top of page

ஒரே இடத்தில் 11 திவ்ய தேச பெருமாள்


நாகை மாவட்டம், சீர்காழி அடுத்த நாங்கூரில் மணிமாடக்கோவில் நாராயணப் பெருமாள் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் தை அமாவாசைக்கு மறுநாள் 11 கருட சேவை நடைபெறும்.

108 வைணவத் தலங்களில் நாங்கூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியில் 11 ஆலயங்கள் இருக்கின்றன. மணிமாடக்கோவில் நாராயணப் பெருமாள் ஆலயத்தில், 11 ஆலயங்களின் சுவாமிகளும் தங்க கருட வாகனத்தில் எழுந்தருள்வார்கள்.

108 வைணவத் தலங்களில் திருநாங்கூரில் மட்டும் 6 திவ்ய தேசங்கள் உள்ளன. தவிர இந்த ஊரைச் சுற்றி சுமார் 4 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் மேலும் 5 திவ்ய தேசங்கள் இருக்கின்றன.

நாங்கூர் மணிமாடக் கோவில் நாராயணப் பெருமாள், அரிமேய வின்னகரம் குடமாடு கூத்தர், செம்பொன்னரங்கர், பள்ளிகொண்ட பெருமாள், வண்புருடோத்தம பெருமாள், வைகுந்தநாதன், திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள், திருமேனிக்கூடம் வரதராஜப் பெருமாள், கீழச்சாலை மாதவப்பெருமாள், பார்த்தன் பள்ளி பார்த்தசாரதிப் பெருமாள், திருகாவாளம்பாடி கோபாலன் ஆகிய தலங்களே, அந்த 11 திவ்ய தேசங்கள் ஆகும்.

ஸ்ரீமன் நாராயணன், தன் திருப்பெயரையே அஷ்டாட்சர மந்திரமாக்கி, அதை உபதேசம் செய்தார். அதாவது தானே ஆசானாகி, தன் நாமத்தையே மந்திரமாக்கி, தன்னையே சீடனாக்கி, தனக்கே உபதேசம் செய்து கொண்ட அற்புதம் அந்த நிகழ்வு. அதன் மூலம் உலகின் அனைத்து ஜீவராசிகளிலும் நானே நிறைந்திருக்கிறேன் என்பதை நாராயணர் உரைக்கிறார்.

பிரம்மனின் ஐந்தாவது தலையை கொய்ததால், சிவபெருமானுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்தது. அது நீங்க சிவபெருமானை கோகர்ணம் என்ற தலத்தில் திருமாலை நோக்கி தவம் இருந்தார். அவர் முன்பாக தோன்றிய திருமால், சிவபெருமானை பலாச வனத்தில் உள்ள நாங்கூர் திருத்தலம் சென்று, 11 ருத்ர தோற்றங்கள் கொண்டு அஸ்வமேத யாகம் செய்யும் படி கூறினார்.

சிவபெருமானும் 11 ருத்ர தோற்றம் கொண்டு, யாகம் செய்தார். அதன் நிறைவு சமயத்தில் நாராயணர், பிரணவ விமானத்தில் தோன்றி சிவபெருமானின் தோஷத்தைப் போக்கினார். அதுவும் 11 ருத்ர தோற்றத்திற்கும், 11 பெருமாள்களாக தோன்றி திருமால் காட்சி தந்தார். அப்படி பெருமாள் கொண்ட 11 கோலங்களே, திருநாங்கூரில் அமைந்துள்ள 11 திவ்ய தேசங்களாக இருக்கின்றன என்பது தல வரலாறு.

திருநாங்கூர் மணிமாடக் கோவிலில், தை அமாவாசைக்கு மறுநாள், 11 திவ்ய தேச பெருமாள்களும், மதியம் 1 மணி முதல் மாலை 6 மணிக்குள், ஒவ்வொருவராக தங்க கருட வாகனத்தில் வந்து சேருவார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் திருமஞ்சனம் செய்யப்பட்டு அலங்காரம் நடைபெறும். பின்னர் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக வீதி உலா புறப்படுவர். பின்னர் ஒவ்வொரு பெருமாளுக்கும், மங்களாசாசனம் செய்யப்பட்டு, கற்பூர ஆரத்தி காட்டப்படும்.

மறுநாள் அதிகாலை 5 மணிக்கெல்லாம், அந்தந்த பெருமாள்கள் மீண்டும், தங்களது கருட வாகனத்தில் தங்களின் திவ்ய தேசத்திற்குப் புறப்பட்டுச் செல்வார்கள்.

Source: Dailythanthi

இந்த வைபவத்தில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு, மறுபிறவி கிடையாது என்று சொல்லப்படுகிறது. அதே நேரம் இந்த வைபவத்தில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு 11 திவ்ய தேச பெருமாள்களை வழிபட்ட பேறும் கிடைத்து விடுகிறது.

45 views0 comments

Recent Posts

See All
bottom of page