Sri Jayendra Saraswathi Swamigal - Kuravanji

ஸ்ரீ ஜயேந்திரர் குறவஞ்சி

விநாயகர் துதி

அறுசீர் விருத்தம் - விளம் விளம் காய் (அரையடி)

பார்முத லாகிய பூதமைந்தும்

..பாங்குடன் விளங்கிடச் செய்பவனே

கார்முகில் போலருள் மழைபொழிவோய்

..கயமுக னேகண நாயகனே

சீர்மிகு ஜயேந்திரர் குறவஞ்சி

..சிறப்புடன் அமைந்திடச் செய்திடுவாய்

சார்வெனக் காருளர் உனையன்றித்

..தண்டனிட் டேனெனைக் காத்தருளே

ஸ்ரீ ஏகாம்ரேஸ்வரர் துதி

அறுசீர் விருத்தம் – விளம் விளம் காய் (அரையடி)

உச்சியில் மதியமும் வானதியும்

..உரகமும் கொன்றையும் அணிவோனே

அச்சுதன் சோதரி காமாக்ஷி

..ஆற்றிய தவமதில் மகிழ்கள்வா!

நச்சர வொடுமுயர் முப்புரிநூல்

..நயமுடன் இலகிடும் அணிமார்பா!

கச்சியில் உறைபவ! ஏகம்பா!

..கனிவுடன் ஏழையைக் காத்தருளே!

அன்னை காமாக்ஷி துதி

அறுசீர் விருத்தம் – மா மா காய் (அரையடி)

கருணை பொழியும் கண்ணுடையாய்

..காஞ்சி மேவும் நாயகியே

அருமை முனிவர் பெருமான்மேல்

..அழகாய்க் குறவஞ் சியைப்பாட

ஒருகை தூக்கி உவகையுடன்

..உலகம் போற்றும் கவிஞானம்

தயைகூர்ந் தெனக்குத் தருவாயே

..தரணி வாழ அருள்வாயே

முருகன் துதி

நாலடித் தரவு கொச்சகக் கலிப்பா (காய் x 4)

மயிலேறி வருவானே மனக்கவலை தீர்ப்பானே

அயிலேந்தி வருவானே அவதிகளைக் களைவானே

கயிலைமலை நாதனவர் கண்ணொளியில் உதித்தானே

உயரியமெய் ஞானநிலை உவகையுடன் அருள்வானே

அவையடக்கம்

அறுசீர் விருத்தம் (விளம் மா காய் – அரையடி)

வல்லமை இல்லாச் சிறியேனின்

..மனத்தினில் எழுந்த ஆசையினால்

வல்லவர் மேலோர் குறவஞ்சி

..வடித்துல கோர்முன் வைக்கின்றேன்

சொல்லிய சொல்லில் பிழையிருப்பின்

..தோத்திரம் என்றே மன்னித்து

நல்லதொர் ஆசி யினைவழங்கி

..நலமுடன் வாழ அருள்வீரே

நூல்

குறத்தி வர்ணனை

எண்சீர் விருத்தம் (மா மா விளம் விளம் – அரையடி; ஈற்றடி, ஈற்றுச்சீர் மட்டும் தேமா)

வெண்ணி றத்துக் குழையணி செவிகளும்

..மின்னல் போலே ஒளிமிகு கண்களும்

எண்ணி லடங்கா எழிலுடை வதனமும்

..ஏற்றம் மிகுந்த வளையணி கரங்களும்

திண்மை சேர்ந்த தோள்களும் கொண்டவள்

..சீராய்க் கோர்த்த நவமணி மாலையும்

வண்ணச் சேலை தனையும ணிந்தவள்

..மாட வீதி வந்தடைந் தாளே

மக்கள் வந்தவள் யார் என வினவுதல்

அறுசீர் விருத்தம் (மா மா காய்)

இவள்யார் என்றே எல்லாரும்

..ஏற இறங்கப் பார்த்தனரே

சிவையோ ரதியோ திருமகளோ

..தெரியா தவராய் விழித்தனரே

அவளை அணுகி “யார்நீ”என்(று)

..அறிய விரும்பிக் கேட்டனரே

கவலை ஏதும் கொள்ளாமல்

..களிப்பாய்ப் பாடத் தொடங்கினளே

குறத்தி தன்னை அறிமுகப் படுத்திக்கொள்ளுதல் (நூற்பயனும் சேர்த்து)

தரவு கொச்சகக் கலிப்பா (காய் x 4)

தேரோடும் வீதியுடைத் தென்னாட்டைச் சேர்ந்தவள்நான்

ஊரூராய்த் திரிவேனே ஊர்வசியென் றழைப்பாரே

பாரோர்கள் பணிந்தேத்தும் பரமகுரு புகழ்சொல்வேன்

வாராதே கேட்போர்க்கு வல்வினைகள் வாழ்வினிலே

1. குறத்தி யாவரையும் அழைத்து, தான் சொல்லப்போவதை அறிவித்தல் - எண்சீர் விருத்தம் (காய் x 8)

வாருமையா வாருமம்மா வந்திருந்து கேட்பீரே

..வானளவு மாண்புகொண்ட அருமுனியின் சரிதத்தைப்

பாருமையா பாருமம்மா பார்புகழும் குருநாதர்

..பாங்குடனே வருவார்க்குப் புன்னகையோ டருளுவதை

ஆரறிவார் ஆரறிவார் இம்முனியின் மகிமைகளை

..ஆரவாரம் இல்லாமல் அரும்பணிகள் ஆற்றியதை

ஊரறிய நாடறிய உலகறியச் செப்பிடுவீர்

..உத்தமராம் ஜகத்குருநம் ஜயேந்திரரின் பெருமைகளை

2. குழந்தை பிறப்பு, பெரியோர்கள் செய்யும் ஆசிகள் - அறுசீர் விருத்தம் (மா விளம் காய் – அரையடி)

ஆடித் திங்களில் அவதரித்தார்

..அவனி உய்வதற் கெனவேண்டி

ஆடிப் பாடிம கிழ்ந்தனரே

..அவ்வூர் தனிலுறை நன்மக்கள்

கோடி ஆதவன் போலொளியைக்

..குழந்தை முகத்தினில் கண்டனரே

நாடு போற்றிடும் நற்செயல்கள்

..நன்றாய்ச் செய்திடும் என்றனரே

3. பெயர் வைத்தல், கல்வி கற்றல் (எண்சீர் விருத்தம் – காய் காய் காய் மா – அரையடி)

மகனாய்மா தேவருக்கு வந்துதித்தார் அம்மே

..மாதரசி சரஸ்வதிநற் செல்வமவர் அம்மே

அகங்குளிர அப்பெற்றோர் உச்சிமுகந் தம்மே

..ஆசையுடன் சுப்ரமணி யனென்றழைத்தார் அம்மே

பகலிரவாய் அனுதினமும் வளர்ந்துவந்தார் அம்மே

..பள்ளியிலே சேர்ந்துகல்வி கற்றுவந்தார் அம்மே

நகைச்சுவையாய் நண்பருடன் பழகிவந்தார் அம்மே

..நால்வேதம் கற்பதற்குப் புறப்பட்டார் அம்மே

4. வேதம் கற்றல், சன்யாசம் ஏற்றல் (எண்சீர் விருத்தம் – காய் காய் காய் மா – அரையடி)

இருள்நீக்கி ஊரிலிருந் தெழுச்சியுடன் கிளம்பி

..எழிலாரும் சோலைகளில் அணிமயில்கள் ஆடும்

திருவானைக் காவிற்சில காலங்கள் தங்கிச்

..சிறப்பாக வேதங்கள் கற்றுணர்ந்தார் அம்மே

குருவாக சந்திரசே கரேந்திரரைப் பெற்றுக்

..குறைவின்றிப் பலவற்றைக் கற்றுத்தேர்ந் தாரே

தரமாரும் இடைமருதில் துறவறம்மேற் கொண்டு [தரம் – மேன்மை]

..ஜகத்குருசீர் ஜயேந்திரராய் வந்தாரே அம்மே

5. சன்யாச கோல வர்ணனை (அறுசீர் விருத்தம் – மா விளம் விளம் - அரையடி)

நீறு பூசிய நெற்றியர்

..நிமிர்ந்த நன்னடை கொண்டவர்

வீறு சேர்கொடி உடையவர்

..மெச்சும் காவிய ணிந்தவர்

வேறு பாடறி யாதவர்

..வீர மிக்கவர் வித்தகர்

தேறு லாவிடும் சிந்தையர் [தேறு – தெளிவு]

..திருவி னார்புதுப் பெரியவர்

6. காஞ்சி காமகோடி பீடம் (எண்சீர் விருத்தம் – மா விளம் மா மா மா மா மா மா)

ஆதி சங்கரர் அமைத்த பீடம்

..ஆன்மி கத்தைப் போற்றும் பீடம்

வேதம் ஓங்கிட வைக்கும் பீடம்

..வேள்வி வளர்ந்திடச் செய்யும் பீடம்

நீதி நெறிகளைப் பேணும் பீடம்

..நியமம் தவறா அருமைப் பீடம்

வைதி கத்தினைக் காக்கும் பீடம்

..வளமார் காம கோடி பீடம்

7. திக் விஜயம் (எண்சீர் விருத்தம் – காய் காய் காய் மா – அரையடி)

குருநாதர் காட்டியநற் பாதையிலே அம்மே

..குமரிமுதல் காச்மீரம் சென்றுவந்தார் அம்மே

நரையாரும் பனிமலையாம் கயிலாயம் சென்றார்

..நயமாரும் மானசரோ வரத்தினையும் கண்டார்

பரமகுரு சங்கரரின் திருவுருவை ஆங்கே

..பார்போற்றும் வண்ணத்தில் அமைத்திட்டார் அம்மே

பெருமைமிகு நேபாளம் கிழக்குவங்கம் சென்றார்

..பெரியபல சாதனைகள் செய்திட்டார் அம்மே

8. நேபாள அரசு மரியாதை (அறுசீர் விருத்தம் விளம் விளம் காய் – அரையடி)

பசுபதி நாதரின் அருள்நிறைந்த

..பனிமலைப் பகுதியாம் நேபாளம்

விசுவம காகுரு வருகையினை

..மெச்சியந் நாட்டினர் மகிழ்ந்தனரே

நசைவுடன் குருவினை வரவேற்று

..நல்லதொர் வளைவினை நிறுவினரே

திசைமுழு வதிலுமே பரவியதே

..சீர்மிகு ஜயேந்திரர் அருமகிமை

9. வங்கதேசப் பிரவேசம் (அறுசீர் விருத்தம் – மா மா காய் - அரையடி)

வங்க தேசத் தலைநகராம்

..வளமார் தாக்கா நகரினிலே

சங்கம் அணிந்த அம்பிகையாம்

..தாக்கே சுவரி ஆலயத்தில்

சங்க ராச்சார் யார்பெயரில்

..தலைவா யிலொன்று வைத்தனரே

மங்காப் புகழோ டென்றென்றும்

..மண்ணில் நிலைத்து நின்றிடுமே

10. சமூகப் பணிகள்

கும்மி (எழுசீர்க் கண்ணி)

1. மேனி எடுத்தந்த சங்கரர் தோன்றிய

..மேன்மை நிறைந்ததொர் காலடியில்

வானினை எட்டிடும் வண்ண மொருமணி

..மண்டபம் செய்தவர் மாமுனியே.

2. கோல மிகுந்தவொர் கோட்டை தனிலொரு

..கோயில் இருந்தது பூசையின்றி

வேலூர் நகரினில் என்றறிந் தேயிவர்

..வேதனை உற்றதும் வீரமுந்த

3. ஆல மிடற்றவன் ஆலயத் தில்பூசை

..அன்றாடம் செய்திடச் செய்தவரே

நாலும் அறிந்தவர் நாடெங்கும் சென்றவர்

..நற்பணி செய்வதில் வல்லவரே.

4. காலத்தின் போக்கிலே கட்டுக் குலையாமல்

..கண்ணெதி ரேயென்றும் நின்றிருக்க,

கோலத்தைச் சீராக்கக் கோயில் திருப்பணி

..கோடிக் கணக்கினில் செய்தவரே

5. வேதம் பயிலவும் வேள்வி வளரவும் ..மேன்மை நிறைபாட சாலைகளை மேதினி எங்கிலும் மேம்படச் செய்திட்ட ..வீறுடை மாமுனி யாமிவரே

6. ஏழை எளியோர்கள் ஏற்றமு டன்வாழ ..ஏராள மாய்ப்பணி செய்தவரே வாழை யடிவாழை என்றெளி யோர்களும் ..வாழ வழியிவர் செய்தவரே

7. நேர்த்தி நிறைபார்வை கிட்டிடச் சங்கர

..நேத்திர ஆலயம் தந்தவரே

சீர்த்தி நிறைந்ததொர் சேவை நிலையத்தைச்

..சின்னஞ் சிறார்கென்று தந்தவரே

8. பற்பல பாடங்கள் கற்பிக்கும் பள்ளிகள் ..பல்கலைக் கூடமும் நாட்டியவர் நற்பண்பு வாய்ந்தவர் நாட்டில் வளர்ந்திட ..நாளும் உழைத்திவர் காட்டியவர்.

9. சாதி மதபேதம் ஏதுமில் லாதவர் ..சந்திர சேகரர் சீடரிவர் நீதி நெறிகளை நேர்த்தியுடன் பேண

..நெஞ்சில் உரத்துடன் நின்றவரே.

10. சொல்லி முடிந்திடாத் தொண்டுகள் செய்தவர்

..தூயர் ஜயேந்திரர் என்றுசொல்ல

எல்லை யிலாதவோர் இன்பப் பெருக்கதே

..எங்கும்பாய் கின்றது பூமியிலே.

வாழ்த்துப் பாடல்

எண்சீர் விருத்தம் – (விளம் விளம் விளம் மா – அரையடி)

வாழிய வையகம் வாழ்கநன் மக்கள்

..வாழிய மாமுனி ஜயேந்திரர் பெருமை

வாழிய அரும்பெரும் நல்லறப் பணிகள்

..வாழிய அத்துவி தம்தரும் பாதை

வாழிய நான்மறை வாழ்கநன் னெறிகள்

..வாழிய வேள்வியும் தேவரும் பசுவும்

வாழிய காஞ்சியின் சீர்மடம் சிறப்பாய்

..வாழிய வாழிய குருபரம் பரையே!

ஜய ஜய சங்கர!

ஹர ஹர சங்கர!!

Source Courtesy: Smt Saranya Viswanath, Chennai.

Thanks to Smt. Malathi Jayaraman, Kumbakonam