரில் மிகவும் உயரமான ஆதி சங்கரர் சிலை உள்ளது. பல மைல் தூரத்திலிருந்தே தரிசிக்கலாம்.
தருமமே மார்க்கம் எனும்நிலையில் தாழாக்
கருமமே கண்ணான கற்பே சயேந்திரனே...(63)
காலம் கடந்துநிற்கும் சீலனே கண்ணோக்கால்
ஞாலம் புரந்திடும் நாதா சயேந்திரனே...(64)
தீயினும் தூய செழுஞ்சுடரே எம்பவம்
மாய மருந்தென வந்த சயேந்திரனே...(65)
கலைகளெல் லாம்வளரக் காலமெல்லாம் பாடுபட்ட
மலைவளைத்தான் நல்லுருவே வண்ணா சயேந்திரனே...(66)
Courtesy : Sri Sankaradass Nagoji,Thedhiyur.
Thanks to Smt. Malathi Jayaraman,Kumbakonam.